Home Sandilyan Yavana Rani Part 2 Ch46 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch46 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

57
0
Yavana Rani Part 2 Ch46 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch46 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch46 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 46 அடிகளின் துயரம்

Yavana Rani Part 2 Ch46 | Yavana Rani | TamilNovel.in

இளஞ்செழியன் ஓலையைப் படித்ததும் பிரும்மானந்த அடிகள் கோபத்தின் வசப்பட்டுக் கூவியதைப் பக்கத்திலிருந்து கண்ட குமரன் சென்னியும் பரதவ வல்லாளனும் மிகுந்த ஆச்சரியத்தை அடைந்ததன்றி, அப்படிப் பிரும்மானந்தரே நிலைகுலைந்து போகும்படியான அப்பேர்ப்பட்ட என்ன செய்தி ஓலையில் அடங்கியிருக்கக் கூடும் என்பதை அறிய ஆவலும் கொண்டார்களானாலும், பிரும்மானந்தரின் முகத்தில் தாண்டவமாடிய கோபச் சுடரைக் கண்டு எந்தக் கேள்வியையும் தொடுக்காமல் மௌனமாகவே அவரைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

கீழ்க் கடலில் முளைத்த கதிரவன் வானத்தில் ஏறி விட்டதால், வாணகரை உச்சிமாளிகையின் கீழ்க்கூடத்தில் சாளரத்தின் மூலம் புகுந்துவிட்ட ஒளியில் அந்த ஓலையைத் திரும்பத் திரும்பப் படித்த பிரும்மானந்தரின் உடல் இரண்டு மூன்று முறை சினத்தினால் ஏற்பட்ட உணர்ச்சிக் கொதிப்பால் ஆடியதன்றி, அவர் கன்னச் சதைகளும் ஓரளவு மேலெழுந்து ஏற்கெனவே சிறியதாயிருந்த யானைக் கண்களையும் மூடிவிட்டதால் ஜபம் செய்பவரைப் போல் காட்சியளித்தார். அவர் உள்ளத்தே சென்ற ஒரு மாத கால நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் வலம் வந்து அவர் புத்தியில் அக்கினிப் பொறிகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தன. ‘என்னை விடத் திறம் படைத்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானா படைத் தலைவன்?’ என்று தமது பல்லையும் சற்று முரட்டுத்தனமாகக் கடித்துக் கொண்டார் அந்த முற்றுந் துறந்த முனிவர். பல நாட்களாகத் தாம் விடை காணாது தவித்துக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு அந்த ஓலையிலிருந்த சில வரிகள் விடையளித்து விட்டதால், ‘எத்தனை இரவுகளை நான் தூக்கமின்றிக் கழித்தேன்! எத்தனை பேரைக் கஷ்டங்களுக்கு உள்ளாக்கினேன்! இத்தனையும் இவன் செய்த ஏமாற்றத்தாலல்லவா!’ என்று மீண்டும் மீண்டும் தன் மனத்துக்குள் கடிந்து கொண்டார்.

பிரும்மானந்தர் கண்களை மூடிக் கொண்டு இப்படி யோசனைகளில் இறங்கிவிட்டிருந்த போதிலும் அவர் தேகம் சற்று சிணுங்கியதையும், ஓலையை விரல்கள் நெருடியதையும் கண்ட குமரன் சென்னி, அவர் இதயம் குமுறிக் கொண் டிருப்பதை உணர்ந்தானேயொழிய அதன் காரணத்தை அறியாததால் கேட்டான், “அடிகளிடம் யாரோ அபசாரப் பட்டுவிட்டார்கள் போலிருக்கிறது?” என்று.

அந்தக் கேள்வியின் விளைவாகப் பிரும்மானந்தர் கன்னக் கதுப்புச் சதைகளைச் சற்றுக் கீழே இறக்கிக் கண்களைத் திறந்தாரானாலும், அவர் சீற்றம் மட்டும் குறையாததால், “அபசாரப்படவில்லை சென்னி! முட்டாள் பட்டம் கட்டிவிட்டார்கள்!” என்று உக்கிரம் பரிபூரணமாகத் தொனித்த குரலில் கூறினார்.

இதைக் கேட்ட குமரன் சென்னி பதில் கூறுமுன்பாகப் பரதவ வல்லாளன், “அப்படித் தங்களை அழைப்பவர்கள் இந்தத் தமிழகத்தில் யாரிருக்க முடியும்?” என்று வினவினான்.

“முட்டாள் என ஒருவனை அழைக்க வேண்டிய அவசியமில்லை வல்லாளா!” என்று வெறுப்புடன் சொன்னார் பிரும்மானந்தர்.
“அப்படியானால்…” என்று ஏதும் புரியாமல் விழித்த பரதவ வல்லாளனை ஒரு விநாடி நோக்கிய பிரும்மானந்தர், “ஒருவன் சாமர்த்தியமான செயல்களில் ஈடுபடும்போது, அதை நாமறியாமல் வேறு செயல்களில் இறங்கும்போது, முட்டாள் பட்டம் நமக்குத்தானே வந்து விடும்!” என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதில் குமரன் சென்னியே சொன்னான். “தங்களை விடச் சாமர்த்தியமாகச் செயல்படக் கூடியவர்கள் தமிழகத்தில் யாருமில்லை என்பது பிரசித்தமாயிற்றே” என்று.

“அந்தப் பிரசித்தி போய் ஒரு மாதமாகிறது சென்னி!” என்று அலுத்துக் கொண்டார்.

“எனக்கு விளங்கவில்லை அடிகளே” என்றான் குமரன் சென்னி.

பிரும்மானந்தர் உடனே பதிலேதும் சொல்லவில்லை. கையிலிருந்த ஓலையைச் சிறிது நேரம் நெருடிக் கொண்டே யிருந்தார். பிறகு அந்த ஓலையைக் குமரன் சென்னியிடம் நீட்டி, “இதைப் படித்துப் பார்” என்றார். ஓலையைப் பிரித்துப் படித்த குமரன் சென்னி முகத்தில் விவரிக்க முடியாத எத்தனை எத்தனையோ உணர்ச்சிகள் எழுந்து தாண்டவ மாடின. அந்த உணர்ச்சிகளின் வேகத்தின் விளைவாக வாய் மட்டும் பேசும் சக்தியை அறவே இழந்து விட்டதால், அதற்கு ஈடு செய்யவோ என்னவோ ஆஜானுபாகுவான அவன் உடல் நன்றாக நிமிர்ந்து, தலை கூரையைத் தொட்டுவிடும் ஸ்திதிக்கு வந்தது. அப்படி நிமிர்ந்து நின்ற குமரன் சென்னி, பலமுறை அந்த ஓலையைத் திரும்பத் திரும்பப் படித்தான். ஏதோ பெரும் காவியத்தைத் தடவிக் கொடுப்பது போல் அதைத் தடவியும் கொடுத்தான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த பரதவ வல்லாளன், குமரன் சென்னியிடம் ஏற்பட்ட அந்தத் திடீர் மாறுதலைக் கண்டதும் வியப்பில் மூழ்கித் தன் மார்பில் தொங்கிய சிறு வெண்சங்கைத் தடவி விட்டுக் கொண்டான். உணர்ச்சிகள் விளைவித்த அதிர்ச்சியால், சிறிது நேரம் மௌனமாக இருந்த குமரன் சென்னி, பரதவ வல்லாளனை நோக்கி, “வல்லாளா, படைத்தலைவர் வந்துவிட்டார்” என்றான் குரல் தழுதழுக்க.

எந்தச் சமயத்திலும் உணர்ச்சி கலங்காத குமரன் சென்னியே உணர்ச்சி கலங்கிக் குழம்பிவிட்டதைக் கண்ட தாலும், கருத்து முழுவதும் சென்னியின் கையிலிருந்த ஓலையில் புதைந்து கிடந்ததாலும், சென்னி சொன்னதன் முழு அர்த்தத்தையும் கிரகிக்கச் சக்தியில்லாத பரதவ வல்லாளன், “எந்தப் படைத் தலைவர்?” என்று வினவினான்.

சென்னியின் முகத்தில் குழப்பம் மறைந்து கோபம் மிகுந்தது. “எந்தப் படைத் தலைவரா! என்ன உளறுகிறாய் வல்லாளா! படைத் தலைவர் என்று நீயும் நானும் அழைக்கக் கூடியவர்கள் பல பேருண்டா தமிழகத்தில்?” என்று வினவினான்.

“இல்லை” என்றான் வல்லாளன். அப்பொழுதுதான் அவனுக்கு மெள்ள மெள்ள உண்மை புலனாகத் தொடங்கியது. அப்படிப் புத்தியில் உண்மை உதயமானதால், அதை நம்பமுடியாமல் திணறிய வல்லாளன், “என்ன! என்ன சொல் கிறாய் சென்னி? நமது படைத் தலைவர்..” என்று ஏதோ பேசப் புகுந்த வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணறினான்.

பிரும்மானந்தரின் கோபக் குரல் இடையே எழுந்தது. “ஆமாம். எந்தப் படைத் தலைவர் வருகைக்காக நாம் தவம் கிடந்தோமோ அவர்தான் வந்துவிட்டார்” என்றார் பிரும்மானந்தர்.

“நமது-” என்று குழறினான் வல்லாளன்.

“ஆமாம். நமது படைத்தலைவர்தான்.”

“அவரையா நீங்கள் சற்று முன் ‘அடப்பாவி, நீதானா’ என்றெல்லாம் அழைத்தீர்கள்?”

“அவரையேதான்.”

“படைத் தலைவரை எங்கள் முன்னால் அப்படி அழைக்க மிகுந்த துணிவு வேண்டும் உங்களுக்கு.” இந்தப் பதிலைக் கடுமையாகச் சென்னான் வல்லாளன். அவன் முகத்தைவிட்டுத் தன் கண்களைச் சென்னியின் முகத்துக்குத் திருப்பிய பிரும்மானந்தர், அந்த முகத்திலும் சினம் மண்டிக் கிடப்பதைக் கண்டு, ‘அப்பா! படைத் தலைவன் இவர்களை எப்படி வசீகரித்திருக்கிறான்!’ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டாலும், அதை வெளிக்குக் காட்டாமல், “சோழர் படை உபதலைவரை மரியாதையின்றி அழைத்தது பிசகுதான் வல்லாளா! ஆனால், என் நிலையில் வேறு யாராவது இருந்தால் என்னைவிட அதிகமாகச் சபித்திருப்பார்கள்” என்றார்.

“சபிக்கும்படி அவர் என்ன செய்தார்?” என்று கேட்டான் குமரன் சென்னி ஆத்திரத்துடன்.

நேரடியாகப் பதில் சொல்லாத பிரும்மானந்தர் சுற்றி வளைத்துப் பேசினார். “நான் துறவியென்பது உனக்குத் தெரியுமா சென்னி?” என்று கேட்டார்.

“அது அனைவருக்கும் தெரிந்தது” என்றான் சென்னி.

“என் வேலை கோட்டை கொத்தளங்களைக் காப்பதல்ல” என்று சுட்டிக் காட்டினார் பிரும்மானந்தர்.

“இல்லை,” சென்னியின் பதில் சுருக்கமாகப் பளிச் சென்று வந்தது.

“ஆண்டவனுக்கும் அவனடியாருக்கும் பணி புரிவது என் கடன்.”

“ஆம்.”

“அதைச் செய்கிறேனா?”

“இல்லை.”

“உண்மை. அதற்குப் பதில் இந்த வாண கரைக் கோட்டையைக் காத்துக் கொண்டிருக்கிறேன். சாந்தி சமாதியி லிருக்க வேண்டியவன் போர்த் தொழிலில் மும்முரமாக இறங்கி இந்தக் கோட்டைக்குள் ஆயுதங்களைத் தயார் செய்கிறேன்.”

“ஆம். இங்கு ஆயிரம் கொல்லர்கள் வேலை செய்கிறார்கள். தினத்துக்கு சுமார் நானூறு வாட்கள், ஐந்நூறு வேல்கள், இருநூறு கேடயங்கள் தயாராகின்றன.”
“உண்மைதான். இதெல்லாம் ஒரு துறவி செய்ய வேண்டிய வேலையா?”

“இல்லை.”

“இல்லைதான். இருப்பினும் அத்தகைய தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன். ஹரிசிவ நாமாக்களை ஜபம் செய்வதை விட்டுத் தினசரி எதிரே புகாரிலிருக்கும் டைபீரியஸைப் பற்றி ஜபம் செய்கிறேன். ஏன்?”.

“நாட்டுப் பற்றினால்.”

இதைக் கேட்ட பிரும்மானந்தர் சென்னியை நன்றாக ஏறெடுத்துப் பார்த்து, “எனக்கு நாட்டுப் பற்று உண்டென்பதில் சந்தேகமில்லையே உனக்கு!” என்றார்.

எதற்காக அந்தக் கேள்வியைப் பிரும்மானந்தர் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத குமரன் சென்னி, “அதை யார் மறுக்க முடியும் அடிகளே?” என்று கேட்டான்.

“உங்கள் படைத் தலைவர் மறுக்கிறார்” என்றார் பிரும்மானந்தர் வருத்தம் தோய்ந்த குரலில்.

அதுவரை சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு மௌனமாக நின்ற பரதவ வல்லாளன் குறுக்கிட்டு, “ஒருகாலுமிருக்காது, படைத் தலைவர் உங்கள் விஷயத்தில் அப்படி நினைக்க மாட்டார்” என்று திட்டவட்டமாக அறிவித்தான்.
“உங்கள் படைத் தலைவர் புகாருக்கு வந்து ஒரு மாத காலமாகிறது. உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் பிரும்மானந்தர் சென்னியையும், வல்லாளனையும் ஏக காலத்தில் நோக்கி.

“தெரியாது!” இருவரும் ஏக காலத்தில் கூறினார்கள், ஆச்சரியம் ஆழமாகத் தோய்ந்த குரலில்.

“அடிக்கடி மரக்கலங்கள் நான்கு, ஆறு, எட்டு என்று இராக்காலத்தில் கடலில் தோன்றினவே, அவை உங்கள் படைத் தலைவருக்குச் சொந்தம் என்பது தெரியுமா?” இரண்டாவது வெடியை வீசினார் பிரும்மானந்தர்.

“என்ன!” இருவர் பதிலும் பிரமிப்புடன் பெரிதாக ஒரே காலத்தில் எழுந்தன. அந்த பிரமிப்புக் கூச்சலைத் தொடர்ந்து சென்னி கேட்டான்: “இதெல்லாம் எப்படித் தெரிந்தது உங்களுக்கு?” என்று.

“இப்பொழுதுதான்” என்றார் பிரும்மானந்தர்.

“இப்பொழுதா?” என்றான் பரதவ வல்லாளன். அவனுக்கு ஏதுமே புரியவில்லை .

“ஆம். அந்த ஓலை சொல்கிறது” என்றார் பிரும்மா னந்தர் மீண்டும்.

“ஓலையில் அப்படி எதுவும் காணோமே. இந்திர விழா வன்று இரவில் இரண்டாம் ஜாம ஆரம்பத்தில் இந்தப் பகுதியி லிருந்து புகாரைத் தாக்கும்படி ஓலையில் கண்டிருக்கிறது” என்றான் குமரன் சென்னி.

“ஓலையில் கண்டிருப்பது அவ்வளவுதான் சென்னி. ஆனால் ஓலை மறைப்பது பல விஷயங்கள். உதாரணமாக இந்த ஓலையை எங்கிருந்து எழுதியிருக்கிறார் என்று தெரிய வில்லை…” என்று சுட்டிக் காட்டினார் பிரும்மானந்தனர்.

“வந்த தூதுவனை விசாரித்தால் சொல்கிறான்” என்றான் சென்னி.

“சொல்லமாட்டான், கேட்பதும் பிசகு” என்றார் பிரும்மானந்தர்.

“ஏன்?”

“தற்சமயம் இருப்பிடத்தை மர்மமாக வைத்திருக்க இஷ்டப்படுகிறார் படைத்தலைவர்.”

“காரணம்?”

“பல இருக்கலாம். உதாரணமாக ஓலை வேறு யார் கையிலாவது சிக்கினால் அபாயம் என்று அவர் கருதி யிருக்கலாம். அது சரிதான், ஆனால், சரியில்லாதது பல இருக் கின்றன.’

“என்ன?”
“புகார் வந்து ஒரு மாதமாகியும் படைத் தலைவர் நம்மை ஏன் வந்து காணவில்லை? நம்முடன் போர் ஏற்பாடுகளைப் பற்றி ஏன் கலக்கவில்லை?”

“அவர் வந்து ஒரு மாதமாகிறது என்று யார் உங்களுக்குச் சொன்னது?”

பிரும்மானந்தர் முகத்தில் கோபத்துடன் இகழ்ச்சி நகை பரவியது. “யாரும் சொல்லத் தேவையில்லை. நிகழ்ச்சிகள் கூறுகின்றன. அப்பொழுது அவற்றுக்குக் காரணம் புரியாமல் தவித்தேன். இப்பொழுது தெரிகிறது காரணம்” என்றார் பிரும்மானந்தர்.

இம்முறை வல்லாளன் கேட்டான்: “என்ன நிகழ்ச்சிகள் அடிகளே?”

“டைபீரியஸ் வந்து பல மாதங்களாக நம்மிடமிருந்து பிரியாத நமது படையைச் சேர்ந்த யவன வீரர்கள் திடீரெனப் பிரிந்து புகார் சென்றது ஒரு நிகழ்ச்சி…” என்று மேலும் சொல்லப் போன பிரும்மானந்தரைத் தடுத்த வல்லாளன், “அதற்கும் படைத் தலைவருக்கும் என்ன சம்பந்தம்?” என்று வினவினான்.

“படைத் தலைவர்தான் அவர்களை இங்கிருந்து அழைத்துச் சென்றவர். வேறு யார் சொல்லைக் கேட்டும் அவர்கள் போயிருக்க மாட்டார்கள். அப்பொழுது அந்த நிகழ்ச்சி பேராச்சரியமாயிருந்தது எனக்கு. நமது யவன வீரர் களாவது புகாருக்குச் சென்று டைபீரியஸிடம் சேருவதாவது என்று வியந்தேன். இப்பொழுது வியப்பாயில்லை வல்லாளா! இது படைத்தலைவர் ஏற்பாடு. காரணமாகவே தனது வீரர் களைப் புகாரின் யவனர் படையில் புகவிட்டிருக்கிறார். தவிர அவருடைய மரக்கலங்கள் வந்தபோதெல்லாம் புகாரின் கலங்கரை விளக்கம் அணைக்கப்பட்டது. அதையும் காரண மாகவே அவர் செய்யச் சொல்லியிருக்க வேண்டும். அவர் டைபீரியஸுக்குத் தெரியாமல் எப்படியோ புகாரில் திரிந் திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் எப்படித் திரிந்தார்? யவன நாட்டிலிருந்து வந்த மரக்கலங்களின் தலைவனை டைபீரியஸ் எப்படிச் சந்திக்காமலிருந்தான்? சந்தித்திருந்தால் படைத் தலைவர் எப்படித் தப்பினார் என்பது புரியவில்லை சென்னி! மற்றுமொன்று. நான் வேவு பார்க்க அனுப்பிய அல்லி எப்படி உயிருடன் திரும்பி வந்தாள் என்பது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. அவள் தப்பி வந்ததற்குச் சொல்லிய காரணங்களும் திருப்தியாயில்லை. இருப்பினும் அதை யெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. இப்பொழுது யோசிக்கும் போது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது எல்லாம். புகாரில் ஏற்பாடுகளை முடித்துக் கொண்டு விட்டார் படைத் தலைவர். நம்மை நம்பாமலும், நம்மைக் கலக்காமலும் ஏற்பாடுகளை முடித்துக் கொண்டு இறுதிக் கட்டளையை மட்டும் இந்த ஓலையில் பொறித்தனுப்பியிருக்கிறார். ஆனால் இது போதாது. இந்திர விழாவன்று நாம் ஏன் புகாரைத் தாக்க வேண்டும்? தாக்கினால், நம்மைச் சுழற் பந்தங்களை வீசி அந்தத் தூண் பொறிகள் அழித்து விடுமே. அதிலிருந்து நமது வீரர்களுக்கு எப்படிப் பாதுகாப்பு? இதையெல்லாம் நான் அறிய வேண்டும். தவிர இன்னும் நாலைந்து வாரங்களில் தமிழகத்தில் துவங்கப்படும் போர் நிலையென்னவென்பதையும் அறிய ஆசைப்படுகிறேன். ஆகவே, நான் குணவாயிற் கோட்டம் போக வேண்டும். அதற்கு உடனே புரவி தயாராகட்டும்?” என்றார் பிரும்மா னந்தர் உணர்ச்சியால் பெருமூச்சு வாங்க.

“நானும் வரட்டுமா?” என்றான் சென்னி.

“வேண்டாம் சென்னி. நீயும் வல்லாளனும் புகாரைத் தாக்குவதற்காக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். கொல்லர்களை அதிக வேல்களையும் கத்திகளையும் வடிக்கச் சொல்லுங்கள். மன்னர் படை ஆயுதமின்மையால் அவதிப் படக்கூடாது” என்று உத்தரவிட்ட அடிகள், விடு விடுவென்று உள்ளே சென்று அரை நாழிகைக்குள் நீராட்டத்தை முடித்துக் கொண்டு, இரண்டு குவளை பாலையும், ஐந்தாறு பழங்களையும் உண்டு அற்பாகாரம் செய்து குணவாயிற் கோட்டத்தை நோக்கிக் கிளம்பினார்.

மிகுந்த எச்சரிக்கையுடன் துரிதமாகப் பயணம் செய்து அன்றிரவே குணவாயிற் கோட்டத்தை அடைந்த அடிகள் கட்டுக் காவல்களைத் தாண்டி, கரிகாலன் பாசறையை எய்தினார். பாசறை முகப்பில் பலமான காவல் இருந்தது. காடு முழுவதும் ஆயுதங்களின் ஒலி கேட்டது. சின்னஞ்சிறு வண்டிகள் போகும் சத்தமும் கேடயங்கள் எங்கிருந்தோ குவிக்கப்பட்ட ஒலியும் கலந்து கோரச் சூழ்நிலையைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் கிரகித்துக்கொண்டு பாசறைக்குள் நுழைந்த பிரும்மானந்தர் அங்கு படைத் தலைவர்கள் பலருக்கு மத்தியில் கரிகாலனும் அல்லியும் அமர்ந்திருப்பதையும், போர்த் திட்டங்களைப் பற்றி உஷ்ணமான விவாதம் நடந்து கொண்டிருப்பதையும் கண்டார். அவர் ஆராய்ச்சிக் கண்கள் அங்கிருந்த அனைவரை யும் ஒருமுறை வலம் வந்தன. அந்தக் கூட்டத்தில் அவர் எதிர் பார்த்த இளஞ்செழியனை மட்டும் காணோம்.

Previous articleYavana Rani Part 2 Ch45 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch47 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here