Home Sandilyan Yavana Rani Part 2 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

91
0
Yavana Rani Part 2 Ch41 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch41 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 41 கவசமணிந்த சடலம்

Yavana Rani Part 2 Ch41 | Yavana Rani | TamilNovel.in

இந்திர விழா மாளிகையில் ராணியின் அறைக்குள்ளே அலறல் கேட்டவுடன் கதவை உடைக்கும்படி டைபீரியஸ் கட்டளையிட்டதும், அதை நிறைவேற்றக் காவலர் ஆயத்தம் செய்ய முயன்ற அடுத்த வினாடி அந்த அறைக் கதவே அதிவேகத்துடன் திறக்கப்பட்டதால், யவனர் கடற்படைத் தலைவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த அலங்கோலத்தைக் கண்டு சில வினாடிகள் பிரமித்து நின்றான். அங்கிருந்த மஞ்சத்தின் மீது மது பாண்டமொன்று கவிழ்ந்து கிடந்ததன்றி, மஞ்சத்தில் சரிந்த மதுவும், மஞ்சத்தின் கால்கள் வழியாகத் தரையில் ஓடிக் கொண்டிருந்ததையும், இரண்டு மதுக் கிண்ணங்கள் அறை மூலைகளில் வீசியெறியப்பட்டு உருண்டு கிடந்ததையும் கண்ட டைபீரியஸ் கோபத்தின் எல்லையை அடைந்து, “என்ன ராணி இது?” என்று உக்கிரத்துடன் வினவினான். அப்படி வினவியபோது ராணியின் உடையும் ஓரளவு கலைந் திருப்பதையும், அதிலும் மது தெளித்திருப்பதையும் பார்த்து, ‘யவனர்களின் ராணியிடம் இப்படி நடந்து கொள்ளக்கூடிய வனும் இருக்கிறானா?” என்று தனக்குள்ளேயே பொங்கிய டைபீரியஸ் “எங்கே அந்த மரக்கலத்தலைவன்?” என்று சீறவும் செய்தான்.

“இங்கே இருக்கிறான்” என்று குழம்பிக் குழம்பி உதிர்ந்த சொற்கள் வெளித்தாழ்வாரத்திலிருந்து வருவதைக் கேட்ட யவனர் கடற்படைத் தலைவன், அந்தத் தாழ்வாரத்தை அணுக ஒரு காலை எடுத்து வைத்துப் பிறகு விஷக் கடிக்கு உள்ளானவன் போல் சரேலெனக் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதல்லாமல், என்றும் பயத்தைக் காட்டாத அவன் கண்களிலும் பயம் மிதமிஞ்சி உதயமாகி முகமெங்கும் பரவிக் கிடந்தது. உள்ளே மட்டுமின்றி வெளித் தாழ்வாரத்திலும் வீசிய அறையின் மங்கலான வெளிச்சத்தில் முகக்கவச மணிந்த மரக்கலத் தலைவன் தாழ்வாரத்தின் கைப்பிடிச் சுவரில் ஏறி நின்று தள்ளாடிக் கொண்டிருந்தான். எந்த வினாடியும் அவன் காவிரியில் விழுந்துவிடலாமென்றும், அப்படி விழுந்து விட்டால் இரண்டு நாள் கழித்து அவன் சடலம் மட்டுமே அகப்படுமென்பதையும் சந்தேகமற உணர்ந்த டைபீரியஸ் ஒருகணம் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான். அந்தக் குடிகாரனை மெள்ளச் சமாதானம் சொல்லி இறங்கச் செய்து, பிறகு தண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை வெகு துரிதமாகத் தீர்மானித்த டைபீரியஸ், “டேய்! இறங்கு கீழே. அங்கே நிற்காதே. அபாயம்! என்று பாதி எச்சரிக்கையும், பாதி கோபமும் தொனித்த குரலில் கூறினான்.

இதைக் கேட்ட பிறகு கைப்பிடிச் சுவரின் மேல் ஆடிக் கொண்டிருந்த இளஞ்செழியன் ஆட்டம் இன்னும் சற்று அதிகமாகியது. பதிலும் பெரும் குமுறலுடன் வெளிவந்தது. “இது என் மரக்கலம். இதோ – ஆடுது பார் காற்றில்… இங்கு நான்தான் தலைவன்!” தட்டுத் தடுமாறி உளறினான் அவன்.

“நீ தலைவன்தான். ஆனால் அது மரக்கலமல்ல சுவர்…” என்று டைபீரியஸ் கூறினான்.

“பொய்! – சுவர் ஆடுமா!”

“சுவர் ஆடவில்லை. நீதான் ஆடுகிறாய்.”

“அதுவும் பொய்.”

“உம் இறங்கு…” இம்முறை உக்கிரமாக வெளிவந்தது டைபீரியஸின் கட்டளை. அந்தக் குடிகாரன் ஆட்டத்தைக் காண டைபீரியஸுக்கே பெரும் வெறுப்பாயிருந்ததால், அந்த வெறுப்பைக் குரலிலும் காட்டினான்.

இதைக் கேட்டதும் ஒரு முறை குனிந்து அறையைப் பார்த்த படைத்தலைவன், “நீ யார்?” என்று டைபீரியஸைக் கேட்டான்.

“டைபீரியஸ்” என்று பதில் கூறினான் டைபீரியஸ்.

“இல்லை. அதுவும் பொய். எங்கள் தலைவரை நான்…அறிவேன்” என்று மறுபடியும் குழறினான் படைத் தலைவன்.

எத்தனையோ திக்பிரமையளிக்கும் சந்தர்ப்பங்களையும் சமாளிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த டைபீரியஸுக்கு அந்த நிலையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாததால் அவன் ராணியைப் பார்த்தான். ராணியின் முகத்தில் பயத்தின் சாயை பெரிதாகப் படர்ந்து கிடந்ததல்லாமல், அவள் நீலமணிக் கண்களில் அந்தப் பயம் பெரிதும் பொங்கி வழிந்து கொண்டுமிருந்தது. “அந்தக் குடிகாரரை இந்தப் பக்கம் இழுங்கள்” என்று ராணி உதடுகள் துடிதுடித்துச் சொன்னாள். “அந்த வழிதானே எனக்கும் தெரியவில்லை ” என்று பதில் சொன்ன டைபீரியஸின் குரலில் குழப்பம் பெரிதுமிருந்தது. முகக் கவசமணிந்த வீரனைப் பார்க்க வேண்டுமென்றும், அந்தக் கவசத்தை நீக்கி அவன் யாரென்பதை அறியவேண்டு மென்றும் சில நாட்களாகவே ஆசைப்பட்டுக் கொண்டிருந்த டைபீரியஸ், ‘முகக் கவசமணிந்த வீரனைத் தான் முதல் முதலாக இந்த நிலையில் சந்திக்க நேரிடுமென்று லவலேசமும் நினைக்கவில்லையாகையால், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது போலிருக்கிறதே?’ என்று நினைத்துப் பெரிதும் சங்கடப்பட்டான். ஆகவே மீண்டும் பரிதாபத்துடன் அவனை அழைத்தான். இம்முறை வார்த்தைகளை மரியாதையுடன் பேசினான். “மரக்கலத் தலைவரே! கைப் பிடியிலிருந்து இறங்கி விடுங்கள். அது அபாயமான இடம். கீழே காவிரியின் சுழல்கள் இருக்கின்றன” என்று கூறிய டைபீரியஸ், அவனை எதிர் கொள்ளும் நோக்கத்துடன் இரண்டடி முன்னாடியும் எடுத்து வைத்தான்.

பதிலுக்குப் படைத் தலைவன் பெரிதாக நகைத்தான். “அபாயம்!… அபாயம்! யாருக்கு அபாயம்! எனக்கா! தண்ணீ ரிலிருந்தா!ஹிஹி_ஹி.! மீன்குட்டிக்குத் தண்ணீரில் அபாயம்!” என்று இடி இடியென்றும் நகைத்த படைத் தலைவன் புயலிலாடும் பாய்மரம்போலப் பெரிதாக ஆடினான்.

“டேய்! டேய்! வேண்டாம். இறங்கிவிடு!” என்று பயத்தின் மிகுதியால் மரியாதையைக் கைவிட்டுக் கூறினான் டைபீரியஸ்.

“வேண்டாம், வேண்டாம். இறங்கிவிடுங்கள்” என்று அழாக்குறையாக வேண்டினாள் ராணி.

அவர்கள் இருவர் முகத்திலும் பெரும் பயமும் கவலையும் தாண்டவமாடின. ஆனால், அடுத்த வினாடி அவர்கள் பயந்தது நடந்தே விட்டது. சரேலென்று கால்கள் அகன்றதால் படைத் தலைவன் உடல் மல்லாந்த வண்ணம் அப்புறத்திலிருந்த காரிருளில் மறைந்தது. டைபீரியஸும் ராணியும் கைப்பிடிச் சுவரை நோக்கி ஓடினார்கள். அவர்கள் சுவரை அணுகுமுன்பே படைத் தலைவன் உடல் காவிரி நீரைத் தொட்டுவிட்டதை உணர்த்த சடேரென்ற சத்தம் அறையை நோக்கி எதிரொலி செய்யவே, ராணி பயத்தால் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு சுவரை அணுகாமல் சற்று எட்டவே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். டைபீரியஸ் மட்டும், “டேய், யாரங்கே? பந்தங்களைக் கொண்டுவா” என்று கட்டளைக் கூச்சலை விடுத்துக் கொண்டே கைப்பிடிச் சுவரை அடைந்தான்.

வெகு சீக்கிரம் பந்தங்கள் கொண்டு வரப்பட்டுக் காவிரி நீரின்மீது வீசப்பட்டன. அப்படி வீசப்பட்டாலும் மாளிகை இருந்த உயரத்தின் காரணமாக நீர்மட்டம் தெரியாததால் பெரும் கயிறுகளைப் பந்தங்களின் அடிக்கட்டைகளில் கட்டி, சின்னஞ்சிறு ஊஞ்சல்களைப் போல பந்தங்களை வீரர்கள் அடி மட்டத்துக்கு இறக்கினார்கள். அப்படி இறக்கப்பட்ட பந்தங்களை விசிறி ஆட்டி ஆட்டி காவிரிச் சுழல்கனை ஆராய்ந்தான் டைபீரியஸ். பந்தங்களின் வெளிச்சத்தில் காவிரி நீர் பயங்கரமாகச் சுழன்று சுழன்று ஓடியது. நீண்ட நேர ஆராய்ச்சிக்குப் பின்பும் ஏதும் தெரியாததால், காவிரியின் சுங்கச் சாவடி ஓரங்களிலும், சங்கமத்துறைப் பகுதியிலும் சடலத்தைத் தேடுமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்ட டைபீரியஸ், துயரம் தோய்ந்த உள்ளத்துடன் அறைக்குள் வந்தான். ராணியும் அவனைப் பின்பற்றி வந்து மஞ்சத்தில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள். அவள் இதயம் வெடித்துக் கொண்டிருந்ததை அவள் உட்கார்ந்திருந்த நிலையிலிருந்தே உணர்ந்த டைபீரியஸ், ‘இந்தக் குடிக்காரனுக்காக ராணி ஏன் இத்தனை வருத்தப்படுகிறாள்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, ‘ராணியாயிருந்தாலும் இவள் பெண்தானே’ என்று தானே பதிலும் சொல்லிக் கொண்டான். சில நிமிடங்கள் அவள் சிந்தையின் இடையே புகாமல் மௌனமாகவே நின்றிருந்த டைபீரியஸ் பிறகு மெள்ளக் கேட்டான், “இவன் யார் ராணி?” என்று.

ராணி சீக்கிரம் பதில் சொல்லவில்லை: பதில் சொன்ன போதும் அவள் குரல் தழுதழுத்தது. “மரக்கலத் தலைவன்” என்றாள் அவள்.

“அது தெரியும் ராணி! அவன் யார், எந்த ஊர் பெயர் என்ன, இது எதுவுமே தெரியாதா உங்களுக்கு?” என்று மீண்டும் வினவினான் டைபீரியஸ்.

“தெரியாது.” தயங்கி வந்தது ராணியின் பதில்.

“தெரியாமலா அவனைச் சந்திக்க அந்தக் குடிகாரர்கள் மாளிகைக்குப் போயிருந்தீர்கள்?” என்று வினவிய டைபீரியஸின் குரலில் சற்றுக் கடுமையிருந்தது.

ராணி அவனுக்குப் பதிலேதும் சொல்லவில்லை. எழுந்து அறை மூலைக்கு நடந்து சென்று அங்கிருந்து தந்தப் பேழையிலிருந்து ஓர் ஓலையைக் கொண்டு வந்து டைபீரிய ஸிடம் கொடுத்தாள். ஓலையைப் பிரித்துப் படித்த டைபீரியஸ் மேலும் குழம்பவே செய்தான். “ராணிக்கு வணக்கம். இன்றிரவு நள்ளிரவுக்கு என்னை மருவூர்ப்பாக்கத்துக்கும் பட்டினப் பாக்கத்துக்கும் இடையே யிருக்கும் தனிமாளிகையில் சந்திக்கவும். விஷயம் முக்கியம். தங்கள் சகோதரர் தங்களுக்குத் தனிச் செய்தி சொல்லியனுப்பியிருக்கிறார்-யவனர் மரக்கலத் தலைவன்.” என்று ஓலையில் பொறித்திருந்ததை இரண்டு மூன்று முறை படித்த டைபீரியஸ் ராணியை மிகுந்த உஷ்ணத் துடன் பார்த்து, “நான் அறியக்கூடாத அப்பேர்ப்பட்ட, என்ன ரகசியத்தை உங்கள் சகோதரர் கூறினார்?” என்று கேட்டான்.

“ஏதும் கூறவில்லை” என்றாள் ராணி மஞ்சத்தில் உட்காராமலே டைபீரியஸைப் பார்த்து.

“பின் எதற்காக அந்தக் குடிகாரர் மாளிகைக்குப் போனீர்கள்?”

“அது குடிகாரர் மாளிகையென்று எனக்குத் தெரியாது.”

“ராணிகள் இரவில் தனிமையில் போவது சம்பிரதாயமா? முறையா?”

“இரண்டுமில்லை. அவசியம் சம்பிரதாயங்களை உடைக்கிறது.”

“அது கிடக்கட்டும். அவன் என்ன ரகசியத்தைச் சொன்னான்?”

“எதையும் சொல்லவில்லை.”

“எதற்காக அழைத்தான்?”

“ரகசியம் சொல்லுவதற்குத்தான்.”

“உங்கள் பேச்சு எனக்குப் பெரும் புதிராயிருக்கிறது ராணி.”

“புகாருக்கு நாம் வந்த பிறகு எல்லாமே புதிராகத் தானிருக்கிறது டைபீரியஸ்” என்ற ராணி, “எதற்கும் நடந்ததைச் சொல்கிறேன் கேட்டுக்கொள். இந்த மரக்கலத் தலைவன் என் சகோதரனுக்கு அந்தரங்கமானவன் என்பதை அலீமா உனக்கும் சொல்லியிருக்கிறாள்; எனக்கும் சொல்லியிருக்கிறாள். ஆகவே அவனிடமிருந்து செய்தி வந்ததும் அதுவும் சகோதரன் சம்பந்தமான ரகசியமென்றதும் சென்றேன். ஆனால் அந்தமாளிகையைக் கண்டதும் வெகுண்டேன். அந்த மரக்கலத் தலைவன் நிலையைக் கண்டதும் மிக மிக வெகுண்டேன். அந்த மாளிகைக்கு என்னை அழைக்க அவனுக்கு அத்தனை துணிவு வந்தது எப்படியென்று வினவினேன். என் கடற்படைத் தலைவருக்கு முன்னால் சொல்லக் கூடாத அத்தனை பெரிய ரகசியம் என்ன என்று சீறினேன். என் சீற்றத்தைக் கண்டு அவன் நடுங்கினான். அவன் குடித்திருந்த சமயத்திலும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இந்திர விழா மாளிகையில் டைபீரியஸுக்கு முன்பாகவே பேசுவதில் தனக்கு ஆட்சேபணையில்லையென்று சொல்லி என்னுடன் இங்கு வந்தான். இங்கு வந்த பிறகு உன்னை அழைக்க வீரர்களை ஏவினான். நீ வரத் தாமதமானதால் மீண்டும் மது கொண்டு வரச் சொல்லித் தலைகால் புரியாமல் குடித்தான். என்மீது மதுவைக் கொட்டினான். குடிகாரச் சிரிப்புச் சிரித்தான். கதவைத் திறக்க ஓடிவந்தேன். அதற்குள் வெளித் தாழ்வாரக் கைப்பிடிச் சுவரை நோக்கிப் போனான். அவனைத் தடுக்க வீரர்களை அழைக்கவே கதவைத் திறந்தேன். அதற்குள் அவன் சுவர்மீது ஏறி ஆட ஆரம்பித்துவிட்டான்.” இதற்கு பிறகு ராணி ஏதும் சொல்ல முடியாமல் திணறிச் சற்று நிதானித் தாள்.

டைபீரியஸ் எந்த நிதானத்துக்கும் வரவில்லை . யவனர் இளவரசன் மரக்கலத் தலைவன் திறமையைப் பற்றிப் பெரிதும் சிலாகித்து எழுதியிருந்தானாகையால் அவன் இறந்தால் பெரும் நஷ்டமாயிற்றே என்று நினைத்து மனம் புழுங்கினான். தமிழகத்தில் பெரும் போர் மூள அதிக நாளில்லை என்பது டைபீரியஸுக்குத் தெரியும். அப்படிப் போர் மூண்டால் காவிரிப் பகுதியில் புகாரைக் காக்க அந்த யவனர் போர்க்கலங்கள் பெரிதும் பயன்படும் என்பதை அவன் சந்தேகமற உணர்ந்திருந்தான். போர்க்கலங்களை இயக்கும் மர்மங்களை நன்றாக உணர்ந்திருந்த யவனர் கடற்படைத் தலைவன் அத்தகைய திறமையுள்ள ஒரு மரக்கலத் தலைவனை இழந்து விட்டது பற்றிப் பெரிதும் வருந்தினான். இருப்பினும் தன் சீடப் பெண் அலீமாவைக் கொண்டு மரக்கலங்களை இயக்கலாமென்பதால் ஓரளவு சாந்தியும் அடைந்தான்.

அவன் இப்படி யோசனையிலிருக்கையிலேயே கருக்கல் நீங்கி, பொழுது மெள்ள மெள்ளப் புலரத் தொடங்கியது. அதற்குமேல் ராணியிடம் தான் பேச வேண்டியது ஏதுமில்லை யென்பதைப் புரிந்துகொண்ட டைபீரியஸ், “ராணி! இனி நாம் செய்யவேண்டியதெல்லாம் இந்தக் குடிகாரன் பிணத்தைத் தேடவேண்டியதுதான். பிணம் கிடைத்த பின்பு தெரிவிக் கிறேன். இவனது மதியிழந்த செய்கையால் புகாரின் யவனர் பெரும் நஷ்டமடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் பெரும் போர் மூள இருக்கும் சமயத்தில் ஒரு சிறந்த மரக்கலத் தலைவனை நான் இழக்கத் தயாராயில்லை. ஆனால், விதியின் செயலுக்கு நாம் என்ன செய்ய முடியும்? அறையைச் சுத்தம் செய்யச் சொல்லி உறங்குங்கள். நீங்கள் கண் விழித்ததும் சொல்லியனுப்புங்கள்” என்று முடிவாகக் கூறிய டைபீரியஸ் அந்த அறையைவிட்டு அகன்றான்.

அறையைவிட்டுச் சென்றதும் மற்றப் பல காவலர் களுக்கு முகக் கவசமணிந்தவன் சடலத்தைத் தேடிக் கொணரும்படிக் கட்டளையிட்டதன்றி, படகில் சில யவனர் களை அனுப்பித் தன் உத்தரவின்றி மரக்கலங்களை எங்கும் நகரக்கூடாதென்று அலீமாவுக்குச் சொல்லும்படியும் உத்தர விட்டான். உத்தரவுகள் மின்னல் வேகத்தில் நிறைவேற்றப் பட்டாலும், ஆதவன் உதித்து நீண்ட நேரத்திற்குப் பின்பும் டைபீரியஸின் இதயத்தில் கவலை தோய்ந்து நின்றது. ஏதோ விவரிக்க இயலாத சந்தேகம் அவன் இதயத்தை வளைத்துக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப அவன் மனம் அந்த முகக் கவசமணிந்த குடிகாரனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. காவிரியில் சடலத்தைத் தேட யவனர்களால் மட்டும் முடியா தாகையால், வலைகளைப் போட்டு ஆங்காங்கு அரித்துப் பார்க்கும்படி பரதவர்களையும் ஏவியிருந்தான் டைபீரியஸ். தன் உத்தரவு சரிவர நிறைவேற்றப்படுகிறதா என்பதைக் கவனிக்க இருமுறை டைபீரியஸ் நேரிடையாகத் தானே சங்கமத்துறைக்குப் போனான்.

ஏராளமான பரதவர் காவிரியின் பகுதிகளில் வலைவீசி மரக்கலத் தலைவன் சடலத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் காவிரியிலிருந்த பரதவர் படகுகளையும் தூரத்தே கடலில் ஆடிக்கொண்டிருந்த மரக்கலங்களையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்துவிட்டு மீண்டும் மாளிகைக்கு வந்து சேர்ந்த டைபீரியஸ், அந்த நாள் முழுவதும் அந்தச் சடலத்தை எதிர்பார்த்தே தன் அறையில் உட்கார்ந்திருந்தான்.

ராணியையும் டைபீரியஸ் இருமுறை அவள் அறைக்குச் சென்று சந்தித்தான். சந்தித்த இரு சமயத்திலும், அவள் வெறும் உயிரற்ற சிலையாகிவிட்டதை உணர்ந்தான். ராணி அவனை வெறித்துப் பார்த்து, “சடலம் கிடைத்ததா?” என்று மட்டும் கேட்டாள். அவள் உணர்ச்சிகள் அடியோடு மரத்து விட்டதைக் குரல் வறண்டு கிடந்ததிலிருந்தே டைபீரியஸ் அறிந்து கொண்டான். அவள் போக்கு அவனுக்குச் சிறிதும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அவள் சகோதரனின் அந்தரங்க வீரனொருவன் மாண்டுவிட்டதில் அவள் மனம் நொந்து போயிருந்தது அவனுக்கு வியப்பாகவே இல்லை. ஆகவே இருமுறையும் சடலம் கிடைக்கவில்லையென்பதை உணர்த்தி விட்டுத் திரும்பினான்.

அன்று மாலைவரை செய்தி ஏதும் வராததால் பெரிதும் குழம்பிக் கிடந்தான் டைபீரியஸ். விளக்கு வைத்து அரை ஜாமம் கழித்துத்தான் சடலம் கிடைத்துவிட்டதாக டைபீரிஸுக்குத் தகவல் கிடைத்தது. சீக்கிரம் அதைத் தன் அறைக்குக் கொண்டு வந்து தரையில் கிடத்துமாறு பணித்தான். அவன் உத்தரவுப்படி கீழே தரையில் முகக் கவசத்துடனிருந்த சடலத்தைப் பரதவர் கிடத்தியதும் ராணியை அழைத்து வரும்படி தன் வீரர்களுக்குப் பணித்தான் டைபீரியஸ்.

சில நிமிடங்களில் ராணி அந்த அறைக்கு வந்தாள். மிகுந்த நிதானத்துடன் வந்தாள். ஏதோ கற்சிலை நகர்வது போல் மெள்ள உறுதியுடன் நடந்து வந்தாள்.

அவளைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்டான் டைபீரியஸ், ‘வருவது சாதாரணப் பெண்ணல்ல, யவனர்களின் மாபெரும் ராணி! எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாது எந்தக் காட்சிகளையும் காணவல்ல அரசகுமாரி?’ என்பதை.

அவள் கிரேக்க நாட்டு வெண்கலச் சிலை நடப்பது போல நடந்து அறைக்குள் நுழைந்து அந்தச் சட்லத்தின் முன்பாக நின்றாள். அவளுக்கு ஒரு மஞ்சத்தை எடுத்துப் போட உத்தரவிட்டான் டைபீரியஸ். ‘தேவையில்லை’ என்பதற்கு அடையாளமாகக் கையமர்த்தினாள் ராணி.

“முகமூடியைக் கழற்றலாமா?” பணிவுடன் கேட்டான் டைபீரியஸ்.

“கழற்றலாம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை மெள்ள அசைத்தாள் யவனர் நாட்டுச் செல்வி.

Previous articleYavana Rani Part 2 Ch40 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here