Home Sandilyan Yavana Rani Part 2 Ch4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

119
0
Yavana Rani Part 2 Ch4 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch4 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 4 தித்திக்கும் திட்டம்

Yavana Rani Part 2 Ch4 | Yavana Rani | TamilNovel.in

கொள்ளை மரக்கலத்தின் தலைவனுக்கும் அடிமை யாகப் பிடிக்கப்பட்ட சோழர் படை உபதலைவனுக்கும் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்ட அந்தரங்க உறவைக் கண்டு முதலில் வியப்பும் பிறகு சந்தேகமும் கொண்ட மற்றக் கொள்ளைக்காரர்கள், நாட்கள் பதினைந்து ஆகியும் கார்டாபி முனை கண்ணுக்குக்கூடத் தெரியாததைக் கண்டு இரவில் ரகசியமாகக் கூடி ஆலோசித்த சமயத்தில், மரக்கலத்தின் நேர் எதிரில் விண்ணில் சுடர்விட்ட துருவ நட்சத்திரத்தைப் பார்த்ததும் எல்லை மீறிய அச்சமும் கோபமும் ஒருங்கே அடைந்தார்களாதலால், தங்கள் இஷ்ட விரோதமாகக் கப்பல் திசைதிரும்பி ஓடுவதன் காரணத்தை அறிய விரும்பியவர் களாய் முகங்களில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, மரக்கலத்தின் நடுப்பகுதியைத் தாண்டி, சாந்தமே உருவாய்ச் சுக்கானைப் பிடித்து நின்றுகொண்டிருந்த இளஞ்செழியனை நோக்கிக் கூட்டமாக நடந்தார்கள். சுக்கானைப் பிடித்துக் கப்பலின் திசையை நிர்ணயித்து ஓட்டிக்கொண்டிருந்த இளஞ் செழியன், கப்பலின் கோடியிலிருந்தே எதிர்முனையில் கொள்ளைக்காரர்கள் கூடிப் பேசியதையும், அவர்களில் ஓரிருவர் ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிக் கைகளை ஆட்டியதையும், அவர்கள் தன்னை நோக்கி நகருமுன்பாகவே கவனித்து விட்டானாகையால் அபாயப் புயல் உருவாகி விட்டது என்று தீர்மானித்துக்கொண்டான். தங்களுக்குத் தெரியாமலே கப்பல் திசை மாற்றப்பட்டதற்குச் சரியான காரணம் தெரிவிக்காவிட்டால், எந்தப் பஞ்சமா பாதகத்துக்கும் அஞ்சாத அந்தக் கொள்ளைக்காரர்கள் தன்னை அந்த இடத்திலேயே வெட்டிப் போடுவார்கள் என்பதையும் இளஞ்செழியன் சந்தேகமறப் புரிந்து கொண்டானானாலும் அதைப்பற்றிச் சிறிதும் சிந்திக்காதவன்போல முகத்தில் பெரும் பொய் அமைதியைப் புலப்படுத்திக்கொண்டு, கடமையில் கண்ணும் கருத்துமுள்ள அடிமைபோல சுக்கானைப் பலமாகப் பிடித்து நின்றான்.

இரவின் இருளில் பெரும் பிசாசுகளைப்போல மரக் கலத்தின் இடைப் பகுதியைக் கடந்து இளஞ்செழியனை நோக்கிவந்த கொள்ளைக்காரர்கள், தூங்கும் அடிமைகளைக் கூட எழுப்பாமலும், சந்தடி ஏதும் செய்யாமலும் மரக்கலத்தில் நடந்து சுக்கானிருந்த இடத்தை அணுகியதும் இளஞ்செழியன் முன்பாக ஏதும் பேசாமல் குரூரம் சொட்டிய தங்கள் கண்களால் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டு சில வினாடிகள் நின்றார்கள். சில வினாடிகளே நீடித்த அந்த இடைக் காலத்தின் அமைதி, உண்மையில் பின்னால் எழ இருக்கும் புயலுக்கு அடையாளம் என்பதை உணர்ந்து கொண்ட இளஞ்செழியன் அவர்களை நோக்கிப் புன்முறுவல் செய்து, “ஏன் நிற்கிறீர்கள்? இப்படிப் பக்கப் பலகையில் சாய்ந்து கொள்ளலாமே” என்று தனக்கு அக்கம்பக்கத்திலிருந்த இடத்தைக் காட்டினான்.

அவன் முகத்தில் தெரிந்த சாந்தம், இதழ்களில் எழுந்த புன்முறுவல், தங்களைச் சாய்ந்துகொள்ளும்படி இடங்காட்டிய நிதானம், இவற்றைக் கண்டதால், ‘கப்பல் திசை மாறியதற்கு இவன் பொறுப்பாளியோ இல்லையோ?’ என்று நினைத்துச் சற்றுக் குழப்பமடைந்த கொள்ளைக்காரர்கள் தங்களுடன் வந்த கப்பல் உபதலைவனை நோக்கினார்கள். கப்பல்களை வளைத்துப் பிடிப்பதிலோ கொள்ளையடிப்பதிலோ சற்றும் சளைக்காதவனும், அச்சமென்பதையே அறியாதவனுமான கொள்ளை மரக்கல உபதலைவன்கூட அந்தச் சில வினாடிகளில் சிறிது அச்சமே அடைந்தான். ‘ஒரு வேளை இவன் செயலுக்குக் காரணம் நமது தலைவனாயிருந்தால் நமது கதி அதோகதியாகி விடுமே’ என்ற நினைப்பாலும், ஈவிரக்கமற்று, தங்கள் கண்களுக்கெதிரிலேயே தன்னை எதிர்ப்பவர்களைக் குத்திக் கொன்று கடலில் எறிந்திருப்பதைப் பலமுறை பார்த்திருந்ததாலும், எதையும் கேட்கப் பயந்து ஒரு வினாடி மற்ற கொள்ளைக்காரர்களை அவனும் திரும்பிப் பார்த்தான். எப்படி முதலில் கேள்வியைத் தொடுப்பதென்றே தெரியாமல் தவித்துக்கொண்டு குழம்பிய கொள்ளைக்காரர்களை நோக்கிய இளஞ்செழியன், அந்தக் குழப்பத்தின் காரணத்தையும் ஊகித்துக் கொண்டானாகையால், அவர்களுக்குக் கொள்ளைத் தலைவனிடமிருந்த கிலியை நினைத்து உள்ளூர மெல்ல நகைத்ததன்றி, அந்தக் கிலியே தனக்கு அந்தச் சமயத்தில் பெரும் பாதுகாப்பு என்பதையும் உணர்ந்து கொண்டு சற்றுத் தைரியத்துடன், “பக்கப் பலகையில் இடம் நிரம்ப இருக்கின்றதே, அப்பொழுதே கூறினேனே சாய்ந்து கொள்ளலாம்” என மீண்டும் அழைப்பு விடுத்தான்.

இரண்டாம் முறையாக அவன் விடுத்த அழைப்பு, கப்பலைத் திசை மாற்றிய பின்பும் அவனுக்கிருந்த துணிவு, இரண்டினாலும் உள்ளே எழுந்த அச்சத்தை உதறிவிட்ட கொள்ளை மரக்கலத்தின் உபதலைவன், “பக்கப் பலகையில் நாங்கள் சாய்ந்துகொள்ள வரவில்லை. இளைப்பாறவும் நோக்கமில்லை” என்று கூறி, மீதியிருந்த கொள்ளைக்காரர் களை நோக்கி, “என்ன?” என்று ஒரு கேள்வியையும் வீசினான். “ஆம் ஆம். நாங்கள் அதற்கு வரவில்லை , அதற்கு வரவில்லை” என்ற மற்றக் கொள்ளைக்காரர்கள் தங்கள் உபதலைவனை ஆதரிக்கும் முறையில் முணுமுணுத்தார்கள்.
“அப்படியானால் வேறு அலுவல் ஏதாவது இருக்க வேண்டும்” என்று சொன்ன இளஞ்செழியன், உபதலைவனை யும் நோக்கி மற்றக் கொள்ளைக்காரர்கள் மீதும் ஒருமுறை தன் கண்களைச் சுழலவிட்டான். விரோதமான பயங்கரக் கண்கள் இரண்டு அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்தன. மாமிசத் தசைகளைத் தின்றதாலும் அரபு யவன நாட்டு மது வர்க்கங் களை அருந்தியதாலும் பருத்துக் கிடந்த உதடுகள் ஆத்திரத்தில் அவனை நோக்கித் துடித்தன. அப்படித் துடிக்கும் உதடுகளின் மூலம் கடும் சொற்களை உதிர்க்க முற்பட்ட கொள்ளைக்காரர் உபதலைவன், “கப்பல் ஏன் இன்னும் கார்டாபி முனையை அடையவில்லை?” என்று வினவினான்.

இளஞ்செழியன் கண்கள் மிதமிஞ்சிய வியப்பால் மலர்ந்ததல்லாமல், அந்த வியப்பு சொற்களிலும் பிரதிபலிக்கக் கேட்டான், “கார்டாபி முனையா…அது எங்கிருக்கிறது?” என்று.

“எங்கிருக்கிறதென்று உனக்குத் தெரியாதா?” என்று உபதலைவன் குரலில் ஆத்திரமும் கோபமும் கலந்து தாண்டவமாடியது.

ஏதும் புரியாதது போல் விழித்தான் சோழர் படையின் உபதலைவன். “கார்டாபி முனை ஒன்று உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது இருக்குமிடம் எனக்கெப்படித் தெரியும்? நான் என்ன கடற் கொள்ளைக்காரனா? எரித்திரியக் கடலில் பயணம் செய்திருக்கிறேனா? தமிழகத்தைவிட்டு நான் வெளியே சென்றதேயில்லையே இந்தப் பயணமும் உங்கள் தயவினால்தானே நடக்கிறது?” என்று சிறிது வருத்தமும் குரலில் தொனிக்கக் கூறினான்.
இந்தப் பதில் கொள்ளைக்காரர்களைப் பெரிதும் குழப்பவே, அவர்கள் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மற்றவர்களுக்குள் எழுந்த சந்தேகத்தைச் சற்று, வாய்விட்டே ஒரு கொள்ளைக்காரன் சொன்னான், “ஆமாம், இவனுக்கு எப்படி இந்தத் தூரதேசங்கள் தெரியும்!” என்று.

“அது மட்டுமல்ல, கப்பலை ஓட்டவும் நீங்கள்தானே சொல்லிக் கொடுத்தீர்கள்? பாய்மரம் கட்டுவது, அவிழ்ப்பது, சுக்கான் பிடிப்பது அத்தனையும் உங்களால்தானே பயின்றேன்..” என்று அவர்களுக்குத் தான் கடமைப் பட்டிருப்பதையும், தனக்காக எதுவுமே தெரியாதென்றும் பாசாங்கு செய்யத் தொடங்கிய இளஞ்செழியனை, கொள்ளைக்காரர் உபதலைவன் மீண்டும் மடக்கி, “அதனால்தான் கப்பலைத் திசை மாற்றி ஓட்டுகிறாயா?” என்று கோபம் கொந்தளித் தெழுந்த குரலில் அதட்டினான்.

“கப்பல் திசை மாறிப் போகிறதா?” குழப்பம் மிகுந்தவன் போல் கேட்டான் இளஞ்செழியன்.

“அதோ பார்…அது என்ன தெரியுமா?” என்று வட திசையைச் சுட்டி விண்ணில் கையை உயர்த்திக் கேட்டான் கொள்ளையர் உபதலைவன்.

“தெரியாமலென்ன? எங்கள் நாட்டில் துருவ நட்சத்திரம் என்று சொல்வார்கள்?” என்றான் படைத் தலைவன்.

“கடற் பிரயாணிகளும் கப்பலோட்டிகளும் இதை வடதிசை நட்சத்திரம் என்று சொல்வார்கள்” என்று சற்றுக் கடுமையாகச் சொன்னான் கொள்ளையர் உபதலைவன்.
“ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சம்பிரதாயம்” என்று ஒப்புக்கொண்டான் இளஞ்செழியன்.

“சம்பிரதாயத்தைப்பற்றி நான் குறிப்பிட வரவில்லை.”

“வேறு எதைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?”

“கப்பல் போகும் திசையைப்பற்றிப் பேசுகிறேன். இப்பொழுது இந்தக் கப்பல் வடக்கு திசையில் போகிறது. கப்பலின் முனை அதோ உங்கள் துருவ நட்சத்திரத்துக்கு நேராக இருக்கிறது. வடதிசையிற் செல்ல வேண்டுமானால் மாலுமிகள் அந்த நட்சத்திரத்தை அடையாளம் வைத்துத் தான் மரக்கலத்தைச் செலுத்துவார்கள்.”

“புரிகிறது, புரிகிறது.”

“என்ன புரிகிறது உனக்கு?” அதட்டலுடன் எழுந்தது கொள்ளையர் உபதலைவன் கேள்வி.

“கப்பல் வடதிசையில் போகிறது என்று புரிகிறது.” சாவதானமாகப் பதில் சொல்லிய இளஞ்செழியன், மீண்டும் ஏதோ பெரும் குழப்பமடைந்தவன் போல் அவர்கள்மீது தன் பார்வையைச் செலுத்தி, “ஆமாம், இதைச் சொல்ல ஏன் இத்தனை பேர்? எதற்காக இத்தனை கோபம்?” என்று வினவினான்.

“தமிழா! நீ உண்மையில் ஏதும் அறியாதவனா அல்லது அறிந்துதான் இதைச் செய்பவனா என்பது எங்களுக்குப் புரியவில்லை. இந்தக் குற்றத்தை நீ அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் உன் உடலைக் குத்திக் கிழித்து எறிவதைத் தவிர எங்களுக்கு வேறெதுவும் வழியில்லை. இந்த மரக்கலம் கார்டாபி முனைக்குச் செல்ல வடமேற்கில் சென்றிருக்கவேண்டும். சென்றிருந்தால் இத்தனை நாள் முனையை நாம் அடைந்திருப்போம். ஆனால் சுக்கான் பிடிக்கும் நீ துருவ நட்சத்திரத்துக்கு நேர் எதிரில், அதாவது நேர் வடக்கில் கப்பலைச் செலுத்தியிருக்கிறாய். இன்று வரையில் நாங்களும் இதைக் கவனிக்கவில்லை. மரக்கலம் இப்படியே போனால் என்ன ஆகும் தெரியுமா?” என்று படபடப்புடன் பேசினான் கொள்ளையர் உபதலைவன்.

“என்ன ஆகும்?” என்று ஏதும் புரியாத குழந்தை போல் கேட்டான் இளஞ்செழியன்.

“கார்டாபி முனைக்குச் செல்லமாட்டோம். அதற்குப் பதிலாகப் பறவைத் தீவுக்குச் செல்வோம்” என்று கூறிய கொள்ளையர் உபதலைவன், அந்தத் தீவை நினைக்கவும் அஞ்சியவன்போல் பாதியிலேயே வார்த்தையை நிறுத்தினான். அவன் உடல்கூட ஒருமுறை அச்சத்தால் ஆடியது.

“பறவைத் தீவா! அது எங்கிருக்கிறது?” என்று சந்தேகம் கேட்டான் இளஞ்செழியன்.

“கானாவுக்குக் கீழே” கொள்ளையர் உபதலைவன் பதில் கடுமையுடன் எழுந்தது.

“கானாவா?” இளஞ்செழியன் சொற்களில் குழப்பம் பெரிதும் தெரிந்தது.
“ஆம். அரபு நாட்டுத் துறைமுகம். கப்பல்கள் சிறிது திசை மாறினாலும் பாறைகளில் மோதி சுக்குநூறாகக் கூடிய பயங்கரப் பிரதேசம். அப்படிக் கப்பல் உடைந்து தப்புபவர்களைப் பிடிக்க சாம்பிராணி நாட்டு மன்னன் இலி-ஆஸுதன் வீரர்களை அரபு எல்லை பூராவும் காவல் வைத்திருக்கிறான். அவர்களிடம் பிடிபட்டால் நாம் ஆயுள் பூராவும் அடிமைகள். மன்னன் பொல்லாதவன், அதைவிடப் பொல்லாதது பெரும் பாறைகள் நிறைந்த அரபுநாட்டுக் கடற்பகுதி. அதைவிட மோசம் பறவைத் தீவு. பறவைத் தீவை அணுகும்போதே ஏராளமான பலதரப்பட்ட பறவைகள் மரக்கலத்தை நோக்கி வரும். அவற்றில் பெரும் கழுகுகளும் உண்டு. ஆயிரக்கணக்கான கழுகுகள் ஏககாலத்தில் இந்த மரக்கலத்தில் பாய்ந்து மனிதர்களின் முகங்களையும், கண்களையும் கைகளையும் கொத்தினால் எப்படியிருக்கும்?”

இதைச் சொல்லிப் பேச்சைச் சற்றே நிறுத்தினான் கொள்ளையர் உபதலைவன். அந்த விவரங்கள் எதுவுமே சோழர் படை உபதலைவனுக்குப் புதிதல்லவென்றாலும், முதன் முதலாக அவற்றைக் கேட்பதுபோல் பாசாங்கு செய்ததன்றி, அவற்றைக் கேட்டு நடுங்குவது போலும் நடித்தான் இளஞ்செழியன். தமிழகத்துக்கு வரும் யவன, அரபு, எகிப்திய வர்த்தகர்களிடமிருந்து எரித்திரியக் கடற் பகுதியின் விவரங்கள் பலவற்றையும் அறிந்திருந்த இளஞ்செழியன் காரணமாகவே பறவைத் தீவுக்காகக் கப்பலின் திசையை மாற்றியிருந்தான். அதை எப்படியும் கொள்ளைக்காரர்கள் அறிவார்கள், அறிந்ததும் பேராபத்து இருக்கிறது என்பது அவன் உணராத விஷயமல்ல. இத்தகைய அபாயங்களை முன்னமே படைத் தலைவன் எதிர்பார்த்திருந்தானாகையால் அதைச் சமாளிக்கும் வழியையும் நிர்ணயித்திருந்தான். ஆகவே சற்றும் தயக்கமின்றியே உபதலைவனுக்குப் பதில் சொன்னான். “நீங்கள் சொல்வதைக் கேட்கவே பயங்கரமாயிருக்கிறதே. அப்படியானால் எதற்காக இந்த மரக்கலத்தின் தலைவர் துருவ நட்சத்திரத்தைப் பார்த்துச் சுக்கானைப் பிடிக்கச் சொன்னார்? அவருக்கு ஒருவேளை இந்த விஷயம் தெரி யாதோ?” என்று கேட்ட இளஞ்செழியன் கிலி பிடித்தவன் போல் கொள்ளையர் உபதலைவனை நோக்கவும் செய்தான்.

அவன் பேச்சு கொள்ளைக்காரர்களிடையே சற்று சல சலப்பையும் அச்சத்தையும் விளைவித்தது. வடதிசையில் மரக் கலத்தைச் செலுத்தச் சொன்னவன் தங்கள் தலைவன் என்பதை அறிந்ததால் பெரிதும் பீதியடைந்த கொள்ளையர் உபதலைவன் “இதை ஏன் முன்பே சொல்லவில்லை!” என்று சீறினான்.

“தலைவர் உத்தரவு.” இளஞ்செழியன் பதில் பரம அடக்கத்துடன் வெளிவந்தது.

“எங்களிடம் மறைக்கச் சொன்னாரா தலைவர்? இருக்காது, ஒருகாலும் இருக்காது” என்று குரலை உயர்த்திக் கூவினான் கொள்ளையர் உபதலைவன்.

“இருக்காது இருக்காது” என்று மற்ற கொள்ளைக் காரர்களும் கூவினார்கள். “எல்லாம் இவன் தந்திரம்” என்றான் மற்றொரு கொள்ளைக்காரன். “ஏதோ சொல்லித் தலைவரை ஏமாற்றியிருக்கிறான்” என்று கூவினான் இன்னொருவன். அடுத்த வினாடி கொள்ளைக்காரர்கள் கூச்சல் அதிகரிக்கவே கீழே துடுப்பு அறையில் அடிமைகளை வேவு பார்த்துக்கொண்டிருந்த கொள்ளைக்காரர்களும் தளத்துக்கு ஓடி வந்தார்கள். தளம் கொள்ளையரின் நாலாவிதக் கூச்சலால் அமளிப்பட்டது. சுக்கானைப் பிடித்து நின்ற இளஞ்செழியனை அத்தனை கொள்ளைக்காரர்களும் சூழ்ந்து கொண்டார்கள். “கொல்லுங்கள் அவனை… கொல்லுங்கள் அவனை” என்ற கூக்குரல் எங்கும் பரவியது. தங்களுக்கும் தலைவனுக்கும் இடையே முளைத்த அந்தத் தமிழனை ஒழித்துவிட உறுதிகொண்ட கொள்ளையர் முகங்களைக் கண்ட கொள்ளையர் உப தலைவன் தன் கத்தியை இடையிலிருந்து உருவினான். ஆனால் தமிழன் திட்டம் மிகச் சாமர்த்தியமாக வகுக்கப்பட்டிருந்ததையும், காரணமாகவே கொள்ளையரைக் கூச்சலிடும் நிலைக்கு அந்தத் தமிழன் தூண்டிவிட்டதும் யாருக்குத் தெரியும்? அந்தக் கூச்சல் மற்றொரு கூச்சலையும் இழுத்துவரும் என்பதைக் கொள்ளைக்காரர்கள்தான் கண்டார்களா என்ன? ஆகவே, “என்ன இங்கே கூச்சல்?” என்று பயங்கரமாக எழுந்த ஒரு குரல் அந்தச் சூழ்நிலையின் தன்மையை அடியோடு மாற்றவே, கொள்ளைக்காரர் அச்சத்துடன் பின்புறம் திரும்பினார்கள். அவர்களுக்கு நேர் பின்புறத்தில் இளஞ்செழியனுக்கு நேர் எதிரில் கனல்கக்கும் விழிகளுடனும் துடிக்கும் பெரும் மீசையுடனும் ஆறரை அடி உயரத்துக்கு மிகப் பயங்கரமாக நின்று கொண்டிருந்தான் கொள்ளையர் தலைவன். அவனைக் கண்டதுமே புலியைக் கண்ட ஆட்டுக்குட்டிகள் போல் சிதற முற்பட்ட கொள்ளையர்களை, “என்ன இங்கே கூச்சல்?” என்று இரண்டாம் முறை அவன் உக்கிரக்குரலில் எழுப்பிய கேள்வி இருந்த இடத்திலேயே நிலைக்கச் செய்தது.

தன்னைக் கண்டு பிரமித்துக் கிலி பிடித்து நின்ற கொள்ளையர்களை நோக்கி மிக நிதானமாக நடந்து வந்த அவர்கள் தலைவனின் பெரும் கோவை விழிகள் கப்பலின் தளத்தையே ஒரு கணம் அளவெடுத்தன. அடுத்த கணம் அவர்கள் அருகாமையில் வந்த தலைவன், இளஞ்செழியன் அருகே உருவிய கத்தியுடன் நின்றுகொண்டிருந்த உப தலைவனை நோக்கி, “எதற்கு அந்தக் கத்தி?” என்றான்.

“இவனைக் கொல்ல” என்று துணிவை வரவழைத்துக் கொண்டு கூறினான் உபதலைவன்.

ḥ“இந்தக் கப்பலில் தண்டனை விதிக்கும் உரிமை உனக்கா, எனக்கா?” தலைவன் கேள்வி மிகப் பயங்கரமாக எழுந்தது.

“தங்களுக்குத்தான்.”

“அப்படியானால் சுக்கான் பிடிப்பவனை ஏன் கொல்ல முயன்றாய்? இவர்களை எதற்காகத் திரட்டி இங்கு கொண்டு வந்திருக்கிறாய்?”

“எங்கள் எல்லோருக்கும் சந்தேகம் வந்தது.”

“யார்மேல் சந்தேகம்?”

“இந்தத் தமிழன்மேல்.”

“ஏன்?”

“கப்பல் பறவைத் தீவை நோக்கி ஓடுகிறது.”

“ஓடினால் என்ன?”
“எல்லோரும் அழிக்கப்படுவோம்.”

இந்தப் பதிலைக் கேட்டதும் கொள்ளைத் தலைவன் ஒரு முறை தன் பயங்கர மீசையைத் தடவிக்கொண்டான். பிறகு தன் உபதலைவனை நோக்கிக் கேட்டான், “பறவைத் தீவுக்குப் போக வேண்டாம். வேறெங்கு போக வேண்டும் என்பது உன் விருப்பம்?” என்று

“கார்டாபி முனைக்கு…” இதைச் சொல்லி மென்று விழுங்கினான் உபதலைவன்.

கொள்ளைத்தலைவன் தன் துணைவர்களை நோக்கி விழிகளை உருட்டினான். “உங்கள் உபதலைவன் நம்முடன் வர இஷ்டப்படவில்லை. கார்டாபி முனைக்குச் செல்ல விரும்புகிறான். அங்கு அனுப்பி விடுங்கள்” என்று உத்தர விட்டு மேற்கொண்டு ஏதும் பேசாமல் இரண்டடி தன் அறையை நோக்கி எடுத்து வைத்து, மறுபடியும் கொள்ளைக்காரர்களை நோக்கித் திரும்பி, “கப்பல் ஏன் திசை மாறிவிட்டது என்பதை அறிய வேண்டுமானால் என் அறைக்கு வாருங்கள். நாம் போகுமிடத்தில் எத்தனை லாபமிருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, விடுவிடு என்று தன் அறையை நோக்கி நடந்தான்.

தலைவன் பேச்சு கொள்ளைக்காரர்களிடை அத்தனை நம்பிக்கை ஊட்டுமென்று இளஞ்செழியன் கனவில்கூட நினைக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர அலுவல்கள் நிகழ்ந்தன. “பிடி! பிடி அவனை!” என்று ஓட முற்பட்ட உபதலைவனை நெருங்கினார்கள் கொள்ளைக் காரர்கள். “கார்டாபி முனைக்குப் போ. இந்தப் பக்கத்திலிருக் கிறது” என்று சிலர் கூவினார்கள். “மன்னித்து விடுங்கள் மன்னித்து விடுங்கள்” என்று கூவிக்கொண்டே ஓடிய உப தலைவன், கொள்ளையர் தலைவன் காலில் விழுந்து காலையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காலைப் பிடித்துக்கொண்ட உபதலைவனை ஒரு வினாடிதான் பார்த்தான் கொள்ளையர் தலைவன். அடுத்த வினாடி காலை உதறி அவனைத் தூரத் தள்ளினான். “இந்தக் கப்பலில் தலைவனுக்கு எதிராக இரவில் சதி செய்பவர்களுக்கு இடமில்லை” என்று கூறிவிட்டு நடந்தான். கத்திக் கதறிய உபதலைவனை, தயை தாட்சண்யமின்றிக் கடலில் எடுத்து எறிந்தார்கள் கொள்ளைக்காரர்கள். கடலில் தத்தளித்த அவனை எட்டிப் பார்த்த கொள்ளைக்காரர் சிலர், “கார்டாபி முனை அந்தப் பக்கமிருக்கிறது. போ போ” என்று கூச்சலிட்டு நகைத்தனர்.

பணம் ஒன்றையே பிரதானமாக நினைத்து, கணச் சித்தம் கணப் பித்தமாக மாறக்கூடிய மனோநிலை வாய்ந்த கொள்ளைக்காரர்களை நினைத்து உள்ளூர நகைத்துக் கொண்ட இளஞ்செழியன் மறுநாள் கொள்ளையர் தலைவன் மற்றக் கொள்ளைக்காரர்களைத் தன் அறையில் அழைத்து, கப்பல் திசை மாறியதன் காரணத்தை விவரித்தபோது, கூடவே இருந்து ஐம்பதினாயிரம் பொற்காசுகளுக்குக் குறையாமல் சம்பாதிக்க வகுக்கப்பட்ட திட்டத்தை விவரித்தான்.

திட்டம் கேட்பதற்குத் தித்தித்தது. ஆனால் அதிலிருந்த ஆபத்துக்களை நினைத்துக் கொள்ளையர்கள் கலங்கினர். “பறவைத் தீவைக் கடந்து கானா துறைமுகத்தில் இறங்கி, சாம்பிராணிப் பொதிகளைக் கைப்பற்றினால் லாபம் பெரிதுதான். ஆனால் பறவைத் தீவைக் கடப்பது எப்படி? அதற்கு அப்பாலுள்ள ஜலசந்தியில் சதாவீசும் சூறாவளியில் மரக்கலம் எப்படிச் செல்லும்? அப்படியே சென்றாலும் கானாவிலுள்ள இலி-ஆஸு அரசன் வீரர்களிடம் சிக்கினால் நிரந்தர அடிமை வாழ்வு கிடைக்குமே! அதிலிருந்து தப்புவது எப்படி?”

இந்தக் கேள்விகளால் கலங்கிய கொள்ளையர்களுக்கு நம்பிக்கை யூட்டவும், அவர்கள் ஆபத்தை மறந்து களிவெறி கொள்ளவும் வழிகாட்ட முற்பட்ட சோழர் படையின் உப தலைவன் சொன்னான்: “மரக்கலத்தைப் பறவைத் தீவுக்கு மேற்கே செலுத்தி அரபு நாட்டு ஓரமாகச் சென்றால் கழுகு களிடமிருந்து தப்பலாமென்று தலைவர் சொல்கிறார். பாய் மரங்களை அவிழ்த்துவிட்டு, துடுப்புகளை மாத்திரம் கொண்டு மரக்கலத்தை நகர்த்தினால் கானாவை அடைவது எளிது என்பது தலைவர் கருத்து. அங்கு சென்ற பின் தரையிலுள்ள படையைச் சமாளிப்பது என் பொறுப்பு. நாளை முதல் இங்குள்ள அடிமைகளுக்கு நான் தரைப் போர் முறையைச் சொல்லிக் கொடுக்கிறேன். நீங்கள் துறைமுகத்தில் கப்பலைக் கவனித்துக் கொள்ளுங்கள். தரையில் இறங்கிச் சென்று சாம்பிராணிப் பொதிகளைக் கொள்ளையடிப்பதை நான் கவனித்துக் கொள்கிறேன்.”

திட்டம் கொள்ளைக்காரர்களுக்கு ஓரளவு திருப்தியை அளித்ததால், அவர்கள் அன்று முதல் இளஞ்செழியனைக் கப்பலின் உபதலைவனாகவே பாவித்தார்கள். மறு நாள் முதல் அடிமைகளின் தளைகளை நீக்கி அவர்களுக்குத் தரையில் போரிடும் முறைகளைச் சொல்லிக்கொடுத்தான். சோழர் படை உபதலைவன். இத்தனை ஏற்பாட்டிலும் கலந்து கொள்ளாமல் ஹிப்பலாஸ்மட்டும் தனித்து நின்றான். படைத் தலைவன் போக்கு அவனுக்கு ஒருபுறம் திகிலையும் ஒருபுறம் குழப்பத்தையும் விளைவித்தது. கானா துறைமுகத்தில் பேராபத்து இருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். அந்த ஆபத்து உருவெடுத்தபோது திருப்பம் அத்தனை வேகமாகவும் பிரமிக்கத்தக்க வகையிலும் ஏற்படுமென்று இளஞ்செழியனுடன் வருஷக் கணக்கில் பழகிய ஹிப்ப லாஸினாலேயே ஊகிக்க முடியவில்லை. அடுத்த எட்டாவது நாள் மரக்கலம் அரபு நாட்டுக் கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தூரத்தே கானா துறைமுகத்தின் பெரும் பந்தங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. கலங்கரை விளக்கத்தின் பெரிய ஜ்வாலையும் வரும் மரக்கலத்தை விழுங்கத் தயாராயிருக்கும் கொள்ளிவாய்ப் பிசாசுபோல் தெரிந்தது.

“துறைமுகம் நெருங்குகிறது. மரக்கலத்தின் பந்தங்களை அவிழுங்கள்” என்று உத்தரவிட்டான் இளஞ்செழியன். துடுப்புக்கள் மட்டும் துழாவ பாய்மரம் கட்டப்படாமல் நிசப்தத்துடன் கானா துறைமுகத்தை நோக்கி மரக்கலம் ஊர்ந்து சென்றது.

Previous articleYavana Rani Part 2 Ch3 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch5 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here