Home Sandilyan Yavana Rani Part 2 Ch5 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch5 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

104
0
Yavana Rani Part 2 Ch5 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch5 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch5 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 5 ஆபத்தும் சம்பத்தும்

Yavana Rani Part 2 Ch5 | Yavana Rani | TamilNovel.in

கொள்ளையர் மரக்கலத்தின் பெரும் பந்தங்களும் விளக்குகளும் அணைக்கப்பட்ட பின்பு, மரக்கலத் தலைவன் அறையிலிருந்த ஒரு விளக்கின் மீதும் துணியைப் போட்டு, மறைக்கச் செய்த இளஞ்செழியன், தலைவனைத் தளத்துக்கு அழைத்துச் சென்று தூரத்தே தெரிந்த துறைமுகத்தின் கலங்கரை விளக்கத்தைச் சுட்டிக் காட்டி, “அது இன்னும் எத்தனை தூரம் இருக்கிறது?” என்று வினவினான். கொள்ளையர் தலைவன் தன் பயங்கர விழிகளை முதலில் மரக்கலத்தின் பக்கப் பகுதிகளில் செலுத்திவிட்டு மீண்டும் கலங்கரை விளக்கத்தை நோக்கினான். பிறகு தூரத்திலிருந்து வந்த காற்றைத் தன் அகன்ற நாசிகளால் சிறிது நேரம் சுவாசித்துவிட்டுச் சொன்னான், “இன்னும் இருபது ஸ்டேடியாக்கள் இருக்கின்றன” என்று.

கொள்ளைத் தலைவன் கண்கள் கப்பலின் அக்கம் பக்கத்தில் சஞ்சரித்ததாலும், அவன் நாசி காற்றை மோப்பம் பிடித்ததிலும் ஏதோ அர்த்தமிருக்க வேண்டுமென்று நினைத்த இளஞ்செழியன், “இன்னும் இருபது ஸ்டேடியாக்களா! அப்படியானால் மூன்றாம் ஜாம இறுதியில்தான் மரக்கலம் துறைமுகத்தை அடைய முடியும்” என்று கூறி ஏதோ சந்தேகம் கேட்பவன்போல் தலைவனை நோக்கித் தன் கண்களையும் திருப்பினான்.

இளஞ்செழியன் சொற்களைக் கேட்ட கொள்ளையர் தலைவன் சற்றுப் பயங்கரமாகவே நகைத்துவிட்டு, “மூன்றாம் ஜாம இறுதியிலா! நான்காம் ஜாம இறுதியில் அடைந்தாலே ஆச்சரியம். இத்தனை நாள் நாம் பயணம் செய்தது ஒரு பெரிய விஷயமல்ல. இந்த இருபது ஸ்டேடியாக்களைக் கடப்பதுதான் மிகவும் கஷ்டம். கப்பல் சுக்கு நூறாக உடையாமல் துறை முகத்தை அடைய என்ன செய்யப் போகிறாய்? தமிழர்கள் தான் தந்திரசாலிகளாயிற்றே. அந்தத் தந்திரத்தைக் கொஞ்சம் அராபியப் பாறைகளிடம் உபயோகித்துப் பார்” என்று கூறிவிட்டு மறுபடியும் வாய்விட்டுச் சிரித்தான்.

கொள்ளைத் தலைவன் மனோபாவத்தை அர்த்தம் செய்து கொள்வது மிகக் கடினமாயிருந்ததால் இளஞ்செழியன் ஏதும் புரியாமல், “எதற்காக இவன் நகைக்கிறான்? பாறைகளில் இந்த மரக்கலம் மோதினால் இவனுக்கு நஷ்ட மில்லையா? இல்லை, மற்றக் கொள்ளைக்காரர்கள் தான் அத்தகைய அபாய எல்லைக்குள் புகச் சம்மதிப்பார்களா?” என்று உள்ளுக்குள்ளேயே எண்ணமிட்டதன்றிச் சற்று வெளிப் படையாகவே பேசவும் முற்பட்டு, “தமிழர்களிடம் தந்திரம் உண்டு தலைவரே! ஆனால் நிலைமையை உள்ளபடியறிந்தால் தந்திரத்தைப் பயன்படுத்தலாம். ஆகையால் மரக்கலம் கானாவை அடைவதில் என்ன ஆபத்துகள் இருக்கின்றன? புரியும்படியாகச் சொல்லுங்கள்” என்றான்.

பதிலுக்குக் கொள்ளையர் தலைவன் மரக்கலத்தின் பக்கப் பகுதிகள் இரண்டையும் சுட்டிக்காட்டி, “முப்பது துடுப்புகள் துழாவியும் மரக்கலம் அசைகிறதா பார்” என்றான்.

இளஞ்செழியன் அப்பொழுதுதான் அந்த விந்தையைக் கவனித்தான். முப்பது துடுப்புகளும் அதிவேகத்துடன் துழாவியும் மரக்கலம் கடல் ஆமையைப்போல மூன்றடி முன்னால் சென்றால் இரண்டடி பின்னுக்குச் சென்று, மறு படியும் நிலையைச் சமாளித்து அரையடி முன் பக்கம் நகர்ந்தது. இதைப் பார்த்ததால் ஆச்சரியத்துக்கும் மரக்கலம் இருட்டு இருக்கும்போதே கானாவை அடையாவிட்டால் தன் திட்டம் சுக்குநூறாகி விடுமே என்ற நினைப்பால் பயத்துக்கும் இலக்காகிய இளஞ்செழியன், “ஆமாம், மரக்கலம் முன்னேற மிகவும் திண்டாடுகிறது” என்று ஒப்புக் கொண்டான்.

“காரணம் தெரியுமா?” என்று வினவினான் கொள்ளையர் தலைவன்.

“தெரியவில்லை” என்று பதில் சொன்னான் சோழர் படை உபதலைவன்.

“தரைப்படையை நடத்துவதற்கும் கப்பலைச் செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தைச் சோழர் படையின் உபதலைவன் அறியவில்லை போலிருக்கிறது. தரையில் படைகளை நடத்துவதில் ஒரு எதிரியைத்தான் சமாளிக்க வேண்டும். ஆனால் கடற்போரில் பல எதிரிகள் உண்டு. மரக்கலத்தை நம்மையும் மீறிக் காற்று, அலை இவை எது எந்தப் பக்கம் திரும்பும் என்று சொல்ல முடியாது. கானாவை அடையுமுன்பு அராபியக் கடல் குறுக்கிடுவதால் பெரும் நீர் வேகமும், பனைமரம் உயரம் கிளம்பும் அலைகளும் கப்பலை எதிர்க்கும். கொஞ்சம் கப்பல் நிலை திரும்பினாலும் அராபியக் கடற்கரையோரமாக உள்ள பெரும் மலைப் பாறைகளில் மோதி உடைந்துவிடும். இதை எப்படிச் சமாளிப்பாய்? எப்படிப் பொழுது விடியுமுன்பு கானாவை அடைய முடியும்?”

“பொழுது விடியுமுன்பு அடையாவிட்டால்…?” என்று சொல்லிய இளஞ்செழியன், விளைவு என்ன என்பதை முகத்தின் குறிப்பினாலேயே கொள்ளையர் தலைவனுக்கு உணர்த்தினான்.

“புரிகிறது தமிழா, புரிகிறது. பொழுது விடியுமுன்பு கானாவை அடையாவிட்டால் நாமனைவருமே இலி-ஆஸு வுக்கு அடிமைகளாவோம். பிறகு சாம்பிராணிக் காடுகளில் வேலை செய்யவும் சந்தர்ப்பம் கிடைக்கும். கசையடிகளுக்கும் குறைவேயிருக்காது” என்று கூறிய கொள்ளையர் தலைவன், “ஆனால் அஞ்சாதே. இந்த மரக்கலத்தை நீ எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே துறைமுகத்திலிருந்து ஐந்து ஸ்டேடியா அளவில் கொண்டுபோய் நிறுத்துகிறேன்” என்று தைரியமும் சொன்னான்.

“ஏன் உங்களுக்கு மட்டும், அராபிய ஜலசந்தியும், நீர் வேகமும், பெரும் அலைகளும் மலைகளும் சொன்னபடி கேட்குமா?” என்று கேட்ட இளஞ்செழியன் குரலில் சற்று இகழ்ச்சியையும் காட்டினான்.

கொள்ளைத் தலைவன், ‘கேட்கின்றனவா இல்லையா பார்” என்று கூறிவிட்டுக் கொள்ளையரில் சிலரை, “இங்கே வாருங்கள்” என்று கூவியழைத்தான். ஆங்காங்கு தளத்தில் நின்று கானாவின் கலங்கரை விளக்கத்தைப் பார்த்துக் கொண் டிருந்த பத்துப் பதினைந்து கொள்ளைக்காரர்கள், தங்கள் தலைவன் அழைப்பதைக் கேட்டதும் அவனிருந்த இடத்துக்கு ஓடி வந்தார்கள். அவர்களனைவரையும் தன் கண்களைச் சுழற்றிப் பார்த்துச் சில வினாடிகள் மௌனமாயிருந்த கொள்ளையர் தலைவன், நிதானமும் சற்றே கடுமையும் நிறைந்த குரலில் கூறினான்: “இக்கப்பலிலுள்ள அடிமை களுக்கு அராபிய ஜலசந்தியின் கொடுமைகள் புதியதாயிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் புதிதல்ல, இன்னும் சில நிமிடங்களில் பெரும் நீர் வேகம் நம்மைப் பின்னுக்கு இழுக்கும். பெரிய அலைகளும் எழும்பும். பின்னுக்கிழுக்கும் நீர் வேகத்தை அலைகளைக் கொண்டுதான் சமாளிக்கவேண்டும். அலைகள் பெரிதாக எழுந்தாலும் கரையில் சென்றுதான் மோதும். ஆகவே நீர்வேகம் பின்னுக்கு இழுக்கும்போது துடுப்புகளை வேகமாகத் துழாவி, கப்பலை இருந்த இடத்தில் நிற்க வையுங்கள். அலைகள் கிளம்பியதும் துடுப்புகள் துழாவ வேண்டாம். கப்பலை அலைகளின் வேகம் கரைக்குக் கொண்டு செல்லும்படி விடுங்கள். அதிலும் ஒரு அபாயமிருக்கிறது. அலைகள் கரையோரமாகக் கப்பலைக் கொண்டு சென்றால் பாறைகள் இருக்கின்றன. ஆகவே கூடியவரையில் சுக்கானை நமக்கு வலது புறமாகத் திருப்பிப் பிடித்துக் கப்பல் தென்மேற்குத் திசையில் செல்லட்டும். அப்பொழுதுதான் கப்பல் ஜலசந்தியின் நட்ட நடுவில் போகும்” என்று.

இப்படி விடுவிடு என்று உத்தரவுகளைப் பிறப்பித்த கொள்ளையர் தலைவன், அந்த உத்தரவுகள் சரியாக நிறை வேற்றப்படுகிறதாவெனக் கவனிக்க, கப்பலின் தளத்திலும் அடியிலிருந்த துடுப்புகள் அறையிலும் மாறி மாறி வேகமாக நடந்தான். எரித்திரியக் கடலின் ஒவ்வொரு பகுதியின் நுணுக்கத்தையும் அறிந்திருந்த அந்தக் கொள்ளையர் தலைவன் மிகச் சாமர்த்தியமாகத் தனது மரக் கலத்தை நடத்திச் சென்றான். அவன் கூறியதுபோல் அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாக மரக்கலத்தின் போக்கில் பயங்கர மாறுதல்கள் ஏற்பட்டன. திடீரென மரக்கலம் விர்ரென்று பல அடிகள் பின்னுக்குச் சென்றது. “உம், துடுப்புகளைத் தள்ளுங்கள். வேகம்! வேகம்! இன்னும் வேகம்” என்று பயங்கரமாக இரைந்தான் கொள்ளைத் தலைவன். அவன் கையிலிருந்த கடுமையான சாட்டை வெகுவேகமாகத் துடுப்புத் தள்ளுபவர்களின் தோள்களில் இறங்கிச் சொடேல் சொடேலென சப்தித்தது. அதே சமயத்தில் பெரும் காற்று ஒன்றெழும்பவே மலையளவுக்கு அலைகளும் எழுந்தன. மரக்கலம் பல திசைகளில் இழுபட்டது. சில சமயங்களில் கவிழ்ந்து விடுவதுபோல் ஆடியது. ‘என்ன பயங்கரச் சூறாவளி! என்ன பயங்கர அலைகள்!’ என்று எண்ணிய இளஞ்செழியனை கப்பலின் ஓர் ஆட்டம் திடீரெனத் தூக்கி ஒரு மூலையில் வீசியது. கொள்ளைக்காரர்கள் அந்தப் பயங்கர இரவில், இருளில், அந்தச் சூறாவளியின் அலறலில், அலைகளின் எழுச்சியில், தாங்கள் எத்தனை சிறந்த மாலுமிகள் என்பதைக் காட்டிக் கொண்டார்கள். சுழன்று சுழன்றடித்த சூறாவளியில் தத்தளித்த மரக்கலத்துக்குள் பெரும் அலைகள் திடீரெனப் பிரளயவர்ஷம்போல் நீரை வீசியதால் தளத்திலிருந்த எல்லோரும் பரிபூரணமாக நனைந்து போனதன்றி, அடிமைகளும் கொள்ளைக்காரர்களும் சிதறிச் சிதறி விழுந்ததால், யார் அடிமை, யார் கொள்ளைக்காரன் என்ற வித்தியாசமின்றிக் கலந்தும் போனார்கள். இயற்கையின் அந்தக் கர்ஜனைக்கும் ஆத்திரத்துக்கும் முன்னால் அந்தச் செயற்கை எதிரிகள் ஒருவருக்கொருவர் பிடித்துச் சமாளித்து உதவியும் செய்து கொண்டார்கள்.

அந்தப் பயங்கர நிலையில் கொள்ளையர் தலைவன் நிர்ப்பயமாகத் தளத்தின் பல முனைகளுக்கும் சென்று கப்பலைச் செலுத்தும் முறைகளைச் சொல்லி உத்தரவுகளைக் கன வேகத்தில் பிறப்பித்தான். மிகச் சாமர்த்தியமாக நீர் வேகத் தில் கப்பலைத் துடுப்புகளால் நிலையாக நிற்கச் செய்தும், அலைகள் எழுந்த சமயங்களில் மேலெழுந்த கப்பலை அவற்றின் வேகத்தில் கலங்கரை விளக்கத்தை நோக்கி ஓட விட்டும், சுக்கானைப் பிடித்துக் கரையின் மலைப் பகுதியைக் கப்பல் அணுகாமல் தடுத்தும் மிகச் சாமர்த்தியமாகக் கப்பலைச் செலுத்தினான் தலைவன். கொள்ளையர் மரக்கலம் இப்படித தத்தளித்தும் திடீரென நின்றும், இருந்தாற் போலிருந்து திடீரெனக் கரையை நோக்கி வெகு வேகமாகப் பாய்ந்தும் சுமார் அரை ஜாமத்துக்கு மேல் சென்றது. அந்த அரை ஜாமத்தில் தளத்தில் வந்து தண்ணீரைக் கொட்டிய அலைகளால் பெரும் நரக வேதனையை அனுபவித்த அடிமைகள் கொள்ளைத் தலைவனின் உத்திரவுப்படி தளத்தில் தேங்கிய நீரை மரப்படிகளில் வாரி வாரி கடலுக்குள் கொட்டினார்கள். இப்படி ஆடி, அசைந்து, நடுங்கி, முக்கால் வாசிப் புரண்டு, நீரை உறிஞ்சி உமிழ்ந்து சென்ற அந்தக் கொள்ளையர் மரக்கலத்தின் போக்கு திடீரென சற்று சாந்தப் பட்டது. அலைகளின் உக்கிரமும் தணிந்தது. “யாரும் பேச வேண்டாம். எந்தச் சத்தமும் கூடாது” என்று உத்திரவிட்ட கொள்ளையர் தலைவன், கொள்ளைக்காரரில் ஒருவனை அழைத்து நங்கூரம் பாய்ச்ச உத்தரவிட்டான். வேகமாக முதலைக் கொழுப்புத் தடவியதால் நீர் ஒட்டாத பெரும் கயிறுகளில் பிணைக்கப்பட்ட இரும்புச் சலாகைகள் நீருக்குள் இறக்கி விடப்பட்டதும் திடப்பட்டுக் கப்பல் நின்றதும் தலைவன், இளஞ்செழியனையும் கொள்ளைக்காரர்களில் முக்கியஸ்தர்களையும் தன் அறைக்கு அருகில் வரவழைத்து, தளத்தின் மேல் நின்ற வண்ணம் கூறினான்: “சோழர் படைகளின் உப தலைவனான இந்தத் தமிழன் இந்தச் சாம்பிராணி நாட்டின் மர்மங்களை நன்றாக அறிந்திருக்கிறான். அவனை நன்றாக விசாரித்த பின்பே இந்தத் துணிகரத் திட்டத்துக்கு நான் ஒப்புக்கொண்டேன். திட்டம் வெற்றியடைந்து கானாவின் துறைமுகத்திலிருக்கும் சாம்பிராணிப் பொதிகளையும் பொக்கிஷத்தையும் நாம் கைப்பற்றினால், நம்மைவிடச் செல்வந்தர்கள் இந்த எரித்திரியக் கடற் பிராந்தியத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். அந்தச் செல்வத்தைக் கொண்டு அரேபியாவிலுள்ள யவன அழகிகளைக் கூட விலை கொடுத்து வாங்கலாம். பணத்தை மண்ணைப்போல் வாரி இறைக்கலாம். மது, பெண், ஆடை அத்தனை சுகத்தையும் எல்லையின்றி அடையலாம். ஆனால் திட்டம் தோல்வியடைந்தால் நீங்களும் நானும் இலி-ஆஸுவின் அடிமைகள். அங்கு கிடைப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும்…”

இப்படிச் சொல்லிச் சற்றே பேச்சைத் தலைவன் நிறுத்தியதும் கொள்ளைக்காரர்கள் சற்று நேரம் மௌனம் சாதித்தார்கள். இலி-ஆஸுவின் பெயரைக் கேட்டதுமே நடுங்கிய ஒரு கொள்ளைக்காரன் மட்டும் வினவினான், “திட்டம் வெற்றியடையுமென்பது என்ன நிச்சயம்?” என்று.

“நிச்சயம் எதிலுமில்லை. இந்தக் கப்பல் இந்த இடத்துக்கு வருமென்பது சற்று முன்பு நிச்சயமாயிருந்ததா?”

“இல்லை.”

“அப்படித்தான் இதுவும்.”

“இந்தத் தமிழன் பேச்சைக் கேட்டு எதற்காக இந்த ஆபத்தில் இறங்கவேண்டும்?”

“பணம் இருப்பதால்?”

“அது மட்டுமல்ல” என்று இடையே சம்பாஷணையில் புகுந்தான் இளஞ்செழியன்.
“அதுமட்டுமல்லவென்றால் வேறு என்ன இருக்கிறது?” என்று ஒரு கொள்ளைக்காரன் சந்தேகத்துடன் கேட்டான்.

“நீங்கள் தப்புவதற்கு வழியுமிருக்கிறது” என்று இளஞ் செழியன் சுட்டிக் காட்டினான்.

“தப்புவதற்கு வழியா!” ஆச்சரியத்துடனும் ஓரளவு திருப்தியுடனும் எழுந்தன இரண்டு மூன்று குரல்கள்.

இளஞ்செழியன் தன் திட்டத்தைச் சற்று விளக்கியே சொல்லத் தொடங்கினான். “ஐந்து ஸ்டேடியாக்கள் தூரத்தி லேயே கப்பல் நின்றிருக்கிறது. துறைமுகத்துக்கும் நீங்கள் யாரும் வரப்போவதில்லை. நானும் மற்ற அடிமைகளுந் தான் செல்லப் போகிறோம். இலி-ஆஸுவின் காவலரிடம் நாங்கள் சிக்கிக் கொண்டால் உடனே நங்கூரத்தை எழுப்பிக் கொண்டு நீங்கள் ஜலசந்தியின் நீர் வேகத்தில் மரக்கலத்தைச் செலுத்தி விடலாம். சாம்பிராணித் தோட்டங்களில் நாங்கள் தான் கசை யடிப்பட்டு அடிமை வேலை செய்வோம்” என்று விளக்கிய இளஞ்செழியனை நோக்கி மற்றொரு கொள்ளைக்காரன் கேட்டான்: “நீங்கள் துறைமுகக் காவலரிடம் அகப்பட்டுக் கொண்டீர்களா அல்லவா என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அதோ பார்!” என்று எதிரேயிருந்த துறைமுகத்தின் கலங்கரை விளக்கத்தையும் மற்ற விளக்குகளையும் பந்தங் களையும் காட்டிய இளஞ்செழியன், “கப்பலிலிருந்து இறங்கி நீந்திச் செல்லும் நாங்கள் எப்படியும் அந்த விளக்குகளுக்குள் நுழைந்துதானாக வேண்டும். அப்படி நுழைந்தால் காவற்காரர் எங்களை எதிர்ப்பதையும் பிடிப்பதையும் இங்கிருந்தே நீங்கள் காணலாம். வெளிச்சத்திலிருப்பது உங்களுக்குத் தெரியும். விளக்குகளை அணைத்துவிட்டு வெளிச்சத்துக்கு அப்பால் இருட்டில் நிற்கும் இந்த மரக்கலத்திலிருக்கும் உங்களை அங்கிருப்பவர்கள் பார்க்கமுடியாது. ஆகவே, நாங்கள் அகப்பட்டுவிட்டால் நீங்கள் கப்பலைச் செலுத்திக் கொண்டு போய்விடலாம். இல்லையேல் பொதி மூட்டை களை ஏற்ற என் அடையாளம் உங்களுக்குக் கிடைக்கும்” என்று விளக்கினான் இளஞ்செழியன்.

“என்ன அடையாளம்?” என்று கேட்டான் கொள்ளையர் தலைவன்.

“அதோ அந்தப் பாறையிலிருந்து இருமுறை பந்தத்தை அசைக்கின்றேன். உடனே நீங்கள் படகுகளை மிதக்கவிட்டுக் கொள்ளையர்களுடன் வாருங்கள்” என்று பதில் கூறிய இளஞ் செழியன், ஹிப்பலாஸை அழைத்துக் கொள்ளைக்காரர் எதிரில் கூறினான்: “ஹிப்பலாஸ்! மற்ற அடிமைகளில் திறனுடையவர்களாக ஐம்பது பேரைப் பொறுக்கிக்கொள். இங்கிருந்து நாம் கானா துறைமுகத்தின் இடப்பக்கக் கரையில் இருளடித்த இடத்துக்கு நீந்திச் செல்ல வேண்டும். ஒவ்வொருவனும் ஒரு வாளை வாயில் கௌவிக் கொண்டும், ஒரு சிறு கட்டாரியை இடையில் செருகிக் கொண்டும் நீந்தட்டும். கரையை அடைந்ததும் நான் அந்தத் துறைமுக அதிகாரி இருக்கும் மாளிகைக்குள் நுழைய வழி, கண்டு பிடிக்கிறேன். அதிகாரியை நித்திரையில் பிடித்துவிட்டால் மற்றவர்களைக் கொல்வதும் ஏமாற்றுவதும் எளிது. இதில் ஆபத்து இருக்கிறது. ஆபத்தை வெற்றி கொண்டால் சம்பத்தும் இருக்கிறது. யவன நாட்டு அழகிகளை அடையலாம், ஆயுள் பூராவும் ஆசைப்பட்ட பொருளை வாங்கலாம். அடிமைத் தளையும் நீங்கும். நமது தலைவர் நமக்குச் சகல வசதிகளையும் அளிப்பார். இல்லையேல் உங்களைக் கொண்டு கார்டாபி முனையில் விற்பார். அரேபியாவில் அடிமைகளாகக் கசை யடிப்படலாம். அப்படிச் செய்யாமல் தலைவர் நமக்கு இந்தச் சந்தர்ப்பத்தை அளிக்கிறார். உம், புறப்படுங்கள். தலைவரின் நல்லெண்ணத்துக்கும் அவர் கூட்டத்தில் நம்மையும் சேர்த்துக் கொள்ள அவர் ஒப்புக் கொண்டதற்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டவர்கள்.”

ஹிப்பலாஸ் பதிலேதும் சொல்லத் தெரியாமல் விழித்தாலும், அந்தச் சமயத்தில் தனது நகைச்சுவையை மட்டும் விட்டுக் கொடுக்காமல், “இந்தக் கூட்டத்தில் சேரு வதற்குப் படைத் தலைவர் பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டுப் படைத் தலைவன் உத்தரவுகளை நிறைவேற்றச் சென்றான். இளஞ்செழியன் ஹிப்பலாஸிடம் கூறிய மொழிகளால் பெரிதும் திருப்தியடைந்த தலைவன், இளஞ்செழியன் சொற்படி நடக்கும்படி கொள்ளைக்காரர் களுக்கு உத்தரவிட்டான். அதன் விளைவாக அவர்களின் ஆயுதங்களையும் வாங்கித் தன்னுடன் வரத் தயாரான ஐம்பது அடிமைகளுக்கு வழங்கிய இளஞ்செழியன் அவர்களிடம் மட்டும் திட்டத்தை முழுதும் விளக்காமல், நான் மட்டும் முன்னால், “நீந்திச் செல்கிறேன். நீங்கள் பின்னால் தொடர்ந்து வாருங்கள்” என்று கூறிவிட்டு, வாயில் கத்தியைக் கௌவிக் கொண்டு கப்பலின் நூலேணியில் இறங்கி நீருக்குள் அமிழ்ந்தான். கப்பலின் நாலா பக்கங்களிலும் தொங்க விடப்பட்ட பல ஏணிகள் மூலம் திடசாலிகளான மற்ற அடிமைகளும் ஹிப்பலாஸும் தண்ணீரில் இறங்கினார்கள்.

மூன்றாம் ஜாமம் பாதிக்குமேல் நகர்ந்து விட்டதால் கடற் காற்று, அலை இவற்றின் சப்தத்தைத் தவிர மற்றச் சப்தம் எதுவுமே அந்தப் பிராந்தியத்தில் இல்லாததாலும் கானா பிரதேசத்தின் மலைகள் பெரும் பிசாசுகளைப் போல இருளில் காட்சியளித்ததாலும் உள்ளத்தை உலுக்கும் கிலி தரும் சூழ் நிலையே எங்கும் பரவிக் கிடந்தது. அந்தச் சூழ்நிலையில் எந்த வித சத்தமும் செய்யாமல் தமிழகத்தின் பரதவரைப் போல் கரையின் இருட்டடித்த இடப்பகுதியிலிருந்த மலைப் பிராந்தியத்தை நோக்கி நீந்திச் சென்ற இளஞ்செழியனைப் பின்பற்றி ஹிப்பலாஸ் சென்றான். அவனுக்குப் பின்னால் முதலில் அடிமை வர்த்தகனின் ஆட்களாயிருந்து பிறகு கொள்ளைக்காரன் அடிமைகளாகிவிட்ட ஐம்பது பேரும் நீந்திச் சென்றனர். இப்படிச் சுமார் இருபது நிமிஷங்களுக்கு மேல் நீந்திச் சென்ற பின் பெரும் பாறையொன்றைப் பிடித்துக் கொண்டு ஏறி, கானா துறைமுகத்தின் கரையில் காலை வைத்த இளஞ்செழியன், ஹிப்பலாஸ் கரைக்கு வரும் வரையில் காத்திருந்து, அவன் கரையை அடைந்ததும், “ஹிப்பலாஸ்! அந்த ஐம்பது பேரும் வருவதற்குள் இதைக் கேட்டுக் கொள்” என்று கூறி அவன் காதுக்குள் ஏதோ மந்திரம் ஓதுவது போல கூறினான்.

“இது நடக்குமா படைத் தலைவரே!” என்று அச்சத்துடன் வினவினான் ஹிப்பலாஸ்.

“நடக்க வேண்டும்” என்ற படைத் தலைவன் மேலும் கூறினான். “இது ஒரே வழிதான் இருக்கிறது ஹிப்பலாஸ், அப்படி ஒருவேளை நான் வெற்றியடையாமல் அகப்பட்டுக் கொண்டால் நீயும் இந்த ஐம்பது பேரும் இப்படி இந்த மலைப் பாதை வழியாக அடுத்துள்ள காடுகளில் ஒளிந்து கொள்ளுங் கள். இராக்காலங்களில் வரும் கப்பல்கள் ஏதாவதொன்று உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் தப்பலாம். அப்படித் தப்ப வழியிருப்பதாக, தப்பி நமது ஊர் வந்த பல வர்த்தகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். என்னைப் பற்றிக் கவலைப் படாதே. நான் ஒன்று இன்றிரவு கொல்லப்படுவேன்; அல்லது வெற்றியடைவேன். கொல்லப்பட்டால் நீ தமிழகம் சென்று பூவழகியிடம் தெரிவி, அவளைக் கடைசி வரையில் நான் மறக்கவில்லையென்று ” என்று கூறி, சொந்த ஊரையும் தன் இதயத்தில் அழியா இடம் பெற்ற அந்தக் கற்புக் கன்னியையும் நினைத்துப் பெருமூச்சு விட்டான்.

பூவழகியை நினைத்ததும் உணர்ச்சி மிகுதியால் உள்ளம் நெகிழ்ந்த படைத் தலைவனைப் பார்த்த ஹிப்பலாஸ், “ஏன் தலைவரே; நாம் எல்லோருமே காடுகள் வழியாகத் தப்பி விட்டால் என்ன?” என்று வினவினான்.
“முடியாது ஹிப்பலாஸ்! இன்னும் சில வினாடிக்குள் நம்மில் யாராவது கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தில் தலை காட்டவில்லையென்றால் கொள்ளைத் தலைவன் சந்தேகப்படுவான். அவனுக்கும் இந்தக் காட்டு வழிகள் தெரியும். கரைக்கருகே நாளை இரவு அவன் மரக்கலம்தான் உலவும். தவிர நாம் தமிழகம் சீக்கிரம் திரும்ப வேண்டுமானால் வழி அதுவல்ல” என்ற இளஞ்செழியன், மற்ற அடிமைகளை அழைத்து வரும் பொறுப்பை ஹிப்பலாஸுக்கு அளித்து விட்டு, “ஹிப்பலாஸ்! நான் போகிறேன். நான் வரும்வரை அதோ அந்தப் பாறைகளுக்கிடையில் மற்றவர்களுடன் பதுங்கியிரு. இன்று நாம் வெற்றி கொண்டால்…” என்று வாசகத்தை முடிக்காமல் விட்டு, நனைந்த உடையுடனும் உருவிய வாளுனுடனும் தான் கண்டறியாத கானா துறைமுகத்தின் எல்லையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
படைத் தலைவன் போவதைப் பார்த்துக்கொண்டே நின்ற ஹிப்பலாஸ் சோகப் பெருமூச்சு விட்டு, ‘வெற்றி கொண்டால் விடுதலை, விடுதலை. இல்லையேல் சாவு சாவு. அதுவும் ஒருவித விடுதலைதான்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் கரையை அடைந்த மற்ற அடிமைகளை அழைத்துக் கொண்டு இருளடைந்த மலைப் பாறைகள் வழியே சென்ற ஹிப்பலாஸ், கலங்கரை விளக்கத்தின் ஒளியில் படாமல் இருட்டடித்திருந்த மலைச் சரிவுக்கு வந்ததும் தன் துணைவர்களுடன் பதுங்கிக் கொண்டு துறைமுகத்தின் பெருவீடு இருந்த இடத்தைக் கவனித்தான். அதன் வாயிலில் காவலர் இருவர் நடமாடிக்கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிஷங்களில் அவர்களை நோக்கி மிகச் சாவதானமாகச் சென்ற இளஞ்செழியன் உருவத்தைத் தூரத்திலிருந்தே பந்தங்களின் வெளிச்சத்தில் கண்ட ஹிப்பலாஸ் அடுத்த வினாடி என்ன நேரிடுமோ என்ற அச்சத்தால் திக்பிரமை பிடித்து நின்றான். அந்தத் திக் பிரமையை ஆயிரம் மடங்கு உயர்த்தும் சம்பவமொன்று கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்தது.

Previous articleYavana Rani Part 2 Ch4 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here