Home Sandilyan Yavana Rani Part 2 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

89
0
Yavana Rani Part 2 Ch40 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch40 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 40 வெறி! சிரிப்பு!

Yavana Rani Part 2 Ch40 | Yavana Rani | TamilNovel.in

படைத்தலைவனின் வெறி பிடித்த அந்தப் பெரு நகைப்பைக் கேட்டதும், அவனுக்கு ஏதாவது சித்தப் பிரமையா அல்லது அளவுக்கு மீறிய துணிவால் ஏற்பட்ட அகங்காரமா என்று ஹிப்பலாஸ் மட்டுமல்ல, அவன் காதலையே தன் வாழ்வின் ஜீவதாரை என்று எண்ணிக் கொண்டிருந்த ராணி கூட நினைத்தாள். பொழுது புலரக் கால் ஜாமம்கூட இல்லாத அந்த விடியற்காலை நேரத்தில் மதுவை அருந்தி விடுவதால், டைபீரியஸிடமிருந்து தப்ப என்ன அப்பேர்ப்பட்ட பிரமாத வசதி ஏற்பட்டுவிடும் என்பதை நினைத்துப் பார்த்து ஏதுமறியாததால், ராணி படைத்தலைவனையும் பார்த்து ஹிப்பலாஸையும் பார்த் தாள். அவள் பார்வையிலிருந்த குழப்பத்தையும், அச்சத்தையும் புரிந்துகொண்டது மட்டுமன்றி, பகிர்ந்தும் கொண்ட ஹிப்பலாஸ் இளஞ்செழியனை நோக்கிச் சொன்னான்: “படைத்தலைவரே! கருக்கல் நெருங்க அதிக நேரமில்லை” என்று.

படைத் தலைவன் நகைப்பைச் சிறிதே நிறுத்தி, மஞ்சத்தில் முன்னைவிட நன்றாகச் சாய்ந்து கொண்டு எதிரேயிருந்த ராணியையும், ஹிப்பலாஸையும் பார்த்தான். பிறகு பெருமூச்சு விட்டான். அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து வந்த சொற்களில் ஆயாசம் பெரிதுமிருந்தது. “ஹிப்பலாஸ்! தமிழகத்தில், அதுவும் புகாரில் கருக்கல் வரும் நேரம் எனக்குத் தெரியாதென்று நினைக்கிறாயா?” என்று வினவினான் படைத் தலைவன்.

ஹிப்பலாஸ் வணக்கத்துடனேயே பதில் சொன்னான்: “தங்களுக்குத் தெரியாதென்று சொல்லவில்லை படைத் தலைவரே! தெரிந்த விஷயங்களையும் நினைவுபடுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படுவதில்லையா?”

ஹிப்பலாஸின் பதில் படைத்தலைவன் போக்கில் எந்த வித மாறுதலையும் ஏற்படுத்தாதலால் அவன் சர்வசாதாரண மாகவே பேச முற்பட்டு, “ஹிப்பலாஸ், புகாரின் சீதோஷ்ண நிலையிலோ, காலையின் பிறப்பிலோ மாலையின் மறைவிலோ, எந்தவித மாறுதல் ஏற்பட்டாலும் என் உடலுக்கு உடனே தெரியும். இந்தத் துறைமுக நகரின் இயற்கை மாறுதல்களுடன் என் உடல், பொருள், ஆவி மூன்றுமே ஒன்றியிருக்கின்றன. விடியும் வேளையைப் பற்றியோ, நாளின் எந்தவிதமாறுதலைப் பற்றியோ எனக்கு நினைவுபடுத்த அவசிய மில்லை. ஆகவே சில வினாடிகளில் கருக்கல் வரப் போவது எனக்குத் தெரியும். அது வந்தவுடன் புகார் முழுவதும் திடீரென இருளப் போவதும் எனக்குத் தெரியும். அதற்கு முன்பாகத்தான் மதுவருந்தவேண்டும். மதுவை அருந்துவது மிகவும் முக்கியம். சீக்கிரம் வரவழைத்துக் கொடு” என்று கூறிய படைத் தலைவன், “அடடே? மறந்துவிட்டேனே! சீக்கிரம் டைபீரியஸுக்குச் செய்தி அனுப்பு. வீணாக எனக்காகக் கப்பலில் காத்திருப்பார்” என்றும் கட்டளையிட்டான்.

அந்தக் கட்டளையை நிறைவேற்ற ராணியோ, ஹிப்பலாஸோ தயாராக இல்லை. டைபீரியஸுக்குச் செய்தி சொல்லியனுப்பி வரச் சொல்லுவது, படைத் தலைவனை அப்படியே அவனிடம் ஒப்படைப்பதாகும் என்பதை அவ்விரு வரும் உணர்ந்திருந்தது மட்டுமல்லாமல், அப்படி ஒப்படைக் கப்பட்டால் அவன் கதியும், தமிழகத்தின் கதியும் அதோகதி தான் என்பதும் வெட்ட வெளிச்சமாயிருந்தது அவர்களுக்கு. ஆகவே இருவரும் சற்று நேரம் பேசாமலிருந்தார்கள். பேசிய போது ராணியே பேசினாள் சற்றுக் கடுமையாக, “பிரபு! இது நியாயமல்ல” என்று.

“எது நியாயமல்ல?” என்று படைத் தலைவன் வினவி, கால்களையும் எடுத்து மஞ்சத்தில் ஒரு புறமாகப் போட்டுக் கொண்டான்.

“பரிசைக் கொடுத்துப் பிறகு அதைப் பறிப்பது” என்றாள் ராணி. அவள் இதைச் சொன்னபோது, அவள் கண்களில் நீர் துளிர்த்துவிடும் சோகரேகை படர்ந்ததைக் கவனித்த படைத் தலைவன், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், “எந்தப் பரிசு ராணி?” என்று கேட்டான்.

“தாங்கள் அளித்த பரிசுதான்” என்று ராணி சொன்னாள் கண்களை நிலத்தில் ஓட்டி.

“என்ன பரிசளித்தேன்?”

“தங்களையே எனக்கு அளிக்கவில்லையா?”

“அதைச் சொல்கிறாயா? ஆம் அளித்தேன்.”

“அளித்ததை மீண்டும் பறிக்கலாமா?”

“எங்கே பறித்தேன்?”

“இப்பொழுது டைபீரியஸிடம் உங்களை அளிப்பதற்கு என்ன அர்த்தம்?”
“இங்குதான் நீ பைத்தியக்காரி ராணி!”

“எப்படிப் பைத்தியக்காரியோ?”

“நான் டைபீரியஸோடு சேர்ந்தால் அவன் எப்படி என்னை அழிப்பான்? அழிக்காவிட்டால் உன்னிடமிருந்து நான் எப்படி விலகுவேன்? ராணி! நன்றாகக் கவனி. உன்னைத் திருமணம் செய்துகொள்ள நான் தீர்மானித்து விட்டேன். டைபீரியஸ் எத்தனை பலசாலியாயிருந்தாலும் எத்தனை தந்திரசாலியாயிருந்தாலும், ராணியின் மணாளனை அவன் கொல்வதை யவன வீரர்கள் ஆமோதிக்கமாட்டார்கள். புரிகிறதா?”

ராணிக்கு என்ன ஹிப்பலாஸுக்குக்கூடப் புரியத்தான் செய்தது. ஆனால் இருவரும் எல்லையற்ற திகைப்பை அடைந்ததால் மூச்சைக்கூட விடாமல் நின்றார்கள். படைத் தலைவன் திட்டத்துக்குப் பொருள் என்னவென்பது அவர் களுக்குப் புரியாமல் இல்லை. தான், ராணியின் கணவன் என்று சொல்லி டைபீரியஸ் பக்கம் சேர்ந்தால், டைபீரியஸ் படைத் தலைவனைத் தொட முடியாது. படைத் தலைவன் உயிர் பிழைக்கலாம். ஆனால், தமிழகம் உயிர் பிழைக்கமுடியாது. டைபீரியஸ் இளஞ்செழியனைப் புகாரை விட்டு நகர முடியாமல் செய்வான். படைத் தலைவன் கேவலம் டைபீரியஸின் கைப்பாவையாகத்தான் இருக்கமுடியும். அப்படியானால் உயிருக்காகவும், காதலுக்காகவும் அவன் நாட்டுக்குத் துரோகியாக நேரிடும். இதுதான் நிலை. அந்த நிலையைத் தவிர வேறு நிலை அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட முடியும் என்று ராணியும் நம்பவில்லை, ஹிப்பலாஸும் நம்பவில்லை . ‘படைத் தலைவருக்கு இப்படி ஏன் விபரீத புத்தி போகிறது?’ என்று ஹிப்பலாஸ் நினைத்தான். ‘சற்று முன்பு நாட்டைக் காக்கத் திட்டம் போட்டவர் செய்யும் முடிவா இது? இருக்காது இருக்காது. படைத் தலைவர் போக்குக்கு வேறு ஆழ்ந்த காரணங்கள் இருக்க வேண்டும்’ என்று ராணி மட்டும் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அந்த இருவர் மனத்திலோடிய எண்ணங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத படைத் தலைவன் திடீரென எழுந்து அறை நடுவுக்குச் சென்று, “டேய் யாரங்கே?” என்று வாயிற்படியை நோக்கிக் குரல் கொடுத்தான். உள்ளே நுழைந்த யவன வீரனை நோக்கி, “யவனர் கடற்படைத் தலைவர் என் மரக்கலத்துக்கு என்னைத் தேடிப் போயிருக்கிறார். நான் இங்கு காத்திருப்பதாகச் செய்தியனுப்பு” என்று ஏதோ அரசன் உத்தரவிடுவது போல் சொற்களை உதிர்த்தான்.

வந்த காவலன் கவசத்தால் மூடப்பட்ட முகத்திலிருந்து உதிர்ந்த அதிகாரச் சொற்களைக் கேட்டதும் ஒருகணம் திகைத்தான். மறுகணம் ராணியைப் பார்த்து, “ராணியின் உத்தரவு என்ன?” என்று வினவினான்.

ராணி பதில் சொல்லும் சக்தியை இழந்திருந்தாள். “அவர்தான் கட்டளையிடுகிறாரே!” என்றாள் சிறிது தாமதித்து.

“முகக் கவசமணிந்தவர் புகாரில் எங்கு சென்றாலும் தடை செய்யக் கூடாது என்று கடற்படைத் தலைவர் உத்தர விட்டிருக்கிறார். ஆனால் இவரிடம் உத்தரவை நிறைவேற்றக் கட்டளையில்லை” என்றான் காவலன்.
“இவர் கட்டளையிடுவது டைபீரியஸின் நேரத்தை வீணாக்காதிருப்பதற்காக. உடனே செய்தியனுப்பு” என்றாள் ராணி.

“என்னவென்று செய்தியனுப்பட்டும் ராணி!” என்று மிகப் பணிவுடன் கேட்டான் காவலன்.

ராணி ஒரு வினாடிதான் யோசித்தாள். பிறகு கூறினாள்: “மரக்கலத் தலைவர் என் அறையில் காத்திருப்பதாகத் தெரிவி” என்று.

காவலன் தன் தலைக் கவசம் தரையில்பட வணங்கிச் சென்றதும் ராணி, படபடக்கும் இதயத்துடன் இளஞ்செழியனை அணுகி அவனைப் பிடித்து அழைத்து வந்து மஞ்சத்தில் அமர்த்தி, “பிரபு! இனி டைபீரியஸ் வர அதிக நேர மாகாது. வீரர்கள் விரைந்து செல்வார்கள். சீக்கிரம் தப்பிவிடுங்கள்” என்றாள்.

“எப்படித் தப்புவது ராணி?” என்று வினவினான் படைத்தலைவன்.

ராணி பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். அந்த இந்திர விழா மாளிகைக்குக் கண்கள் பல இருப்பது அவளுக்குத் தெரியும். எங்கும் திறமைசாலிகளான ஒற்றர்களாலும், வாளையும் வேலையும் தாங்கிய வீரர்களாலும் காவல் செய்யப்பட்டு வரும் அந்த மாளிகையிலிருந்து தப்புவது அசாத்தியமென்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள். ‘முன்பாவது இந்திர விழா மாளிகையை அடுத்து ஓடிய காவிரியின் சுவர்த் தளைகள் மூலம் நூலேணியில் இறங்கித் தப்பலாம். இப்பொழுது அதுவும் முடியாதே. தளைகளை எல்லாம் டைபீரியஸ் எடுத்து விட்டானே. நேராகக் காவிரி நீரில் குதித்துப் பிழைக்கவும் முடியாதே. பனைமர உயரமிருக்கும் இந்திர விழா மாளிகையிலிருந்து நீரில் பரதவர் மட்டுமே குதிப்பார்கள். பிற வகுப்பினருக்கு அந்தப் பழக்கமில்லை துணிவுமில்லை. தவிர இந்த மாளிகை வேண்டுமென்றே காவிரியின் பெரும் சுழல்கள் இருக்குமிடமாகப் பார்த்து அமைக்கப்பட்டிருக்கிறது. குதிப்பவனைச் சுழல்கள் நீரின் அடிமட்ட மணலில் கொண்டுபோய்ச் செருகிவிடும். இதிலிருந்து தப்புவது முடியாது. ஒருகாலும் முடியாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே ராணி வியாகூலம் மிக்க வளாய், “பிரபு! சீக்கிரம் யோசியுங்கள். ஏதாவதொரு வழியை யோசியுங்கள்” என்று கெஞ்சவும் செய்தாள்.

“வழியை யோசிக்கப் புத்திக்குச் சுறுசுறுப்பு வேண்டும் ராணி” என்றான் படைத் தலைவன்.

“அதற்கு என்ன செய்ய வேண்டும். மருந்து ஏதாவது தேவையா?” என்று எரிச்சலுடன் கேட்டான் ஹிப்பலாஸ்.

“ஆம் ஹிப்பலாஸ். மருந்துதான் தேவை” என்று சொல்லிப் படைத்தலைவன் சிரித்தான்.

“என்ன மருந்து?” மீண்டும் எரிச்சலுடனேயே எழுந்தது ஹிப்பலாஸின் இரண்டாவது கேள்வியும்.

“மது! மதுவைவிட புத்தியை இயக்கும் சிறந்த மருந்து உலகில் இல்லை .”
“மதியை மது மந்தப்படுத்துவதும் உண்டு” என்று ராணி உஷ்ணத்துடன் கூறினாள்.

“பழக்கமில்லாதவர்களை மந்தப்படுத்தும்” என்றான் படைத்தலைவன்.

“தங்களுக்குப் பழக்கமதிகமோ?”

“ஆம்.”

“எப்பொழுது?”

“சிறுவயதிலிருந்தே. நான் அருந்தாத மது கிடையாது. எல்லா நாட்டு மதுவையும் அருந்தியிருக்கிறேன்.”

ராணிக்குப் படைத்தலைவன் சொன்ன இந்தப் பதில் ஹிப்பலாஸுக்குத் தூக்கிவாரிப் போட்டது. படைத் தலைவன் ஓரிருமுறைகள் மதுவருந்தியிருப்பதை அவன் பார்த் திருக்கிறான். ஆனால் அளவுக்கு மீறியோ பிரியப்பட்டோ , இளஞ்செழியன் என்றுமே மது அருந்தியதில்லை. ஆகவே, இத்தகைய ஒரு பொய்யைப் படைத் தலைவர் ஏன் சொல்கிறார்?’ என்று குழம்பினான்.

ராணிக்கும் படைத் தலைவன் பேச்சு வெறுப்பாக மட்டுமல்லாமல், டைபீரியஸ் வந்துவிட்டால் அவன் கதியை நினைத்ததன் விளைவாக அச்சத்தை அளிக்கும் படியாகவும் இருந்தது. இருப்பினும், திரும்பத் திரும்ப படைத் தலைவன் மதுவைக் கொண்டுவரும்படி கூச்சலிட்டபடியாலும், “என் மனைவியான நீ எப்படி நான் சொல்வதைத் தட்டலாம்?” என்று சீறியதாலும், ராணி வெளியே இருந்த காவலரை விளித்து, மதுவைக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் பணியாட்கள் கொண்டு வைத்த மதுவையும், தங்க மதுக் கிண்ணங்களையும் திருப்தி யுடன் நோக்கிய படைத் தலைவன் விடுவிடு என்று நடந்து அந்த அறைக்குத் தென்புறத்திலிருந்த வெளித் தாழ்வாரத் திற்குச் சென்று காவிரியைக் குனிந்து நோக்கினான். பிறகு கிழக்குத் திசையில் கண்களை ஓட்டி மரக்கலங்களைக் கவனித்தான். பிறகு திரும்ப மஞ்சத்துக்கு வந்து இரு கிண்ணங்கள் மதுவை அருந்திவிட்டு இருமுறை நகைத்தான். மீண்டும் வெளியே இருந்த காவலருக்குக் குரல் கொடுத்தான். உள்ளே ஏற்பட்ட வெறி மிகுந்த நகைப்பால் பெரிதும் குழப்பமடைந்த காவலர், ராணி அறையிலிருந்ததால் உள்ளே நுழையத் தயக்கப்பட்டாலும் திரும்பத் திரும்ப எழுந்த படைத் தலைவன் கூச்சலைச் சகிக்காமல் உள்ளே ஓடிவந்தார்கள். வந்தவர்கள் முகக்கவசமணிந்திருப்பவன் பூரண போதையிலிருப்பதை உணர்ந்து ஒருகணம் திகைத்தார்கள். அடுத்த கணம் அவர்களை அசர வைக்கும்படியான உத்தரவு பெரிதாக எழுந்தது. “இவனைக் கொண்டுபோய் மாளிகைக்கு வெளியில் தள்ளுங்கள்” என்று ஹிப்பலாஸைச் சுட்டிக் காட்டினான் இளஞ்செழியன்.

“என்னையா!” ஹிப்பலாஸின் குரலில் அச்சமிருந்தது.

“ஆம், உன்னைத்தான்!” வெறி மிகுந்த குரலில் பதில் சொன்னான் படைத் தலைவன்.

“தங்களுக்குத் துணை?”

“ராணியிருக்கிறாள். நீ மரக்கலத்துக்குப் போ.”

கட்டளை இடும் குரலில் போதை இருந்தாலும் திட்டவட்டமாக இருந்தது. காவலர் ராணியை நோக்கினர். ராணி ஹிப்பலாஸை வெளியே செல்லுமாறு ஜாடை செய்தாள். காவலர்களால் இழுக்கப்பட்டு ஹிப்பலாஸ் வெளியே சென்றதும் படைத் தலைவன் தள்ளாடி நடந்து அந்த அறைக் கதவைத் தாழிட்டான். அவன் அப்படித் தாழிடுவதைக் கண்ட காவலர் சற்று வெளியே தாமதித்தனர். கதவு வெகு வேகமாகப் பெரும் சத்தத்துடன் தாழிடப் பட்டது. அடுத்த வினாடி அறையில் வெறி பிடித்த சிரிப்பு பலமாகக் கேட்டது. வெறுப்புடன் காவலர் ஹிப்பலாஸை இழுத்துக் கொண்டு வெளியே சென்றனர்.

அரைக்கால் ஜாமம் வெகு துரிதமாக ஓடிவிட்டது. கருக்கலும் சூழ்ந்துவிட்டது. இன்னும் அரைக்கால் ஜாமம் காரிருள். பிறகு பொழுது புலரும் நேரம். அந்தக் காரிருள் கவியத் தொடங்கிய நேரத்தில் வெகு வேகமாகக் காவலர் பின் தொடர டைபீரியஸ் இந்திர விழா மாளிகையை நோக்கி வந்து விடுவிடு என்று ராணியின் அறையை நோக்கி விரைந்தான். அவன் அடைந்ததும் கதவு தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு சற்று தயங்கினான். உள்ளே அப்பொழுதும் வெறி பிடித்த சிரிப்புக் கேட்டது. திகைத்து ஒரு கணம்தான் நின்றிருப்பான் டைபீரியஸ். அப்படி நின்ற சமயத்தில் “விடு என்னை , விடு என்னை” என்று வெறிக் கூச்சல் கேட்டது. “வேண்டாம் வேண்டாம்” என்று ராணி உள்ளே பயங்கரமாக அலறினாள். அதற்கு மேல் தாளாத டைபீரியஸ் காவலரை நோக்கி, “உடையுங்கள் கதவை!” என்று உத்தரவிட்டான்.

Previous articleYavana Rani Part 2 Ch39 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here