Home Sandilyan Yavana Rani Part 2 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

67
0
Yavana Rani Part 2 Ch35 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch35 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 35 பட்டுச்சீலைத் திட்டம்

Yavana Rani Part 2 Ch35 | Yavana Rani | TamilNovel.in

அலை மோதும் உணர்ச்சிகளுடன் தமிழகத்தின் நிலை மாறும் திட்டங்களை விளக்க முற்பட்டு, மடியிலிருந்த பட்டுச் சீலையை மஞ்சத்தில் விரித்து, ‘இதைப் பார்க்க வாருங்கள்’ என்று படைத் தலைவன் விரைந்து அழைத்த போதிலும், அறையிலிருந்த அந்த மூன்று அழகிகளில் ஒருத்திகூட இருந்த இடத்தைவிட்டு ஒரு இம்மிகூட நகராமல், அதுவரை படைத் தலைவன் உரைத்த செய்திகளால் அடியோடு மனம் இடிந்து போய் அசைவற்று சிலைகள் போல் நின்றிருந்தார்கள். அந்த மாளிகைக்குத் தங்களை வரவழைத்தன் மூலம் தங்கள் நற்பெயருக்கு எத்தனை பாதகத்தைப் படைத்தலைவன் விளை வித்து விட்டான் என்பதை எண்ணியதால், அந்த மூவர் இதயங்களிலும் எண்ணற்ற உணர்ச்சி அலைகள் எழுந்து எழுந்து மோதின. வெவ்வேறு எண்ணங்களைப் பெற்ற அந்த மூன்று அழகிகளின் முகங்களும் அவர்கள் இதயங்களில் ஏற்பட்ட ஒரேவித உணர்ச்சிகளின் விளைவாக ஒரேவிதமான வண்ணத்தை அடைந்து கற்புடைய மாதர்க்கெல்லாம் உள்ளப் போக்கு ஒன்றுதான் என்பதைத் தெளிவுறுத்தின. பளிங்குக் கல் போன்று மிக வெண்மையான யவன ராணியின் முகமும், வெளுத்த அல்லியைப் போலிருந்தாலும், அந்த அல்லி மலரைப் போலவே லேசாகச் செவ்வரி ஓடியதால் அதிக வெண்மையும் லேசான சிவப்பும் கலந்த அல்லியின் முகமும், அரபு நாட்டின் வெப்பத்தின் விளைவாக நல்ல வெளுப்பு சிறிது மந்தப்பட்டு மஞ்சள் நிறத்தை இணைத்துக் கொண்ட அலீமாவின் முகமும், ஏக காலத்தில் ஒரே விதமாகக் குப்பென்று ரத்தச் சிவப்பாகி விட்டதையும், அவர்களுடைய மூவிரண்டு கண்களும் அக்கினியைக் கக்கியதையும், தன் அழைப்பை அவர்கள் லட்சியம் செய்யாமலே நின்றிருந்ததை யும் கவனித்த படைத் தலைவன், மஞ்சத்திலிருந்த பட்டுச் சீலை மீதிருந்த தன் கண்களைச் சற்றே எழுப்பி அவர்கள் முகங்களை மற்றுமொருமுறை துழாவிவிட்டு, நீண்டதொரு பெருமூச்சும் விட்டான். அவன் தங்கள் முகங்களை இரண்டு முறை கவனித்ததையும், பிறகு பெருமூச்சு விட்டதையும் அழகிகளும் கவனிக்கத்தான் செய்தார்கள். அப்படி அவர்கள் கவனித்ததையும், கவனித்தும் அவர்கள் கோபம் தணிந்ததற் கான அறிகுறிகள் ஏதுமே அவர்கள் முகங்களில் துளிர் விடாததையும் கண்ட படைத் தலைவன் மஞ்சத்தின் மீதிருந்த பட்டுச் சீலையை அப்படியே விட்டு நன்றாக நிமிர்ந்து நின்று, அந்த அழகிகள் மூவர்மீதும் மிகவும் திடமாகத் தன் கண்களை நாட்டி, “பெண் இதயம் எனக்குப் புரியாதென்று நினைக்க வேண்டாம். ஆனால்…” என்று சற்றுத் திடமான குரலிலும் பேச முற்பட்டான். அவனைக் கோபமும், இகழ்ச்சியும் கலந்து தாண்டவமாடிய யவன ராணியின் விழிகள் கம்பீரமாக நோக்கியதன்றி அவள் பவள இதழ்களும் அசைந்து, “பெண்கள் இதயம் உங்களுக்குப் புரியாதென்று யார் சொல்வார்கள் படைத்தலைவரே! நான் சொல்லமாட்டேன். அலீமா சொல்லமாட்டாள், வேளிர்குலப் பேரழகி சொல்லமாட்டாள், இன்னும் எத்தனை பெண்கள் சொல்லமாட்டார்களோ தொகை எனக்குத் தெரியாது…” என்று உஷ்ணத்துடன் சொற்களை உதிர்த்தன.

ராணியின் சொற்களில் அடங்கிக் கிடந்த விஷமத்தை யும், ஏளனத்தையும், ஏன் கோபத்தையும்கூட, படைத் தலைவன் நொடிப் பொழுதில் புரிந்து கொண்டானானாலும் எதிர்நோக்கிக் கிடந்த முக்கிய அலுவலை முன்னிட்டு நிதானம் சிறிதும் தவறாத குரலிலேலே பதில் சொல்ல முற்பட்டு, “தொகை விரிந்தாலும் பாதகமில்லை. மனோதத்துவ சாஸ்திரத்தை நான் படித்திருக்கிறேன்.” என்று பேசத்துவங்கியவனை இடைமறித்த ராணி, “எங்கு படித்திருக் கிறீர்கள்? ஏட்டிலா பிறர் வீட்டிலா?’ என்று வினவினாள்.

“வீட்டிலிருப்பதுதான் ஏட்டிலுமிருக்கிறது, ராணி! சமுதாயத்திலிருப்பதுதான் சாஸ்திரத்திலும் இருக்கிறது. ஆகவே சாஸ்திரங்களை அறிய வீட்டிலும் படிக்கவேண்டும். ஏட்டிலும் படிக்கவேண்டும். ஒன்று உணர்வுக்கு இன்னொன்று அனுபவத்துக்கு.’ இரண்டிலும் தீட்டப்படும் அறிவுதான் கூர்மையாகிறது” என்று கூறினான் படைத் தலைவன்.

“அப்படியானால் படைத்தலைவருக்குப் பெண்கள் விஷயத்தில் அனுபவம் அதிகம் போலிருக்கிறது?” என்று மீண்டும் இகழ்ச்சியுடன் கேட்டாள் ராணி.

படைத்தலைவன் குரலில் எந்த மாறுதலையும் காட்டா மலே பதில் சொன்னான்: “ராணி! தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள், பெண்களைப்பற்றி மட்டும் நான் குறிப்பிட வில்லை. பொதுவாகப் பேசினேன்; மனோதத்துவ சாஸ்திரத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன்.

ராணி தன் நீலமணிக் கண்களை நன்றாகத் தூக்கிப் படைத் தலைவன் முகத்தை ஒருமுறை ஆராய்ந்ததன்றி, ஆச்சரியத்துக்கும் உள்ளானாள். மூன்று பெண்களை, குடிக்கும் விபச்சாரத்துக்கும் பேர் போன ஒரு மாளிகைக்கு வரவழைத்துவிட்டு அதில் எந்தத் தவறும் இல்லைபோல் சர்வ சாதாரணமாகத் தன்னை நோக்கும் அவன் துணிவைப் பெரிதும் வியக்கவே செய்த ராணி, “மனோதத்துவம் உண்மையில் உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?” என்று விசாரித்தாள்.

அவள் கேள்வியின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட படைத் தலைவன், அதுவரை நிமிர்ந்திருந்த தன் தலையை நிலத்தை நோக்கித் தாழ்த்தி விழிகளையும் தரையில் நாட்டி மிக மெதுவாக, “ஓரளவு தெரியும் என்பதுதான் என் நம்பிக்கை ராணி” என்று பதிலளித்தான்.

“எங்கள் மனோநிலை இப்பொழுது எப்படியிருக்கிற தென்று உங்களுக்குப் புரிகிறதா?” இந்தக் கேள்வியை ராணி கேட்கவில்லை. ராணி கேட்கு முன்பாக அலீமா கேட்டு விட்டாள்.

“புரிகிறது என்பதைத்தான் முன்னமே சொல்லி விட்டேனே,” என்றான் படைத் தலைவன் தாழ்ந்த தலையை நிமிர்த்தாமலே.

“புரிந்துமா எங்களை இங்கு வரவழைத்தீர்கள் படைத் தலைவரே!” என்று துயரம் தோய்ந்த சொற்களைக் கொட்டிய அல்லியும் சம்பாஷணையில் கலந்து கொண்டாள்.

“ஆம் அல்லி! நன்றாகப் புரிந்துதான் இங்கு வரவழைத்தேன். காரணத்தைத்தான் முன்பே சொன் னேனே?” என்றான் படைத் தலைவன்.

“இந்த மாளிகையின் அவப்பெயரால் கற்புடைய. பெண்கள் இந்த இடத்தில் நடமாடமாட்டார்கள் என்று டைபீரியஸ் நினைப்பான் என்ற காரணத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?” என்று குறுக்கே பாய்ந்தாள் ராணி சீற்றத்துடன்.

“ஆம் ராணி.” தீனமான குரலில் வெளிவந்தது படைத் தலைவனின் பதில்.

“டைபீரியஸை ஏமாற்றுவதற்காகப் பெண்கள்மீது அபாண்டம் ஏற்படக் கூடிய காரியத்தில் ஈடுபடுவது முறையென்று நினைக்கிறீர்களா?” என்று அலீமா வினவி னாள்.

இம்முறை படைத் தலைவன் தலையைக் கவிழ்ந்து கொண்டு பதில் சொல்லவில்லை. தலையை நன்றாக நிமிர்த்தி அந்த மூன்று அழகிகள் மீதும் தன் கண்களை ஒரு முறை வலம் வரச் செய்தான். பதில் சொல்ல முற்பட்டபோது அவன் குரலில் பழையபடி உறுதி புகுந்து கொண்டது. அந்த உறுதியால் வேல்களெனப் பிரகாசிக்கும் கண்களுடன் பேசினான் படைத்தலைவன். “ராணி! அலீமா! அல்லி! உங்கள் மூவரிடமும் என் இதயத்துக்கு எத்தனை ஈடுபாடு, எவ்வகை ஈடுபாடு என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் மீது அபாண்டம் ஏற்படுவதா அல்லது என் உயிரை இழப்பதா என்பது மட்டும் பிரச்னையாயிருந்தால் என் உயிரைத்தான் இழப்பேனே யொழிய உங்கள் நற்பெயருக்கு மாசு ஏற்பட ஒருகாலும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் இப்பொழுது நம் முன்னிருக்கும் பிரச்னையில் பிணைக்கப்பட்டிருப்பது உங்கள் மூவர் வாழ்வு மட்டுமல்ல தமிழகத்து மக்களின் தற்கால வாழ்வு, மானம், பிற்காலம் அத்தனையும் பின்னிக் கிடக்கின்றன. நாம் எந்த நிமிஷத்திலும் போர் மூளக்கூடிய நிலையில் இருக்கிறோம்…” என்று கூறிய படைத் தலைவன் தன் பேச்சைச் சிறிது நிறுத்தி அந்த மூவர் முகங்களையும் கவனித்தான்.

ஆவேசமான அந்தப் பேச்சினால் கூட அந்தப் பெண்களின் மனோநிலை மாறாதது மட்டுமல்ல, மேலும் கடினப்பட்டதாகத் தெரிந்தது படைத் தலைவனுக்கு. அந்தக் கடினம் ராணியின் அடுத்த கேள்வியிலும் தொனித்தது.

“உங்கள் நாட்டு இலக்கியங்களைச் சரியாகப் படித்திருக்கிறீர்களா படைத் தலைவரே?” என்று கேட்டாள் ராணி.

“ஓரளவு படித்திருக்கிறேன். எதற்காகக் கேட்கிறாய்?” என்று வினவினான் படைத்தலைவன்.

“உங்கள் படிப்பு பேச்சில் புலனாகவில்லை படைத் தலைவரே.”

“எப்படி மாறுபடுகிறது?”

“இந்த நாட்டுக்கு வந்தபின் இருபெரும் கதைகளை உங்கள் மக்கள் சொன்னார்கள் எனக்கு.”

“என்ன கதைகள்?”

“ஒன்று ராமாயணம்.”

“இன்னொன்று மகாபாரதமாக்கும்?”
“ஆம் படைத் தலைவரே! சிறையெடுத்தவள் கற்பையும் கௌரவத்தையும் காக்க முதல் போர் நடந்தது. அப்படித்தானே?” |

“ஆமாம்.”

“இன்னொருத்தியின் விரிந்த குழலை வாரி முடிக்க இரண்டாம் போர் நிகழ்ந்தது!”

“ஆம் ராணி, ஆம்!”

“இந்தக் காவியங்களின் படிப்பினையை நீங்கள் ஏன் அறியவில்லை படைத் தலைவரே? ஒவ்வொரு பெண்ணின் மானத்தைக் காக்கவே பெரும் போர் நிகழ்ந்து ஏராளமான உயிர்கள் அழிந்துபோன இந்த நாட்டில் பிறந்த நீர், ஒரே ஒரு போருக்காக, அதுவும் போர் நிகழப் போகிறது என்ற எதிர் பார்ப்புக்காக, மூன்று பெண்களின் நற்பெயரை கெடுக்க முன் வந்தீர்களே, இது முறையா? நீங்கள் கற்ற வித்தையின் பயன் இதுதானா? கற்புடைய பெண் எவளும் தன் இனத்தை இழப் . பாள், நாட்டை இழப்பாள், ஏன் கற்புக்காக உலகத்தையேகூட இழப்பாள் என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை?” இதை ராணி மிகுந்த உணர்ச்சியுடன் பேசினாள். மற்ற இருவரும் பேசாதிருந்தாலும் ராணியின் பேச்சு அவர்கள் மனத்தில் எதிரொலி செய்வதை முகபாவங்களிலிருந்தே ஊகித்துக் கொண்ட படைத்தலைவன் சிறிதும் அசையாமல் நிதான மாகவே பதில் சொன்னான்: “ராணி! நீ கூறிய காவியங்களை நான் நன்றாகப் படித்திருக்கிறேன். அவற்றில் கண்ட தத்துவங்களை நான் அறியாமலும் இல்லை. ஆனால் அந்தக் காவிய நிகழ்ச்சிகள் வேறு, இப்பொழுது நாம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் அஸ்திவாரமே வேறு. பொருந்தாத உவமை களைக் கூறாதே. ராமகாவியத்தில் நடந்ததுபோல் யாரை யாவது ஒருவன் கவர முற்பட்டால், என் பிணத்தைத் தாண்டித்தான் உங்கள் மீது அவன் கை வைக்க முடியும். பாரதத்தில் நடந்தது போல் உங்களில் ஒருவரை எவனாவது அவமதிக்கச் சபைக்கு அழைத்து வந்தால் அவன் மட்டுமல்ல, அந்தச் சபையில் அனைவரையும் தயைதாட்சண்யமின்றி வெட்டிப் போடத் தயங்கமாட்டேன். அத்தகைய சம்பவம் இங்கு ஏற்பட்டு விடவில்லை. நான் உயிருடன் இருக்கும் வரையில் ஏற்படவும் ஏற்படாது. தவிர உங்களை நான் வர வழைத்தது என்னையும் என் சகாக்களையும் தவிர யாருக்கும் தெரியாது” என்றான்.

“எந்தச் சகாக்கள்? கொள்ளைக்காரர்களா?” என்று கேட்டாள் அலீமா.

“இல்லை அலீமா. இந்த மாளிகையில் இப்பொழு திருப்பவர்கள் கொள்ளைக்காரர்கள் அல்ல. என் நம்பிக்கைக்குப் பாத்திரமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என் நன்னடத்தையில் நம்பிக்கையுள்ளவர்கள். தமிழகத்தின் பிற்காலம் ஒன்றுதான் என் குறிக்கோள் என்பதைச் சந்தேகமற உணர்ந்தவர்கள். இரவின் மூன்றாம் ஜாமத்திலிருந்து அவர்கள் மட்டும் இங்கிருப் பார்கள்” என்றான் படைத் தலைவன்.

“மற்ற சமயங்களில்?”

“புகாரின் கேளிக்கைக்காரர்களும், குடிக்கும் யவனர்கள், பரதவர்கள் முதலியோரும் இருப்பார்கள். இந்த மாளிகைக்கு இரண்டுவித வேஷமுண்டு.”

“இருவித வேஷங்களா?”

“ஆம் அலீமா? பகலிலும் இரவின் முதல் இரண்டு ஜாமங்களிலும் இது கேளிக்கைக் கூடம், மூன்றாவது ஜாமத்தி லிருந்து தமிழகத்தின் தலைசிறந்த ஒற்றர்களின் இருப்பிடம், நான் சாதாரணமாக இங்கு வருவதானால் இரண்டாம் ஜாம ஆரம்பத்திலேயே வந்து விடுகிறேன். ஆகவே, டைபீரியஸ் என்னைக் குடிகாரனென்றும் நடத்தை கெட்டவனென்றும் நினைக்கிறான். இரண்டாம் ஜாமத்தில் இங்கு வரும் நான் இரண்டாம் ஜாமம் முடிந்து கேளிக்கைக் கூட்டம் போன பின்பும் இங்கு தங்குகிறேன். மூன்றாம் ஜாமத்தில் ஊர் உறங்கும். ஆனால் நானும் என் ஒற்றர்களும் உறங்குவதில்லை . தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகளைப்பற்றி விவாதிக்கிறோம்.”

“அதனால் தான் சில நாட்கள் பகல் வேளைகளில் மரக்கலத்தில் உறங்குகிறீர்களா?” என்று அலீமா வினவினாள்.

“ஆம் அலீமா” என்ற படைத் தலைவன் மீண்டும் ராணியை நோக்கிச் சொன்னான்: “ராணி! நான் சொன்ன தன் அர்த்தம் புரிகிறதல்லவா உனக்கு? நீங்கள் நினைப்பது போல் பெரும் அபவாதம் எதுவும் ஏற்படாது உங்களுக்கு. உங்களை வேண்டுமென்றே இரண்டாம் ஜாமத்திற்குப் பின்பு இங்கு வரவழைத்தேன். இந்த இடத்தில் நாம் கூடுவதை டைபீரியஸ் எதிர்பார்க்கமாட்டான் என்ற நம்பிக்கையிலேயே இங்கு உன்னை வரவழைக்க ஓலை அனுப்பினேன்.”

“இங்கு நம்மை டைபீரியஸ் எதிர்பார்க்க மாட்டான் என்று உங்களுக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்?” என்றாள் ராணி.
“என்னுடன் படகில் வந்த யவனர்கள் சொல்லியிருப் பார்கள், நான் இந்த மாளிகைக்குப் போயிருப்பதாக. திட்டி வாசல் காவலரை விசாரித்தாலும் தலைக்கவசமணிந்த குடிகாரன் ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு போனதாகத்தான் தகவல் கிடைக்கும். ஆனால், நான் அல்லியைப் போர்த்திவிட்டதால், பெண் யாரென்று தெரியாது. நீயும் அலீமாவும் வந்ததோ பெரும் மர்மம். ஊரடங்கிய பிறகு வந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் நினைக்கிற அளவுக்கு உங்கள் நற்பெயர் கெடக் காரணமில்லை. அப்படியே ஓரிருவர் உங்களைப் பார்த்ததாக வைத்துக்கொண்டாலும் நாம் கவலைப்பட வேண்டிய தில்லை” என்றான் படைத் தலைவன்.

“ஏன் கவலைப்பட வேண்டியதில்லை?” மிகுந்த கோபத்துடன் கேட்டாள் அல்லி.

“அப்படிப் பார்த்தவர்கள் கிளப்பக் கூடியது வெறும் வதந்திதானே அல்லி? வதந்திக்குப் பயப்படலாமா? முன்னமே நீ வதந்தியால் பாதிக்கப்பட்டவள். உன்னையும் என்னையும் தவறாகப் புரிந்துகொண்ட பூவழகி நம்மை என்ன பாடுபடுத்திவிட்டாள்? அதுமட்டுமா அல்லி? நான் யவன ராணியைக் கவர்ந்துகொண்டு எங்கெங்கெல்லாம் போயிருக் கிறேன். இங்கிருந்து பிரும்மானந்தர் ஆசிரமம் போனேன். அங்கு பூவழகியின் தீ விழிகளுக்கு இலக்கானேன். பிறகு இந்திர விழா மாளிகையிலிருந்து இரவோடு இரவாக ராணியைத் தூக்கிக்கொண்டு வாணகரை சென்றேன், கருவூர் சென்றேன், உறையூருக்கு வந்தேன். அங்கிருந்து மீண்டும் புகாருக்கு வந்தேனே? இதையெல்லாம் அறிந்தவர் ஒருவரா, இருவரா? பலர் அல்லி பலர்! இவற்றால் கிளம்பாத வதந்தி இனிக் கிளம்புமா? தவிர வதந்திகளுக்கு அஞ்சுவதும் விவேகமல்ல. அஞ்ச வேண்டியது மனச்சாட்சி ஒன்றுக்குத்தான். அது தெளிவாயிருக்கும்வரை நற்பெயரை யாரும் கெடுக்கமுடியாது. வதந்திகள் இடைக் காலத்தில் கெடுக்கலாம். ஆனால், இறுதியில் பொய் வதந்திகள் வந்த வேகத்தில் மறையும். உண்மையும் நற்பெயருமே நிலைக்கும். ராணி கூறிய அந்த ராமாயணப் பெருங்காவியத்தையே பார். சீதை மீதும் வதந்தி ஏற்படத்தான் செய்தது. அதற்காகக் காட்டுக்கும் அனுப்பப்பட்டாள், அந்தக் கற்புக்கரசி, கருத்தரித்த நிலையில். ஆனால் உண்மை மறைந்ததா? இன்றும் அவளைக் கற்பின் தெய்வமாகக் கொண்டாடவில்லையா? வதந்தி பனி போன்றது. சத்தியத்தின் ஒளி அதை வெகு சீக்கிரம் கிழித்து விடும். ஆகவே கவலை வேண்டாம் அல்லி. உங்கள் யார் நற்பெயரும் போகாது. போக நான் அனுமதிக்கவும் மாட்டேன். நாட்டு நலனை முன்னிட்டு நாம் சில முறைகளை, எச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மூவரும் இப்பொழுது எனக்கு அளிக்கக்கூடிய உதவிதான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும். பெரும் போர் மூள இருக்கும் இந்தச் சமயத்தில் உங்கள் மனத்தை விரிவுப்படுத்திக் கொள்ளுங்கள்… லட்சக்கணக்கான மக்களின் நலனில் உயிர்களில் தமிழகப் பெண்மக்களின் கற்பில் மனத்தைப் பதிய வையுங்கள். பதிய வைத்து இதைக் கவனியுங்கள்” என்று கூறிக் கொண்டே மீண்டும் மஞ்சத்தை அடைந்த படைத் தலைவன், அதில் விரிந்து படர்ந்த பட்டுச் சீலையைக் கூர்ந்து நோக்கினான்.

படைத் தலைவன் அளித்த விளக்கத்தாலும், அவன் பேச்சில் தொனித்த உணர்ச்சியாலும் தங்கள் ஒவ்வொருவர் நற்பெயரிலும் அவனுக்கிருந்த அக்கறையை அவன் வெளி விட்டுச் சொல்லியதாலும், தாங்கள் எதிர்பார்த்தபடி அப்படிப் பெரும் அபவாதம் ஏதும் தங்கள் மீது விழுவது சாத்தியமில்லை என்ற நினைப்பாலும், அந்த அழகியர் மூவரும் மெள்ள மெள்ள மஞ்சத்தை அணுகினார்கள். அலீமா வும் அல்லியும் எதிரும் புதிருமாக மஞ்சத்தில் உட்கார்ந்து கொள்ள ராணி மட்டும் படைத் தலைவனுக்கு வெகு அருகில் வந்து நின்றுகொண்டாள். “நீயும் இப்படி உட்கார் ராணி. அப்பொழுதுதான் நான் சொல்லும் விஷயங்கள் உனக்குத் தெளிவாகத் தெரியும்” என்று கூறிய படைத் தலைவன் ராணியின் தோளைப் பிடித்து அவளைத் தான் நின்றிருந்த இடத்துக்கு மிக அருகில் மஞ்சத்தில் உட்கார வைத்தான்.

அவன் அப்படித் தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்ததால் ராணியின் கோபமெல்லாம் எங்கோ காற்றில் பறந்தது. ‘இவர் மட்டும் இப்படி என்னை அடிக்கடி தொட முடியுமானால் இந்த அபவாத கூடத்துக்கு ஆயிரம் முறை வருவேனே?’ என்று ராணி தனக்குள் சொல்லிக்கொண்டு தலையைக் கவிழ்த்து மஞ்சத்தின் நடுவே கிடந்த பட்டுச் சீலையை நோக்கினாள். அந்தச் சமயத்தில் அவள் கட்டியிருந்த பட்டுச்சீலை பக்கத்திலிருந்த படைத் தலைவன் மீது உராய்ந்து கொண்டிருந்தது. உட்காருவதற்காக மடிக்கப்பட்ட பட்டு மஞ்சத்தின் முகப்பிலிருந்த ஒரு காலைத் தவிர, கீழே தரையில் ஊன்றியிருந்த மற்றொரு காலுடன் பக்கத்தில் நின்றிருந்த படைத் தலைவன் கால் பட்டுக்கொண்டிருந்ததால் ராணியின் உணர்ச்சிகள் கடலலைகளெனப் பொங்கி எழுந்தன.

பட்டுச் சீலையைப் பார்த்த கண்கள் சீலையிருந்த விரல் களைப் பார்க்கவில்லை. பழைய நிகழ்ச்சிகளைப் பார்த்தன.
“பட்டுச் சீலையைப் பார்த்தாயா ராணி?” என்று கேட்டான் படைத் தலைவன்.

ராணி பதிலேதும் சொல்லவில்லை. அவளை ஒரு கையால் பிடித்து அசக்கிய படைத்தலைவன், “என்ன ராணி! பார்த்தாயா? இல்லையா? முக்கியமாக அதில் என்ன தெரிகிறது?” என்று மீண்டும் கேட்டான்.

ராணியின் உணர்ச்சிகள் படைத்தலைவனுக்கு விளங்கா விட்டாலும் மற்ற இரு பெண்களுக்கும் விளங்கிவிட்டன. ராணி பட்டுச் சீலையைப் பார்க்கவில்லை யென்றும் பழங்கனவுகளைக் காண்கிறாளென்பதையும் புரிந்து கொண்ட இரு பெண்களும், ஒருவரையொருவர் தலையைத் தாழ்த்திய வண்ணமே விழிகளை உயர்த்திப் பார்த்துப் புன்முறுவல் செய்து கொண்டார்கள்.

அவை எதையுமே கவனிக்காத படைத் தலைவன், “அலீமா! ராணிதான் மௌனியாகி விட்டாள். உனக்காவது தெரிகிறதா இல்லையா?” என்று கோபத்துடன் வினவினான்.

“எது படைத் தலைவரே?” என்று கேட்டாள் அலீமா.

“பட்டுச் சீலையில் காணப்படும் திட்டம்” என்றான் படைத் தலைவன்.

“அதில் திட்டம் ஏதும் தெரியவில்லையே!” என்றாள் அலீமா.

“வேறென்ன தெரிகிறது?”

“சில சித்திரங்கள் தெரிகின்றன. கோடுகள் தெரிகின்றன.”

“பிறகு?”

“இரண்டு சிவப்புப் புள்ளிகள், ஒரு புள்ளி பெரியது. இன்னொன்று சிறியது.”

“சரி அலீமா. கிட்டத்தட்ட திட்டத்தையே கூறிவிட்டாய். இப்பொழுது கவனியுங்கள். ராணி! அல்லி! உங்களையும்தான்” என்று மற்ற இருவரையும்கூட அழைத்த இளஞ்செழியன், “இந்தச் சிவப்புப் புள்ளிகளிலிருந்து நமது திட்டத்தைத் துவக்குவோம்” என்று முதல் புள்ளியில் கையை வைத்துத் திட்டத்தை விவரிக்கத் தொடங்கி, “இந்த இரண்டும் போர் நிகழவேண்டிய இடங்கள். ஒன்றில் பெரும்போர்; அதிலிருந்து பின்வாங்கும் படையை அழிக்க இந்த இடத்தில் சிறிய போர் நடக்கும்” என்று மேலும் கூறலானான்.

Previous articleYavana Rani Part 2 Ch34 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here