Home Sandilyan Yavana Rani Part 2 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

129
0
Yavana Rani Part 2 Ch43 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch43 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 43 நறுமணத் தமிழகம்

Yavana Rani Part 2 Ch43 | Yavana Rani | TamilNovel.in

இந்திர விழா மாளிகைமீதுள்ள அசுரத் தூண்களை, அல்ல அல்ல போர்க்கலப் பொறிகளை, இரவும் பகலும் காத்து வந்தவர்களும், அந்தப் பொறிகளை மிகுந்த திறமையுடன் இயக்கப் பயிற்சி பெற்றவர்களுமான யவன காவலர் சொன்ன சமாதானத்தைக் கேட்டதும் டைபீரியஸ் மித மிஞ்சிய பிரமிப்பை அடைந்தானென்றால் அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. காவலர் உள்ளே நுழைந்ததும் அவர்களை நோக்கி, “இந்தத் தகவல் உண்மைதானா?” என்று அவன் சீறிய போது, உள்ளத்தில் கிலி பிடித்து நின்ற காவலர் இருவரில் ஒருவன் மட்டும் சிறிது துணிவை வரவழைத்துக் கொண்டு, “ஆம் பிரபு? உண்மைதான்” என்று மிகுந்த பணி வுடன் பதிலிறுத்தான்.

டைபீரியஸின் கண்கள் அந்தக் காவலனை எரித்து விடுவனபோல் நோக்கின. “இதைச் சொல்ல உனக்கு வெட்கமாயில்லை?” என்று கட்டடமே அதிரும் வண்ணம் இரைந்தான் டைபீரியஸ், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து.

“இதில் வெட்கப்படுவதற்கு ஏதுமில்லை பிரபு!” பயபக்தியுடன் ஆனால் சற்று தைரியத்துடனே வந்தது காவலன் பதில்.

“மரக்கலங்கள் நமது கையிலிருந்து நழுவிவிட்டது பெருமைப்படுவதற்குரிய விஷயமென்று நினைக்கிறாயா?” என்று இகழ்ச்சியும், கோபமும் கலந்த குரலில் வினவினான் டைபீரியஸ்.

“இல்லை பிரபு!”

“அப்படியானால் மரக்கலங்கலை ஏன் சரியாகக் கண் காணிக்கவில்லை?”

“முடிந்தவரையில் கண்காணித்தோம்.”

“முடிந்தவரை என்பது ஒன்றுண்டா?”

“இப்பொழுது முன்னிருட்டுக் காலம் என்பது நீங்கள் அறியாததல்ல.”

“அறிவேன்.”

“மூன்றாவது ஜாமம் முடியும்வரை இருட்டு பலமா யிருக்கிறது.

“ஆமாம்.”

“மாளிகைத் தளத்திலிருந்து கடலலைகளைப் பார்ப்பதே கஷ்டம்.”

“ஆமாம்… ஆனால்?”

“வேறு வெளிச்சம் கிடையாதே பிரபு!”

மரக்கலத்தின் விளக்குகள்?”

“அணைக்கப்பட்டிருக்க வேண்டும்.”
மெள்ள மெள்ள டைபீரியஸுக்கு யவன மரக்கலத் தலைவன் தன்னை ஏமாற்ற எடுத்துக் கொண்ட திறமையான நடவடிக்கைகளின் ‘மர்மம் புலனாகத் தொடங்கியது. “இப்பொழுது முன்னிருட்டு என்பதை அறிந்த மரக்கலத் தலைவன் தனது மரக்கலங்களின் விளக்குகளை அணைத்து இருளில் பாய் விரித்து என் கண்காணிப்பிலிருந்து நகர்ந்து விட்டான். ஆனால்…’ என்று ஏதோ யோசிக்க முற்பட்ட டைபீரியஸின் மனத்தில் திடீரென பேரதிர்ச்சி ஏற்படவே ஸ்தம்பித்து நின்றான். அவன் பிரமிப்பைப் பன்மடங்கு உச்சிக்குக் கொண்டுபோகவும் அவன் எண்ணங்களை அடியோடு நிலைகுலையச் செய்யவும் தூண்களின் காவலரில் ஒருவன் விளக்கினான். “பிரபு! தமிழர்கள் வழக்கம்போல் கலங்கரை விளக்கத்தை எரியவிட்டிருந்தால் அது வீசும் வெளிச்சத்திலிருந்து மரக்கலங்கள் தப்பியிருக்க முடியாது. இந்த மரக்கலங்கள் வந்த சமயங்களில் கலங்கரை விளக்கத்தை அணைக்கச் சொல்லித் தாங்கள் தான் உத்தரவிட்டீர்கள்?” என்று.

டைபீரியஸ் அந்தக் காவலனுக்குப் பதில் சொல்ல முடியாமல், அவை நடுவே நீட்டோலை வாசிக்க முடியாத நன்மரம் போல்’ நின்றான். ‘அந்த உத்தரவை இட்டது நான்தான். ஆனால் அந்த உத்தரவுக்கு மூல காரணம் யவனர் மரக்கலங்களின் தலைவன், அந்த வேண்டுகோளை அலீமா மூலம் அனுப்பியதே அவன்தான். மரக்கலத் தலைவன் என்னை அடிமுட்டாளாக்கி விட்டான். என்றாவது என் கண்களில் படாமல் தப்பிச் செல்ல நேர்ந்தால் அதற்கு முன்னேற்பாடாக இருக்கட்டும் என்றே கலங்கரை விளக்கத்தைத் தான் வரும் நாட்களில் அணைக்கச் சொல்லியிருக்கிறான். என்றும் அணையாதது எனத் தமிழர்கள் பெருமை கொண்டாடும் புகாரின் கலங்கரை விளக்கத்தை அவன் பேச்சைக் கேட்டு அணைத்தேன். நன்று நன்று. இத்தனை முன்யோசனையுள்ள இவன் யார்? அதை முதலில் கண்டு பிடிக்கவேண்டும். ஆனால் எப்படிக் கண்டு பிடிப்பது? மரக்கலங்கள்தான் போய் விட்டனவே’ என்று தன்னைத்தானே நொந்து கொண்ட டைபீரியஸ், காவலருக்குப் போக விடை கொடுத்துவிட்டு நீண்ட நேரம் மஞ்சத்தில் அமர்ந்து சிந்தனையிலாழ்ந்து விட்டான்.

சிந்திக்கச் சிந்திக்க டைபீரியஸின் சீரிய மூளை அதிக மாகக் குழம்பவே செய்தது. எவ்வகையிலும் தெளிவு ஏற்படாமல் திணறினான் அவன். அந்தத் திணறலின் விளைவாக அடுத்த மூன்று நாட்களில் அந்த மரக்கலங்களின் இருப்பிடத்தை அறியப் பரதவர் படகுகளை ஏவினான். அவற்றின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பொற்காசுகளை ஆயிரக்கணக்கில் வழங்குவதாகவும் அறிவித்தான். அடுத்த இரண்டு நாட்களில் புகாரின் துறைமுகத்துக்கு வந்த வெளிநாட்டு உள்நாட்டு வர்த்தகக் கப்பல்கள் பலவற்றையும் தீவிரமாகச் சோதனையிட்டு யவன மரக்கலங்களைப் பற்றி விசாரித்தான். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. யவன மரக்கலங்கள் எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கும், அல்லது எங்கு தங்கியிருக்கும் என்பதை அறியத் தரை மார்க்கத்திலும் ஒற்றர்களை அனுப்பி அடுத் திருந்த கடற்கரையோரத்தைச் சல்லடை போட்டுச் சலித்தான். பயனேதும் ஏற்படவில்லை. மரக்கலங்கள் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன. நான்கு நாட்கள் ஓடின. அந்த நான்கு நாட்களிலும் டைபீரியஸ் சித்தத்தில் மரக்கலங்களைப் பற்றிய சிந்தனையே மிகுந்து நின்றது.

அந்தச் சிந்தனை டைபீரியஸுக்கு மட்டுமல்ல, நடுக் கடலில் கீழ்த் திசை நோக்கி ஓடிக்கொண்டிருந்த இளஞ்செழியனின் மரக்கலக் கூட்டத்திலிருந்த கப்பலோட்டிகளுக்கும் இருந்தது. அனாவசியமாக மரக்கலங்களைத் தமிழகத்தின் கரையைவிட்டு வெகுதூரம் எதற்காக நான்கு நாட்களாகப் படைத்தலைவன் செலுத்தி வருகிறான் என்பதை அறியாத தாலும், அதைப்பற்றி அவனைக் கேட்கத் துணிவில்லாத தாலும் மாலுமிகள் பெரிதும் கலங்கினர். கப்பலின் நடுத்தளத்தில் உட்கார்ந்திருந்த ஹிப்பலாஸ்கூட அதைப் பற்றி யோசித்தான். உள்ளத்தே எழுந்த சந்தேகத்தைக் கடைசியாக வாய்விட்டே கேட்டான், அந்தப் பக்கமாக வந்த மரக் கலத்தின் உபதலைவி அலீமாவிடம். கப்பலின் முகப்பில் நின்று கடலை ஆராய்ந்து கொண்டிருந்த இளஞ்செழியனை நோக்கி அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்த அலீமாவைத் தடுத்து, “அலீமா! ஒரு சந்தேகம்?” என்றான் ஹிப்பலாஸ்.

அலீமா சட்டென்று நின்று அவனை நோக்கி, “என்ன ஹிப்பலாஸ்? என்ன சந்தேகம்?” என்று வினவினாள்.

“மரக்கலங்கள் நான்கு நாட்களாக ஏன் கிழக்கே செல்கின்றன?” என்று கேட்டான் ஹிப்பலாஸ்.

“அதைக் கேட்கத்தான் நான் போகிறேன்” என்றாள் அலீமா.

“ஏன்? காரணம் உனக்கு விளங்கவில்லையா?” என்று மீண்டும் வினவினான்.

“இல்லை. விளங்கவில்லை.”
“உன்னிடம் ஏதும் படைத் தலைவர் சொல்ல வில்லையா?”

“இல்லை.”

“மரக்கலங்கள் நகர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகுமா சொல்லவில்லை.”

“ஆம். இந்த நான்கு நாட்களும் அவர் அதிகமாக எதுவும் பேசவில்லை. மரக்கலத்துக்கு வந்ததும் அல்லியை வாணகரை சேர்த்து விட்டாயா என்று கேட்டார். சேர்த்து விட்டேன் என்றேன். அவ்வளவுதான் விசாரித்தார். வேறெதுவும் கேட்கவு மில்லை, சொல்லவுமில்லை.”

ஹிப்பலாஸ் சிறிது நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: “அலீமா! படைத்தலைவரின் செயல்கள் பலவற்றுக்குக் காரணம் எனக்குப் புரிவதில்லை” என்று.

“எது புரியவில்லை?” என்று கேட்டாள் அலீமா.

“உதாரணமாக இதோ பார். டைபீரியஸ் மரக்கலத்துக்கு வந்திருக்கிறானென்றதும் இவர் ராணியுடன் இந்திர விழா மாளிகைக்குச் சென்றார். அங்கு குடிகாரன் போல் நடித்தார். என்னையும் வெளியே விரட்டினார். இதெல்லாம் டைபீரியஸை ஏமாற்றுவதற்காக இருக்கலாம். ஆனால் டைபீரியஸை எதற்காக மாளிகைக்கு வரவழைத்தார். இங்கேயே வைத்திருந்தால் நம்மிடம் டைபீரியஸ் சிக்கியிருப்பானே” என்றான் ஹிப்பலாஸ்.

“இதைப்பற்றியெல்லாம் நானே கேட்டுவிட்டேன் ஹிப்பலாஸ். டைபீரியஸ் தனியாக மரக்கலத்துக்கு வந்தாலும் தகுந்த எச்சரிக்கையுடன்தான் வந்திருப்பான் என்று படைத் தலைவர் சொன்னார். மரக்கலங்கள் சிறிது நகர்ந்தாலும் எரிபந்தங்களை வீசுமாறு இந்திர விழா மாளிகையின் உப்பரிகைத் தூண் பொறியாளருக்கு உத்தரவிட்டிருப்பா னென்று கூறினார். எதிரியைச் சரியான எடைபோடுவது ராஜ தந்திரத்தில் முக்கியம் என்று விளக்கினார். ஆகையால் தான் டைபீரியஸைத் திரும்ப நிலத்துக்கு இழுத்துத் தான் நீரில் இறங்கினாராம்” என்றாள் அலீமா.

இளஞ்செழியன் டைபீரியஸை எத்தனை முன் யோசனையுடன் திரும்ப அழைத்திருக்கிறானென்பதை நினைத்த ஹிப்பலாஸின் முகத்தில் வியப்புக்குறி பெரிதாகப் படர்ந்தது. அதை மேலும் விரிவுபடுத்த அலீமா சொன்னாள்: “தவிர, உடனே பாய் விரித்து ஓடாததற்கும் அதுதான் காரணம். மரக்கலங்கள் கண்ணுக்கெதிரில் தெரியுமட்டும் டைபீரியஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டான் என்று படைத்தலைவர் தீர்மானித்தார். ஆகையால்தான் மறு நாளிரவு மூன்றாம் ஜாமத்துக்குச் சற்று முன்பாகப் புகாரை விட்டுக் கிளம்பினோம்” என்று. ஹிப்பலாஸ் அதற்குமேல் அலீமாவைச் சந்தேகம் ஏதும் கேட்காமல் எழுந்தான். எழுந்த தன்றி அவனைத் தொடர்ந்து இளஞ்செழியன் நின்றிருந்த இடத்தை அணுகினான்.

அப்பொழுது மாலை நேரம். மஞ்சள் வெய்யில் கடல் நீரைப் பொன்னாக அடித்துக் கொண்டிருந்தது. காற்றும் இதமாக வீசிக்கொண்டிருந்ததால் சிற்றலைகளே மரக்கலப் பக்கப் பகுதிகளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன. கடல் நீரில் தவழ்ந்து விளையாடிய கதிரவன் பொன்னிறக் கிரணங்களையும் அந்த உப்பு நீரில் மிதந்து வந்த மெல்லிய காற்றையும் பருகிய இளஞ்செழியன் மெய்மறந்து நின்றிருந் தான். மனித வாடையில்லாத இயற்கை அந்த மரக்கலத்தைக் கூடச் சூழ்ந்து நின்றதைக் கவனித்த இளஞ்செழியன், ‘இங்குள்ள அமைதி தரையில் இல்லை. காரணம் மனிதன் தான்’ என்று மனித வர்க்கத்தை உள்ளூர இகழ்ந்தான். ஆனால், தானும் மனிதர்களுக்காகவே ஆழ்கடலில் ஓடுவதை நினைத்துப் புன்முறுவலும் கொண்டான். “இந்த நிலையில் கப்பலின் இந்த முகப்பில் என்னுடன் பூவழகியும் இருந்தால் எத்தனை இன்பமாக இருக்கும்…” என்று எண்ண முற்பட்டவன், நான் இனி யவன ராணிக்குச் சொந்தம் என்ற நினைப்பால், “சே! சே! இனி அவளை நினைக்கக் கூடாது’ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டதன்றி, சட்டென்று பூவழகியைப் பற்றிய எண்ணங்களை அறுத்துக் கொண்டு திரும்பியவன், தன் பின்னால் அலீமாவும், ஹிப்பலாஸும் நிற்பதைக் கண்டான்.

அதுவரை மனதை ஆட்கொண்ட எண்ணங்களால் ஒரு வினாடி குழம்பிய படைத்தலைவன் சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “என்ன அலீமா! என்ன ஹிப்பலாஸ்?” என்று திடீரென்று உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவன் போல் வினவினான்.

ஏதோ சொப்பன உலகிலிருந்து படைத்தலைவன் இகலோகத்துக்கு மீண்டிருப்பதை உணர்ந்ததும் அலீமாவின் முகத்தில் முறுவல் விகசிக்கவில்லை, கவலையே படர்ந்து கிடந்தது. அந்தக் கவலை குரலிலும் தொனிக்கக் கேட்டாள் அலீமா, “நாம் எங்கே போகிறோம் படைத்தலைவரே?” என்று.

“ஏன் கேட்கிறாய் அலீமா?” என்று படைத்தலைவன் வினவினான்.

“நான்கு நாட்களாக மரக்கலங்கள் கிழக்கு நோக்கி ஓடுகின்றன” என்றாள் அலீமா.

“ஆமாம்”.

“சாவகத் தீவுக்கும் புட்பகத் தீவுக்கும்தான் இந்தத் திசையில் போவது வழக்கமென்று ஹிப்பலாஸ் சொல்கிறார்.”

படைத்தலைவன் ஹிப்பலாஸை நோக்கிப் புன்முறுவல் செய்தான். பிறகு அலீமாவை நோக்கி, “ஹிப்பலாஸ் சொன்னதில் தவறேதுமில்லை அலீமா” என்றான்.

“அப்படியானால் தமிழகத்தில் நமக்கு வேலை யில்லையா?”

“நிரம்ப இருக்கிறது.”

“பின் ஏன் தமிழகத்தைவிட்டு நேர் எதிர்த் திசையில் ஓடுகிறோம்?”

“இனித் திரும்பிவிடுவோம். கப்பலோட்டிகளுக்கு உத்தர விடு. மரக்கலங்களைக் கரையை நோக்கித் திருப்பச் சொல்லு.”

“இந்த நான்கு நாட்கள் எதற்காக நடுக்கடலில் திரிந்தோம்?”
இளஞ்செழியன் தன் கூரிய விழிகளை அலீமாவின்மீது நாட்டினான். பிறகு குழந்தையை அணைப்பதுபோல் அவள் தோள்களை மெள்ள அணைத்துக் கொண்டு, “அலீமா! நம்மைத் தேட டைபீரியஸுக்கு நான்கு நாட்களாவது அவகாசம் வேண்டாமா?” என்று வினவினான்.

அப்பொழுதுதான் அலீமாவுக்குக் காரணம் புரிந்தது. தொடர்ந்து சொன்னான் படைத்தலைவன்: “அலீமா! டைபீரியஸ் மிகவும் கூர்மையான அறிவு படைத்த படைத் தலைவன். புகாரிலிருந்து காயல் வரை இந்த மரக்கலங்களைப் பற்றித் தகவல் அறிய முயல்வான். இந்த நான்கு நாட்களுக்குப் பின்பும் நாம் டைபீரியஸின் கண்களிலிருந்து தப்பிவிட்டதாக நினைப்பது தவறு. இருப்பினும், பாதகமில்லை. இந்த மரக் கலங்களை நங்கூரம் பாய்ச்ச நான் புது இடமொன்றை யோசித்திருக்கிறேன்; அங்கு கூடியவரையில் நாம் மறைந்து உறையலாம். மரக்கலங்களை நாளை பகல் மட்டும் தென் திசையில் விட்டு நாளை இரவில் மேற்குக்கரையை நோக்கித் திருப்பச் சொல்.”

மரக்கலங்களைத் தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் பதுக்கி வைக்கவும், அங்கிருந்து மேற்கொண்டு திட்டங்களை வகுக்கவும் படைத்தலைவன் ஏற்பாடு செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாலும், நான்கு நாட்கள் மேற்றிசையில் கப்பலைச் செலுத்திய காரணத்தையும் உணர்ந்து கொண்ட தாலும் மேற்கொண்டு எந்தக் கேள்வியையும் கேட்காத அலீமாவும் ஹிப்பலாஸும் படைத்தவைன் உத்தரவை மற்ற மரக்கலங்களுக்கு விளக்கச் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் திரும்பி வந்தபோது இரவு ஏறிவிட்டது. மரக் கலங்களில் விளக்குகளையோ பந்தங்களையோ அதிகமாக ஏற்ற வேண்டாமென்று படைத்தலைவன் உத்தரவிட்டிருந்த தால், இரண்டொரு பந்தங்களே ஒவ்வொரு மரக்கலத்திலும் எரிந்து கொண்டிருந்தன. அன்றிரவு முழுவதும் மரக்கலத்தின் தளத்தில் நின்று ஆகாயத்தையே கவனித்துக் கொண்டிருந்து விண்மீன்கள் இருந்த நிலையிலிருந்து எப்படிச் செல்வதென்று உத்தரவிட்டுக் கொண்டிருந்தான் இளஞ்செழியன். மரக் கலங்கள் அன்றிரவும், மறுநாள் பகலும் தெற்கு நோக்கி ஓடின. மறுநாள் இரவு நெருங்கி முதல் ஜாமம் ஆரம்பித்ததும் படைத் தலைவன் தளத்துக்கு வரும்படி அலீமாவுக்கு உத்தரவனுப்பி, அவள் வந்ததும், “அலீமா! பாய்களை இறக்கச் சொல். காற்று அனுகூலமான இல்லை. மரக்கலங்களை மேற்குத் திக்கில் திருப்பிக் கரையை நோக்கிச் செலுத்தச் சொல். துடுப்புகளைத்துழாவி மரக்கலங்களை இயக்கச் சொல்” என்று உத்தர விட்டான்.

அடுத்த சில நாழிகைகளில் பாய்கள் இறக்கப்பட்டன துடுப்புகளால் துழாவப்பட்ட மரக்கலங்கள் கரையை நோக்கி ஓடின. சுமார் ஒரு ஜாமம் கப்பல்கள் ஓடியிருக்கும். இளஞ் செழியன் அந்த ஜாமம் பூராவும் தனது கப்பலின் தளத்தி லேயே நின்றிருந்தான். பிறகு எதையோ நாசிகளால் சுவாசித்தான். படைத்தலைவன் பெருமூச்சு கொண்டு சுவாசிப்பதைப் பக்கத்திலிருந்து பார்த்த அலீமா, “என்ன முகர்ந்து பார்க்கிறீர்கள் படைத் தலைவரே?” என்று வினவினாள்.

“நீயும் முகர்ந்து பார் அலீமா! ஏதாவது நறுமணம் வரும்” என்றான் இளஞ்செழியன்.
கரையிலிருந்து மெல்ல வந்து கொண்டிருந்த காற்றை இருவரும் முகர்ந்து கொண்டு நின்றார்கள். கப்பல்கள் கரையை நோக்கி விரைந்தனவேயொழிய வெகுநேரம் மட்டும் நறுமணமேதும் அந்த இருவர் நாசியிலும் நுழைய வில்லை. இப்படி இரண்டு நாழிகைகள் சென்றதும் எங்கிருந்தோ மனத்தை மயக்கும் நறுமணம் காற்றில் மிதந்து வந்தது. அதைச் சுவாசித்துச் சுவாசித்து ஆச்சரியப்பட்டாள் அலீமா. இளஞ் செழியன் ஆச்சரியப்படவில்லை, ஆகாயத்தை நோக்கினான். “சரியாகத்தான் வந்திருக்கிறோம். இன்னும் அரை ஜாமத்தில் கரையை அடையலாம்” என்று கூறினான்.

“இதென்ன நறுமணம் படைத்தலைவரே!” என்று கேட்டாள் அலீமா அந்த சுகத்தில் மெய்மறந்து.

“நாகலிங்கப் பூவின் நறுமணம்” என்றான் இளஞ் செழியன்.

“அப்படி ஒரு பூ உண்டா?” என்று கேட்டாள் அலீமா.

“கொள்ளை கொள்ளையாய் உண்டு. நாளை நீ கூந்தலில் சூட்டிக் கொள்ளலாம்” என்ற இளஞ்செழியன் கரையை எதிர்பார்த்து நின்றான்.

கரையும் மெள்ள மெள்ளக் கண்ணுக்குப் புலனாகியது. எதிரே பெரும் மணல் மேடு ஒன்று தெரிந்தது. அதன்மீது பெரும் தோப்பு ஒன்றும் பலப்பல குடிசைகளும் தெரிந்தன. கரை வளைந்து கிடந்தது. இரு புறத்திலும், தென்னஞ் சோலைகளும், வேறு பல மரக்கூட்டங்களுமிருந்தன. அந்த இடத்தின் அழகைக் கண்டு பிரமித்த அலீமா, “இந்த இடம் அழகானது மட்டுமல்ல. மரக்கலங்கள் மறைந்திருக்கவும் வழி இருக்கிறது” என்று நினைத்தாள்.

ஆனால் கரையைக் கண்டதும் இளஞ்செழியன் எந்த நினைப்பிலும் இறங்காமல், “மரக்கலங்களை நங்கூரம் பாய்ச் சுங்கள். கரை அருகே செல்ல வேண்டாம்” என்று உத்தர விட்டான்.

“ஏன்?” என்று கேட்டாள் அலீமா.

“இங்கு கடல் ஆழம் அதிகமில்லை. எங்கு மரக்கலங் களை நிற்க வைக்கலாம் என்று நாளை தீர்மானிப்போம். படகுகளை இறக்கச் சொல். கரைக்குச் செல்வோம்” என்று அலீமாவுக்கு இரண்டாம் முறையாக உத்தரவிட்டான் படைத்தலைவன்.

அடுத்து அரை நாழிகைக்குள் படகுகள் நீரில் இறக்கப் பட்டன. படைத்தலைவனும் அலீமாவும், ஹிப்பலாஸும் ஒரு படகிலும், மற்ற மாலுமிகள் கூட்டம் கூட்டமாக மற்றப் படகுகளிலும் ஏறிக் கொள்ளவே, படகுக் கூட்டம் கரையை நோக்கி நகர்ந்தது. கரை அணுக அணுக நாகலிங்க மலர்களின் நறுமணம் வலுத்து அந்தக் கடற் பிராந்தியத்தையே வளைத்துக் கொண்டது. அந்த நறுமணக் கடலில் மூழ்கிச் சித்தத்தைப் பறிகொடுத்துக் கொண்டிருந்த அலீமா, ‘அப்பா! தமிழகத்தில் எத்தனை வித நறுமலர்கள்! தமிழகமே நறுமணம் வாய்ந்தது போலிருக்கிறதே! அதில் பிறப்பவர்கள் எத்தனை பாக்கிய சாலிகள்!’ என்று எண்ணி எண்ணிப் பூரித்தாள். கரையும் மெள்ள மெள்ள நெருங்கியது. படகுகள் கரையை நெருங்கியதும் திடீரெனப் பல பந்தங்கள் கரையிலிருந்த தோப்பில் பளிச்சிட்டன. அந்தப் பந்தங்கள் அலைகள் மோதிய இடத்துக்குத் துரிதமாக வரவும் தொடங்கின.

Previous articleYavana Rani Part 2 Ch42 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here