Home Sandilyan Yavana Rani Part 2 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

103
0
Yavana Rani Part 2 Ch36 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch36 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 36 சிவப்புப் புள்ளிகள் இரண்டு

Yavana Rani Part 2 Ch36 | Yavana Rani | TamilNovel.in

மஞ்சத்தில் விரித்துக் கிடந்த மஞ்சள் நிறப் பட்டுச் சீலையிலிருந்த சிவப்புப் புள்ளிகளைச் சுட்டிக்காட்டி, தனது போர்த் திட்டத்தைப் படைத் தலைவன் விவரிக்கத் தொடங்கியதும், ராணி மட்டும் அதைச் சரியாகக் கவனிக்காமல் தனது கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாளேயொழிய, மற்ற இரு மங்கையரும் அதைச் சற்று ஊன்றிக் கவனிக்கவே தொடங்கினார்கள். அந்தப் பட்டுச் சீலை ஒன்றரை முழ நீளமும் அதே அகலமும் கொண்டு சச்சதுரமாயிருந்ததையும், அதில் செம்பருத்திச் சாற்றையும் கூட்டுமையையும் கொண்டு கறுப்பும், சிவப்புமாகப் படைத் தலைவன் பல கோடுகளை மட்டுமின்றிப் புலி, மீன் தலை களையும் சங்கு அடையாளங்களையும் வரைந்திருந்ததையும், சில இடங்களில் அடர்த்தியான மரங்களுமிருந்ததையும் கண்ட அல்லி, அந்த அடையாளங்கள் எவற்றைக் குறிப்பிடு கின்றன என்பதைப் புரிந்து கொண்டாலும், அலீமாவுக்குச் சகலமும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்ததால், அவள் தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள இளஞ்செழியனை நோக்கிக் கேட்டாள், “படைத் தலைவரே! இந்த அடையாளங்கள் எவற்றைக் குறிக்கின்றன?” என்று.

படைத் தலைவன் பட்டுச் சீலையின் மீதிருந்த கண் களை வாங்காமல் தனது உடைக் கச்சையில் செருகப் பட்டிருந்த குறுவாளைக் கையில் எடுத்துக்கொண்டு அதன் நுனியால் அந்தச் சித்திரங்களைச் சுட்டிக் காட்டி, “அலீமா! இந்தப் புலியும் மீனும் முறையே சோழ பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகின்றன. தமிழகம் மூன்று வேந்தர்களைக் கொண்டது நீண்ட காலமாக. இந்த மூன்று வேந்தர்களின் நாடுகளும் மூன்றுவித நில நீர் வளங்களுக்குக் காரணமாக இருந்து வந்திருக்கின்றன. சோழ நாடு உணவு நிரம்பியது. பாண்டிய நாடு கடல் முத்துக்கள் முதலிய உடலலங்கார நவமணிகளுக்குப் பேர் போனது. சேரநாடு வெளிநாட்டு வர்த்தகத்துக்குத் தேவையான மிளகு முதலிய மருந்துச் சாமான்களையும் மரக்கலங்களையும் உடையது. இந்த மூன்று மன்னர்களும் ஒற்றுமையாக மட்டுமிருந்தால் இன்று தமிழகம் உலகத்தின் மிகச் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாயிருக்கும். உடல் உரத்துக்கு உணவும், உடல் அலங்காரத்திற்கு நவரத்தினங்களான போகப் பொருள்களும், வெளிநாட்டுச் செல்வத்தை வாணிபத்தால் கொணர மரக்கலங்களும் உள்ள நாட்டின் சக்தி அளவிடத் தகாததாயிருக்கும். ஆனால் இந்த மூவேந்தர்களின் பரஸ்பர விரோதம், ஆதிக்க ஆசை முதலியன தமிழகத்தின் சக்தியை அளவுக்குத் தகுந்தபடி விஸ்தரிக்கவிடவில்லை. ஆகையால்தான் இன்றும் இந்த மூன்று முடியரசுகளும் ஒன்றையொன்று மோதும் நிலையிலிருக்கின்றன. சேரனும் பாண்டியனும், வஞ்சகனும் கொலைகாரனுமான இருங்கோவேளுக்கு இடங்கொடாவிட்டால், இன்று சோழநாட்டின் முதன்மையான துறைமுக நகரம் பூம்புகார் யவனர்கள் வசமிருக்காது. தமிழகத்தில் போர் மூளும் நிலையு மிருக்காது. ஆனால் அந்த நிலை வந்துவிட்டது. அந்த நிலையில் சோழ மன்னர் வெற்றியை எப்படிச் சம்பாதிக்க வேண்டும் என்பதையே இந்தப் பட்டுச் சீலையில் வரைந்திருக் கிறேன். பார் அலீமா! உற்றுப் பார். இதோ இந்தக் கோடு வரையில்தான் சோழநாடு. அதற்கு அப்பாலிருப்பது கொங்கு நாடு. அங்குதான் இப்பொழுது மன்னர் கரிகாலர் இருக்கிறார்…” என்று சொல்லிக்கொண்டே போகையில் திடீரென அல்லி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டதையும், மஞ்சத்தில் அசைந்ததையும் கண்ட படைத் தலைவன் சற்றுப் பேச்சை நிறுத்தி, “என்ன அல்லி! ஏதாவது சந்தேகமா?” என்று வினவினான்.

அல்லி குனிந்த தலையை நிமிராமலே சொன்னாள், “சந்தேகமில்லை படைத் தலைவரே! வியப்புதான்!” என்று.

“எதற்கு வியப்பு அல்லி” என்று மீண்டும் கேட்டான் படைத் தலைவன்.
“மன்னர் இருக்குமிடத்தை அப்படியே சீலையில் வரைந்திருக்கிறீர்கள்” என்றாள் அல்லி.

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது அல்லி? வேவுத் தொழிலில் இணையற்றவளென்றும் பிரும்மானந்தரின் பிரதம சீடப் பெண்ணுமான உனக்குத் தெரியாதா, அரசியலில் திறமையுள்ளவர்கள் எப்படி நகருவார்கள் என்பது. இருங்கோ வேளின் கை ஓங்கி, புகாரிலும் யவனர் ஆதிக்கம் வலுப்பட்ட பின் குணவாயிற்கோட்டம் ஒன்றைத் தவிர, வேறு எந்த இடத்தில் மன்னர் படை திரட்ட முடியும்?”

“உண்மைதான் படைத் தலைவரே! உங்கள் ஊகம் சரிதான். ஆனால் குணவாயிற்கோட்டத்திலும் மற்றப் பகுதி களைத் துறந்து அடர்த்தியான மலையும் காடும் இருக்கும் இந்தப் பகுதியில் எப்படிப் புலிச் சின்னத்தை வரைந்தீர்கள்? இது ஊகமாயிருக்க முடியாதே!” என்றாள் அல்லி தன் விரலைப் புலிச் சின்னத்தின் மீது வைத்து.

இளஞ்செழியன் லேசாக நகைத்துவிட்டுச் சொன்னான்: “அல்லி! அசல் ராஜதந்திரியாகப் பேசுகிறாய். போர் முறை களையும் படைகள் அமைக்க வேண்டிய இடங்களையும் அறிந்து பேசுகிறாய். உன்னைப் போன்ற பெண்கள் தமிழகத் தில் அதிகரித்து விட்டால், இங்கு என்னைப் போன்ற ஆண் பிள்ளைகளுக்கு வேலையிருக்காது. படைத் தலைவர்கள் பிறகு கிடையாது. படைத் தலைவிகள்தான் இருப்பார்கள்.”

இதைக் கேட்ட அல்லியும் புன்முறுவல் செய்தாளா னாலும், விஷயத்தை மாற்றாமல் பழையபடி தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள முற்பட்டு, “இருக்கட்டும் படைத் தலைவரே! என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வில்லையே” என்றாள்.

இளஞ்செழியன் மீண்டும் பட்டுச் சீலையை ஆராய்ந் தான். பிறகு தன் கத்தியால் இரண்டு மூன்று இடங்களைச் சுட்டிக் காட்டி, “அல்லி! மன்னரின் கூர்மையான புத்தியையும் இரும்பிடர்த்தலையாரின் போர்த் திறமையையும் அறிந்தவர்களுக்கு அவர்கள் படை திரட்டக்கூடிய இடத்தைக் கண்டுபிடிப்பது ஒரு பிரமாதமல்ல. டைபீரியஸின் சதியால் நான் தமிழகத்திலிருந்து. போன பிறகு இரும்பிடர்த் தலையாரும், மன்னரும் புகாரிலேயே ஒரு படையைத் திரட்டியதாகக் கேள்விப்பட்டேன். அது எத்தனை தூரம் உண்மையோ எனக்குத் தெரியாது..” என்று ஏதோ மேலும் சொல்லப் போனவனை ராணியின் குரல் தடுத்தது. “அது உண்மைதான் படைத் தலைவரே! சந்தேகம் வேண்டாம்” என்றாள் ராணி.

தனது கடைசி வார்த்தைகளால் ராணி சுயநிலை அடைந்துவிட்டதைப் புரிந்துகொண்ட படைத் தலைவன் வியப்புடன், “என்ன ராணி! கரிகாலர் புகாரில் படை திரட்டியது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“மற்றவர்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும். என்னைவிட டைபீரியஸுக்கு நன்றாகத் தெரியும்” என்றாள் ராணி.

“விளக்கிச் சொல் ராணி” என்று ஆவலுடன் கேட்டான் படைத் தலைவன்.

ராணி சொன்னாள்: “இரும்பிடர்த்தலையாரும் கரிகாலரும் இங்குள்ள பரதவரையும் இதர சோழ வீரர்களையும் கொண்டு ரகசியப் படையொன்று அமைத்தார்கள். மெள்ள பூம்புகாரை வசப்படுத்திக் கொண்டு கடல்வழியை அடைத்து விட்டால், இருங்கோவேளுக்கு சேரன் உதவி கடல் மூலம் கிடைக்காதென்றும், தரை மூலம் போர் நடந்தால் முதலில் உள்நாட்டுக் கலகத்தைத் கிளப்பி, சோழ நாட்டை வசப்படுத்திக் கொண்டு பிறகு சேரபாண்டியர்களைக் கவனிக்கலாமென்றும் கரிகால்வளவர் நினைத்திருக்க வேண்டும். பூம்புகாரை வசப்படுத்த அவர்கள் செய்த முயற்சி ஓரளவு பலனும் தந்தது. ரகசியப்படை வலுத்தது. காவிரிமூலம் படகுகளில் அந்தப் படையினர் உலாவுவதும் சாத்தியமாயிற்று. ஏன் என்னையும் கருவூர் சமண அடிகளையும்கூட இரும்பிடர்த்தலையார் தன் வீரர்களைக் கொண்டு வளைத்து அழைத்துச் சென்றார்.”

ராணியின் பேச்சை இடையில் வெட்டிய படைத் தலைவன் கேட்டான், “உன்னையும் சமணத் துறவியையுமா ராணி?” என்று.

“ஆம் படைத் தலைவரே! இரவில் முன்னேற்பாட்டின் படி, பரதவர் குடிசைகள் பக்கம் சென்றேன். பிறகு டைபீரியஸின் வீரர்களிடமிருந்து தப்ப நானும், அடிகளும் சுங்கச் சாவடிக்குப் பக்கத்திலிருந்த பழைய மண்டபத்துக்குப் போனோம். அங்கு பொதிமூட்டைகளுக்கிடையில் இரும் பிடர்த்தலையாரும், அவர் வீரர்களும் மறைந்திருந்தார்கள். அதுமட்டுமல்ல, எங்களைத் தொடர்ந்த வீரர்களிடமிருந்து எங்களைக் காத்தவர் மன்னர் கரிகாலர்தான்” என்றும் ராணி கூறினாள்.

“மன்னரா?” ஆச்சரியத்துடன் எழுந்தது இளஞ்செழியன் கேள்வி.

“ஆம் படைத் தலைவரே! மன்னரைத்தான் பரதவர் குடிசையில் சந்தித்தேன். முதுகில் குத்தப்பட்டிருந்த என்னைச் சமண அடிகளின் தோளில் ஏற்றித் தப்ப வைத்தவரும் அவர்தான். துரத்தி வந்த டைபீரியஸின் வீரர்களை வாள் சுழற்றித் தேக்கியதும் அவர்தான்” என்று அன்று நடந்த சம்பவங்களை விவரித்த ராணி, “ஆம் படைத் தலைவரே! பிறகு என்னையும், சமண அடிகளையும் பொதிப் படகுகளில் இரும்பிடர்த்தலையாரும் அவரது வீரர்களும் கொண்டு போனார்கள். இதிலிருந்து தெரியவில்லையா புகார் கிட்டத்தட்ட அவர்கள் இஷ்டப்படி ஆடிக்கொண்டிருந்ததென்று?” என்று முடித்தாள்.

இளஞ்செழியன் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினான். பிறகு கேட்டான், “ஆம் ராணி! அப்படியானால் புகார் ஏன் அவர்கள் வசம் சிக்கவில்லை ?” என்று .

“எதிரி டைபீரியஸைத் தவிர வேறு யாராவது இருந்தால் சிக்கியிருக்கும். படை திரட்டப்பட்டது டைபீரியஸுக்குத் தெரியும். அவர்கள் காவிரியில் படகுகளில் அடிக்கடி உலாவியதும் அவனுக்குத் தெரியும். டைபீரியஸ் மட்டும் உடனே அவர்கள்மீது பாய்ந்திருந்தால், மன்னர் திட்டம் பலித்திருக்கும். ஆனால், நரியிலும் தந்திரம் மிகுந்த டைபீரியஸ் ரகசியப் படையை வளரவிட்டான், ஆட்டுக் கிடாவைப் போல. ரகசியப் படையில் சேர்ந்த ஒவ்வொருவனும் இருக்குமிடம், அவர்களுக்கு உதவும் பரதவர்களின் பெயர்கள், அத்தனையையும் அறிய ஒற்றர்களை ஏவினான். அவசரமாக ரகசியப் படையை நசுக்கினால், ஒருவேளை மக்கள் யவனர் மீது கொதித்தெழக் கூடும் என்பதால், உடனே எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை டைபீரியஸ். சிறுகச் சிறுக அந்தப் படையினரைச் சிறை செய்தான். சிலர் திடீரென மறைந்தனர், சிலர் சிறையில் உறைந்தனர். சிலர் சடலங்கள் காவிரி ஓரத்தில் ஒதுக்கப் பட்டன. டைபீரியஸின் முறைகள் மன்னருக்குப் புரிந்திருக்க வேண்டும். டைபீரியஸின் கை நீளத் துவங்கிய சில தினங்களில் மன்னர் ரகசியப் படையைக் கலைத்திருக்க வேண்டும். அப்புறம் அதன் சுவடு எதுவுமே புகாரில் தெரியவில்லை” என்றாள் ராணி.

இளஞ்செழியன் அவள் சொல்வதை ஆமோதிப்பது போல் சிரக்கம்பம் செய்து, “மன்னருக்கு இது ஒரு தோல்வி தான் ராணி! நானிருந்தால் அந்தத் தோல்வி ஏற்பட்டிருக் காது” என்றான்.

“நீங்களிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்டாள் ராணி.

“நானிருந்தால், முதன் முதலில் காவிரிப் படகுகளில் ஆட்களை உலாவ விட்டிருக்கமாட்டேன். பல நாட்டவரும் படகுகளைச் செலுத்தும் பரந்த நீர்ப் பரப்பில், அதுவும் சுங்க அதிகாரிகளின் கண்ணோட்டத்தில் படகுகளை உலாவ விடுவது அபாயம். நடக்கும் எதுவும் நிலத்தில் நடந்திருக்க வேண்டும். நமது வீரர்கள் ஒற்றர்களாகவும் பணியாட்களாகவும் மாறி டைபீரியஸிடம் சேவகம் செய்திருக்க வேண்டும். அவசியமானபோது வாளேந்தவும், புகாரின் கடற்படைக் கோட்டை வாயில்களைத் திறக்கவும் எதிரியின் ஆயுத சாலையை நிர்மூலமாக்கவும் அவர்கள் பணியாற்றியிருக்க வேண்டும். பகிரங்கமாக மன்னர் இங்கு உலாவியதே பிசகு. மன்னரை அறியாதவர்கள், புகாரில் வெகு சிலர். யவனர் கேளிக்கைகளிலும் பந்தயங்களிலும் சிறுவயது முதலே அவர் கலந்து கொண்டவர். அவர் புகாரிலிருப்பதை டைபீரியஸ் அறிவது பிரமாதமல்ல. அறிந்த பின்பு ரகசியப்படை திரட்டப்படுமென்பதும் எளிதில் ஊகிக்கக்கூடிய விஷயம். அது கிடக்கட்டும் ராணி, மன்னரின் அந்த முயற்சிதான் தோல்வியடைந்து விட்டது. அடுத்த முயற்சி வெற்றி பெற இந்தச் சீலையைக் கவனியுங்கள்” என்று கூறிய இளஞ் செழியன் மீண்டும் அல்லியை நோக்கி, “அல்லி! மலையும் காடும் மிகுந்த இந்த இடத்தில் தான் மன்னர் இருப்பார் என்பதை நான் எப்படி ஊகித்தேன் என்று கேட்டாயல்லவா? இதோ பார், குணவாயில் சேர நாட்டின் கிழக்கு வாயிலாகக்கருதப்படுகிறது. ஆகவே, அதற்கு வெளியிலுள்ள கிராமங்கள் அனைத்தும் சேர நாட்டு ஒற்றர்களின் கண்காணிப்பில் இருக்கும். நீண்ட தூரம் படைத் தளத்தைத் தள்ளிப் போட்டால், கரிகாலரின் ஒற்றர்கள் சேர நாட்டைக் கண்காணிக்க முடியாது. தவிர இந்த இடத்தில் காடுகள் அடர்த்தி. உள்ளிருக்கும் படையைப் பகற்காலத்திலேயே பார்க்க முடியாது. ஆனால் படையிலிருந்து பிரியும் தனி ஒற்றர்கள் எப்பொழுதும் நிர்ப்பயமாக எதிரிப் பிராந்தியத்தில் உலாவலாம். எதிரிக்குச் சந்தேகம் வலுத்தால் காட்டில் மறையலாம். காடு அடர்த்தியானதால் ஆயுதங்கள் கொண்டு வரும் வண்டிகள் இதற்குள் புகமுடியாது. புகுந்தாலும் மரங்கள் தடுக்கும். ஆகவே இந்த இடத்தில் படை திரட்டப்படும். இது தளமாக முடியும் என்ற நினைப்பே எதிரிகளுக்கு இருக்காது. புத்திசாலியான எந்தப் படைத் தலைவனும் ரகசியத் தளத்தை இங்குதான் அமைப்பான். மன்னர் அறிவின் திறத்தைப்பற்றி நான் உனக்குக் கூறவேண்டுமா நாங்கூர்வேள் மகளே!” என்று விளக்கினான்.

அல்லியின் முகம் நாணத்தால் சிவந்தது. “அதையும் புரிந்து கொண்டு விட்டீர்களா?” என்றாள்.

“நீ நாங்கூர்வேள் மகளானதும் சோழ நாட்டின் பிற்கால ராணியாக மன்னர் உன்னை ஏற்றதும் எனக்குத் தெரியும். இதைப்பற்றித்தான் சற்று முன்புகூட விவாதித்தோமே. இந்த விவரங்கள் அனைத்தையும் தற்சமயம் சோழ நாடெங்கும் உலாவும் எனது ஒற்றர்கள் கூறினார்கள். அதில் எனக்கு ஆச்சரியமில்லை அல்லி. வண்டைப் பழிக்கும் கருவிழிகளையும், மன்னருக்காக உயிரையும் கொடுக்கத் துணியும் இதயத்தையும் உடைய என் அல்லியைவிடச் சிறந்த ராணி சோழ மண்டலத்துக்கு எங்கிருந்து கிடைக்கப் போகிறாள்?” என்ற இளஞ் செழியன், மீண்டும் பட்டுச் சீலையை நோக்கித் தலையைத்தாழ்த்தி, “நான் வந்த ஒரு மாத காலமாகச் சோழ நாட்டின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தலைமறைவாயிருந்து கவனித்து வருகிறேன். தலையை நான் கவசத்தால் மறைப்பதைக் கூறவில்லை. அந்த வேடம் புகாருக்கு மட்டும்தான். மற்ற இடங்களில் நேராகவும் போகிறேன், மாறு வேடங்களிலும் போகிறேன். அப்படிப் போய்ப் பல இடங்களையும் ஆராய்ந்ததன் விளைவாகத்தான் இந்தப் பட்டுச் சீலையில் திட்டத்தைத் தீட்டினேன். இதோ புலிச் சின்னம் குணவாயிற் கோட்டம். இதோ இருக்கும் ஈட்டி தான் இருங்கோ வேளிருக்கும் உறையூர். அவனுக்குப் பின்னால் பாண்டிய நாடு. பக்கவாட்டில் சேர மலைநாடு. இந்த மூன்று இடங்களும் அருகிலிருப்பதால், மூவருடன் தனித்தனியாகப் போரிட முடியாது. ஆகவே மூவரையும் சேர்த்து ஓரிடத்துக்கு இழுக்க வேண்டும். அந்த இடத்தைத் தான் இந்தப் பெரும் சிவப்புப் புள்ளியால் குறிப்பிட்டிருக்கிறேன். அங்கு நாம் சந்திப்போம் சேர பாண்டியர்களையும், வேளிர்களையும். அங்கு அவர்கள் முறியடிக்கப் பட்டால், பின்வாங்க இந்த ஒரே ஒரு வழி தானிருக்கிறது. அந்த வழியில் அவர்களை வடக்கு நோக்கிப் போகவிட்டு இந்தச் சிறிய சிவப்புப் புள்ளியிருக்குமிடத்தில் மடக்கி நிர்மூலமாக்குவோம்” என்றான்.

“ஏன், நேராக உறையூரைத் தாக்கிப் பிறகு பக்கத்தில் ஏழு காதத்திலிருக்கும் கருவூரைத் தாக்கினால் என்ன?” என்று கேட்டாள் ராணி.

“இதோ பார் ராணி! உறையூரை அடையக் காவிரியைக் கடக்க வேண்டும். அங்கிருந்து கருவூரை அடைய ஆம்பிரா வதியைக் கடக்க வேண்டும். இரண்டு நதிகளின் இடைஞ்சல் இருக்கிறது. இரண்டு பெரும் கோட்டைகளையுடைய இரண்டு தலைநகரங்களையும் வளைத்து ஓடுகின்றன. அந்த நதிகளை இயற்கை அரண்களாகச் சோழ சேர மன்னர்கள் எப்பொழுதும் நினைத்து வந்திருக்கிறார்கள். ஆகவே நதி முகப்புகளில் காவற்படை உண்டு. காவற் படைகளைத் தாண்டினால், நதிகளின் இடைஞ்சல், நதிகளைத் தாண்டினால் செயற்கை அரண்களான கோட்டைகளின் இடைஞ்சல். அதுவும் கருவூர் வஞ்சியின் கோட்டை பலமானது. பல வளைவுகளைக் கொண்டது. வெற்றி கொள்ளமுடியாது. நாமிருவரும் முன்பு வஞ்சிக்குச் சென்றபோது கவனித்தேன் அதன் அமைப்பை. சேரனை வெற்றி கொள்வ தானால் அவனைக் கோட்டையிலிருந்து வெளியே இழுக்க வேண்டும் என்று அன்றே முடிவு செய்தேன். ஆகவே இந்தச் சிவப்புப் புள்ளிக்கு அவர்களை இழுக்க வேண்டும்” என்று விளக்கினான் படைத் தலைவன்.

“எப்படி இழுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் அதுவரை மௌனமாயிருந்த அலீமா.

“நான் இழுக்கப் போவதில்லை அலீமா. மன்னர்தான் இழுக்க வேண்டும். போர் மூளும்வரை இதில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை” என்றான் படைத் தலைவன்.

ராணியும், அல்லியும் சட்டென்று திரும்பி வியப்புடன் படைத் தலைவனைப் பார்த்தார்கள்: “என்ன! போர் மூளும் வரை கலந்து கொள்ளப் போவதில்லையா?” என்று அல்லி வாய் திறந்தும் கேட்டாள்.

“இல்லை அல்லி! இல்லை” என்றான் படைத் தலைவன்.

“ஏன்?” உஷ்ணத்துடன் வெளிவந்தது அல்லியின் கேள்வி.

“காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவை எதையும் இப்பொழுது கூறமுடியாது. காரணங்கள் இந்தப் பட்டுச் சீலைச் சித்திரங்களில் இருக்கின்றன” என்று கூறிய படைத் தலைவன், சரேலெனப் பட்டுச் சிலையை மடித்துக் கையிலிருந்த கத்தியால் இரண்டாகக் கிழித்து, அவற்றில் ஒன்றை அல்லியிடம் கொடுத்து, “அல்லி, இதை மன்னனிடம் கொடுத்துவிடு. அவர் புரிந்து கொள்வார்” என்று சொல்லி மற்றொரு பாதியை மடித்துத் தன் மடியில் வைத்துக் கொண்டான்.

படைத் தலைவன் செயல்கள் விசித்திரமாயிருந்தன அந்தப் பெண்கள் மூவருக்கும். ஆனால் அவர்கள் வியப்பைச் சிறிதும் லட்சியம் செய்யாத படைத்தலைவன் சொன்னான்: “என்னிடம் ஆழ்ந்த அன்புள்ள உங்கள் மூவரால் தமிழகம் பிழைக்க வேண்டும். அல்லி! நீ மன்னனிடம் சீலையைக்கொடு. உன்னைப் பத்திரமாக மீண்டும் அலீமா வாணகரை சேர்ப்பாள். பிரும்மானந்தரிடம் எதுவும் சொல்லாதே. திரும்பி வந்த விதத்தைப் பற்றி ஏதாவது சொல்லி மழுப்பி விடு. சீக்கிரம் குணவாயிற் கோட்டத்துக்குப் போ. நீ இருக்க வேண்டிய இடம் மன்னர் அருகில். அலீமா என்னுடன் இருப்பாள். ராணி இருக்க வேண்டிய இடம் டைபீரியஸுக்கு அருகில்.”

அலீமா தன் பெருவிழிகளைப் படைத் தலைவன்மீது நாட்டினாள். “ராணி டைபீரியஸின் அருகிலிருக்க வேண்டுமா?” என்றும் கேட்டாள்.

“ஆம்.”

“ஏன்?”

படைத் தலைவன் தன் கூரிய விழிகளை அலீமாமீது நாட்டி, “வைரத்தை வைரத்தால்தான் அறுக்கமுடியும்” என்று கூறியதன்றி, “நேரமாகிறது அலீமா! அல்லியை அழைத்துப்போ. நான் ராணியிடம் சில விஷயங்களைத் தனிமையில் பேசவேண்டும்” என்றும் கட்டளையிட்டான்.

Previous articleYavana Rani Part 2 Ch35 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here