Home Sandilyan Yavana Rani Part 2 Ch45 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch45 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

64
0
Yavana Rani Part 2 Ch45 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch45 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch45 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 45 இளஞ்செழியன் பாசறை

Yavana Rani Part 2 Ch45 | Yavana Rani | TamilNovel.in

சோணாட்டு விடுதலைக்குப் படைதிரட்ட நாகையைத் தேர்ந்தெடுத்தது பற்றிச் சொல்லவொண்ணாப் பெருமை கொண்ட காத்தாயி சுமார் இருபது வருடங்கள் பின்னோக்கி ஓடியவள் போல் மிகுந்த பலத்தையடைந்ததன்றி, அடுத்த நாலைந்து நாட்களில் தனக்குத் தெரிந்த யோசனை களையெல்லாம் விடாமற் சொல்லி, மணல் மேட்டுக் குப்பத்துக்கும் கடற்கரைக்குமாக இடைவிடாது நடந்து கொண்டிருந்ததைக் கண்ட அலீமா, முதலில் உள்ளூர நகைத்துக் கொண்டாலும் பிறகு மெள்ள மெள்ள உண்மை உதயமாகியதும், கிழவியிடமிருந்த போர் நுணுக்க அறிவைப் பெரிதும் வியக்கவே செய்தாள். காத்தாயியிடம் முதல் நாளிரவு அடைக்கலம் புகுந்த இளஞ்செழியன் மறுநாளில் பொழுது விடியு முன்பாகவே எழுந்து கடற்கரைக்குச் சென்றா னென்றாலும், அவனுக்கு முன்பாகக் காத்தாயி தலைநிமிர்ந்து மிகுந்த கம்பீரத்துடன் கடலலைகளைக் கவனித்துக் கொண் டிருந்தாள். தூரத்திலிருந்தே அவளைக் கண்ட இளஞ்செழியன் அவளிருக்குமிடத்தைத் துரிதமாக அணுகி அவள் முகத்தை உற்று நோக்கி அதில் கவலை படர்ந்திருப்பதைக் கண்டு, “அம்மா! உன் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது?” என்று கேட்டான்.

“கவலையப்பா கவலை!” என்று பதில் கூறிய காத்தாயி பெருமூச்செறிந்தாள். அதற்குமேல் சில விநாடிகள் இருவருமே பேசாமல் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு மௌன மாகவே நின்றார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுக்குப் பின்னால் வந்த அலீமா அவர்கள் மௌனத்தைக் கலைக்க, “படைத் தலைவரே!” என்று அழைக்கவே அதனால் சுய நிலைக்கு வந்த படைத் தலைவன் திரும்பி, அலீமாவைப் பார்த்தானேயொழியக் காத்தாயி மட்டும் கடற் பிராந்தியத்தை விட்டுக் கண்களை அகற்றவேயில்லை.

அப்படிச் சற்றும் திரும்பிக்கூடக் காத்தாயி பார்க்காததைக் கண்டு சற்றுக் கோபமும் ஆச்சரியமும் அடைந்த அலீமா, “அம்மா அப்படி ஏன் கடலைப் பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்?” என்று படைத் தலைவனை நோக்கிக் கேட்டாள்.

“ஏதோ கவலை” என்றான் இளஞ்செழியன்.

“என்ன கவலை?” என்று மீண்டும் கேள்வி கேட்டாள் அலீமா.

“அதைக் கேட்க முடியுமென்றால் நானே கேட்டிருப் பேனே, என் தாய் யோசிக்கும் போது யாரும் பேசக்கூடாது. அவள் குணம் உனக்குத் தெரியாது” என்று இளஞ்செழியன் விளக்கினான்.

இளஞ்செழியன் பதிலால் அதி வியப்பை எய்திய அலீமா, ‘என்ன! இந்தப் பரதவக் குலக் கிழவிக்கா இத்தனை மதிப்பைக் கொடுக்கிறார் படைத்தலைவர்! ஏன், இவர் கேட்டு அவள் பதில் சொன்னால் முத்து உதிர்ந்து விடுமோ?’ என்று எண்ணியதன்றி, தானே அவளைக் காரணம் கேட்டு விடுவதென்று தீர்மானித்து, “அம்மா! அம்மா! உங்களைத் தான்!” என்று குரலும் கொடுத்தாள்.

காத்தாயி அலீமாவைத் திரும்பிப் பார்க்காமலே, “என்ன! குழந்தாய்?” என்று வினவினாள்.

“ஏதோ கவலையுடன் நின்றிருக்கிறீர்களே?” என்று மீண்டும் கேட்டாள் அலீமா.

“கவலை எப்படி இல்லாமற் போகும்?” என்று கிழவி திரும்பிப் பார்க்காமலே பதில் சொன்னாள்.

“எதைப்பற்றிக் கவலை?”

“எதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டும்? என் புருஷர் இல்லை. எனக்கு வயதாகிவிட்டது. நான் போனால் எனது வளர்ப்பு மகன் எடுத்துப் போட்டு விடுவான்…”

“அப்படியானால் கவலைக்குக் காரணமில்லையே?”

“இல்லை. நேற்றுவரை இல்லை.”

“நேற்று-?”

“ஆம்! நீங்கள் வந்தபின் துளிர்த்தது. இரவில் மரமாக வளர்ந்துவிட்டது. சோணாட்டில் விடுதலைப் போர் துவங்குகிறது மகளே! அஸ்திவாரத்தை இந்த நாகையில் மணல்மேட்டுக் குப்பமும், வளைந்த கடற்கரையும் சில தோப்புகளும் உள்ள இந்தக் குக்கிராமத்தில் அமைத்து விட்டான் என் மகன். ஆகவே போரை வெற்றிகரமாக முடிப்பது என் கடமையில்லையா?” என்றாள் கிழவி உணர்ச்சியால் குரல் நடுங்க.
அலீமா வியப்புப் பொங்கி வழிந்த விழிகளை இளஞ் செழியன் மீது திருப்பினாள். படைகளைத் திறமையுடன் நடத்திச் செல்லக்கூடியவரும், பெரும் போர்களைக் கண்டிருப்பவரும், இலி-ஆஸுவையே ஏமாற்றியவருமான இளஞ்செழியன் இருக்கையில், ஏதுமறியாத ஒரு பரதவக் கிழவி போரில் வெற்றியை வாங்கிக் கொடுப்பது தன்னால்தான் முடியும்போல் பேசுவதை எண்ணி ஆச்சரியத்தின் எல்லையை எய்தினாள். அந்த ஆச்சரிய வெள்ளம் அவள் கண்களில் ஓடுவதைக் கண்ட இளஞ்செழியன், “அவளையே கேள்” என்று கிழவியைச் சுட்டிக் காட்டிக் கண்களால் அலீமாவுக்கு ஜாடை செய்தான்.

அலீமா கிழவியுடன் மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள், “கடமையிருக்கிறது உண்மைதான் அம்மா, ஆனால் இந்தத் தள்ளாத வயதில் நீங்கள் என்ன செய்ய முடியும்?” என்று வினவினாள்.

இதைக் கேட்டதும் காத்தாயி கடற் பிராந்தியத்திலிருந்த கண்களை மெள்ள அலீமா மீது திருப்பியதன்றி, உறுதி நிரம்பிய தன் இதழ்களில் புன்னகையொன்றையும் வெளிவிட்டாள். பிறகு, “உண்மைதான் அலீமா. எனக்கு வயது ஆகித்தான் விட்டது. ஆனால் நீ இளவயதினள். ஒரு யோசனை சொல்” என்று கூறிய காத்தாயி, தன் கைகளால் எதிரேயிருந்த மரக்கலங்களைச் சுட்டிக் காட்டி, “அதோ ஆறு மரக்கலங்கள் இருக்கின்றன. அவற்றை இந்த நாகையில் மறைத்து வைப்பதாகத்தானே உச்தேசம்?” என வினவினாள்.

“ஆமாம்” என்று சட்டென்று பதிலிறுத்தாள் அலீமா.
“எப்படி மறைப்பதாக உச்தேசம்?” என்று கிழவி கேட்டாள், அலீமாவின் முகத்தில் தன் கூரிய விழிகளை நாட்டி.

அலீமா கடற்பிராந்தியத்தை ஒரு முறை கண்களால் துழாவினாள். சில வினாடிகள் அலைகளையும் ஊடுருவி விடுவதுபோல் பார்த்தாள். பிறகு குரலில் சந்தேகம் தொனிக்கக் கூறினாள், “அதோ அங்கு அலைகள் செந்நிறத்தில் தோன்றுகின்றன” என்று.

“ஆமாம்” என்றாள் கிழவி.

“கடல் ஆழம் அதிகமாயிருந்தால் கடல் நீரின் நிறம் நல்ல கறுப்பு நீலத்திலிருக்கும்” என்று மேலும் விளக்கினாள் அலீமா.

“உண்மைதான்.”

“ஆழமில்லாத இடத்தில் மரக்கலங்களை எப்படிக் கொண்டு வருவது?”

“யோசனையை என்னைக் கேட்கிறாயே. உன்னை யல்லவா நான் கேட்டேன்?” என்று பதில் சொன்ன காத்தாயி கலகலவென்று நகைத்தாள்.

“என்ன நகைக்கிறீர்கள்?” என்று சீறினாள் அலீமா.

கிழவி நகைப்பை நிறுத்திக் கொண்டு தன் கையொன்றை அலீமாவின் தோள்மேல் போட்டு ஆதரவாக அணைத்துக் கொண்டு, “அலீமா! இந்தக் கடல் வேறு, நான் வேறு என்று எண்ணாதே. அதன் மீதே பாதி வாழ்க்கையை நான் கடத்தியிருக்கிறேன். எத்தனையோ இரவு, எத்தனையோ பகல், நானும் என் கணவரும் படகுகளிலேயே இந்த வங்கக் கடற் பிராந்தியத்தில் சஞ்சரித்திருக்கிறோம். அவர் இருந்த வரை எங்கள் ஆயுளில் முக்கால் பாகம் கடலில் கழிந்திருக்கிறது. ஆகவே வங்கக் கடலின் துர்க்குணங்கள், நற்குணங்கள், சீறல்கள், பள்ளங்கள், மேடுகள் அனைத்தையும் நானறிவேன். பரதவ குலத்தவருக்கும் இந்தக் கடலுக்கும் பெரும் உறவு உண்டு. ஆகவே இந்தக் கடலை நீ வெற்றி கொள்ள முடியாது. இதன் உடல் வாகுகளை நீ நிர்ணயிக்க முடியாது. நிர்ணயிக்க முடியாவிட்டால் அதோ அந்த உன் அறு மரக்கலங்களை இங்கு கொண்டு வர முடியாது” என்று பேசிக் கொண்டு போனவளை இடைமறித்த இளஞ்செழியன், “இன்னுமிரண்டு மரக்கலங்களுமிருக்கின்றன: அவையும் இங்கு வரும்” என்றான்.

“ரொம்ப நல்லது. அப்படியானால் எட்டு மரக்கலங் களுக்கு இடம் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியுமா அலீமா!” எனறு கேட்டாள் காத்தாயி.

கிழவி பேசப் பேச பிரமிப்பை அடைந்த அலீமா, ‘மணல் அடித்துக் கிடக்கும் இந்த நாகையின் கடலில் எப்படிக் கரையருகே மரக்கலங்களைக் கொண்டுவர முடியும்?’ என்று எண்ணியதன்றி, “ஊஹும். முடியாது. மரக்கலங்களை மறைக்க இங்கே இடமில்லை” என்றாள்.

“தவறு அலீமா! இந்த இடத்தில் நான்கு மரக்கலங்களை மறைக்க வழி கண்டுபிடித்துவிட்டேன். மீதி நான்கைத்தான் என்ன செய்வதென்று புரியவில்லை” என்றாள் காத்தாயி.
அலீமாவின் பிரமிப்பு உச்ச நிலையை அடைந்தது. “என்ன! நான்கு மரக்கலங்களைக் கரையருகே கொண்டு வர முடியுமா?” என்று வினவினாள் அலீமா குரலில் வியப்பு மிதமிஞ்சி ஒலிக்க.

“முடியும். இதோ பார்” என்ற காத்தாயி, கடல் வளைந்து கிடந்த இடத்தில் நடுவே ஓடிய நீலநிற அலைகளைக் காட்டினாள். “அர்த்த சந்திரனைப் போல் வளைந்து கிடக்கும் இந்தக் கரையில் சமுத்திரத்துக்குள்ளோடியிருக்கும் இரு முனைகளுக்கு நேராகக் கோடுகளை இழுத்தால் நடுவே மண்ணிற அலைகள் இல்லை. நீலநிற அலைகள் இருக்கின்றன. நாங்கள் வாணிபத்துக்கு மரக்கலங்களை ஓட்டியபோது இந்த நடுப்பாதையின் வழியாக மரக்கலங்களைக் கரைக்கருகே கொண்டு வந்து கிண்ணம் போல் வளைந்து கிடக்கும் இந்த இடத்தில் நிறுத்துவோம். அப்படி இப்பொழுதும் நிறுத்தலாம். எதற்கும் பரதவரைக் கொண்டு கோல்போட்டு ஆழம் பார்க்கச் சொல்கிறேன். எப்படியும் நான்கு மரக்கலங்களுக்கு இடமிருக்கும்” என்று சொன்ன காத்தாயி, அங்கிருந்து கையை ஆட்டிக் குப்பத்திலிருந்த பரதவரை அழைத்தாள். அந்த அழைப்பைக் கண்டதும் ஓடிவந்த பரதவர் இருவரை நோக்கி, எதிரே கடலில் கையைக் கொண்டு, “இங்கு எதுவரை ஆழமிருக்கிறது பாருங்கள்” என்றாள்.

பரதவர்கள் மீண்டும் குப்பத்துக்குச் சிட்டாய்ப் பறந்து, நீளமாக ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட மூங்கிற் கழிகளைக் கொண்டு வந்து கரையிலிருந்த படகுகளில் தாவி, கிழவி காட்டிய மார்க்கத்தில் கோல்களை நீரில் செலுத்தி ஆழம் காட்டிக் கொண்டு சென்றார்கள். கிழவியின் ஆராய்ச்சிக் கண்கள் மட்டுமின்றி, அலீமாவின் அழகிய விழி களும் அந்தக் கோல்கள் காட்டிய ஆழத்தை அளந்து நின்றன. பரதவர்கள் கோல் போட்ட இடங்களில் நான்கு ஆள் ஆழத் துக்கு மேலிருப்பதைக் கண்ட அலீமா, கடலின் உடற்கூற்றில் கிழவிக்கிருந்த ஆழ்ந்த அறிவைக் கண்டு, ‘படைத்தலைவர் காரணமில்லாமல் இங்கு வரவில்லை’ என்று தன் மனத் திற்குள் சொல்லிக் கொண்டாள்.

கிழவி மட்டும் அலீமாவை அதற்கு மேல் திரும்பிப் பார்க்காமல் படகுகளையே பார்த்துக் கொண்டு நின்று மரக் கலங்கள் வரவேண்டிய பாதையை மனத்துக்குள் வகுத்துக் கொண்டாள். இப்படி ஆழமான கடற்பாதையை நிர்ணயம் செய்து கொண்டதும் மற்றும் சில பரதவரை அழைத்த காத்தாயி இளஞ்செழியனை நோக்கித் திரும்பி, “அப்பா! இதோ படகுகள் சென்ற பாதைக்கு இப்புறம் பத்தடி அப்புறம் பத்தடி போகலாம். அதற்குமேல் போனால் மணல் திட்டுகள் இருக்கின்றன. இதே பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக உன் மரக்கலங்களை வரைவழைத்துக் கொள். நான்கு மரக்கலங்கள் இங்கு நிற்கட்டும். மீதி இரண்டை என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.

“அதற்காகக் கவலைப்படாதே தாயே! மீதி இரண்டையும் வேவு பார்க்க அனுப்பிவிடுகிறேன். கடலில் ஏற்கெனவே சஞ்சாரம் செய்யும் இரண்டு மரக்கலங்களை இந்த மரக் கலங்கள் கண்டு பிடித்துக் கொண்டு திரும்பட்டும். பிறகு இந்த நான்கும் வேவுத் தொழிலுக்குச் செல்லட்டும். இந்த நான்கும் இங்கு இருக்கட்டும்” என்று கூறிய இளஞ்செழியன் தனது மாலுமிகளைக் கூப்பிட்டு அவ்விதமே இசைவுகளைப் பிறப் பித்தான்.
அன்று மாலைக்குள் கப்பல்கள் நான்கும் தங்கள் மறை விடத்தை அடைந்தன. இருபுறமிருந்த மணல் திட்டுகளின் முனைகள் கடலுக்குள் நீண்ட தூரம் ஓடியதாலும், மரங்களும் இருபுறமும் அடர்த்தியாக இருந்ததாலும் உள்ளே புகுந்து கிடந்த கடலில் வந்த மரக்கலங்கள் மறைந்து கிடந்தன. இருப்பினும் அவற்றை இன்னும் மறைக்கத் தோப்புகளிலிருந்த மரக்கிளைகளை இலைகளுடன் வெட்டி அந்த மரக்கலங்கள் மீது போட்டு அவை இருக்குமிடம் தெரியாமல் செய்துவிட்ட இளஞ்செழியன் அடுத்தபடி தனது மாலுமிகளுக்கும், தான் திரட்ட இருக்கும் படைகளுக்கும் இருப்பிடங்களை மணல் மேட்டுக் குப்பத்திலும், இதர தோப்புகளிலும் அமைக்க ஏற்பாடுகளைச் செய்தான்.

சுமார் நாலைந்து நாட்கள் இந்த அலுவல்கள் துரிதமாக நடந்தன. கடற்கரையோரத் தோப்புகளில் தாழ்மையான குடிசைகள் எழுந்து மறைந்து கிடந்தன. காத்தாயி பரதவர் களையும், நாகர்களையும் இரவு பகல் பிசாசுகளைப் போல் வேலை செய்யத் தூண்டி இளஞ்செழியன் குறிப்பிட்ட அத்தனை அலுவல்களையும் செய்து முடித்தாள். அந்த நாலைந்து நாட்களில் கிழவியிடம் அலீமா பெருமதிப்பு கொண்டாள். அவளை முதலில் குறைத்து மதிப்பிட்டதற்காக மன்னிப்பும் ஒருமுறை கேட்டாள். “அட, அசடே! நீ என் குழந்தை. எதைச் சொன்னால் என்ன?” என்று பதில் சொன்ன காத்தாயியின் பெருந்தன்மை அலீமாவை, அடியோடு ஆட்கொண்டது. அலீமாவிடம் அன்பு கொண்ட கிழவி போர்த் திட்டத்தோடு திட்டமாக அலீமாவைச் சிங்காரிக்கும் திட்டத்தையும் மேற்கொண்டு தினசரி நாகலிங்கப் பூக்களை ஏராளமாகக் கட்டி அவள் தலையில் சூட்டினாள். அலீமாவும் மாலுமி உடைகளைக் களைந்து, தன் இயற்கை உடைகளை உடுத்து கடற்கரை மோகினியென நாகைத் தோப்புகளிலும் கடற்கரையிலும் மகிழ்ச்சியுடன் உலாவினாள். போர் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்ததால் காத்தாயியும் மகிழ்ச்சியால் பூரித்தாள்.

இளஞ்செழியன் மனத்தில் மட்டும் மகிழ்ச்சி எள்ளளவு மில்லை. தான் ராணியை மணக்க உறுதி கூறிவிட்டதை அந்த நாலைந்து நாட்களில் அடிக்கடி நினைத்துக் கொண்டான். ‘அப்படி மணந்து கொண்டால் என்னையே புருஷனாக வரித்திருக்கும் பூவழகியின் கதி என்னவாகும்?’ என்று ஏங்கி அடிக்கடி கடற்கரையை நோக்கிப் பெருமூச்சு விட்டான். எதற்கும் முன்னதாகப் பூவழகிக்கு உண்மையைக் கூறிவிடுவது தன் கடமை என்று தீர்மானித்தான். அந்தத் தீர்மானத்தை முன்னிட்டு, குணவாயிற் கோட்டத்துக்குச் செல்வதென்றும் முடிவு செய்தான். ஆனால் அவன் திட்டம் நிறைவேறுவது அத்தனை எளிதாயில்லை. படை திரட்டும் வேலை மும்முர மாக நடந்தது. அவன் ஓலைகொடுத்தனுப்பிய இடங்களிலிருந்து வீரர்கள் பலர் ரகசியமாக இரவுகளில் வந்தார்கள். கத்திகளையும், ஈட்டிகளையும் தீட்டும் கொல்லர் பட்டறைகள் நாகையின் கடற்கரைத் தோப்புகளில் சப்திக்க ஆரம்பித்தன.

சுமார் ஒரு வாரத்திற்குள் இப்படியாக ஒரு ரகசியப் பாசறையையே நாகையின் கடற்கரையில் அமைத்த இளஞ் செழியன், ஒருநாள் காத்தாயியும் அலீமாவும் இருந்த குடிசைக்குள் பூரண கவசமணிந்து புகுந்தான். காத்தாயியும் அலீமாவும் அவன் கோலத்தைப் பார்த்து ஒரு கணம் திகைத் தார்கள். பிறகு காத்தாயி கேட்டாள், “ஏதற்கப்பா இந்தப் போர்க்கோலம்?” என்று.
“தலைக்கு மட்டும் கவசம் தரித்தால் என்னைத் தேடிக் கொண்டிருக்கும் டைபீரியஸிடம் நானே என்னை ஒப்படைப்பதாகும். தலை முதல் கால் வரை கவசமணிந்தால் இப்பொழுது நாட்டில் நடமாடும் பல யவன வீரர்களில் நானும் ஒருவனாவேன்” என்று பதில் கூறிய இளஞ்செழியன், “அம்மா! நான் மன்னரைச் சந்திக்கச் செல்கிறேன், அதுவரை இங்கு ஏற்பாடுகளை நீ கவனித்துக்கொள். இந்தா, இந்த ஓலையை வாணகரையில் பிரும்மானந்தரிடம் சேர்த்து விடு” என்று சொல்லி மடியிலிருந்து ஒரு ஓலையையும் எடுத்துக் காத்தாயியிடம் கொடுத்தான்.

ஓலையைக் கையில் வாங்கிய காத்தாயி அதில் முத்திரை பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, “ஓலை மிகுந்த ரகசிய மானதோ?” என்று கேட்டாள்.

“ஆமாம். இந்திர விழாவன்று பிரும்மானந்தர் என்ன செய்யவேண்டும் என்பதை அது குறிக்கிறது” என்ற இளஞ் செழியன் அவ்விருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு குண வாயிற் கோட்டத்தை நோக்கிக் கிளம்பினான். அவன் கிளம்பிய இரண்டாவது நாளே அந்த முத்திரை ஓலை பிரும்மானந்தரிடம் சேர்க்கப்பட்டது. அந்த ஓலையைப் பிரித்துப் படித்த பிரும்மானந்தரின் கோபம் எல்லையை மீறியது. “அழகு அழகு! வெகு அழகு! இதெல்லாம் உன் வேலைதானா? அட பாவி!” என்று பைத்தியம் பிடித்தவர் போல் கூறினார்.

Previous articleYavana Rani Part 2 Ch44 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch46 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here