Home Sandilyan Yavana Rani Part 2 Ch34 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch34 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

74
0
Yavana Rani Part 2 Ch34 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch34 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch34 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 34 விளக்கம்

Yavana Rani Part 2 Ch34 | Yavana Rani | TamilNovel.in

ராஜதந்திரத்தாலும், போர்த் தந்திரத்தாலும் இணை யற்றவனும், யவன மகாவீரர்களில் சிறந்தவனெனப் பெயர் பெற்றவனுமான டைபீரியஸின் கண்களைத் தன்மீது திருப்பியதற்கு உண்டான காரணங்களைப் படைத் தலைவன் கூற முற்படு முன்பு அந்த அறையிலிருந்த வஞ்சியர் மூவரில் ராணியும், அலீமாவும் ஓரளவு சுய நிலையை அடைந்து விட்டார்களென்றாலும், அல்லியின் மனத்தில் மட்டும் போதிய தெளிவு ஏற்படாமையால், படைத் தலைவனின் செயல்கள் பலவற்றுக்கு விடை கிடைக்காமல் அவள் குழம்பியே இருந்தாள். அலீமாவுக்கும், ராணிக்கும் ஏற்பட்ட சம்பாஷணையிலிருந்து படைத் தலைவன் மனிதர் யாரும் சாதாரணமாக மீள முடியாத பல ஆபத்துக்களில் சிக்கி மீண்டிருக்கிறானென்பதையும், தமிழகத்தைப் போலவே வெளி நாடுகளிலும் அவன் வீரச் செயல்கள் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன என்பதையும் அவள் புரிந்து கொண்டாலும், அந்த நாடுகளையும் மக்களையும் பார்க்காத காரணத்தால் அல்லிக்குப் படைத் தலைவன் அடைந்த ஆபத்தின் விரிவும் ஆழமும் போதிய அளவு விளங்காமலே இருந்தபடியால், அவற்றைப் பற்றி அவள் அதிகமாகச் சிந்திக்காமல் படைத் தலைவன் யவன நாட்டு மரக்கலத் தலைவனாகவும், டைபீரியஸின் கையாள் போலவும் வேடம் போட வேண்டிய அவசியமென்ன என்பதை மட்டுமே அதிகமாகச் சிந்திக்கலா னாள். மரக்கலத்தில் தான் யாரென்பதை உணர்ந்தவுடனேயே படைத் தலைவன் எதற்காகத் தன்னிடம் உண்மையைக் கூறாமல், தன்னைக் கண்களையும் கைகளையும் கட்டிப் படகில் தள்ளி அந்த மாளிகைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் யோசித்தாள். அப்படிக் கொண்டு வந்தவன் படகு கடற்கரையை அடைந்ததும் தன்னை நடத்தி அழைத்து வராமல் எதற்காகத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு வர வேண்டுமென்றும், எதற்காகப் போர்வையால் தன்னை மூட வேண்டும் என்றும் நினைத்துப் பார்த்தாள். தவிர, தமிழகம் திரும்பியுள்ள படைத் தலைவன் ஏன் வாணகரைக்கு வராமலும் தன் வரவை பிரும்மானந்தருக்குக்கூடத் தெரியாமலும் வைத்திருக்கிறான் என்பதையும் எண்ணிப் பார்த்தாள். எந்தக் கேள்விக்கும் விடை கிடைக்காது போகவே, படைத் தலைவனை நோக்கி ஒருமுறை சந்தேகங்கள் மண்டிக் கிடந்த தன் அழகிய விழிகளை உயர்த்தினாள்.

அந்த வஞ்சியின் நெஞ்சத்திலே கிளைத்துப் புரண்டு கொண்டிருந்த சந்தேக அலைகளை அவள் பார்வையி லிருந்தே ஊகித்துக் கொண்ட படைத் தலைவன், தான் விளக்க இருந்த விஷயங்களைச் சற்று நிறுத்தி, “கேள் அல்லி! தயங்காதே, கேள்!” என்றான் அவளை நோக்கி.

தன் மனத்தின் சந்தேகங்களை அவன் ஊகித்துவிட்ட தால் சற்றே சங்கடமடைந்த அல்லி, “எதைக் கேட்கட்டும் படைத் தலைவரே?” என்று தனக்குக் கேட்பதற்கு எதுவுமே இல்லைபோல் பதில் சொன்னாள்.

ஈட்டியிலும் கூர்மையான படைத் தலைவனின் கண்கள் மற்ற இரு மாதரையும் நோக்கிவிட்டு மீண்டும் அல்லியின் மீது திடமாக நிலைத்தன. “சந்தேகங்களைக் கேள் அல்லி. இப்பொழுது நாம் தமிழகத்தின் சரித்திரத்தில் மிகப் பயங்கரமான கட்டத்திலிருக்கிறோம். ஆகவே பரஸ்பரம் எந்தவிதச் சந்தேகமுமின்றி நாம் செயலில் இறங்க வேண்டிய காலம் இது. நம்மில் யாராவது ஒருவர் மற்றொருவர் செயலிலோ, இதய சுத்தத்திலோ அவநம்பிக்கை கொண்டாலும் கடமையிலிருந்து அணுவளவு பிறழ்ந்தாலும் தமிழகத்தின் கதி அதோகதியாகிவிடும். ஆகவே, சந்தேகத்தைக் கிளைக்க விடாதே. கேட்பதை வெளிப்படையாகத் திட்டமாகக் கேள்” என்று உறுதியுடன் பேசினான்.

அதுவரை உட்கார்ந்த மஞ்சத்திலிருந்து எழுந்த அல்லி, சற்று நிமிர்ந்து மிகவும் கம்பீரமாக நின்றுகொண்டு முதல் கேள்வியைத் திடமாகவும் வேகமாகவும் வீசினாள்: “என்னை மரக்கலத்தின் தளத்தில் பார்த்தவுடனேயே நான் யாரென்பதைப் புரிந்து கொண்டீர்களா இல்லையா?” ஏதோ பெரும் குற்றம் சாட்டுபவளைப்போல் கேட்டாள் அல்லி.

படைத் தலைவன் பதில் சர்வ சாதாரணமாக வந்தது. “புரிந்து கொண்டேன் என்பதைத்தான் மரக்கலத்தின் அறையி லேயே கூறினேனே?”

“தெரிந்தும் எதற்காக என்னிடம் நீங்கள் யாரென்பதை மறைத்தீர்கள்? எதற்காகத் தலைமறைவாய்க் கால்களை மட்டும் நீட்டி உட்கார்ந்தீர்கள்?” என்று பிறந்தது அல்லியின் இரண்டாவது கேள்வி.

“சோழ நாட்டின் பிற்கால ராணிக்கு எதிரில் கால்களை நீட்டி உட்கார்ந்தது பிசகுதான். ஆனால், அதற்குத்தான் போதிய தண்டனை அளித்து விட்டீர்களே?” என்றான் படைத் தலைவன்.

“மரியாதை வேண்டாம். தண்டனை அளித்து விட்டாயே என்று சொன்னால் போதும்” என்று அதற்கும் கடிந்து கொண்ட அல்லி, “தண்டனையாம் தண்டனை! தண்டனை அளித்தது நீங்களா, நானா? நானா உங்கள் கைகளையும், கண்களையும் கட்டினேன்?” என்றும் சற்று உஷ்ணத்துடன் கேட்டாள்.

“நான் உன் கைகளையும், கண்களையும் கட்டினேனே ஒழிய, உன் நாவைக் கட்டவில்லையே அல்லி? ஆனால் பெண்களின் நாவைக் கட்டயாரால் முடியும்?” என்று சொல்லிப் புன்முறுவல் செய்தான் படைத் தலைவன்.

“நகைச்சுவைக்கு இது சமயமல்ல” என்றாள் அல்லி.

“அந்தச் சுவையை இந்தச் சந்தர்ப்பத்தில் காட்ட நானும் முற்படவில்லை அல்லி. உன் நாவை நான் கட்டாதது மட்டு மல்ல கட்ட முற்படவுமில்லை. அந்த அறையில் என்னென்ன கூறினாய், எண்ணிப் பார். என்னைத் தமிழகத்தின் துரோகி என்றாய், கோடரிக் காம்பென்றாய், இருங்கோவேளையும், பதினைந்து வேளிர்களையும் எனக்கு உவமை காட்டினாய். இந்தச் சொற்களைக் கேட்பதைவிட எனக்கு வேறு தண்டனை வேண்டுமென்று நினைக்கிறாயா அல்லி? உன் ஒவ்வொரு சொல்லும் என் இதயத்தில் கூரிய வேல்களெனப் பாய்ந்ததை நீ அறிவாயா அல்லி! மன்னர் கரிகாலர் எதிரிகளை முறியடித்து நீ சோழர் அரியணையில் அமரும் காலத்தில் என் தலையைச் சீவ உத்தரவிட்டாலும், அந்தத் தண்டனை மரக் கலத்தின் அறையில் உன் சொற்கள் அளித்த வேதனையைவிட அதிகம் அளிக்காது. ஆனால் அத்தனை நீ சொல்லியும் நான் யாரென்பதை வெளிப்படுத்தவில்லை. தவிர, நீ சொன்னதை என் மாலுமிகள் நம்ப வேண்டுமென்றும் நினைத்தேன். மரக்கலத்தின் என் அறைக் கதவுக்கு வெளியே இரு மாலுமி கள் சதா காவல் புரிவது உனக்குத் தெரியுமா? தெரிந்திருக்க முடியாது. நீ சொல்வதெல்லாம் அவர்கள் காதில் விழட்டும் என்றுதான் உன்னை இஷ்டப்படி பேசவிட்டேன். அவர்களில் சிலருக்கு நான் சோழநாட்டின் உபதலைவன் என்பது தெரியும். என் மரக்கலங்களில் இருக்கும் மாலுமிகள் பல நாட்டவர், பல தரத்தவர் அல்லி. அடுலீஸில் ராணியின் சகோதரன் கொடுத்த யவனர்கள் இருக்கிறார்கள். அராபியர் இருக்கிறார்கள், அடுலீஸில் நாங்கள் பணம் கொடுத்துத் திரட்டிய எகிப்தியர் இருக்கிறார்கள், சில கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள், அடிமைகள் இருக்கிறார்கள். இப்படியிருக்கும் இந்தக் கதம்பக் கூட்டத்திலே எந்தச் சமயத்தில் யார் எப்படித் திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.”

அல்லி மெள்ள மெள்ள உண்மையைப் புரிந்துகொண்டு சாந்தியால் பெருமூச்சு விட்டாள். அந்தச் சாந்திக்கு அடை யாளமாக, “உம்” என்ற ஒலியும் அவளிடமிருந்து எழுந்தது.

படைத் தலைவன் மேலும் தொடர்ந்து சொன்னான்: “பலதரப்பட்டவர்களும் வாழ்க்கையில் எதற்கும் அஞ்சாதவர் களும் பணத்தை ஒன்றையே குறிக்கோளாக உடையவர்களு மான இந்தக் கதம்பக் கூட்டத்தில் யார் எந்தச் சமயத்தில் எப்படித் திரும்புவார்கள் என்று கூற முடியாது. ஆகவே, இவர்களில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாமல் அலுவல்களைச் செய்யவேண்டியிருக்கிறது. அடுலீஸில் நான் ராணியின் சகோதரரிடம் ஆள் திரட்டியபோதுகூட, டைபீரியஸை எதிர்ப்பதாக உத்தேசமிருப்பதாகவோ, யவன அரசை இங்கு நிலைக்க விடாதிருப்பதே என் உத்தேசமென்றோ சொல்லவில்லை. ராணிக்கு உதவுவது ஒன்று மட்டுமே என் குறிக்கோள் என்று சொன்னேன். இல்லா விட்டால் இந்த நாட்டுக்கு நான் திரும்பியிருக்கவே மாட்டேன். ராணிக்கு உதவும் ஓர் ஆசையாலும் ரதப் போட்டியில் அவர் குதிரைகளை நான் வெற்றியுடன் நடத்தியதாலுமே யவன இளவரசர் எனக்கு உதவினார். என்னுடன் மரக்கலத்தில் அவர் அனுப்பியிருக்கும் யவன வீரர்களில் இருவர் அவருடைய மெய்க்காவலர். அவர் களையும், அலீமாவையும் அனுப்பியதால்தான் டைபீரியஸ் வந்திருக்கும் மரக்கலங்கள் தன்னைச் சேர்ந்தவை என்று இன்னும் நம்பியிருக்கிறான். அந்த நம்பிக்கை உடைந்தால், அந்த மரக்கலங்களின் படகுகளையும், ஏன் மரக்கலங்களையே அழிக்கக்கூட வழி தெரியும் டைபீரியஸுக்கு. ஆகவே, ஒரு பக்கம் டைபீரியஸுக்கு நம்பிக்கை உண்டாக்கவும், மற்றொரு பக்கம் யவன மாலுமிகளுக்கு அவர்கள் அரசு இங்கு நிறுவப்படுமென நம்பிக்கை உறுதிப்படுவதற்கும், போர் மூண்டால் பெரும் பண லாபமிருப்பதாகக் கொள்ளைக்கார மாலுமிகளுக்கு ஆசை காட்டு வதற்கும் கூடியவரையில் என் உண்மை நோக்கங்களை மறைத்துக் கொண்டேன். கொள்ளைக்கார மாலுமிகளுக்கு ஆசை காட்டுவதற்காக வேண்டுமென்றே சேரன் போர்க் கப்பல்கள் இரண்டைக் கைப்பற்றினேன். ஆகையால் இப்பொழுது என்னை டைபீரியஸ் தனக்கு உதவ யவன இளவரசன் அனுப்பிய கையாளாக நினைக்கிறான். கொள்ளைக்காரர்கள் தங்களுக்குப் பணம் திரட்டித் தர வந்தி ருக்கும் தலைமைக் கொள்ளைக்காரனாக நினைக்கிறார்கள்.”

இளஞ்செழியன் சற்றுப் பேச்சை நிறுத்தி, ஏதோ யோசித்துத் தானே தலையை அசைத்துக் கொண்டான். பிறகு தொடர்ந்தான் பேச்சை, “ஆம், அல்லி! யார் யார் என்னைப் பற்றி எப்படி எப்படி நினைக்க வேண்டுமென்று எண்ண மிட்டேனோ அப்படி அப்படி நினைக்கச் செய்தேன். பலர் குழப்பத்தில்தான் நான் எனது பணியை நிறைவேற்ற முடியும். ஆகவே, நீ கோடரிக் காம்பு என்று குற்றம் சாட்டியதை மரக் கலத்தின் அறையைக் காவல் புரிந்த யவனர்கள் கேட்கட்டுமென்று விட்டேன். அதற்காகவே அவர்களையும் உன்னுடன் படகில் அழைத்து வந்து அவர்களை ஊருக்குள் செல்லப் பணித்து உன்னை மட்டும் தூக்கி வந்தேன்.”

அல்லி சட்டென்று இடைமறித்து, “தூக்கி வருவானேன்? என்னால் நடக்க முடியாதா!” என்று கேட்டாள்.

“முடியும் அல்லி! ஆனால் உன்னைத் திடீரெனச் சுதந்திரமாய் நடக்க விடுவதில் ஆபத்துக்கள் இருந்தன” என்றான் படைத் தலைவன்.

“என்ன ஆபத்து?” என்று வினவினாள் அல்லி.

“நம்முடன் படகில் வந்த யவன மாலுமிகள் சந்தேகப் படலாம். உன்னை நான் பலாத்காரமாகத் தூக்கிக் கொண்டு போகிறேன் என்று நினைப்பார்கள். யவனர் மனோதத்து வத்தை நீ அறியவேண்டும் அல்லி. உன்னை நான் தூக்கிக் கொண்டு வடக்குத் திட்டிவாசல் வழியாக நுழைந்தபோது யவன காவலர் சிரித்ததை நீ பார்த்திருக்க முடியாது. உன்னைத்தான் போர்வையால் மூடியிருந்தேனே. ஆனால் நான் கவனித்தேன். குடித்தவன்போல் தள்ளாடி நடந்த போதும் கவனித்தேன்” என்று சொன்னான் படைத் தலைவன்.

“எதற்காக இந்த நாடகமெல்லாம்?” என்று கேட்டாள் அல்லி .
“புரியவில்லையா அல்லி? படகில் வந்த யவன மாலுமி களிடம் உன் காது படத்தானே சொன்னேன். இந்த வேவுகாரி வந்திருப்பது டைபீரியஸுக்குத் தெரிய வேண்டாமென்று.”

“ஆம், சொன்னீர்கள்.”

“சொன்னதும் உன்னை அள்ளித்தோள்மேல் போட்டுக் கொண்டேன். போர்வையால் மூடினேன். என்ன நினைத் திருப்பார்கள் யவன மாலுமிகள்?”

அல்லி மௌனம் சாதித்தாள். வெட்கத்தால் அவள் முகம் சிவந்தது. இதயம் படபடத்தது, பிராணனே போய்விடும் போலிருந்தது. படைத்தலைவன் அவள் உணர்ச்சிகளை முக பாவத்திலேயே புரிந்து கொண்டான். “ஆம் அல்லி! என்னைப் பஞ்சமா பாதகனாக்கிக் கொண்டேன். யவனமாலுமிகள் என் எண்ணத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளட்டும் என்றுதான் அந்த நாடகமாடினேன். திட்டி வாசல் வழியாகக் குடித்தவன் போல் வந்ததற்கும் அதுதான் காரணம். நான் இங்கு வந்ததைப்பற்றிச் செய்தி போகும் டைபீரியஸுக்கு. சதிகாரனாக அல்ல, அவனை முறியடிக்க முயலும் படைத் தலைவனாக அல்ல, குடிகாரன், நடத்தை கெட்டவன் என்று போகும். அதுவும் இந்த மாளிகைக்கு நான் வந்திருப்பதை அறிந்தால், சிறிதும் சந்தேகப்பட மாட்டான் டைபீரியஸ்” என்றான்.

அல்லி எதுவுமே பேசவில்லை . நிற்க முடியாமல் மீண்டும் நகர்ந்து பஞ்சணையில் உட்கார்ந்து தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். அவள் கண்கள் நீரையும் உகுத்தன. ‘எத்தனை அபாண்டம் என்மேல்!’ என்றும் நெஞ்சம் உருகினாள். அவள் நிலையைப் பார்த்த ராணி சற்றே வெகுண்டு படைத்தலைவனை நோக்கி, “அந்தப் பெண்ணின் மனத்தை ஏன் புண்படுத்தினீர்கள் படைத் தலைவரே! எதைப் பெண்களிடம் பேசலாம், பேசக்கூடாது என்ற பண்பைச் சாம்பிராணி நாட்டில் இழந்துவிட்டீர்களா?” என்று வினவினாள்.

படைத் தலைவன் இதழ்களில் வறண்ட சிரிப்பு ஒன்று படர்ந்தது. “ராணி! என் தங்கையின் மானத்தில் எனக்கும் பங்கில்லையா? அல்லி யாரென்பதை யாருமே அறியக் கூடாது என்பதற்காகத்தானே அவள் மீது போர்வையைப் போர்த்தினேன். அதற்காகத்தானே இங்கு கொண்டு வந்தேன்” என்றான் இலஞ்செழியன்.

“அதற்காக இங்கு கொண்டு வந்தீர்களா? அப்படி என்ன விசேஷம் இந்த மாளிகையில்?” ராணியின் கேள்வியில் வியப்புத் தட்டியது.

“இந்த மாளிகை ஒரு காலத்தில் சோழர் படை உப தலைவனுடைய குடி வீடாயிருந்தது….” என்றான் படைத் தலைவன்.

“அது தெரியும் எனக்கு” என்றாள் ராணி.

“பிறகு கரிகாலர் ரகசியப் படை வீடாயிருந்தது.”

“அதுவும் தெரியும்.”

“சில காலமாக இந்த வீடு யவன மாலுமிகளின் கேளிக்கைக் கூடமாக மாறியிருக்கிறது. என்னை மயக்கத் துளிகள் கொடுத்து யவன மரக்கலத்தில் அனுப்பிய சில நாட்களுக்கெல்லாம், இது கரிகாலர் சதிக்கூடமாயிற்று. பிறகு டைபீரியஸ் இதைக் கேளிக்கைக் கூடமாகவும் மது ஆறாக ஓடும் குடிக்குமிடமாகவும் மாற்றினான். இந்த வீடு மருவூர்ப் பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத்துக்கும் நடுவிலிருக்கிறது. தோப்புக்குள் மறைந்திருக்கிறது. ஆகையால் என்றும் புகாருக் குள் சிறுகோட்டையாக மாறலாம்.என்பது டைபீரியஸுக்குத் தெரியும். ஆகவே இதை நாணயமாக வாழும் யாரும் அணுகக் கூடாத பயங்கர ஸ்தலமாக அடித்துவிட்டான் யவனர் கடற்படைத் தலைவன்.”

“அது எப்படி தங்களிடம் வந்தது?”

“கேளிக்கைக் கூடம் வைத்திருந்த யவனனிடமிருந்து பொன்னைக் கொட்டி மீட்டுக் கொண்டேன். ஆனால், இதன் கெட்ட பெயர் இன்னுமிருந்து கொண்டிருக்கிறது. அதை நிலைநிறுத்தப் பகல் நேரங்களில் இன்னும் இங்கு யவனர் களுக்கு மது வழங்கப்படுகிறது.”

“அப்படியானால் எங்களை ஏன் இங்கு வரவழைத் தீர்கள்?” என்று கோபத்துடன் கேட்டாள் ராணி! அல்லி, கேட்கவில்லை; தலையைத் தூக்கி எரித்துவிடுவதுபோல் படைத்தலைவனை நோக்கினாள். அலீமாவின் முகத்தில் மட்டும் எந்த உணர்ச்சியுமில்லை.

படைத் தலைவன் இருமுறை அறையில் உலாவினான். பிறகு நின்று மூன்று பெண்களையும் மாறி மாறிப் பார்த்தான். “இங்கு வரவழைத்ததற்கு ஒரே காரணம்தான் ராணி. இந்த மாளிகைமீது மட்டும்தான் டைபீரியஸின் கண்கள் உலாவ வில்லை. இந்த ஒரு மாளிகையில்தான் நாம் டைபீரியஸின் கண்களில் படாமல் தைரியமாகப் பேசலாம். பூம்புகாரின் மற்ற எந்தப் பிராந்தியத்திலும் அவனது ஒற்றர்கள் இருக்கிறார்கள். மிகவும் நேர்மையானவன் என்று பெயர் பெற்ற சோழர்படை உபதலைவன் ஒருவேளை மீண்டாலும், யவனர் கேளிக்கைக் கூடத்தில் நுழைய மாட்டான் என்ற நம்பிக்கை டைபீரியஸுக்கு உண்டு. யவன நாட்டு ராணியையோ, சோழ நாட்டுப் பிற்கால ராணியையோ, தன்னுடைய சீடப்பெண்ணும், சாம்பிராணி நாட்டு மன்னனின் வளர்ப்புப் பெண்ணுமான அலீமாவையோ அவன் இங்கு எதிர்பார்க்க மாட்டான். ஆகையால்தான் வரவழைத்தேன். இந்த நாடு போர் மூளும் தருவாயில் இருக்கிறது ராணி. போர் மூண்டால் எத்தனை உயிர்கள் நாசமாகும்; எத்தனை பெண்களின் கற்புபாதிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அச்சேதத்தை எண்ணித்தான் நமது பெயர்கள் கெட்டாலும் கெடட்டும் என்று எண்ணினேன். பெருவாரியான மக்களின் நலனுக்காக நாம் நமது உயிர், நற்பெயர் எதையும் இழப்பது தவறாகாது. ஆகையால்தான் இங்கு உங்களை அழைத்தேன். பொழுது விடிய ஒரு ஜாமமே இருக்கிறது. அதற்குள்ளாக நாம் பேசி முடித்தாக வேண்டும். நீங்கள் மூவரும் இந்நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைச் சொல்கிறேன் கேளுங்கள்” என்று கூறிய படைத் தலைவன் தன் திட்டங்களை விவரிக்க முற்பட்டு மடியிலிருந்த பட்டுச் சீலையொன்றை எடுத்து மஞ்சத்தில் விரித்து, “இதோ பாருங்கள்” என்று அந்த மூன்று பெண்களையும் அருகில் அழைத்தான்.

Previous articleYavana Rani Part 2 Ch33 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here