Home Sandilyan Yavana Rani Part 2 Ch47 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch47 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

65
0
Yavana Rani Part 2 Ch47 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch47 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch47 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 47 மந்திராலோசனை

Yavana Rani Part 2 Ch47 | Yavana Rani | TamilNovel.in

போர் ஆயத்தங்கள் மிகப் பலமாக நடந்து கொண் டிருந்ததால் எங்கும் ஆயுதங்களின் ஒலியும், சின்னஞ் சிறு ஆயுத வண்டிகளின் சக்கரங்கள் புரளும் சப்தமும், குதிரைகளின் குளம்பு ஓசையும் நிரம்பிக் கிடந்த குணவாயிற் கோட்டத்தின் அந்தக் காட்டின் நடு மத்தியிலிருந்த கரிகாலன் பாசறையில் படைத் தலைவர் பலரிருந்தும் போரின் வெற்றிக்கு மிக அவசியமான சோழர் படை உபதலைவன் இளஞ்செழியன் மட்டும் இல்லாததைக் கண்ட பிரும்மானந்தர் பெரும் ஏமாற்றத்திற்குள்ளானார். தான் கொண்டிருந்த பல சந்தேகங்களை நிவர்த்திக்கக் கூடியவன் இளஞ்செழியன் ஒருவனேயாகையால் அவனில்லாதபோது தான் அந்தப் போர்த் திட்டச் சபையில் கலந்து கொண்டாலும் திட்டமாகச் சொல்லக் கூடியது எதுவுமிருக்காது என்பதை உணர்ந்த பிரும்மானந்தர், மன்னர் மந்திராலோசனையில் தனக்கு என்ன வேலையிருக்க முடியும் என்று கூட எண்ணினார். கரிகாலன் தொடுக்கும் போர் வெற்றி பெற வேண்டுமானால், புகாரிலிருந்தோ, கடற்கரையோரமாக உள்ள வேறெந்தப் பிராந்தியத்திலிருந்தோ உதவிகிடைப்பது மிகவும் அவசியமென்பதையும், புகாரில் யவனர் கை வலுத்திருக்கும் போது எந்த இடத்தில் போர் மூண்டாலும் டைபீரியஸின் யவனர்கள் சோழர் படையைப் பின்புறத்தில் தாக்குவது மிக எளிதென் பதையும் அறிந்திருந்த பிரும்மானந்தர், அப்படி யவனர்கள் செயல்படாது தவிர்க்கக் கூடிய ஒரே ஒருவன் இளஞ்செழியன் என்பதைச் சந்தேகமற உணர்ந்திருந்தார். ஆகவே, அவனில் லாத மந்திராலோசனையில் தாம் நுழைய வேண்டாம் என்று எண்ணி திரும்ப முயன்ற சமயத்தில் அவரைக் கவனித்து விட்ட அல்லி, “அடிகளே! வரவேண்டும் வரவேண்டும். நல்ல சமயத்தில் வந்தீர்கள்” என்று அழைத்தாள். அதுவரை எதிரே மஞ்சத்தில் விரிந்து கிடந்த பட்டுச் சீலையை ஆராய்ந்து கொண்டிருந்த கரிகாலனும், மற்றப் படைத்தலைவர்களும் பிரும்மானந்தர் பெயரை அல்லி சொல்லியதும் சட்டென்று தலை தூக்கி அவரைப் பார்த்ததன்றி எழுந்து வணக்கமும் செலுத்தினார்கள்.

சோழர் அரியணையில் சீக்கிரமே அமரப் போகிறவனும், படைத்தலைவர்களால் சூழப்பட்டவனுமான கரிகால்வளவன் எழுந்து நின்று தமக்கு அஞ்சலி செய்ததைக் கண்ட பிரும்மானந்தரின் உள்ளம் பெரிதும் நெகிழ்ந்து கண்களில் ஆனந்தக் கண்ணீரும் திரண்டு நின்றது. அவர் உள்ளம் மேலும் நெகிழும்படியான வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கிய கரிகாலன், “அடிகளே! அந்தரங்கமானவர்கள் அவசியமான சமயங்களில் அழையாமலே வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு அத்தாட்சி இன்றுதான் கிடைத்தது” என்றான்.

இதைக் கேட்ட பிரும்மானந்தர் ஆனந்தப் பெருமூச் செறிந்தார். தான் கண் கலங்கியிருப்பதைக் காரிகாலன் பார்க்காதிருப்பதற்காக, இன்பப் புன்முறுவல் ஒன்றையும் இதழ்களில் படரவிட்டார். இருப்பினும் சிறிது சந்தேகத்துடன், “மன்னர் மந்திராலோசனையில் இருப்பதாகத் தெரிகிறது” என்று இழுத்தார்.

‘ஆம்’ என்பதைக் குறிக்கத் தலையைச் சற்றே தாழ்த்திய கரிகாலன், “அடிகள் அறியாத மந்திரமோ ஆலோசனையோ ஏதும் இங்கில்லை” என்று பணிவுடன் கூறியதன்றி, “இப்படி வந்து அமரவேண்டும்” என்றும் சொல்லித் தனக்குப் பக்கத்தி லிருந்த ஆசனமொன்றையும் காட்டினான்.

பிரும்மானந்தர் அதற்கு மேல் மறுக்க முடியாமல், பūடைத்தலைவர்களைத் தாண்டி மன்னனுக்குப் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்ததும், ஒரு முறை அங்கிருந்த படைத் தலைவர்களைத் தமது கண்களால் துழாவினார். அந்த மந்திராலோசனை சபையில் வெற்றிக்களை தாண்டவமாடிக் கொண்டிருந்தது. குதிரைப் படைகளையும், காலாட்படை களையும், யானைப் படைகளையும், ஆயுதம் விசிறும் யந்திரப் படைகளையும், நடத்திச் செல்லும் படைத்தலைவர் நால்வர் மன்னனுக்கு எதிரே அர்த்தசந்திர வட்டமாக அமர்ந்தனர். கரிகாலன் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த அல்லியைத் தாண்டிச் சற்றுத் தூரத்தில் அவள் தந்தை நாங்கூர்வேள் அமர்ந்திருந்தார். இந்தக் கூட்டத்தில் அடியோடு ஒட்டாமல் தூரத்தில் இரும்பிடர்த்தலையார் இரும்பு வளையல்கள் போன்ற தமது சுருட்டை மயிர்களைத் தடவிய வண்ணம் ஆலோசனையிலிருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவர் முகத் திலும் போர் ஆவேசமிருந்ததோடு ஓரளவு அவநம்பிக்கையு மிருந்ததையும் பிரும்மானந்தர் கவனிக்கத் தவறாததால், அந்த அவநம்பிக்கைக்குக் காரணம் யாதென்று தெரியாது, “இனி ஆலோசனையைத் தொடரலாம்” என்று கூறி மன்னனுக்கு அப்புறத்திலிருந்த அல்லிமீது தமது கண்களை ஓட்டினார்.

பிரும்மானந்தரின் சிறு கண்களைச் சந்தித்த அல்லியின் பெரு விழிகள் சற்றே அப்புறம் திரும்பின. அவருடைய பார்வையிலிருந்த குற்றச்சாட்டை அல்லி நன்றாக அறிந்தாள். ‘இளஞ்செழியன் புகாருக்கு வந்ததை என்னிடமா மறைத் தாய்?’ என்ற கேள்வி திட்டமாக அவர் பார்வையிலிருப்பதை உணர்ந்த அல்லி பெரும் சங்கடத்துக்குள்ளானாளாகையால், அந்தச் சங்கடத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கரிகாலனை நோக்கி, “இந்தப் பட்டுச் சீலையைப் பற்றி அடிகளையும் விளக்கம் கேட்பது நல்லதல்லவா?” என்றாள்.

“ஆம். அல்லி” என்று ஒப்புக் கொண்ட கரிகாலன் எதிரே மஞ்சத்தில் கிடந்த பட்டுச் சீலையைத் தன் கையிலிருந்த குறுவாள் நுனியால் சுட்டிக்காட்டி, “அடிகள் இதைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான்.

பாதி கிழிக்கப்பட்ட அந்தப் பட்டுச் சீலையை நீண்ட நேரம் தமது சின்னஞ் சிறு கண்களால் உற்று நோக்கிய பிரும்மானந்தர், அதன் ஒரு பகுதியிலிருந்த பெரும் சிவப்புப் புள்ளியைப் பார்த்ததும் மெள்ளப் புன்முறுவல் செய்து, “மன்னவா! இன்னொரு சிவப்புப் புள்ளி இருக்க வேண்டுமே இதில்? எங்கே?” என்று வினவினார்.

இதற்குக் கரிகாலன் பதில் சொல்லவில்லை. அல்லி இடைமறித்துக் கூறினாள்: “இது இன்னொரு பாதிச் சீலையில் இருக்கிறது அடிகளே” என்று.

“அப்படியா?” என்று அவளைப் பார்த்துக் கேட்ட பிரும்மானந்தர் மீண்டும் சீலையைக் கவனித்து, “மன்னவா! உங்களுக்குத் திட்டம் புரிகிறதல்லவா?” என்று வினவினார்.

“புரிகிறது. அதைப் படைத் தலைவர்களுக்கு விளக்கினேன். ஆனால் திட்டத்தில் குறைபாடுகள் ஏராளமாக இருக்கின்றன. இத்தகைய ஒரு திட்டத்தை நமது படைத் தலைவரா தயாரித்திருப்பார் என்று இவர்கள் ஆச்சரியப்படு கிறார்கள்” என்றான் கரிகாலன்.

“இதில் குறைபாடுகள் அதிகமில்லை மன்னவா!” என்றார் பிரும்மானந்தர் திட்டமாக.

“என்ன, குறைபாடுகள் அதிகமில்லையா?” இதைப் பெருங் குரலில் கேட்ட இரும்பிடர்த்தலையார் தனது ராட்சஸ சரீரத்துடன் மூலையிலிருந்து எழுந்து வந்து மஞ்சத்தருகில் நின்று கொண்டதன்றி, தமக்கு ஆசனம் கொடுக்க எழுந்த ஒரு படைத் தலைவனின் தோளைப் பிடித்து அழுத்தி உட்காரச் செய்து, “என்ன குறைபாடுகள் இல்லை இதில்?” என்று இடியென இரைந்தார்.

“என்ன இருக்கிறது என்று நான் அறியலாமா?” என்று சற்று விஷமத்துடன் வினவினார் அடிகள்.

“இந்தச் சிவப்புப் புள்ளி இருக்குமிடம் தெரியுமா அடி களுக்கு?” என்று சீற்றத்துடன் எழுந்தது மீண்டுமொரு கேள்வி இரும்பிடர்த்தலையாரிடமிருந்து.

“தமிழகத்தில் அடியவனுக்குத் தெரியாத இடமோ, மனிதரோ இல்லையென்பது அடியவன் துணிபு” என்றார் பிரும்மானந்தர் மேலுக்குப் பணிவாகவும், உள்ளே நகைத்துக் கொண்டும்.

“இந்த இடம் வெறும் பொட்டல்” என்று மேலும் சொன்னார் இரும்பிடர்த்தலையார்.
“ஆம்” என்றார் பிரும்மானந்தர்.

“இதனருகே வெண்ணியென்ற சிறு நகரம் இருக்கிறது.”

“ஆமாம். அதனால்தான் இந்தச் சமவெளியை மக்கள் வெண்ணிப் பரந்தலை என்றழைக்கிறார்கள்.”

“இங்கே நாம் எதிரிகளுடன் மோத வேண்டும் என்பது இளஞ்செழியன் திட்டம்.”

“ஆமாம். சிவப்புப் புள்ளியிலிருந்தே அது தெரிகிறது. புள்ளி பெரிதாயிருப்பதிலிருந்து முக்கியமான பெரும் போர் இங்குதான் நிகழ வேண்டுமென்று படைத் தலைவர் நினைக் கிறார்.”

இந்தச் சமயத்தில் இரும்பிடர்த்தலையார் பேச முற்படு முன்பு கரிகாலன் இடைமறித்து, “வெண்ணிப் பரந்தலையில் நாம் எதிரிகளுடன் மோதினால் வெற்றி சந்தேகம் அடிகளே!” என்றான்.

“ஏன் மன்னவா?” என்ற பிரும்மானந்தர் தமது கண்களை மன்னனை நோக்கித் திருப்பினார்.

“எதிரிகள் படை பலம் மிக அதிகம். நமது படை பலம் குறைவு” என்றான் கரிகாலன்.

“அதனால்?”

“எதிரியின் கண்களில் படும்படியாகப் பொட்டல் வெளியில் நமது படைகளை நிறுத்துவது விவேகமல்ல. இருங்கோவேளுடன் பதினைந்து வேளிர்களின் படைகள் இருக்கின்றன.” என்று ஏதோ சொல்லப் போன கரிகாலனை இடைமறித்த நாங்கூர்வேள், “தவறு மன்னவா! இரு வேளிர்கள் விலகி நிற்கின்றனர். நான் தங்கள் பக்கமிருக்கிறேன். புகாரின் சிறையில் வாடும் மாரப்பவேளும் தங்கள் பக்கமிருக்கிறார்?” என்று சுட்டிக் காட்டினார்.

“உண்மை. இருப்பினும் உங்கள் சிற்றரசர்களும், படைகளும் இருங்கோவேளின் வசமிருக்கின்றன. ஆகவே பதினைந்து சிற்றரசுகளையும் சேர்த்துத்தான் கணக்கிட வேண்டும்” என்று நாங்கூர்வேளை நோக்கிக் கூறிய கரிகாலன் மீண்டும் அடிகளை நோக்கித் திரும்பி, “அடிகளே! பதினைந்து வேளிர்களின் படைகள், சோழர் படையின் ஒரு பகுதி, சேரபாண்டியன் பெரும் படைகள் இவையனைத்தும் திரண்டு வெண்ணிப் பரந்தலையில் சமுத்திரம் போல் நிற்கும். அந்தச் சமுத்திரத்திலிருந்து புரண்டுவரும் படை அலைகளைத் தேக்க நம்மிடமுள்ள ஐயாயிரம் யானைப்படையும், பத்தாயிரம் குதிரைப் படையும், இருபதினாயிரம் காலாட் படையும் போதுமா?” என்று வினவினான்.

“இவை மட்டுமிருந்தால் போதாது. நாம் படையெடுத்து விட்டோம் என்பதை அறிந்ததும் மக்கள் எழுந்து மன்னர் பக்கம் சேரும் கூட்டத்தையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டாமா?” என்று பதிலுக்குக் கேட்டார் பிரும்மானந்தர்.

“போர்ப் பயிற்சியில்லாத மக்கள் கூட்டத்தை எதிரிப் படைகளுக்குப் பலிகொடுக்க நான் விரும்பவில்லை” என்றான் மன்னன்.

“உண்மைதான். எதிரிகளின் படைகளில் பாதிப்படை வைத்துக் கொண்டு அவர்களைப் பொட்டல் வெளியில் எதிர்ப்பது விவேகமல்லதான். ஆனால் படைத் தலைவர் இப்படி ஒரு பைத்தியக்காரத் திட்டத்தை வகுக்க மாட்டாரே. ஏன் வகுத்தார்? எதற்காக வெண்ணிப் பரந்தலையில் இந்தத் தமிழகத்தின் குருக்ஷேத்திரத்தை அமைக்கக் கருதுகிறார்?” என்று வெளிப்படையாகவே சொன்னார் அடிகள்.

“குருக்ஷேத்திரமா அடிகளே!” என்றாள் அல்லி வியப்புடன்.

“ஆம், அல்லி! மகாபாரதம் நடந்த இடம். அந்தப் போரைப் போலத்தான் இருக்கிறது இதுவும். இதுவும் பொட்டல் வெளி; அதுவும் பொட்டல் வெளி. அங்கும் அதர்மத்தின் சின்னமான கௌரவர்களின் படைபலம் அறத்தின் உருவமான தருமனுடைய படைகளைவிடப் பல அக்ரோணிகள் அதிகம். இங்கு மகாபாரதம் நடத்த விரும்புகின்றாரா படைத் தலைவர்? அப்படியானால் அங்கு போல் இங்கும் சேதம் அதிகமாகும். மிஞ்சுபவர் கொஞ்சமாயிருக்கும். அங்கு பாண்டவர்களைக் காக்கக் கண்ணன் இருந்தான். இங்கு யாரிருக்கிறார்கள்?” என்று அலுத்துக் கொண்ட பிரும்மானந்தர், “இருக்காது, இருக்காது. படைத் தலைவர் காரணமில்லாமல் போருக்கு இத்தகைய திட்டத்தை வகுத்திருக்கமாட்டார். இந்தச் சீலை பாதிதானே இருக்கிறது. மீதிப் பாதியில் விளக்கம் இருக்கும். அது எங்கே?” என்றார் கரிகாலனை நோக்கி.
இதற்கு அல்லியே பதில் சொன்னாள், “மீதிப் பாதியைப் படைத் தலைவரே வைத்துக் கொண்டிருக்கிறார்” என்று.

“நன்று நன்று! நினைத்தேன், நினைத்தேன்” என்று உற்சாகப்பட்டார் பிரும்மானந்தர்.

சமய சந்தர்ப்பம் தெரியாமல், எல்லோரும் கவலையுடனிருந்த நிலையில் அவர் அப்படி உற்சாகத்தைக் காட்டியது அனைவருக்கும் வேப்பங்காயாயிருந்தது. எப்பொழுதும் மலர்ந்த முகத்துடனிருக்கும் கரிகாலனின் அழகிய முகம் கூட சற்றுச் சுளித்தது. ஆனால் இரும்பிடர்த்தலையார் அப்படி எந்த அரைகுறையான ஆத்திரத்தையும் காட்டாமல் முழுப் பதட்டத்துடன் பேசினார்: ‘எதற்காக இத்தனை சந்தோஷப்படுகிறீர்?” எனறு எரிந்து விழுந்தார்.

“காரணமில்லாமல் மகிழ்ச்சி கொள்வேனா?” என்று கேட்டார் பிரும்மானந்தர் குதூகலத்துடன்.

அவர் குதூகலம் இரும்பிடர்த்தலையாரின் கோபத்தை உச்ச நிலைக்குக் கொண்டு போயிற்று. “அந்தக் காரணத்தை நானறிய விரும்புகிறேன்” என்று கூவினார் அவர்.

“பாதிப் பட்டுச் சீலையைக் காரணமாகவே படைத் தலைவர் அனுப்பியிருக்கிறார்” என்றார் பிரும்மானந்தர்.

“ஏன்?”

“முழுச் சீலையை அனுப்பி எதிரிகள் கையில் சிக்கினால் திட்டத்தின் விவரம் அவர்களுக்குத் தெரிந்து விடும். அதை மறைக்கத்தான் சீலை கிழிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அல்லியிடம். அவர் முழுத் திட்டத்தை விளக்கியிருக்க வேண்டுமே.”

“அல்லி விளக்கம் தந்தாள்; அந்த விளக்கம் போதாது” என்றார் இரும்பிடர்த்தலையார்.

“அப்படியானால் காத்திருப்போம்” என்றார் பிரும்மானந்தர்.

“எதுவரை?”

“படைத்தலைவர் வரும்வரை!”

“வருவாரென்பது என்ன நிச்சயம்?”

“பாதிப் பட்டுச் சீலையை அனுப்பியிருக்கிறார். ஆகவே வரத் தவறமாட்டார்.”

“போரில் தாமதம் தாக்குபவர்க்குப் பலவீனம் என்பதை அறிவீரல்லவா?” என்று மீண்டும் இரைந்தார் இரும்பிடர்த் தலையார்.

“அறிவேன்” என்று சாந்தமாகச் சொன்னார் பிரும்மானந்தர்.

“நானும் அறிவேன்” என்ற சொற்கள் பாசறை வாயிலி லிருந்து கிளம்பின. அனைவர் கண்களும் வாயிலை நோக்கித் திரும்பின. இத்தனை விவாதத்துக்கும் காரணமான இளஞ் செழியன் பூரண போர்க் கவசமணிந்தபடி வெகு கம்பீரமாக அந்த மந்திராலோசனை சபைக்குள் நுழைந்தான்.

Previous articleYavana Rani Part 2 Ch46 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch48 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here