Home Sandilyan Yavana Rani Part 2 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

79
0
Yavana Rani Part 2 Ch44 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch44 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 44 காத்தாயி

Yavana Rani Part 2 Ch44 | Yavana Rani | TamilNovel.in

கரையருகில் திடீரெனப் பந்தங்கள் பளிச்சிட்டதும் கரையை நெருங்குவதா வேண்டாமா என்ற சந்தேகத்தால், படகைச் செலுத்திய மாலுமிகள் நீரில் துழாவிய துடுப்புகளின் செயலைச் சட்டென நிறுத்தியதன்றி, அலீமாவும் இளஞ் செழியனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவர்களுக்கிருந்த சந்தேகம் இளஞ்செழியனுக்கும் ஓரளவு ஏற்படவே அவன் சில வினாடிகள் கரையை ஊன்றிக் கவனித்து விட்டு, “வருகிற வர்கள் அந்த மணல் மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும். எதற்கும் பார்த்துவிட்டுப் பிறகு மற்ற படகுகளைக் கரைக்கு வரவழைப்போம். நீ அடுத்த படகில் ஏறிக்கொள் அலீமா!” என்று தனது படகை அடுத்த படகுடன் சேர்க்கும்படி படகோட்டிகளுக்கு உத்தரவிட்டான். படகோடு படகு நெருங்கியதும் அதில் ஏற நிதானித்த அலீமாவை நோக்கி, “ஏன் யோசிக்கிறாய் அலீமா?” என்று வினவினான் படைத் தலைவன்.

“கரையில் ஏதாவது ஆபத்து காத்திருந்தால்?” என்று அலீமா சந்தேகத்துடனும் குழப்பத்துடனும் கேட்டாள்.

“தற்சமயம் தமிழகத்தில் புகாரிலும், உறையூரிலும்தான் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள். வேறெங்கும் கிடையாது” என்று பதில் சொன்னான் படைத்தலைவன்.

அப்பொழுதும் சமாதானம் அடையாத அலீமா, “இந்த இடம் எது? இங்கு வசிப்பவர்கள் யார்? இதெல்லாம் நிச்சயமாகத் தெரியுமா உங்களுக்கு?” என்று மீண்டும் கேள்வியை வீசினாள்.
பெருமிதச் சிரிப்பு ஒன்று படைத் தலைவனிடமிருந்து உதிர்ந்ததன்றி, அதைத் தொடர்ந்து பெருமையும் அன்பும் நிரம்பிய சொற்களும் அவன் இதழ்களிலிருந்து உதிர்ந்தன. “அலீமா! இந்தத் தமிழகத்தில் நானறியாத குடிகள் இருக்கிறார்களா! இல்லை அலீமா, இல்லை. அதோ இருக்கும் இடம் எதுவென்று எனக்குத் திட்டமாகத் தெரியும். இந்த இடமென்ன, தமிழகத்தின் வங்கக் கடற்கரையோரத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் திட்டமாக அறிவேன். ஒவ்வொரு இடத்திலும் எந்த வகுப்பினர் வசிக்கிறார்கள்? அவர்கள் அலுவல் என்ன? அவர்கள் குணதோஷங்கள் என்ன? அனைத்தையும் அறிவேன்…’ என்று சொல்லிக் கொண்டே போன இளஞ்செழியனை இடைமறித்த அலீமா கேட்டாள், “அப்படியானால் இந்த இடத்தின் பெயர் என்ன? அதோ பந்தங்களைப் பிடித்துக் கொண்டு கரை நோக்கி வரும் வகுப்பினர் யாவர்?” என்று.

லவலேசமும் யோசிக்காமல் பதில் சொல்லத் துவங்கிய படைத்தலைவன், “அலீமா! நாகலிங்க மலர்களின் நறுமணத்தை நீ சுவாசித்தாய் அல்லவா?” என்று வினவினான்.

“ஆமாம்” என்றாள் அலீமா.

“நாகலிங்க மரங்கள் நிறைந்திருப்பதால் இதற்கு நாகை என்று பெயர். ஆனால் அந்தப் பெயர் வந்ததற்கு நாகலிங்க மரங்கள் மட்டும் காரணமல்ல. வடநாட்டு நாகர்கள் சிலர் இந்த மணல் மேட்டுக் குப்பம் வந்து நீண்ட நாட்களாகக் குடியேறியிருக்கிறார்கள். அவர்களும் இதற்குத் தங்கள் வகுப்புப் பெயரையொட்டி நாகர்கள் இருக்குமிடம், அதாவது நாகை என்று அழைத்தார்கள். ஆகையால் அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. அநேகமாக அதோ பந்தங்களைத் தாங்கி ஓடி வருகிறவர்களில் பாதிப் பேர் நாகர்கள்..?” என்றான் படைத்தலைவன்.

“மீதிப் பாதிப் பேர்?”

“தமிழகத்தின் கடற்கரையோரம் பூராவும் வசித்து வரும் பரதவர்.”

“பரதவராயிருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்?”

“ஏன் நாகர்களுக்குக்கூட என்னைத் தெரியும்.”

“அப்படியானால் உங்களை அடையாளம் கண்டு பிடித்துக் கொள்வார்களே?”

“கண்டுபிடிக்கலாம்.”

“கண்டுபிடித்தால் டைபீரியஸுக்குத் தெரியாதா?”

“தெரியலாம். ஆனால் தெரியாதபடி செய்ய வழியுண்டு. அதைப் பின்னர் பார்ப்போம். இப்பொழுது ஆபத்து எனக்கு ஏதுமில்லையென்று புரிந்துவிட்டதல்லவா?”

“ஆம்.”

“சரி, அந்தப் படகில் ஏறிக்கொண்டு என்னைப் போகவிடு.”
படைத் தலைவன் கூறியபடி அடுத்த படகில் ஏறிக் கொண்டான் அலீமா. பிறகு தன் படகை விலக்கிக் கரைக்குச் செலுத்தச் சொன்ன படைத்தலைவன், படகு நகரு முன்பாக அலீமாவை நோக்கி, “அலீமா! நான் கரைக்குச் சென்று நாகர்களுடன் பேசிய பின்பு அடையாளத்துக்குப் பந்தங்களை அசைக்கச் செய்கிறேன். மற்றப் படகுகளுடன் நீ வந்து சேர்” என்று கூறிவிட்டு மாலுமிகளை நோக்கி, “ஊம், சீக்கிரம்! படகு கரைக்குச் செல்லட்டும்” என்றான்.

படைத் தலைவனையும், ஹிப்பலாஸையும் தாங்கிய படகு அலைகளால் உந்தப்பட்டுத் துடுப்புகளால் துழாவப் பட்டுத் துரிதமாகக் கரையை அடைந்தது. முழங்காலளவு ஜலத்துக்கு வந்தவுடனேயே தொப் தொப்பென்று கீழே குதித்த படகோட்டிகள் படகின் முகப்பைப் பற்றி இழுத்து மணலில் படகின் அடிப்பாகத்தை உராயவிட்டனர். அதற்குப் பிறகு ஹிப்பலாஸ் பின்தொடர கரையை நெருங்கிய இளஞ்செழியன். பத்தடி தள்ளி எதிரே பந்தங்களைப் பிடித்துக் கொண்டு கும்பலாக நின்றவர்களை நோக்கி நாலடி நடந்து நின்று அவர்களை ஏற இறங்கப் பார்த்தான். அவர்களும் அவனைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே மௌனமாக நின்றார்கள். அந்த மௌனத்தை முதன் முதலில் கலைத்த படைத்தலைவன் அதிகாரம் நிரம்பிய குரலில் கேட்டான். “பரதவ செங்கோடன் எங்கே?” என்று.

அந்தப் பெயரைக் கேட்டதும் அந்தக் கூடத்திலிருந்த வர்கள் சில வினாடிகள் பிரமித்து நின்றார்கள். படைத் தலைவனின் அதிகாரக் குரல் அந்தப் பிரமிப்பை ஓரளவு அதிகப்படுத்தவும் செய்ததால் பதிலேதும் அவர்களிடமிருந்து வரவில்லை. அதனால் சற்றே சினத்தைக் காட்டிய படைத் தலைவன், “பதில் சொல்ல இஷ்டமில்லாவிட்டால் அவர் குடிசையைக் காட்டுங்கள். அவருடன் பேசவேண்டும்” என்று அவர்கள் முகங்களை மீண்டும் ஆராய்ந்தான். அதில் எதுவும் தெரிந்த முகமாக இல்லாததால் சற்று யோசிக்கவும் செய்தான்.

ஆனால், அந்த யோசனையைக் கூட்டத்தில் தலை வனைப் போல் காணப்பட்ட ஒருவனின் பதில் அறுத்தது. “செங்கோடனுடன் நீங்கள் பேச முடியாது” என்றான் அவன்.

“ஏன்?” என்று வினவினான் படைத்தலைவன்.

பதில் படைத் தலைவனை அசரவைத்தது. “செங்கோடன் இறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன” என்றான் கூட்டத்தின் தலைவன்.

“அவர் மனைவி காத்தாயி இருக்கிறார்களா?” என்று மீண்டும் கேட்டான் படைத் தலைவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு.ḥ

இந்தச் சமயத்தில் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. காத்தாயியின் பெயரை இளஞ்செழியன் சொன்னதும் கூட்டத்திலிருந்த பரதவர் மட்டுமின்றி முரட்டுத் தனமாகவும் நாகரீக மற்றும் தோன்றிய நாகர்களும்கூட அவனை நெருங்கி வந்தார்கள். அந்தப் பெயர் பெரும் மந்திரங்களைப் போல் வேலை செய்தது. “பெரியம்மாவையா சொல் கிறீர்கள்?” என்று கேட்டான் நெருங்கிய பரதவரில் ஒருவன்.

“ஆமாம்.”

“அவர்கள் குடிசையில் இருக்கிறார்கள்.”

“எழுப்புங்கள்.”

“இந்த வேளையிலா?”

“ஆமாம்.”

“முடியாது. வயதானவர்கள். எங்களுக்கு இப்பொழு திருக்கும் ஆதரவு அவர்கள் ஒருவர்தான்.”

பரதவன் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான். இதற்குமேல் எதுவும் நடக்காது என்பதை நாகர்கள், பரதவர்கள் முகங்களிலிருந்து தெரிந்து கொண்ட ஹிப்பலாஸ் ஏமாந்தே போனான்.

“நான் அவர்களை உடனே பார்க்க வேண்டும். யாராவது ஒருவன் போய் அவர்களிடம் அவர்கள் வளர்ப்பு மகன் வந்திருப்பதாகத் தெரிவிக்கட்டும்” என்றான் இளஞ்செழியன் அதிகாரத்துடன்.

“யார்! மகனா! நீங்களா?” இப்படிப் பல குரல்கள் கூட்டத்திலிருந்து எழுந்தன.

அடுத்த வினாடி இரண்டு பரதவர்கள் மணல் மேட்டுக் குப்பத்தை நோக்கிச் சிட்டாகப் பறந்தார்கள். அரை நாழிகை ஆகுமுன்பே நரைத்த தலையுடனும் கோலூன்றினாலும் கம்பீரம் தளராத நடையுடனும் கடற்கரைக்கு வந்த காத்தாயி, இளஞ்செழியனை அப்படியே தன் மார்புற அணைத்துக் கொண்டாள். சில வினாடிகள் சற்று விலகி அவன் முகத்தைப் பார்த்துக் கண்ணீரைப் பொல பொலவென உதிர்த்தாள். மீண்டும் அவனை இறுக அணைத்துக் கொண்டு, “அவர் போய்விட்டாரப்பா?” என்று கதறினாள். இளஞ்செழியன் கண்களிலும் நீர் திரண்டது. மிகுந்த ஆதரவுடன் அவள் முகத்தைத் தடவிக் கொடுத்தான். பிறகு, “அம்மா! அந்த மரக் கலங்கள் என்னுடையது. அந்தப் படகுகளில் என் மாலுமிகள் இருக்கிறார்கள். எங்களுக்கு உன் நாகையில் அடைக்கலம் தேவை” என்று கெஞ்சினான்.

கிழவியின் கம்பீர விழிகள் சுற்றுமுற்றுமிருந்த நாகர் களையும், பரதவர்களையும் வட்டமிட்டன. அடுத்தபடி அவள் அதிகாரக் குரல் கடலோசையை விடக் கம்பீரமாக எழுந்தது. “இவர் இங்கிருக்குமட்டும் இவர்தான் உங்கள் தலைவர். நீங்கள் இவர் அடிமைகள், புரிகிறதா?” என்று கூறினாள் அந்தக் கிழவி.

சரியான தலைவியின் ஆணை எப்படிச் சிங்கங்களை நரிகளாக்க முடியும் என்பதை அடுத்த வினாடி உணர்ந்தான் ஹிப்பலாஸ். நாகர்களும் பரதவர்களும் இளஞ்செழியனைச் சூழ்ந்து கொண்டார்கள். கரையை அணுகும்படி படகுகளுக்குப் பந்தங்களால் சைகை செய்தார்கள். படகுகளும் விரைந்து கரையை அடைந்ததும் தரைக்கு வந்து பல நாட்டவர் கலந்து கிடந்ததால் விபரீதமாகத் தோன்றிய மாலுமிகளைக் கண்ட காத்தாயி அவர்களை வியப்புடன் பார்த்து, “யாரப்பா இவர்கள்?” என்று கேட்டாள்.

“என் மாலுமிகள்.”

“பல நாட்டவர்களைச் சேர்ந்தவர்களா?”

“ஆமாம்.”

“ஆனால் புகாரில் இதெல்லாம் இயற்கைதானே. அங்கு வராத நாட்டார், சேவகம் செய்யாத நாட்டார் யார்? ஆனால் நீ எப்பொழுது கடல் வீரனாக மாறினாய்? எனக்குத் தெரிந்த மட்டும் சோழர் படை..” என்று சொன்ன காத்தாயியின் பேச்சை ஒரே பார்வையில் அடக்கிய இளஞ்செழியன், “சமீப காலத்தில்தான் மரக்கலத் தலைவனானேன். ஆனதும் உன்னிடம் அடைக்கலம் புக ஓடி வந்தேன். இதில் தவறில்லையே?” என்று மழுப்பினான்.

எக்காரணத்தாலோ இளஞ்செழியன் உண்மையை மறைக்கிறானென்பதை நொடிப் பொழுதில் உணர்ந்து கொண்ட காத்தாயி, மேலே எதுவும் பேசாமல் தன்னுடன் வரும்படி இளஞ்செழியனையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு, சில பரதவரைப் படகுகளைக் காவல் புரியக் கட்டளையிட்டு மணல் மேட்டுக் குப்பத்தை நோக்கிச் சென்றாள். நாகையின் மணல்மேட்டுக் குப்பம் தூர இருந்து தெரிந்ததைவிட மிக விசாலமாகவும் பெரும் தோப்பினால் சூழப்பட்டுமிருப்பதைக் கவனித்த அலீமாவும் ஹிப்பலாஸும் ஒரு சிறு படை மறைந்துறைய அதைவிடச் சிறந்த இடம் இருக்க முடியாது என்பதைத் தீர்மானித்துக் கொண்டார்கள். தவிர, கிழவி காத்தாயியின் சொல்லைப் பரதவரும் நாகரும் சிரமேல் தாங்கி நடப்பதைக் கண்டும் வியந்தார்கள். காத்தாயி யும் சில விஷயங்களை நினைத்து வியக்கவே செய்தாள். இளஞ்செழியன் போருடை அணிந்த அலீமாவை அழைத்து வந்ததில் சந்தேகமும் கொண்டாளாகையால், தன் குடிசைக்குச் சென்றதும் அலீமா முன்பாகவே அதைப்பற்றிக் கேட்டாள்.

“படைத்தலைவரே!” என்று துவங்கினாள் காத்தாயி.

“அந்தப் பெயர் வேண்டாம் தாயே!” என்றான் இளஞ் செழியன்.

“இங்கு நீயும் இந்தப் பெண்ணையும் தவிர யாரு மில்லையே?” என்றாள் கிழவி.

“உண்மைதான் தாயே! ஆனால் நா தவறி, பழைய பெயரை நீ பத்துப்பேர் முன்பாச் சொல்லிவிடலாம். ஆகவே மகனே என்றே அழை” என்றான்.

“என் மீன்குட்டியை அப்படி அழைக்கத் தடை யில்லை…” என்ற காத்தாயியின் பேச்சை இடைமறித்த அலீமா, “மீன்குட்டியா! இவரா?” என்றாள்.

“ஆம் பெண்ணே, என் கணவர்தான் இவருக்கு அந்தப் பெயரை இட்டார். பரதவரைவிட வேகமாக நீந்த வல்லவ ராகையால் மீன்குட்டி என்று நாங்கள் அழைத்து வந்தோம். இவர் பதவி பெரிதானாலும் நாங்கள் புகாரிலிருந்தவரை பாதி நாழி இவர் எங்கள் குடிசையில் தானிருப்பார். எங்கள் சொந்த மகனாக இவரைப் பாவித்தோம். பலமுறை என் கணவருடன் கடலோடியிருக்கிறார்…”
இம்முறை இளஞ்செழியன் அவள் பேச்சில் குறுக்கிட்டான். “தாயே! என்னை நீங்கள் அவர் இவர் என்று அழைப்பது வெறுப்பாயிருக்கிறது. பழையபடி அழையுங்கள்.”

“சரியப்பா” என்று ஆனந்தக் கண்ணீர் உதிரச் சொன்ன காத்தாயி, “அப்பா! இவள் யார்?” என்று வினவினாள்.

“அலீமா! என் மரக்கலங்களின் உபதலைவி!” என்றான் படைத்தலைவன்.

“அவ்வளவுதானா?” கிழவியின் குரலில் ஏமாற்ற மிருந்தது.

“அவ்வளவேதான்” என்று சொல்லிப் புன்முறுவல் கூட்டிய படைத் தலைவன், “தாயே! பெண்களைப் பற்றி நினைக்கவும் நேரமில்லை எனக்கு. நம் தாய் பேராபத்தில் சிக்கியிருக்கிறாள்” என்றான்.

“நம் தாயா?”

“ஆம்.”

“யாரப்பா அது?”

“நம் தாய் நாடு. குழந்தைகளுக்குச் சோறு கொடுத்து வளர்க்கும் சோணாடு. அதில் போர் மூளப் போகிறது தாயே.”

“அப்படியா!”

“ஆம். இன்னும் ஒரே மாதத்தில் போர்.”

“அப்படியானால் நீ இருக்க வேண்டியது மன்னருக்கு அருகில் இல்லையா?” மிகுந்த உஷ்ணத்துடன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் காத்தாயி.

“இல்லை.”

“அட துரோகி!”

காத்தாயியின் சொற்கள் மிகுந்த வேகத்துடன் வந்தன. அவளை அப்படியே அணைத்துக் கொண்ட இளஞ்செழியன், “பார்த்தாயா அலீமா, இந்தத் தள்ளாத வயதில் என் தாய்க்கு இருக்கும் நாட்டுப் பற்றை? இத்தகையவர்களால்தான் என் நாடு பொன்னாடாக இருக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறியதன்றி, “தாயே! உன் மகனை என்ன, அத்தனை அற்ப மாக நினைத்துவிட்டாய்? அந்தப் போருக்கு ஆயத்தம் செய்யவே இங்கு வந்திருக்கிறேன். உன் திருவடிகள் நடந்த இந்த மணல்மேட்டுக் குப்பத்தில் சோணாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையை அமைக்கவே வந்திருக் கிறேன்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

காத்தாயியின் உணர்ச்சிகள் அவன் உணர்ச்சிகளைவிட அதிகம் பொங்கி நின்றன. “நாகைக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? காவிரிப் பூம்பட்டினத்திற்குக் கிடைக்காத ஒரு அதிர்ஷ்ட ம் இதற்கா!” என்று நா தழுதழுக்கக் கூறிய காத்தாயி ஆனந்தக் கண்ணீரை நிலத்தில் கொட்டினாள்.

அவை தரையில் நனைந்து ஊறி, மறைவதைக் கண்ட இளஞ்செழியன், “அம்மா! அஸ்திவாரத்தை நீயே போட்டு விட்டாய். இனி வெற்றிதான். தடையில்லை” என்றான்.

“அப்படியா அப்பா!” என்றாள் காத்தாயி.

“ஆம். இன்னும் சில தினங்களில் பார். இந்த இடத்தில் தமிழர் பெரும் படையொன்று குவியும். இங்கிருந்து விடுதலைப் போர் எதிர்பாராத திருப்பத்தை அடையும்” என்றான் படைத்தலைவன்.

Previous articleYavana Rani Part 2 Ch43 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch45 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here