Home Sandilyan Yavana Rani Part 2 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

148
0
Yavana Rani Part 2 Ch38 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch38 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch38 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 38 திருமண ஒப்பந்தம்

Yavana Rani Part 2 Ch38 | Yavana Rani | TamilNovel.in

வீரம் என்ற சொல்லுக்கு உலக அனுபவம் ஒரு அர்த்தத்தைச் சொல்லுகிறது. வாளைச் சுழற்றி, வேலை வீசி, புஜபல பராக்கிரமங்களால் பிறரை வெற்றி கொள்ளக் கூடியவன் வீரன். அவனுக்குள்ள அந்தச் சக்தி, வீரம் என்பது லோகாயத வழக்கு. ஆனால் தத்துவ வழக்கு வேறு. தன்னைத் தானே எவன் வெற்றி கொள்கிறானோ அவனைத் தான் வீரன் என்று தத்துவங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அதுதான் வீரம் என்றும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. புஜபல பராக்கிரமங்களால் பிறரை வெற்றி கொள்ளும் சக்தி பிறரைத் தியாகம் செய்கிறது. தன்னைத்தானே வெற்றி கொள்ளும் சக்தியால், பிறர் அழிவதில்லை . தியாகமும் தன்னுடையதாகவே ஆகிறது. அத்தகைய சக்தியால் பிறர் லாபமடைகிறார்கள். அத்தகைய சக்தியின், தத்துவத்தின் இலக்கணமாய் அன்று விளங்கினான் சோழர் படை உபதலைவனான இளஞ்செழியன்.

இருங்கோவேளின் அதர்மக் கரங்களிலிருந்து சோழ நாட்டுக்கு விடுதலையளிக்க ராணி கூறிய நிபந்தனையைக் கேட்டதும், இதயமே பெரும் பிரளயமாகி உடலையும், ஓர் உலுக்கு உலுக்கி விட்டதென்றாலும், கொந்தளித்த உணர்ச்சி களை மெள்ள அடக்கிக் கொண்ட படைத் தலைவன், ராணியின் பக்கத்திலிருந்து எழுந்து மஞ்சத்தை விட்டுச் சற்று விலகி எட்ட நின்று அவளை மீண்டும் கவனித்தான். அவன் ராணியைக் கவனித்தானே ஒழிய ராணி அவனைக் கவனிக்கவில்லை. அவனது உணர்ச்சி வெள்ளத்தையும், இதயக் கொந்தளிப்பையும் நன்றாக உணர்ந்திருந்த அந்தக் கிரேக்க நாட்டு மோகனப் பாவை, தலையைக் கவிழ்ந்த வண்ணம் மஞ்சத்தில் சிறிதும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். சற்றுத் தலை நிமிர்ந்து பார்த்தாலோ அல்லது உடலைச் சிறிது அசக்கினாலோ படைத் தலைவன் மீது தான் வீசியிருக்கும் மோகனாஸ்திரம் கலைந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவள் உள்ளத்தை ஆட்டிக் கொண்டிருந்தபடியால், சிலை போலவே அவள் உட்கார்ந்திருந்தாள். யவன குருமார்கள் ஜோதிடத்தில் இணையற்ற நம்பிக்கை வைத்திருந்த யவன ராணிக்கு, தன் வாழ்க்கையும், படைத்தலைவன் வாழ்க்கையும் விதியெனும் பலமான கயிற்றால் பிணைக்கப் பட்டிருக்கிறதென்பதில் சந்தேகம் சிறிதுமில்லை என்றாலும், தாங்களிருவரும் திருமணப் பந்தலில் இணைவது எப்பொழுது என்று கிலேசப்பட்டிருந்தாளாகையால், எப்படியும் அன்று படைத் தலைவனிடம் உறுதிமொழியை வாங்கிவிடத் தீர்மானம் கொண்டாள். அவள் தீர்மானத்துக்கு அவள் உள்ளத்திலோடிய மற்றொரு பயமும் காரணமாயிருந்தது. பூவழகியின் மீது படைத் தலைவனுக்கிருந்த ஆழ்ந்த காதலை அவள் அறிந்தேயிருந்தாள். புகாரில் தான் முதன் முதலாகக் கண் விழித்த அதே இரவில் பிரும்மானந்தர் ஆசிரமத்தில் முதன் முதலாகப் பூவழகியைச் சந்தித்த சமயத்தில் படைத் தலைவன் கண்கள் அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்ததை நினைவுபடுத்திக் கொண்டாளாகையால், அத்தகைய ஆழ்ந்த காதலைத் தன் பக்கத்தில் இழுப்பது சுலபமல்ல என்பதையும், புரிந்து கொண்ட யவன ராணி, அந்தத் தனி மாளிகை அறையும், அன்றைய இரவும், தமிழகத்தின் சூழ்நிலையும் அளித்த சந்தர்ப்பத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இழக்கக் கூடாதென்ற முடிவுக்கும் வந்தாள். அதில் மெள்ள மெள்ளத் தனக்கு வெற்றி கிட்டும் அறிகுறி களும் இருந்ததைக் கவனித்ததால் மௌனமாகத் தலை கவிழ்ந்து மஞ்சத்தில் அமர்ந்தேயிருந்தாள்.
ராணியைக் கவனித்த இளஞ்செழியன் கண்களுக்கோ, அவள் உள்ளத்தை ஆராய முற்பட்ட புத்திக்கோ, அவள் மனத்திலோடிக் கொண்டிருந்த எண்ணங்கள் தெளிவாகப் புரியவில்லையென்றாலும், இரண்டும் அவள் இணையற்ற எழிலில் ஈடுபடவே செய்தன. அந்த ஈடுபாடு ஏற்பட்ட சமயத்தில்கூடப் பூவழகியின் அழகை அவள் அழகுடன் இணைத்துப் பார்த்த இளஞ்செழியன் மனம் பூவழகியிடமே அதிகமாகச் சாய்ந்தது. இயற்கையாக அறத்தின் அடிப்படையில் எழும் ஆசைக்கும், சந்தர்ப்பவசத்தால் பேரழகு ஒன்றின் ஆசை அலைகளில் விழுந்து புரண்டு மயங்கிக் கிடக்கும் மனநிலைக்கும் வித்தியாசம் நிச்சயமாய் உண்டு என்றே இளஞ் செழியன் நினைத்தான். ராணி அத்தனை அருகாமையிலிருந்து எண்ணற்ற எழிலம்புகளைத் தொடுக்கும் அச்சமயத்திலும் எங்கோ மறைவிலிருந்து எழும் பூவழகியின் காதலம்புகள் தாக்கி வீழ்த்துவதால் தன் உள்ளம் பூரணமாக ராணியிடம் இழுபடாததை எண்ணிப் பார்த்த இளஞ்செழியன், தமிழகப் பெண்கள் கண்ணெதிரிலில்லாத காலத்திலும் அடக்கத்தில் விளையும் அவர்கள் அழகு எத்தனை பலமானது என்பதை நினைத்து நினைத்து வியந்தான். இத்தகைய நினைப்புகளால் ராணியின் மோகனாஸ்திரங்களிலிருந்து விடுபட்ட இளஞ்செழியன், சற்றுத் தெளிவான மனத்துடனேயே ராணி விதித்த நிபந்தனையை ஆராயத் தொடங்கினான். அதை ஆராய ஆராய, தமிழ்நாடு எத்தனை தூரம் ராணியின் கைகளில் சிக்கிக் கிடக்கிறது என்பதை உணர்ந்தான். அப்படி அது சிக்கியதற்குத் தானும் ஓரளவு காரணமென்பதை அறிந்து கொண்டானானாலும், ராணியிடம் ஏதோ ஒரு தர்மத்தின் சக்தியும் இணைந்து கிடப்பதைப் புரிந்து கொண்டான். இஷ்டப் பட்டிருந்தால் தான் வெளிநாட்டிலிருந்த காலத்திலேயே ராணி புகாரில் முடிசூடி யவனர்களை ஒன்று திரட்டி வாணகரையை அழித்து இருங்கோவேளை நிரந்தரமாகச் சோழர் அரியணையில் அமர்த்தியிருக்கலாம் என்பதை இளஞ்செழியன் சந்தேகமற அறிந்திருந்தான். அப்படி அவள் செய்யாததிலிருந்து ஏதோ ஒரு பிடிப்பு தமிழகத்தின்மீது அவளுக்கு விழுந்திருக்கிற தென்பதையும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் இருங்கோ வேளைப் போன்ற ஒரு அயோக்கியனுக்கு அவள் இடம் கொடுக்கப் பிரியப்படவில்லை யென்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்ட இளஞ்செழியன், அந்த வெளிநாட்டுப் பாவையிடம் ஒருவித அறம் இருக்கிறதென்று தீர்மானித்து சற்று அனுதாபத்துடனேயே ராணியைக் கவனித்தான்.

தலை கவிழ்ந்து மஞ்சத்தில் ராணி மோகனாகாரமாக உட்கார்ந்திருந்தாலும் ஏதோ ஒரு அனாதை உட்கார்ந் திருப்பதைப்போலவே தோன்றியது படைத் தலைவனுக்கு. கண்ணுக்கெட்டாத, சாதாரணமாகப் பயணம் செய்ய முடியாத தூரத்திலிருந்து வந்த ராணி, சொந்த நாட்டிலேயே இருந்திருந்தால், ராஜபோகத்துடன் வாழலாமே என்று எண்ணினான் படைத் தலைவன். அடுலீஸ் பந்தயங்களில் எத்தனை கிரேக்க ராஜகுமாரர்கள் அவள் வெண்ணிறப் பாதங்களில் பொற்காசுகளை மலையாகக் குவிப்பார்கள், அவள் பூங்கை விரல்களைத் தொட எப்படியெல்லாம் துடிப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்த்த படைத் தலைவன், இத்தனையையும் துறந்து அரசை நிறுவ இங்கு வந்த பின்னும் என் காதலுக்காகச் சகலத்தையும் துறக்கச்சித்தமா யிருக்கிறாளே இவள்! அப்படி என்ன அழகு நான்? அத்தகைய தகுதி என்ன இருக்கிறது எனக்கு?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். தகுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னைக் காதலிக்கும் அந்தப் பெண்ணுக்குத் தான் ஒரு பதிலைச் சொல்லியாக வேண்டும் என்று தீவிர சிந்தனையில் இறங்கினான்.

தலை கவிழ்ந்திருந்த அந்த நேரத்திலும் ராணி புரிந்து கொண்டாள், படைத் தலைவன் பெரும் சங்கடத்திலிருக்கிறா னென்பதை. உண்மையில் அந்தச் சங்கடம் அவன் முகத்தில் பிரதிபலிப்பதைச் சிறிது மெள்ளக் கண்களை உயர்த்திய ராணி உணர்ந்துகொண்டாள். மேகம் சூழ்ந்த வானம்போல் கவலை சூழ்ந்து கிடந்த படைத்தலைவனின் முகம் மெள்ள மெள்ளத் தெளிவு படலாயிற்று. ஏதோ பெரும் சங்கிலிப் பிணைப்பி லிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுபோல் கைகளை ஒருமுறை உதறிக்கொண்ட படைத் தலைவன், திடீரென ஏதோ வேகத்தால் உந்தப் பட்டவன்போல் ராணியை நோக்கி, இரண்டடி எடுத்து வைத்து அவளை அணுகி, அவள் இரு கைகளையும் தோளுக்குச் சற்றுக் கீழே பலமாகத் தன் கைகளால் பிடித்து சரேலென்று அவளைச் செங்குத்தாகத் தூக்கினான். அவன் அடுத்த வினாடி என்ன செய்யப் போகிறான் என்பதை ராணி உணருமுன்பாக அவன் இதழ்கள் மிகுந்த வேகத்துடன் ராணியின் அழகிய நெற்றியில் இணைந்தன. வேகத்தின் விளைவாக நெற்றியின் நடுப்பகுதி கன்னிச் சிவந்து சிவப்புக் கற்கள் பதித்த கட்டிபோல் பிரகாசித்தது.

அந்த வேகத்தால் ராணி திடுக்கிட்டுப் போனாள். எதிர்பாராதவிதமாக, முரட்டுத்தனமாக அளிக்கப்பட்ட அந்த முத்திரை அவள் உணர்ச்சிகளை எழுப்புவதற்குப் பதிலாக ஸ்தம்பிக்கவே செய்தது. படைத் தலைவன் அளித்த அந்த முத்திரையில் ஆசையில்லை, காமமில்லை, கடமை மட்டுமே யிருந்ததாகத் தோன்றியது யவன ராணிக்கு. கைகளைப் பிடித்துச் சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் தன்னைத் தூக்கி, முகத்தை முரட்டு இதழ்கள் தாக்கிய செய்கையின் காரணம் திட்டமாக அவளுக்குப் புரியாததால், அவன் எதிரில் நின்றபடியே தலையைப் பின்புறம் தாழ்த்தி தனது நீலமணிக் கண்களை அவன்மீது நிலைக்கவிட்டாள். அவன் பிடித்துச் சரேலெனத் தூக்கியதால் அவள் கொண்டை அவிழ்ந்து நீண்ட பொன்னிறக் குழல் பின்புறம் சாய்ந்து நிலத்தைத் தொட்டது. அண்ணாந்து அவன் முகத்தை நோக்கிய அவள் முக சந்திரபிம்பம் எத்தனை எத்தனை ஆசைகளையோ கிளறிவிட்டது.

ஆனால், அந்த ஆசைகள் படைத் தலைவன் முகத்தில் அறுந்து கிடந்தன. அவன் கண்களில் கவலையே படர்ந்து கிடந்ததை ராணி கவனித்தாள். தன் கைகளைப் பிடித்து அவன் தூக்கிச் சிறிது நேரமாகியும், அவன் தன்னை விடாமல் அப்படியே பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட ராணி ஏதோ பேச வேண்டுமென்பதற்காக, “படைத் தலைவரே! சற்று விடுங்கள். கை வலிக்கிறது” என்றாள்.

ஏதோ யந்திரத்தால் இயக்கப்பட்டவை போல் அவன் கைகள் அவளை விடுதலை செய்தன. “மன்னிக்க வேண்டும் ராணி” என்ற அவன் சொற்களும் சம்பிரதாயமாக வெளி வந்தன.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தொடும்போது ஏற்படும் குழப்பம், படைத் தலைவனின் சொற்களில் இல்லாததைக் கவனித்த ராணி ‘படைத் தலைவர் ஏதோ திட்டவட்டமாக காரியத்தில் இறங்கியிருக்கிறார்’ என்பதை ஊகித்துக் கொண்டாளாகையால், “எதற்கு மன்னிப்பது படைத் தலைவரே?” என்று பதிலுக்குக் கேட்டாள்.
“கொஞ்சம் முரட்டுத்தனமாகக் கைகளைப் பிடித்து விட்டேன்” என்றான் படைத் தலைவன் வருத்தம் தோய்ந்த குரலில்.

“இதில் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லையே. படைப்பின் வழி இது” என்றாள் ராணி.

“எது படைப்பின் வழி?” என்று வினவினான் படைத் தலைவன்.

“ஆண்களுக்கு முரட்டுத்தனமும், பெண்களுக்கு மென்மையும்” என்று சொன்ன ராணி, ‘கையை அப்படிப் பிடித்ததில் தவறில்லை…’ என்று மேலும் ஏதோ சொல்ல முற்பட்டு முடியாததால் மோகனப் புன்முறுவல் செய்தாள்.

தான் சொன்ன பதிலோ, பேச்சை இழுத்து விட்டதால் ஏற்படக் கூடிய ஊகத்தாலோ படைத் தலைவன் சங்கடப் படுவான் என்று நினைத்திருந்ததால் ராணி ஏமாந்தே போனாள். எந்தவிதச் சங்கடமுமில்லாமலும், உறுதியான குரலிலும் பதில் சொன்னான் படைத் தலைவன், “மற்ற எதிலும் தவறில்லை ராணி” என்று.

“தவறில்லையா?” என்று வினவினாள் ராணி ஆச்சரியத்துடன்.

“இல்லை, தவறில்லை.” திட்டமாக வந்தது படைத் தலைவன் பதில்.

“நீங்கள் என்னை…” மேலும் சொல்ல முடியாமல் தவித்தாள் ராணி.

“ஆம். அதிலும் தவறில்லை.” “

எனக்குப் புரியவில்லை படைத் தலைவரே.”

“என்னை மணம் செய்து கொள்ளும்படி நீ கேட்க வில்லை?”

“ஆம், கேட்டேன்!”

“அப்பொழுதுதான் என் நாட்டுக்கு உதவுவதாகக் கூறினாய்.”

“அதுவும் உண்மைதான்.”

“மணம் புரிய முடிவு செய்து கொள்ளும் இருவர் மணமுத்திரையை இடும் வழக்கம் உங்கள் நாட்டில் எப்படி?”

ராணி பதிலேதும் சொல்லவில்லை. அவள் புத்தி பெரிதும் குழம்பிக் கிடந்தது. படைத் தலைவன் இதழ்கள் தன் நெற்றியுடன் கனவேகத்தில் இணைந்ததன் காரணத்தைப் புரிந்து கொண்டாள். தன்னை மணக்க உறுதி கூறும் முறையில் அவனிட்ட முத்திரை அது என்பது தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு.

‘இருப்பினும் என் நாட்டு வழக்கத்தைச் சரியாக உணர்ந்து கொள்ளவில்லையே இவர்! தந்தையும் சகோதரனும் பாசத்தைக் காட்ட வெற்றியில் அன்பு முத்திரையிடுவது உண்டு. கணவன் கடைப்பிடிக்க வேண்டிய முறை வேறல்லவா!’ என்று எண்ணமிட்டுச் சற்று வெட்கமும் அடைந்தாள். ஆயினும் அவள் எண்ணம் தனக்கு மண முத்திரையளிப்பதே யென்பதை உணர்ந்ததால், ‘சம்பிர தாயத்தில் என்ன இருக்கிறது? திருமணமானபின் எங்கே போகிறார்?’ என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். முறை எப்படியிருந்தாலும் முத்திரை, மணத்தை முன்னிட்டுத் தானே என்று நினைத்து ஓரளவு திருப்தியும் அடைந்தாள்.

‘இனி இவர் என் கணவர்! நெற்றியில் சிவப்புச் சுட்டி கட்டி முதன்முதலாக மண முத்திரையிட்ட என் ஆயுட் காவலர் இவர்! ஆமாம். இது கனவல்ல! உண்மை ! உண்மை ! என்று அவள் சித்தம் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டது. இதயம் அந்த மங்கள நிகழ்ச்சிக்குப் பெரிதாகத் தாளம் போட்டது.

ராணியின் உடல் பூராவும் மயிர்க்கூச்சல் எடுத்தது. உணர்ச்சிகள் அத்தனை நிரம்பி நின்ற நேரத்திலும் ஒரு விஷயத்தை மட்டும் உணர்ந்து கொண்டாள் ராணி. ‘இது அவர் எனக்கு அளிக்கும் காதல் பரிசு அல்ல. நாட்டுக்கு அவர் அளிக்கும் கடமைப் பரிசு. நாட்டு நலனுக்கு செய்யும் தியாகம். கரிகாலன் முடிசூட்டு விழாவுக்கு அவர் அளிக்கும் பாத காணிக்கை. இதை நான் ஏற்கலாமா? இப்படி ஒரு ஆடவரைக் கட்டாயப்படுத்திப் பெறும் திருமணத்தில் இன்பமிருக்குமா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அந்தக் கேள்விக்கு விடை பெற இளஞ்செழியனை மீண்டுமொரு முறை ஏறெடுத்து நோக்கினாள்.

அவள் யோசனைகள் புத்தியில் சுழன்ற சில வினாடி களில் இளஞ்செழியன் தன் உணர்ச்சிகளைப் பூராவகாச் சுவாதீனம் செய்துகொண்டு விட்டதால், ராணியை நோக்கிப் புன்னகை செய்தான். அந்தப் புன்னகை ராணியின் மனத்தைக் கொள்ளை கொண்டது. ‘எப்படியும் காலம் பூவழகியின் உருவத்தை இவர் இதயத்திலிருந்து அழித்துவிடும். எங்கள் காதல் வாழ்க்கை வெள்ளத்தில் வேளிர்குலப் பேரழகியின் உருவம் நிச்சயமாக மறைந்து போகும்’ என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டாள் ராணி.

அந்தச் சமயத்தில் புன்முறுவல் செய்துகொண்டே கேட்டான் இளஞ்செழியன், “என்ன யோசிக்கிறாய் ராணி?” என்று .

“ஒன்றும் யோசிக்கவில்லை” என்றாள் ராணி.

“அப்படியானால் மேற்கொண்டு நாம் செய்ய வேண்டியதைத் தீர்மானிக்கலாமா?” என்று வினவினான் படைத் தலைவன்.

“எதைத் தீர்மானிக்க வேண்டும் படைத் தலைவரே?” என்ற பதிலுக்கு ராணியும் ஒரு கேள்வியை வீசினாள்.

“ஒப்பந்தத்தின் இன்னொரு பகுதியை.”

“ஒப்பந்தத்தின் இன்னரு பகுதியா?”

“ஆம் ராணி! நமது ஒப்பந்தம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று திருமணப் பகுதி. இன்னொன்று நாட்டுப் பகுதி.”

“என்ன?”

“புரியவில்லையா ராணி? நான் உன்னை மணம் புரிவ தானால் நாட்டுக்கு உதவுவதாகக் கூறினாய். திருமணத்துக்கு ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் முத்திரையும் வைத்து விட்டேன். இனி நாட்டுப் பகுதியைக் கவனிக்க வேண்டும்.”

“இனி அது ஒப்பந்தமாகாது படைத் தலைவரே.”

“பின் என்ன ஆகும்?”

“என் கணவர் கட்டளையாகும்.”

“அப்படியானால் நான் சொல்வதைக் கவனி” என்று ஏதோ ஒற்றனுக்குத் திட்டத்தை விவரிப்பவன் போல், தன் திட்டத்தை விளக்க முற்பட்ட இளஞ்செழியன், “ராணி! இந்த ஊரில் இந்திரவிழா என்று ஒரு விழா உண்டு…” என்று துவங்கினான்.

“ஆமாம். உண்டு, கேள்விப் பட்டிருக்கிறேன்” என்றாள் ராணி.

“அது இந்த ஆண்டு நடைபெறப் போவதில்லை.”

“ஏன்?”
“அதை உங்கள் காதல் தெய்வமான வீனஸின் திருவிழா வாக்க டைபீரியஸ் திட்டமிட்டிருக்கிறான்.”

“அதனால் என்ன பயன்?”

“ஒரு நாட்டார் இன்னொரு நாட்டாரை ஆக்கிரமிக்கும் பொழுது, ஆக்கிரமிக்கப்படும் நாட்டின் கலைகளையும், விழாக்களையும் மாற்றுவது வரலாறு கண்ட உண்மை. அது கிடக்கட்டும், வீனஸ் விழாவே நடக்கட்டும். ஆனால் அதில் அடுலீஸ் ரதப் போட்டிபோல் ஒரு ரதப்போட்டிக்கும் நீ ஏற்பாடு செய்ய வேண்டும்.”

“ரதப் போட்டி எதற்கு?”

“காரணமாகத்தான் கூறுகிறேன் ராணி. நமது திருமணம் நடக்கவேண்டுமானால் இந்த ரதப் போட்டி நிச்சயமாக நடக்கவேண்டும்” என்றான் இளஞ்செழியன்.

“நடந்தால்?” ராணி சந்தேகத்துடன் அவனை நோக்கினாள்.

யாருமில்லாத அந்த அறையை இருமுறை சுற்றுமுற்றும் பார்த்தான் படைத்தலைவன். பிறகு ராணிக்கு வெகு அருகில் வந்து அவள் காதில் ஏதேதோ சொன்னான். அவன் சொல்லச் சொல்ல ராணியின் விழிகள் பயத்தாலும், வியப்பாலும் நன்றாக மலர்ந்தன. “மிகவும் பயங்கரமான திட்டம் படைத் தலைவரே!” என்று இரைந்தே கூறினாள் ராணி. அதை விடப் பயங்கரமான செய்தியொன்றும் அவ்விருவருக்கும் காத்திருந்தது. அவர்கள் திட்டமெல்லாம் தவிடு பொடியாகும் செய்தியுடனும், திகிலும் கலவரமும் மண்டிய முகத்துடனும் அறைக் கதவைச் சரேலெனத் திறந்துகொண்டு உள்ளே ஓடி வந்தான் ஹிப்பலாஸ்.

Previous articleYavana Rani Part 2 Ch37 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch39 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here