Home Sandilyan Yavana Rani Part 2 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

122
0
Yavana Rani Part 2 Ch42 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch42 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 42 டைபீரியஸின் வியப்பும் பிரமிப்பும்

Yavana Rani Part 2 Ch42 | Yavana Rani | TamilNovel.in

அப்பழுக்கில்லாத சுத்த வைரத்தைவிட ஒருபடி அதிகமாகவே நெஞ்சைக் கடினமாக்கிக்கொண்ட யவன ராணி காவிரியின் பெரு மீன்கள் உடலை ஆங்காங்குக் கடித்துக் குதறியிருந்ததால் அரைப்பந்தங்களின் வெளிச்சத்தில் மிகக் கோரமாகத் தெரிந்த அந்தக் கவசமணிந்த சடலத்தின்மீது தன் நீலமணிக் கண்களை ஒரு கணம் ஓடவிட்டுப் பிறகு வெறித்துப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள். முகக் கவசத்தைச் சுழற்ற டைபீரியஸ் உத்தரவு கேட்டு அவள் தலையை அசைத்தபோதும் அந்த வெறித்த பார்வையே இருந்ததைக் கவனித்த டைபீரியஸ், ராணியின் உணர்ச்சிகள் பெரிதும் மரத்துவிட்டதை அறிந்து கொண்டானானாலும் அதற்குக் காரணம் எதுவாயிருக்க முடியும் என்பதை மட்டும் அறிய முடியாமல் திணறினான், குடிகாரனும் கெட்ட நடத்தை யுள்ளவனுமான யவன மரக்கலத் தலைவனிடம் எந்தவிதப் பாசமும் ராணிக்கு ஏற்பட நியாயமில்லையென்பதை அவன் பூரணமாக நம்பினான். ஆனாலும், மரக்கலத் தலைவன் அழைப்புக் கிணங்கி அவள் அந்தக்குடிகாரர் மாளிகைக்குச் சென்றதும், பிறகு மதுவினால் மயங்கி உளறிய மரக்கலத் தலைவனை இந்திர விழா மாளிகைக்கே அழைத்து வந்ததும், விடை காணமுடியாத பெரும் புதிர்களாயிருந்தன யவனர் கடற்படைத் தலைவனுக்கு. இப்படி யவன நாட்டிலிருந்து புகார் சேர்ந்த சில நாட்களுக்குள்ளாக முகம் மூடித் திரிந்து இத்தனை குழப்பங்களை உண்டாக்கிய அந்த மனிதன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் டைபீரியஸுக்கு இருந்ததால், “உம் கவசத்தை அகற்றுங்கள்” என்று தனது வீரர்களுக்குப் பணித்தான்.
அவன் கட்டளை வேகமாகத்தான் பிறந்தது. ஆனால் அந்தக் கவசத்தைக் கழற்றுவது வீரர்களுக்கு அத்தனை எளிதான அலுவலாயில்லை. சடலம் சில மணி நேரங்கள் தண்ணீருக்குள்ளிருந்ததால் ஓரளவு சற்றுப் பருத்துவிட்டதன் விளைவாகக் கவசம் நன்றாகக் கழுத்தை இறுக்கிப் பிடித் திருந்ததல்லாமல், அந்தக் கவசத்தில் ஆரம்பத்திலிருந்த இடைவெளியில் புகுந்து முகத்தைக் கடிக்க முயன்ற மீன்கள் இரண்டொன்று கவசத்துக்கும் கழுத்துக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டிருந்ததால், கவசத்தைக் கழற்ற முயன்ற வீரர்களின் விரல்கள் வழுக்கி வழுக்கி வெளியே வந்தன வாகையால் முகக்கவசம் நன்றாக எடுக்கப் படுவதற்குச் சில நிமிடங்கள் ஆகவே செய்தன. அத்தனை சிரமத்தில் முகக் கவசம் நீக்கப்பட்டும் கூட அந்தக் கவசத்தை எடுத்ததன் பலன் டைபீரியஸுக்குக் கிட்டாததால் அவன் முகத்தில் வெறுப்பும் கோபமும் கலந்து தாண்டவமாடின.

சடலத்தின் உடல் நிலையைவிடக் கேவலமாயிருந்தது. முகத்தின் நிலை இறந்த மனிதன் முகத்திலிருந்த பல கத்திக் குத்துகளின் விளைவாக மனித முகத்தின் அடையாளங்களை அது அறவே இழந்து கிடந்தது. கத்திக் காயங்களால் சின்னா பின்னப் படுத்தப்பட்டிருந்த அந்த முகத்தைச் சில வினாடிகள் கூர்ந்து கவனித்த டைபீரியஸ், வீரர்கள் கையிலிருந்து முகக் கவசத்தைத் தன் கையில் வாங்கி, பக்கத்தில் இருந்த ஒரு வீரனைப் பந்தத்தை நன்றாகத் தாழ்த்தச் சொல்லி அந்த வெளிச்சத்தில் அதைப் பரிசோதித்தான். அதைப் பரிசோதிக்கப் பரிசோதிக்க அவன் கண்களில் மிதமிஞ்சிய கோபம் துளிர்த்ததன்றி, அந்தக் கோபத்தால் உதடுகளும் துடிக்கத் துவங்கி விட்டதைக் கவனித்த வீரர்கள் அதற்குக் காரணம் என்னவாயிருக்க முடியுமென்பதை அறிய முடியாமல் திகைத்தார்கள். ஆனால், ராணிக்கு மட்டும் காரணம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. சடலத்தைப் பார்த்த முதல் பார்வையிலிருந்தே, அந்த உடல் இளஞ்செழியனுடையதாயிருக்க முடியாதென்ற முடிவுக்கு வந்தாளாகையால், கவசத்தைக் கழற்றிய பின்பு டைபீரியஸுக்கு ஏற்பட்ட கோபத்தை சகஜமாகவே பாவித்தாள் ராணி. அந்த சகஜ பாவத்தை உடைக்கவும், ராணி மூலம் உண்மையை அறியவும் முயன்ற டைபீரியஸ் “ராணி! முகத்தைக் கவனித்தீர்களா?” என்று கேட்டான்.

உணர்ச்சிகள் உண்மையை உணர்ந்தபின் ஓரளவு தெளி வடையத் தொடங்கினாலும், அதை வெளிக்குக் காட்டாமல் பழைய வெறித்த பார்வையுடனேயே நின்றிருந்த ராணி தன் உதடுகளை மெல்ல அசைத்து, “கவனித்தேன்” என்று ரகசியம் பேசுவதுபோல் சொன்னாள்.

“முகம் சின்னாபின்னப் படுத்தப்பட்டிருக்கிறது ராணி!? என்றான் டைபீரியஸ் மீண்டும்.

“அப்படித்தான் தெரிகிறது” என்றாள் ராணி மிகவும் சாதாரணமாக.

“இது தற்கொலையல்ல” என்று டைபீரியஸ் மேலும் தொடர்ந்து வார்த்தைகளைச் சிறிது அழுத்திச் சொன்னான்.

ராணி தன் நீலமணிக் கண்களை ஏதோ சந்தேகம் கேட்பவள் போல் அவனை நோக்கி உயர்த்தினாள். அந்தப் பார்வையில் தொக்கி நின்ற கேள்வியைப் புரிந்து கொண்ட டைபீரியஸ், அதற்குப் பதில் சொல்லத் தொடங்கி, “ஆம் ராணி. இது தற்கொலையல்ல, தண்ணீரில் விழுந்து மாண்ட வனின் பிணமுமல்ல” என்றான்.

“அப்படியா!” வியப்புடன் வெளிவந்தது ராணியின் கேள்வி.

“ஆம் ராணி! தண்ணீரில் விழுந்தவன் தப்பிவிட்டான். தான் தப்பியதை மறைப்பதற்காக இந்தப் பிணத்தின் முகத்திற்குத் தன் முகமூடிக் கவசத்தை மாட்டியிருக்கிறான். இறந்தவன் யார் என்று தெரியாதிருப்பதற்காக முகத்தையும் சின்னாபின்னப் படுத்தியிருக்கிறான்.”

“இதையெல்லாம் யார் சொன்னது உனக்கு?”

டைபீரியஸ் கண்கள் ராணியின் முகத்தை ஒரு விநாடி அவள் உள்ளத்தை ஊடுருவி விடுவதுபோல் பார்த்தன. “முகமே முதலில் சொல்லிவிட்டது ராணி! தற்கொலை செய்து கொள்பவனோ, அல்லது குடித்து மதிமயங்கி நீரில் விழுபவனோ, விழுந்தபின் கவசத்தைக் கழற்றி முகத்தைக் கத்தியால் ரண காயப்படுத்திக் கொள்வது மனித வரலாற்றில் காணாத விந்தை. தவிர வேறு அத்தாட்சி வேண்டுமென்றால், இதோ பாருங்கள்” என்று கையிலிருந்த முகக் கவசத்தை ராணியை நோக்கி நீட்டினான் டைபீரியஸ். கவசத்தைக் கையில் வாங்காமலே பார்த்தாள் ராணி. “இதில் என்ன அத்தாட்சி இருக்கிறது?” என்று ஏதும் புரியாததாலோ புரிந்து கொள்ள இஷ்டமில்லாததாலோ கேட்கவும் செய்தாள் ராணி.

டைபீரியஸ் பதிலுக்கு ராணிக்கு வெகு அருகில் வந்து பக்கத்திலிருந்த வீரனைப் பந்தத்தை நன்றாகச் சாய்க்கச் சொல்லி, கவசத்தின் அடிப்பாகத்தைக் காட்டி, “நன்றாக உற்றுப் பாருங்கள் ராணி! இந்தக் கவசம் சிறிது, இந்தச் சடலத்தின் தலை பெரிது. தலையில் இதை மாட்டப் பெரும் இருப்புச் சலாகையொன்றால் இந்தக் கவசத்தின் அடிவிளிம்பு தட்டப்பட்டிருக்கிறது. சலாகை பட்ட இடங்களில் கீறல்கள் இன்னுமிருக்கின்றன, பாருங்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?” என்று விளக்கியதன்றி உக்கிரத்துடன் கேள்வியும் கேட்டான்.

“என்ன அர்த்தம்?” ராணியின் கேள்வி வறண்ட குரலில் வெளிவந்தது.

“இந்த மரக்கலத் தலைவன் இந்த ஊரை நன்றாக அறிந்திருக்கிறான். ஆயுதங்களையும், கவசங்களையும் செய்யும் இரும்புக் கொல்லர்களையும் இவனுக்குத் தெரியும்.”

“உம்?”

“ஆம்; இந்தப் புகார் இவனுக்குப் புதிதல்ல…”

“இருக்கலாம். வந்து பல நாட்கள் ஆகின்றனவே. அதற்குள் யாரையாவது சினேகம் பிடித்திருக்கலாம்.”

“இருக்கலாம் இருக்கலாம். ஆனால் இன்னொரு சந்தேகம் ராணி” என்று டைபீரியஸ் கூறினான்.

அவன் குரலில் சந்தேகம் வலுத்துக் கிடப்பதைக் கண்ட ராணி கண்களை உயர்த்தி அவனைத் தைரியமாக நோக்கி, “என்ன சந்தேகம் டைபீரியஸ்?” என்று வினவினாள்.
“உங்கள் அறையில் மரக்கலத் தலைவன் அதிகமாகக் குடித்திருந்தான் அல்லவா?” என்று கேட்டான் டைபீரியஸ்.

“ஆம்” என்றாள் ராணி.

“நிச்சயமாகக் குடித்திருந்தானென்பது உங்களுக்குத் தெரியுமா?”

“எனக்கு மட்டுமென்ன, அறைக் காவலருக்குக்கூடத் தான் தெரியும்.”

“காவலரைப்பற்றி எனக்கு அக்கறையில்லை, உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும். நான்தானே மதுவை ஊற்றிக் கொடுத்தேன்.”

“எந்த மது?”

“நம் நாட்டு மதுவில் அதிக போதை உண்டாக்கக் கூடியது.”

“எவ்வளவு கொடுத்தீர்கள்?”

“மதுவருந்திப் பழகியவனே இரண்டாவது கிண்ணத்தில் மயங்கி விழுவான். இவனுக்கு நான்கு கிண்ணங்கள் கொடுத்தேன்.”

இதைச் சொன்ன ராணி பேச்சை நிறுத்தினாள். டைபீரியஸ் சற்றுநேரம் சிந்தித்தான். பிறகு சரேலென ராணியை நோக்கித் திரும்பி, “ராணி! நான்கு கிண்ணங்கள் குடித்தும் ஒருவன் மயங்கித் தரையில் சாயாதது பெரும் விந்தை. அதைவிடப் பெரும் விந்தை அவன் ஆற்றில் விழுந்தும் சாகாதது. இந்த விந்தைக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?” என்று வினவினான்.

“எனக்குப் புரியவில்லை” என்றாள் ராணி.

“புரியவில்லை?” சந்தேகத்துடன் எழுந்தது டைபீரியஸ் கேள்வி.

“இல்லை.” திட்டமாக வந்தது ராணியின் பதில்.

“இதில் புரியாதது ஏதுமில்லை ராணி. அவன் மதுவை. அருந்தவில்லை. அருந்துவதுபோல் பாசாங்கு செய்திருக் கிறான். ஆனால் மதுவைக் கொடுத்திருக்கும் தங்களுக்கு அது எப்படி தெரியாமல் போயிற்று?” என்று கேட்ட டைபீரியஸ், தன் விழிகளைச் சந்தேகத்துடன் ராணியின் முகத்தில் உலாவ விட்டான்.

ராணியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் பிரதி பலிக்கவில்லை. “டைபீரியஸ்! உன் ஆராய்ச்சி அத்தனை சரியல்ல என்று தோன்றுகிறது எனக்கு. ஏனென்றால், கிண்ணத்தின் பின் கிண்ணமாக மதுவை அவன் உறிஞ்சுவதை நானே பார்த்தேன்” என்றாள் ராணி.

“ராணி! என்னைப் பூரணமாக நீங்கள் நம்புகிறீர்களா?”

“கண்டிப்பாய் நம்புகிறேன்.”
“இந்த நாட்டில் யவன அரசை நிறுவுவதைத் தவிர வேறு எண்ணம் எனக்கில்லை.”

“அது உன் ராஜபக்தியை விளக்குகிறது.”

“ஊழியருக்கு ராஜபக்தியிருந்தால் மட்டும் போதாது ராணி. ராஜாக்களுக்கும் ஊழியர்களிடம் நம்பிக்கை வேண்டும். ஊழியர்களின் பக்தியோ, அரசர்களின் நம்பிக்கையோ பாதிக்கப்படும்போது பெரும் அரசுகளை நிறுவ முடிவதில்லை. அந்த ஒற்றுமையின்றி எதிரிகள் வீழ்த்தப்படுவதுமில்லை” என்று கூறிய டைபீரியஸ் தனது வீரர்களைப் பார்த்து ராணியை அவள் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு பணித்தான். வீரர்கள் பின் தொடரத் தனது அறையை நோக்கிச் சென்ற ராணி, டைபீரியஸின் சொற்களை நினைத்துப் பார்த்துப் பெருமூச்சும் விட்டாள். யவன அரசு நிலைநிறுத்தப்படும் பணிக்கு இடையூறாகத் தான் இருப்பதையும், தான் எதிரி பக்கம் சாய்ந்துவிட்டதையும் வலியுறுத்தவே அந்த வார்த்தைகளை டைபீரியஸ் சொன்னானென்பது திட்டவட்டமாகத் தெரிந்தது யவன ராணிக்கு. ஆனால், பேதை அவள் என்ன செய்வாள்? அரசர்கள் கடமையை மீறிய உணர்ச்சிகளுக்கு அவள் ஆட்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகிறதை உணர்ந்த ராணி, தான் செய்வது சரிதானா, இளஞ்செழியன் காதலுக்காகச் சொந்த நாட்டு நலனையும், சோதிடர் வார்த்தையையும் காற்றில் பறக்க விடுவது நியாயம்தானா என்று யோசித்தாள். சரியல்ல என்று ஒரு சமயம் தோன்றியது. சரிதான் என்று இன்னொருமுறை தோன்றியது. தமிழகத்து வீரன் ஒருவன் உதவியால்தான் தான் தமிழகத்தில் முடிசூட முடியும் என்று யவன குருமார்கள் சொன்ன வாக்கை மட்டும் இரும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு தன் நடத்தைக்கு நியாயம் கற்பித்துக் கொண்டாள் ராணி.

இந்த நினைப்புக்களுடன் அறையை அடைந்து மஞ்சத்தில் சாய்ந்து கொண்ட ராணியின் புத்தியில் ஏதேதோ கேள்விகள் எழுந்து சுழன்றன. ‘சடலத்தைப் பார்த்த உடனேயே அது அவருடையதல்லவென்று தெரிந்து கொண்டேன். ஆகையால்தான் திடப்பட்டேன். அறைக்குப் போகும் வரையில் மனம் வறண்டு கிடந்தது. அங்கு சென்று உடலைப் பார்த்ததும் நம்பிக்கை சுரந்துவிட்டது. அவர் குடித்ததுபோல் நடித்ததற்கும் கூவியதற்கும் காரணம் எனக்குப் புரிந்தது. புரிவானேன்? கதவை மூடிய பின்பு அவரே சொன்னாரே காவலரை ஏமாற்றவென்று. ஆனால் டைபீரியஸை ஏன் மாளிகைக்கு அழைத்தார்? எதற்காக அபாயமான காவிரி நீரில் விழுந்தார்? விழுந்தவர் எப்படித் தப்பினார்?’ என்று ஏதேதோ, சொல்லிக் கொண்டாள் ராணி. பல சந்தேகங்கள் அவள் இதயத்தில் சுழன்றன.

அவள் இதயத்திலென்ன, டைபீரியஸின் இதயத்திலும் ஏராளமான சந்தேகங்கள் சுழன்றன. ‘யார் இந்த மரக்கலத் தலைவன்? குடித்து நாடகமாடியிருக்கலாம். ஆனால் காவிரி நீரில் குதித்தது நாடகமல்ல. அந்தச் சுழல்களில் தப்பியவன் சாதாரண மனிதனல்ல. எந்த யவனனும் இந்த வேலையைச் செய்யமுடியாது. இத்தகைய அலுவலைச் செய்து பிழைத்த அசகாயசூரன் ஒன்று பரதவனாயிருக்க வேண்டும், அல்லது அவர்களைப்போல் நீந்திப் பழக்கமுள்ள தமிழனாயிருக்க வேண்டும். தமிழனாகவோ பரதவனாகவோ இருந்தால் யவன நாட்டுக்கு எப்படிப் போனான்? போனால் இளவரசர் நட்பை எப்படிப் பெற்றான்? அலீமா எப்படி அவனுக்கு நேசமானாள்….?’ என்று யோசித்துக்கொண்டே போன டைபீரியஸின் முகம் திடீரென புதுச் சிந்தனையால் பளிச்சிட்டது. ‘ஆமாம்! அலீமா இருக்கிறாளே! அவளைச் சித்ரவதை செய்தாவது உண்மையை வரவழைக்கிறேன். எப்படியும் என் கட்டளையின்றி மரக்கலங்கள் நகரமுடியாது. நகர்ந்தால் எரிபந்தங்களை மாளிகைமீதுள்ள பெரும் தூண்களிலிருந்து யந்திரங்களைக் கொண்டு விசிறி மரக்கலங்களை அழித்துவிட உத்தரவிட்டிருக்கிறேன். காலையில் அலீமாவை வரவழைக் கிறேன்’ என்று சங்கற்பம் செய்துகொண்டே டைபீரியஸ், சடலத்தை எடுத்துக் கடலில் எறிய உத்தரவிட்டுத் தன் அறைக்குச் சென்று உணவருந்தி நிம்மதியுடன் உறங்கினான்.

பொழுதும் விடிந்தது. டைபீரியஸுக்கு நிம்மதியை அளிப்பதற்காக அல்ல, கொஞ்சநஞ்சமிருந்த நிம்மதியையும் குலைப்பதற்காக. மிகுந்த வேகத்துடன் உள்ளே ஓடி வந்து பதைபதைத்து நின்ற வீரனொருவன் சில வினாடிகள் பேச முடியாமல் திணறினான்.

“என்ன விசேஷம்?” என்று இரைந்தான் டைபீரியஸ்.

“மரக்கலங்களைக் காணோம்!” என்று உதறலுடன் பதிலிறுத்தான் வீரன்.

“என்ன?” என்று கேட்ட வண்ணம் பஞ்சணையிலிருந்து துள்ளி எழுந்தான் டைபீரியஸ்.

“ஆம், மறைந்துவிட்டன.”

“ஏன் சுழற்பந்தங்களை வீசி அவற்றை அழிக்க வில்லை?”
“அவை நகர்ந்ததே தூண்களைக் காத்து நின்றவர் களுக்குத் தெரியவில்லை.”

“எப்படித் தெரியாமற்போகும்?”

“அவர்களே வந்திருக்கிறார்கள்.”

“யார்?”

“இந்திர விழா மாளிகைமீதுள்ள தூண்களின் காவலர்.”

“கூப்பிடு அவர்களை.”

காவலர் நடுங்கிய வண்ணம் உள்ளே வந்தனர். அவர்களைக் கண்டதும் உக்கிராகாரமான கோபம் வந்தது டைபீரியஸுக்கு. அவர்கள் சொன்ன தகவல் அவன் கோபத்தை அகற்றியது. ஆனால் எதைக் கண்டும் பிரமிக்காதவனும் மிகுந்த அறிவாளியுமான டைபீரியஸ் அவர்கள் சொன்ன செய்தியைக் கேட்டு, அப்படியே ஸ்தம்பித்துப் பல வினாடிகள் நின்றுவிட்டான்.

Previous articleYavana Rani Part 2 Ch41 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here