Home Sandilyan Yavana Rani Part 2 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

71
0
Yavana Rani Part 2 Ch37 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch37 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 37 விதியின் வழி

Yavana Rani Part 2 Ch37 | Yavana Rani | TamilNovel.in

படைத் தலைவன் கட்டளையைக் கேட்டதும் ஒரு கணம் நிதானித்து ஏதோ யோசித்த அலீமா, அவன் கண்களில் துளிர்விட்ட உறுதியைக் கண்டதும் மேற்கொண்டு அந்த அறையிலிருப்பதால் பயனேதுமில்லை என்பதையும், ராணி யுடன் ஏதோ அந்தரங்கமாகப் படைத் தலைவன் பேச விரும்புகிறானென்பதையும், அந்தப் பேச்சில் தன்னையோ அல்லியையோ கலக்கவிடும் யோசனை அவனுக்குச் சிறிதளவும் இல்லையென்பதையும் புரிந்து கொண்டாளாகை யால், “வாருங்கள் சோழ நாட்டு ராணி” என்று அல்லியை அழைத்துக் கொண்டு வாயிற்படியை நோக்கி நடக்கத் துவங்கினாள். அல்லியின் மனம் சற்று முன்பு கேட்ட பல போர்த் திட்டங்களால் பெரிதும் குழம்பிக் கிடக்கவே அவள் மஞ்சத்திலிருந்து துரிதமாக எழுந்திருக்கவில்லை. எழுந்த போதும் சட்டென்று வாயிற்படியை நோக்கி நகரவுமில்லை. ‘பல வருடங்களாகப் பழகிய தான் அறியக்கூடாத அத்தனை பெரிய என்ன ரகசியத்தை நேற்று வந்த ராணியிடம் படைத்தலைவர் பேசமுடியும்?’ என்று சிந்தித்துக் கொண்டு ஒரு விநாடி மஞ்சத்தின் பக்கத்தில் நின்று ராணியையும், படைத் தலைவனையும் மாறி மாறிப் பார்த்தாள். யவன ராணியின் எழில் முகம் பூராவும் படைத் தலைவன் கட்டளையின் விளைவாகப் புதுச் சோபையைப் பெற்று, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தது. ஆழம் கண்டுபிடிக்க முடியாத மோகனப் புன்னகையொன்று அவளுடைய செவ்விய இதழ்களில் மலர்ந்து கிடந்தது. அவள் நீலமணிக் கண்கள் ஓரளவு வெற்றி கொண்ட பெருமிதப் பார்வையை அல்லியின்மீது வீசின. ‘இளஞ்செழியன் யாருக்கு அடிமை என்பதைப் பூவழகியிடம் சொல் போ’ என்று ராணியின் கண்கள் தன்னை நோக்கி நகைப்பதாகத் தோன்றியது அல்லிக்கு. அந்தக் கண்களை விட்டுச் சிறிது சிரமத்துடன் பிரிந்த தன் கண்களைப் படைத் தலைவன்மீது ஓட்டிய அல்லி, அவன் முகம் ராணியின் முகத்துக்கு நேர் விரோதமான உணர்ச்சிகளைக் கொண்டிருந்ததையும், அதில் கவலை மண்டிக் கிடந்ததையும் கவனித்தாள். அதைக் கவனித்ததால் ஓரளவு மகிழ்ச்சியும் கொண்ட அல்லி, “படைத் தலைவர் உள்ளத்தில் கவலை விரிந்து கிடக்கிறது. ஆகவே ராணி எதிர்பார்க்கிறபடி வெற்றிக்கு இங்கு இடமில்லை” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு மெள்ள வாயிற்படியை நோக்கி நடந்தாள். எதற்கும் படைத் தலைவன் தன்னையும், ராணியுடன் நடத்தும் பேச்சில் அனுமதிப்பானோ என்ற சபலத்தால் வாயிற்படியில் நின்று ஒருமுறை இளஞ்செழியனைப் பார்க்கவும் செய்தாள். இளஞ்செழியன் கண்கள் சிறிதும் சலனமடையாமல் உறுதியுடன் அவளை நோக்கின. “போய்வா அல்லி? சொன்ன விஷயங்கள் நினைப்பிலிருக்கட்டும். பட்டுச் சீலையின் பாதியை மன்னரிடம் சேர்த்துவிடு. உயிரை விட்டாலும் விடு. ஆனால் அதை வேறு யார் கையிலும் சிக்க விடாதே” என்று அந்தக் கண்களிலிருந்த உறுதி குரலிலும் தொனிக்கக் கூறவே, அதற்கு மேலும் அங்கு நிற்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்ட அல்லி, சரேலெனக் கதவைச் சாத்திக் கொண்டு அலீமாவைத் தொடர்ந்து வெளியேறினாள். அவர்கள் சென்றதும் அல்லி கோபத்தால் சாத்தியதால் சட்டென்று மூடி, பாதி திறந்து விட்ட கதவை நன்றாகச் சாத்திவிட்ட படைத் தலைவன் மீண்டும் ராணி உட்கார்ந்திருந்த மஞ்சத்தை நோக்கினான்.

கால்களைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு இடது கையை ஒருபுறம் ஊன்றி வலது கையை மடியில் செயலற்றுக் கிடக்கவிட்டுத் தலையை ஒருபுறமாகச் சாய்த்து மோகனாகாரமாக உட்கார்ந்திருந்தாள் ராணி. அறையின் மூலையிலிருந்த சிறு விளக்கின் சுடர் வீசிய பொன்னிற வெளிச்சம் ராணியின் கூந்தலோடு போட்டி போட முயன்று களைத்துவிட்டதால் மெள்ள மெள்ள விளக்குச் சுடர் இழிந்து தன் ஆகிருதியை அடக்கிக் கொண்டிருந்தது. அப்படி அது ஓரளவு பிரகாசத்தைக் குறைத்துக் கொண்டதால், வெற்றி கொண்ட ராணியின் பொன்னிறக் கொண்டையிலிருந்து விலகிய ஒரு குத்து இழை பிரிந்து காற்றிலலைந்து விளக்கின் ஒளியை நோக்கிக் கேலி செய்தது. ஒளி தரும் விளக்கை அப்படி அடியோடு முறியடிப்பது தவறு என்ற காரணத்தால் வெண்மையான அவள் வழவழத்த கன்னங்கள் சுடரின் ஒளியை ஓரளவு வாங்கிக்கொண்டு மெருகு கொடுக்கப்பட்ட பொற்கட்டிகளெனப் பிரகாசித்தன. அப்படிப் பிரகாசித்த கன்னங்கள் படைத் தலைவன் விழிகளால் தாக்கப்படவே உள்ளே ஓடிக்கொண்டிருந்த உணர்ச்சிகள் கன்னத்தின் பொன்னிறத்தில் சிவப்பையும் சிறிது பாய்ச்சிவிட்டன.

அவன் உணர்ச்சிகள் நிலை தடுமாறுவதை ராணி தன் கடைவிழிகளால் கவனித்து வெட்கமும், மகிழ்ச்சியும் உடல் பூராவும் ஊடுருவி ஓடச் சிறிது தத்தளித்தாள். பிறகு அந்த ஆண்மகனின் உணர்ச்சிகளை அலைக்கழிக்கக்கூடிய சக்தி தனக்கிருப்பதை நினைத்து மனம் பூரிக்கவும் செய்தாள். தான் ஏதாவது பேச்சுக் கொடுக்கும் பட்சத்தில் படைத் தலைவன் உணர்ச்சி ஓட்டம் அறுந்து அவன் சுயநிலை அடைந்து விடுவான் என்ற எண்ணத்தால் ஏதும் பேசாமல் மௌனமே சாதித்தாள் ராணி. இயற்கையின் எழிலெல்லாம் திரண்டு வந்ததுபோல் எதிரே மஞ்சத்தில் உட்கார்ந்தும் வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேசாமல் கிரேக்க நாட்டு வெண்கல சிலையென இருந்த யவன ராணியைப் பார்த்துத் தவித்த படைத் தலைவனின் இதயத்தில் முன்பு விவரித்த போர்த் திட்டங்கள் எழுந்து புத்தியின் மோக வெறியை மெள்ளப் பிளக்கவும் முற்பட்டது.

அப்படிப் பிளக்கத் துவங்கிய நேரத்தில் தன் பல வீனத்தை நினைத்து இளஞ்செழியன் பெரிதும் ஆச்சரியப்பட்டான். ‘பூவழகியிடம் இதயத்தைப் பறிகொடுத்திருக்கும் என் உணர்ச்சிகளை வளைக்கக்கூடிய இந்த ராணியின் எழில் எத்தனை விசித்திரமானது! உறுதி மிக்கவன் என மக்கள் . கொண்டாடும் என் உறுதியைப் பிளக்கும் வன்மை வாய்ந்த இந்த ராணியின் மோக வலை எத்தனை பலமானது?’ என்று நினைத்து நினைத்து வியந்த இளஞ்செழியன், ‘என் மனத்தை அலைக்கவும், என் நாட்டைக் குலைக்கவும் ஏன் வந்தாள் இந்த ராணி? இவளை ஏன் படைத்தான் ஆண்டவன்?’ என்று நொந்துகொண்ட படைத்தலைவன், ‘சரி சரி! இவளை நினைத்தது போதும். இனியாவது நாட்டைப் பற்றி நினைப்போம்’ என்று தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டு, ராணி உட்கார்ந்திருந்த மஞ்சத் தருகில் வந்து அவளெதிரே நின்றுகொண்டு, “ராணி!” என்று சற்றுக் கடுமையான குரலில் அழைத்தான்.

ராணி தலை நிமிராமலும் அவனை ஏறெடுத்துப் பார்க்காமலும் இருந்தாள். அவன் குரலிலிருந்த கடுமைக்கு அவன் பலவீனம் காரணமென்பதை அவள் நன்றாக உணர்ந் திருந்தாள். தன்னுடைய எழில் வலையை அறுத்தெறியவே கடுமைக் குரலெனும் கத்தியைப் பலவந்தமாக வரவழைத்துக் கொண்டிருக்கிறான் படைத்தலைவன் என்பதைச் சந்தேக மறப் புரிந்துகொண்ட ராணி, தலையைத் தாழ்த்திய வண்ணமே புன்னகை கோட்டினாள். ‘பெண்கள் தான் பலவீனமானவர்கள் என்று யவன நாட்டில் சொல்கிறார்கள். ஆனால், ஆண்கள் பலவீனம் பெண்களுக்கில்லை. இதோ என் எதிரே என்னைக் கடுமைக் குரலில் அழைக்கும் இந்தப் படைத் தலைவர், எத்தனை பலவீனமானவர். பாவம்! ஏன் அப்படித் தத்தளிக்க வேண்டும் இத்தனைப் பெரிய வாள்வீரர்? இவர் ஒரு சொல்லுக்கு என் உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணிப்பேனே! இது ஏன் புரியவில்லை இவருக்கு?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட ராணி, இளஞ்செழியன் நிலை கண்டு பரிதாபமும், வெட்கமும் இணைந்த உணர்ச்சிகளுக்கு இலக்காகி எங்கோ கனவுலகில் சஞ்சரித்தாள்.

கதவருகில் எட்ட இருந்த சமயத்திலேயே நிதானத்தை இழந்த படைத் தலைவன் பட்டுச்சீலை உதவியால், ஓரளவு நிதானத்தை அடைந்தாலும், மஞ்சத்தினருகில் வந்த பிறகு ராணியின் சமீபத்தில் அவன் நிதானம் காற்றில் பறந்தது. ‘ராணி’ என்று அவன் அழைத்தபோது சொல்லில் தொனித்த கடுமையும், வெளிக்குக் கடுமையாய் இருந்ததேயொழிய அந்தக் கடுமையை உணர்ச்சிகளுடன் இழைக்கும் சக்தியைப் புத்தி அறவே இழந்தது. தலையைக் குனிந்து ராணி உட்கார்ந் திருந்ததால் பெரும் தங்கக் கட்டியில் இழை இழையாக வேலை செய்யப்பட்டதுபோல் தெரிந்த அவள் பொன்னிறக் கொண்டை அவன் கண்களுக்கெதிரே எழுந்து அவன் சித்தத்தைக் குழப்பிக்கொண்டிருந்தது. அந்தக் கொண்டைக்குக் கீழேயிருந்த கழுத்துப் பிரதேசம் மிக வெண்மையாக இருந்தது மட்டுமல்லாமல், உள்ளே ஓடிய நரம்புகளின் காரணமாக இரண்டொரு இடங்களில் பச்சையும் தட்டிக் கிடந்ததாலும், தவிர அங்கு சில மயிரிழைகளும் தங்கக்கம்பிகளென வளைந்து கிடந்ததாலும், வெள்ளைக்கல்லில் மரகதமும், தங்கமும் இழைக்கப் பட்டிருப்பது போன்ற பிரமையைத் தந்ததன் விளைவாக, படைத் தலைவன் கண்கள் கொண்டையை விட்டுப் பின்புறக் கழுத்தில் நீண்ட நேரம் பதிந்து நின்றன
.
படைத் தலைவன் அவள் தோள் மீது தன் கையை மெள்ள வைத்து மீண்டும் ஒருமுறை, “ராணி!” என அழைத் தான்.

இம்முறை அவன் குரலில் கடுமையில்லை. குழைவு நிரம்பியிருக்கிறது. காதல் மயக்கம் கரைபுரண்டு ஓடியது. அந்த மாயாதேவிக்கு எதிரில் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்துவது அவசியம் என்பதை உள்ளம் உணர்த்தினாலும், உணர்ச்சிகள் இடம் கொடாததால் அவள் தோளில் கையைச் சற்றுப்பலமாகவே அழுத்தினான் படைத் தலைவன். அவன் குழந்தைபோல் தத்தளித்துத் தன்னெதிரே நிற்பதைப் பரிபூரணமாகப் புரிந்து கொண்ட ராணி, அவனை அதிகம் சோதிப்பது சரியல்ல என்று தீர்மானித்தது, “இப்படி உட்காருங்களேன்?” என்று மெல்லிய குரலில் சொல்லியதன்றி, சிறிது நகர்ந்து மஞ்சத்தில் தன் பக்கத்தில் உட்கார இடமளித்தாள்.

மிகவும் தீனமான உணர்ச்சிகளால் மெல்லக் குழைந்த ஏதோ மேலைநாட்டு நரம்பு வாத்தியம் இழைக்கப்பட்டது போன்ற மெல்லிய அவள் குரல் ஒலியைக் கேட்ட படைத் தலைவன் அவள் உத்தரவை மீறச் சக்தி இல்லாதவன் போல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். அவளது இடது கரத்தை எடுத்துத் தன் இரு கைகளிலும் ஆதரவாகப் பிடித்துக் கொண்ட இளஞ்செழியனோ, கரத்தை அவன் கரங்களி லிருந்து சிறை மீட்க இஷ்டப்படாத ராணியோ நீண்ட நேரம் ஏதும் பேசவில்லை. உணர்ச்சிகளே பேசிக் கொண்டன. விடிய முக்கால் ஜாமமே இருந்தது. அந்த முக்கால் ஜாமப் பொழுதும் கனவேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓட்டத்தைக் காதலில் கட்டுண்டிருந்த அந்த இருவரும் அறியவில்லை. காதலுக்குக் கண்தான் இல்லை; உணர்ச்சிகளுமா இல்லை! இருந்தால் பொழுது ஓடுவதை அவை ஏன் உணர்த்தவில்லை? இதுவரை யாருக்கும் புரியாத விந்தை இது! விடை கிடைக்காத வேடிக்கை!

இயற்கையின் மடியில் மோதிய காதல் அலைகளின் வீச்சில் புரண்டு கொண்டிருந்த அந்த இருமனங்களில் ராணியின் மனமே சற்று உறுதியுடனிருந்ததால் அவள் பொழுது போவதை மெள்ள மெள்ள உணர முற்பட்டாள். கீழேயிருந்த வீரர்கள் அவசர அவசரமாக நடமாட முற்பட்ட தால் ஏற்பட்ட காலடிகளின் சத்தம் அவள் காதில் விழுந்தது. அதிக நேரம் தாமதித்தால் படைத்தலைவனுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தை அவள் அறிந்திருந்தாளாகையால், அவளே மௌனத்தைக் கலைத்து, “படைத் தலைவரே!” என்று அழைத்தாள்.

“ஹூம்” படைத்தலைவன் பதில் அந்த ஒரு ஹூங்காரத்தின் மூலம் வந்தது.

“நீங்கள் சற்று முன் என்னை அழைத்தீர்கள்?” என்றாள் ராணி.

“ஆமாம்.” இம்முறை படைத்தலைவன் ஹூங்காரம் வார்த்தையாக மலர்ந்தது.
அவன் உணர்ச்சிகள் மெள்ள நிதானமடைவதை உணர்ந்த ராணி, “எதற்கு அழைத்தீர்கள்?” என்றொரு கேள்வியை வீசினாள்.

“உன்னிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றான் படைத் தலைவன் ஏதோ புது ரகசியத்தைச் சொல்லுபவன் போல.

‘பேசுவதற்குத் தவிர வேறெதற்கு அழைப்பார்கள்?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட ராணி, “என்ன பேச வேண்டியிருந்தது?” என்று கேட்டாள்.

“பேசவேண்டியிருந்தது என்பதைவிடக் கேட்கவேண்டி யிருந்தது என்று சொன்னால் பொருந்தும் ராணி” என்றான் படைத் தலைவன் திட்டமாக, இம்முறை சுய உணர்ச்சிகளை நன்றாக அடைந்துவிட்ட காரணத்தால்.

“என்ன கேட்க வேண்டியிருந்தது?” என்று ராணி கேட்டாள். தன் தலையை நிமிர்த்தி படைத் தலைவன் மீது தன் நீலமணிக் கண்களை நாட்டி

“ஒரு உதவி கேட்க வேண்டியிருந்தது.”

“கேளுங்கள்.”

“செய்வாயா?”

“யாருக்கு உதவி?”

“அதுதான் முன்பே சொன்னேனே. என் நாட்டுக்குத்தான்.”

“அது நடவாது.”

“ஏன்?”

“உங்கள் நாட்டைப்பற்றி எனக்கு அக்கறையில்லை.”

“அப்படியானால் உதவமாட்டாயா?”

“உதவுவேன், உதவி உங்களுக்கென்றால்.”

“நான் வேறு, நாடு வேறா?”

“என் சம்பந்தப்பட்ட வரையில் அப்படித்தான்.”

“ஏனப்படிச் சொல்கிறாய் ராணி?”

“வேறெப்படிச் சொல்வது. உங்களை நான் மணக்க முடியும், நாட்டை மணக்க முடியுமா?”

இந்தக் கடைசிக் கேள்வி இளஞ்செழியன் உடலை ஒரு உலுக்கு உலுக்கியது. “மணமா ராணி” என்று கேட்டான் சங்கடம் மிகுந்த குரலில்.

இளஞ்செழியன் கரங்களில் சிறையிருந்த ராணியின் பூங்கரம் மெள்ளச் சுழன்றது. “ஆம் படைத் தலைவரே!” என்ற குரல் திட்டமாக வெளிவந்தது.

“என்ன? அத்தனை நிச்சயமாகச் சொல்கிறாய்?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“நான் சொல்லவில்லை படைத் தலைவரே! விதி சொல்கிறது. விதி சொல்வதை யவன குருமார்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். நானும் முதன் முதலாக உங்களை இங்கு சந்தித்தபோது சொல்லவில்லையா, விதி நம்மிருவரை யும் பிணைத்திருக்கிறது என்று. விதியை அப்பொழுது நீங்கள் நம்பவில்லை. ஏளனம் செய்தீர்கள். ஆனால் நிகழ்ச்சிகளை எண்ணிப் பாருங்கள். நான் புகாரின் கடற்கரையில் உங்கள் காலில் தட்டுப்பட்ட நாளாய் எத்தனை பேர் நம்மைப் பிரிக்கப் பார்த்தார்கள்? முடிந்ததா? உங்களை யவன மரக் கலத்தில் ஏற்றி அழித்து விட டைபீரியஸ் முயன்றதே முடியவில்லையே! மீண்டும் மீண்டும் நாம் ஒன்றாகத் தள்ளப்படுகிறோம். நீங்கள் பிரிந்த பின் முதன் முதலில் சந்திப்பது பூவழகியை அல்ல என்னைத்தான். பூவழகி எந்தச் சந்தர்ப்பத்திலும் விதியின் கரங்களால் பிரிக்கப்பட்டாள் என்பது ஞாபகமிருக்கட்டும். முதலில் உங்கள் மீதுள்ள பொறாமையால் உங்களை விலக்கினாள். மனமுடைந்த நீங்கள் கடற்கரையில் நடந்து வந்தீர்கள். நான்தான் மோதினேன் உங்கள் காலில், தவழ்ந்தேன் உங்கள் கைகளில். பிறகு கருவூர் வஞ்சிக்கு ஒன்றாகச் சென்றோம். உறையூருக்கு ஒன்றாகப் பயணம் செய்தோம். அடுத்தபடி காவிரியின் விஷத் துளிகளால் பிரிக்கப்பட்டோம். நீங்கள் மீண்டதும் மறுபடியும் இதோ சந்திக்கிறோம். விதி மீண்டும் மீண்டும் நம்மை மோதவிடுகிறது படைத் தலைவரே. இது எத்தனை தெளிவாயிருக்கிறது! யவன குருமார்கள் சோதிடம் ஒருகாலும் பொய்க்காது. இந்தப் புகாரில் நான் முடி சூடத்தான் போகிறேன், நீங்கள் அதற்கு உதவத்தான் போகிறீர்கள். உங்களுக்கு நான் மாலை சூட்டுவது திண்ணம். இந்த மூன்றும் விதி வகுத்துள்ள திட்டங்கள். விண்மீன்கள் விளைத்துள்ள முறைகள். அவற்றைக் கணக்கிட்டு யவன குருமார்கள் சொன்ன தீர்ப்பு டைபீரியஸின் குருட்டுத் திட்டங்களால் சற்று மங்கியிருக்கிறது. ஆனால், இறுதியில் நான் சொல்லியவை நடக்கும். நான் எண்ணியது இதுவரை பொய்த்ததில்லை படைத் தலைவரே! இனியும் பொய்க்காது. ஆகவே விதி வழியில் சாயுங்கள். அதுதான் விவேகம். அதுதான் நடக்கக்கூடியது. அதுதான் உங்கள் நாட்டுக்கும் நன்மை பயக்கும்” என்றாள் ராணி.

படைத் தலைவன் பதிலேதும் சொல்லாமல் உட்கார்ந் ருந்தான். முதலில் தன்மீது கண்களை நாட்டிய ராணி பேச்சு முதிர முதிரக் கண்களை எதிரேயிருந்த அறைத் தாழ்வாரத்தை நோக்கி ஓட்டியதையும், அவள் பேச்சும் கனவில் பேசப் படுவதைப் போலிருந்ததையும் அறிந்ததால் சிறிது மௌனமே சாதித்த படைத் தலைவன், “மணத்தில் மனம் நாடவில்லை ராணி! போர் மூண்டால் நாட்டில் குவியக் கூடிய பிணக் கூட்டத்தை எண்ணித் துடிக்கிறது. துடிக்கும் மனத்துக்குக் காதலிடம் பிடிப்பு ஏது?” என்றான்.

“போரில் சோழர் வெற்றி கண்டால் மனம் களிவெறி கொள்ளுமல்லவா?” என்று ராணி கேட்டாள்.

“ஆம்! கொள்ளும்!”

“அந்தக் களி வெறியில் காதல் வெறிக்கும் இடமிருக்கும் படைத்தலைவரே. அந்தச்சமயத்தில் மணத்துக்கு மனம் இடம் தரும். அப்பொழுதாவது என்னை மணக்க ஒப்புவீர்களா? கூறுங்கள். சோழ நாட்டு வெற்றியை நான் சம்பாதித்துக் கொடுக்கிறேன்.”

“அது நீ கூறும் விதியின் திட்டங்களுக்கு முரண்பாடு அல்லவா?”

“இல்லை.”

“ஏனில்லை? நீ புகாருக்கு ராணியானால்?”

“ஆனால் என்ன? ஒரு வல்லரசின்கீழ் பல சிற்றரசுகள் இருப்பது வரலாறு காணாத விந்தையா?”

ராணியின் போக்கு நன்றாகப் புரிந்தது படைத் தலைவனுக்கு. அவளுக்கு என்னபதில் சொல்வது என்று புரியாமல் திகைத்தான். ‘ராணியை மணக்க மறுத்தால், அவள் உதவி கிடைக்காது. உதவி கிடைக்காவிட்டால் இருங்கோ வேளை முறியடிக்க வகுத்துள்ள திட்டம் வெற்றியடையாது. இந்தத் தர்ம சங்கடத்துக்கு என்ன செய்வது?’ என்று எண்ணிக் கலங்கிய படைத்தலைவன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். அவன் முடிவைக் கேட்ட ராணி திடுக்கிட்டாள். அவள்கூட எதிர்பார்க்காத முடிவு அது. அந்த முடிவு வீசிய பெரு வெடியால் அவள் உள்ளத்தை அதுவரை கட்டியிருந்த காதல் கயிறுகள்கூடப் பட்டென்று அறுந்தன. மஞ்சத்திலிருந்து துள்ளி எழுந்து திகைப்பை அள்ளிச் சொரிந்த கண்களை இளஞ்செழியன் மீது நாட்டினாள் யவன ராணி.

Previous articleYavana Rani Part 2 Ch36 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here