Home Sandilyan Yavana Rani Part 2 Ch54 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch54 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

66
0
Yavana Rani Part 2 Ch54 Yavana Rani Sandilyan,Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch54 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch54 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 54 பட்டு முள்

Yavana Rani Part 2 Ch54 | Yavana Rani | TamilNovel.in

வெண்ணிப் போரைப் பற்றிய விந்தைச் செய்திகளைச் சொல்ல இந்திர விழா விடுதியின் மாடியிலிருந்த ராணியின் அறைக்குள் வெகு வேகமாக டைபீரியஸ் நுழைந்தபொழுது ராணி அந்த அறையின் தென்புறச் சாளரத்தின் வழியாகக் கீழே ஓடிக்கொண்டிருந்த பொன்னியின் பெரும் நீர்ப் பரப்பையும், தூரத்தே தெரிந்த அதன் சங்கமத் துறையையும், சங்கமத் துறையைத் தாண்டிச் சிறிது தூரத்தில் கடலில் ஆடிக் கொண்டிருந்த மரக்கலங்களையும் பார்வையிட்ட வண்ணம் ஆழ்ந்த யோசனையிலிருந்தாள். அறையில் நுழைந்த வேகத் தின் காரணமாக இரும்புப் பட்டயங்களால் இணைக்கப்பட்ட டைபீரியஸின் பாத அணிகள் டக் டக்கென ஒலி எழுப்பியுங்கூட அதைச் சிறிதும் காதில் வாங்கிக்கொள்ளாமலும், காவிரியையும் கடலையும் விட்டுக் கண்களை அகற்றாமலும் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள் ராணி. அப்படி முதுகுப்புறத்தை வாயிலுக்குக் காட்டி நின்ற நேரத்திலும் அவளுக்கு இருந்த அரச தோரணையைக் கண்ட டைபீரியஸ், அத்தகைய ஒரு ராணியைத் தனது நாடு பெற்றெடுத்ததை நினைத்துப் பெருமை கொண்டானானாலும் அந்தப் பெருமையை பூர்த்தி செய்யும் முறையில் ராணி நடந்து கொள்ளாமல் தமிழன் ஒருவனிடம் இதயத்தைப் பறி கொடுத்து, அவனுக்காகத் தான் தமிழகம் வந்த பணியையும் புறக்கணித்திருப்பதை நினைத்து ஓரளவு கோபமும் கொண்டான். ராணியே அவள் உரிமைக்கும், யவனர் ஜோதிடர் வாக்குக்கும் முரணாக நடந்து கொண்டாலும், அவளையும் மீறி அவளைத் தமிழகத்தின் ஒரு பகுதிக்கு ராணியாக முடி சூட்டிவிடுவது தனது கடமையெனத் தீர்மானித் திருந்த யவனர் கடற்படைத் தலைவன், அப்படி ராணியாக முடி சூடப்போகும் அவள், தமிழகத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள அரசியல் நிலையை உணர்ந்து கொள்வது அவசியமென்று கருதியே அவளுக்கு அதை எடுத்துச் சொல்லவும், தன் வல்லமையை ஓரளவு காட்டவும் அவள் இருப்பிடத்தை அடைந்தான். தான் வந்த நேரத்தில் தீர்க்கலோசனையில் இருந்த ராணி கவனத்தைத் தனக்காக இழுக்க இருமுறை தனது தொண்டையையும் கனைத்துக் கொண்டான்.

அப்படி அவன் கனைத்தும் ராணி சாளரத்திலிருந்து உட்புறம் திரும்பவில்லை. மாலை நேரத்தில் பொன்னியின் புனல் பொன்னாகவே விளங்கியதைக் கண்டு அதன் எழிலில் உள்ளத்தைப் பறி கொடுத்ததன்றி, பொன்னியிலிருந்து கடலுக்குத் தாவிய தன் நீலமணிக் கண்களைப் பொன்னியின் அக்கரையில் தெரிந்த வாணகரைக் கோட்டை மீதும் செலுத்தினாள். கண்கள் அந்தக்கோட்டை மீது நிலைத்த சில வினாடிகளில் அவை அவள் இதயத்தை அந்தக் கோட்டைக்கும் கோட்டையில் நிகழ்ந்த பழைய கால சம்பவங்களுக்கும் இழுத்துச் சென்றன. புகாரின் கடற்கரையில் தான் புரண்ட நாளாகத் தனக்கும் இளஞ்செழியனுக்கும் ஏற்பட்ட இணைப்புக் கட்டங்கள் பலவும் அவள், கண் முன்னெழுந்து தாண்டவமாடவே, அவருக்குச் சொந்தமல்லவா இந்த வாண கரை?” என்று ஏதோ புதிதாகக் கண்டுபிடித்து விட்டவள் போல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அதிலும் ஒரு மனக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சி வெள்ளத்தையும் அடைந்தாள் யவன நாட்டுப் பேரழகி. வாணகரைக் குன்று என்ன, கோட்டை என்ன, அவற்றையும், தான் இருந்த இந்திர விழா மாளிகையையும் இணைத்தோடிய பொன்னியின் புனல் கூடத் தனக்கும் இளஞ்செழியனுக்கும் எத்தனையோ உறவு முறைகளை ஏற்படுத்தி விட்டதை அவள் எண்ணிப் பார்த்தாள். ‘உறையூரிலிருந்து டைபீரியஸுடன் தாங்கள் வந்த சமயத்தில் இந்தப் புனல் எங்கள் படகைத் தாங்கி வந்தது உண்மைதான். ஆனால் என் மடிதானே அவரைத் தாங்கி வந்தது?’ என்று கேட்டு அந்தக் கேள்வியில் ஒரு இன்பத்தையும் அடைந்தாள் ராணி. அப்படி அவள் இன்பப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவள் கையிலிருந்தது ஒரு நாகலிங்கப் பூ அதைத் தன் அழகிய நாசியில் வைத்து முகர்ந்து சில வினாடிகள் கண்களையும் மூடினாள்.

அவளுடைய இத்தனை சிந்தனைக்கும் இடம் கொடுத்துப் பலவினாடிகள் தாமதித்த டைபீரியஸ் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், “ராணி! அடிமை வணங்கு கிறேன்” என்று மேலுக்கு வெகு மரியாதையாகவும் குரலில் சிறிது கடுமையைக் காட்டியும் அவள் கவனத்தைத் தன்னிடம் திருப்ப முயன்றான். இடது கையில் நாகலிங்க மலரைப் பிடித்து நாசியில் முகர்ந்த வண்ணம் மெள்ளத் திரும்பினாள் ராணி. அப்பொழுதும் அவள் கண்கள் அந்தப் பழைய கனவுலகத்திலேயே இருந்ததால் அவள் பதிலேதும் சொல்லாமல் சிறிது நேரம் டைபீரியஸை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவள் கண்களிலும் முகத்திலும் சிந்தனை ரேகை அதிக மாகப் படர்ந்து கிடந்ததைக் கவனித்த டைபீரியஸ், மீண்டு மொருமுறை அவளை நோக்கித் தலைவணங்கி, “ராணி பெரும் சிந்தனையிலிருப்பதாகத் தெரிகிறது” என்று பேச்சைத் துவக்கினான்.

“சிந்தனைக்குச் சிறை கிடையாது டைபீரியஸ். அது உனக்கும் தெரிந்திருக்க வேண்டுமே?” என்றாள் ராணி பதிலுக்கு, தனது குரலில் சிறிது அலட்சியத்தையும் வெறுப்பையும் காட்டி.

ராணி சொன்ன பதிலில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டான் டைபீரியஸ். தான் அவள் நடவடிக்கைகளை ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருப்பதையே ராணி குறிப்பிடு கிறாளென்பதை அறிந்துகொண்ட யவனர் கடற் படைத் தலைவன் அதை அறியாதவன்போல, “ராணிக்கு எதிலும் சிறையிருக்க முடியாது. குடிகளுக்குச் சிறையுண்டு, தடை யுண்டு. அவற்றை விதிப்பதே முடிசூடும் வர்க்கம். அப்படி யிருக்க முடிசூடும் ராணிக்குச் சிந்தனைச் சிறையென்ன எந்தச் சிறைதான் இருக்கமுடியும்!” என்றான்.

ராணி மெள்ள நகைத்தாள். அவள் நீலமணிக் கண்களில் அதுவரையிருந்த கனவு மறைந்தது. இகழ்ச்சிக் குடி கொண்டது. “இப்பொழுது உன் ராணியிருப்பது சிறையல்லவா?” என்று கேட்டாள் இகழ்ச்சி தன் குரலிலும் தொனிக்க.

டைபீரியஸின் கூர்விழிகள் அவள் கண்களைச் சிறிதும் சலனமின்றி நோக்கின. அவன் பதிலும் உறுதியுடன் வெளி வந்தது. “சிறை வேறு, கட்டுப்பாடு வேறு ராணி” என்றான் டைபீரியஸ்.

“இப்பொழுது நான் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கிறேன். சிறைக்குள் அல்ல, அப்படித்தானே?” என்றாள் ராணி.

“ஆம் ராணி! கட்டுப்பாட்டுக்குள் தானிருக்கிறீர்கள், சிறையல்ல.” திட்டமாக வந்தது டைபீரியஸின் பதில்.

“இரண்டுக்கும் என்ன வேறுபாடு?”

“குற்றத்தை முன்னிட்டு அளிக்கப்படுவது சிறை. கடமையை முன்னிட்டு விதிக்கப்படுவது கட்டுப்பாடு.”

“விதித்தது நீதானே?”

“இல்லை.”

“வேறு யார்?”

“யார் விதித்தது என்று கேட்காதீர்கள். எது விதித்தது என்று கேளுங்கள்.”

“சரி, எது விதித்தது?”

“சம்பிரதாயம்.”

“சம்பிரதாயமா?” ராணி குரலில் சிறிது ஆச்சரியத்தைக் காட்டினாள்.

ஆனால் அவளுக்குப் பதிலிறுத்த டைபீரியஸின் குரலில் ஆச்சரியம் ஏதுமில்லை. உணர்ச்சி மிகுந்த குரலில் பேசினான் யவனர் கடற்படைத் தலைவன். “ஆம் ராணி! சம்பிரதாயம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கடமைக்கும் சம்பிரதாயத்தின் கட்டுப்பாட்டுக்கும் முடிசூடும் பேரரசர் களாயிருந்தாலும் வணங்கித்தானாக வேண்டும். ஏனென்றால் அந்தக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அவர்கள் நன்மையையும் மக்கள் நன்மையையும் முன்னிட்டு மூதாதையர்களால் வகுக்கப்பட்டவை. அரசர்களின் இருப்பிடங்களுக்குக் காவல். அவர்கள் வெளியே செல்லும்போது காவல். விழாக்களில் கலக்கும் போதும் காவல். இத்தகைய காவல்கள், காரணமாகத் தான் வைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக இத்தகைய கட்டுக்காவல் அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கின்றன. இரண்டாவதாக மக்களுக்கு அவர்களிடம் மதிப்பை ஏற்படுத்துகின்றன. மூன்றாவதா-” என்று சொல்லிக் கொண்டு போன டைபீரியஸ் மூன்றாவதாக என்ற இடம் வந்ததும் சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

ராணி அவனைச் சரேலென ஒருமுறை நிமிர்ந்து நோக்கினாள். அந்த வேகத்துடன் வந்தது அவள் சொற்களும், “மூன்றாவதாக? சொல் டைபீரியஸ்?” என்று சீறினாள் அவள்.

“மூன்றாவதாக அவர்களிடமிருந்தே அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன” என்றான் டைபீரியஸ் தலையைச் சிறிது தாழ்த்தி.

“விளங்கச் சொல் டைபீரியஸ்” என்றாள் ராணி கோபத்துடன்.

“ஒருவேளை அரசர்கள் மனம் கடமையிலிருந்து வழுவ யத்தனிக்குமானால் இந்தக் கட்டுக்காவல் அதற்குப் பெரும் இடையூறாயிருக்கும்” என்றான் டைபீரியஸ் மிக மெதுவான குரலில்.

அத்துடன் அந்தப் பேச்சை முடித்துவிட நினைத்தான் டைபீரியஸ். ஆனால் ராணி விடவில்லை. “இத்தனை கட்டுக் காவலையும் மீறி அரசர்கள் தங்கள் இஷ்டப்படி நடக்க விரும்பினால்” என்று வினவினாள்.

“அதற்கும் அரச நீதியில் வழி இருக்கிறது” என்றான் டைபீரியஸ்.

“என்ன வழி?”

“அரசர்கள் நடத்தை அவர்கள் நாட்டு நலனுக்கு முரண்பாடாக அமையுமானால் அதைக் கட்டுப்படுத்துவது அமைச்சர்கள் கடமை.”

“ஏன், படைத் தலைவர்கள் கடமையல்லவா?”

“அவர்களுக்கும் அந்தக் கடமை உண்டு.”

“அந்தக் கடமையை முன்னிட்டுத்தான் என்னைச் சிறை வைத்திருக்கிறாயா?” என்று கடுங்கோபத்துடன் கேட்டாள் ராணி.

டைபீரியஸின் ஆஜானுபாகுவான சரீரம் இதைக் கேட்டதும் அறையின் கூரையையே தொட்டுவிடுவதுபோல நன்றாக உயர்ந்தது. அவன் கண்கள் வாளின் நுனியை விடக் கூர்மை பெற்றுப் பளிச்சிட்டன. அவன் வலிய உதடுகள் ஒரு முறை மடிந்து திறந்தன. சொற்கள் அம்புகளென உதிர்ந்தன. “சிறை என்று சொல்வதைவிடக் கட்டுப்பாடு என்று சொல்வது அரச நீதிக்கு மிகவும் பொருந்தும் ராணி. நீங்கள் மட்டும் இந்த நாட்டுக்கு வந்த காரணத்தை எண்ணிப் பார்த்து அதன்படி நடந்திருந்தால் இத்தனை நாள் யவன அரசு இங்கு நிறுவப்பட்டிருக்கும். நீங்களும் பெயருக்கு மட்டும் ராணியாயி ராமல் உண்மை ராணியாக இன்று இங்கு அரசு புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் தமிழன் ஒருவனிடம் சிந்தையைப் பறிகொடுத்துக் கடமையை மறந்தீர்கள். கடமையை மறந்தது மட்டுமல்ல. கடமையை நிறைவேற்ற முனைந்த எனக்கும் பெரும் இடைஞ்சலாகச் செயல் புரிந்தீர்கள். உங்களைப் போல் நானும் கடமையைக் காற்றில் விட்டிருந்தால் இந்தப் புகார்கூட இன்று நம் வசமிருக்காது. யவனர்கள் தமிழர்களிடம் நிரந்தரமாக அடிமை வாழ்வு வாழ வேண்டியதாயிருந்திருக்கும். அந்த அடிமைத் தளையை உடைக்க உறுதி கொண்டுள்ளேன் ராணி. அதற்கு இடையூறுகள் பல இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அவற்றைக் கண்டு நான் அஞ்சவில்லை. யார் எதிர்த்தாலும் யவன சோதிடர்கள் சொல் பலித்தே தீரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. சந்தேகமிருந்தால் இன்று இங்கிருக்கமாட்டேன். தமிழகம் இன்றுள்ள நிலைமையில் புகாரிலிருந்து பயணப்பட்டிருப்பேன்” என்றான் டைபீரியஸ்.

“இன்றுள்ள நிலைமையா?” என்று ஏதும் புரியாமல் வினவினாள் ராணி.

டைபீரியஸ் உடனே பதிலிறுக்காமல் ஒரு வினாடி நிதானித்தான். பிறகு நிதானமாகச் சொன்னான்: “வெண்ணிப் போர் முடிந்துவிட்டது ராணி” என்று.

மெள்ள உதிர்ந்த அந்த நான்கே சொற்கள், அவற்றில் லேசாகத் தொனித்த டைபீரியஸின் கவலை, இவற்றின் உள்ளர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொண்டாள் ராணி. வெண்ணிப் போர் முடிந்து விட்டது என்று டைபீரியஸ் சொன்னாலும், அவன் முகபாவம் அது எப்படி முடிந்து விட்டதென்பதைத் தெளிவாகத்தான் தெரிவித்தது. இருந்தாலும் அவன் வாய்ப்பட விஷயத்தை அறிந்து கொள்ள எண்ணிய ராணி, “அப்படியா!” என்றாள் இயற்கையாக வெளிப்படாத வியப்பைச் செயற்கையாகக் குரலில் காட்டி.

“ஆம்” என்றான் டைபீரியஸ், ராணியே முடிவு பற்றிக் கேட்கட்டுமென்று. ‘அவள் கேட்கட்டும். அவள் முகத்தைக் கவனிக்கிறேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் டைபீரியஸ்.

ஆனால் கேள்வி கேட்ட ராணியின் குரலில் எந்தவித உணர்ச்சியும் ஏற்பட்டதாகவே தெரியவில்லை. “எப்படி முடிந்தது டைபீரியஸ்?” என்று சாதாரணமாகவே கேட்டாள் அவள்.

“நமது எதிரிகள் வெற்றியடைந்தார்கள்” என்றான் டைபீரியஸ்.

“யார் நமது எதிரிகள்!” என்று குரலில் சலனம் ஏதுமின்றி ராணி வினவினாள்.

“நமது விரோதிகளானாலும் நமது நண்பர்களின் விரோதிகளானாலும் ஒன்றுதானே?”

“ஆம்.”

“நம்முடன் நட்புரிமை கொண்டு நமக்குப் புகாரைச் சாஸனம் செய்தது இருங்கோவேள்.”

“ஆமாம்.”

“அவனுக்கு உற்ற நண்பர்களாய் நின்றவர்கள் பாண்டி யனும் சேரனும்.”

“உண்மை.”

“அந்த மூவருமே முறியடிக்கப்பட்டார்கள்” என்று சொற்களை நன்றாக அழுத்திச் சொன்னான் டைபீரியஸ்.

ராணியின் கண்கள் வியப்பினால் மலர்ந்தன. அவள் விற்புருவங்கள் ஏதோ கேள்வி அம்புகளைத் தொடுப்பன போல் மேலும் வளைந்து முகத்தில் எழுந்தன. “அத்தனை பெரிய படையையா மன்னர் கரிகாலர் திரட்டியிருந்தார்?” என்று கேட்கவும் செய்தாள் ராணி.

கரிகாலனைப்பற்றி மிகுந்த மரியாதையுடன் ராணியின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களைக் கவனித்தும் கவனிக்காதவன் போலச் சொன்னான் டைபீரியஸ்: “இல்லை ராணி! கரிகாலன் படை இருங்கோவேளின் படையில் நான்கிலொரு பங்குதான்” என்று.

“அப்படியும் கரிகாலரா வென்றார்! விசித்திரமாயிருக் கிறதே டைபீரியஸ்!” என்று ராணி தனது ஆச்சரியத்தின் எல்லையைக் குரலிலும் காட்டினாள்.

“இதில் விசித்திரம் ஏதுமில்லை ராணி” என்ற டைபீரியஸின் குரலில் உறுதியும் வியப்பும் கலந்து உதிர்ந்தன.
“விசித்திரமில்லையா?” என்று வினவினாள் ராணி.

“இல்லை .”

“நான்கு மடங்கு பெரிய படையைச் சிறுபடை முறியடித்தது விசித்திரம் இல்லையா?”

“இல்லை. ஏனென்றால் படைபலம் வெற்றியடைய வில்லை .”

“வேறெது வெற்றியடைந்தது?”

“புத்திபலம். போர்த் தந்திரம்.”

“புரியவில்லை டைபீரியஸ்.”

“புரியும்படி சொல்கிறேன், கேளுங்கள் ராணி” என்று கூறிய டைபீரியஸ் வெண்ணிப் போர் விவரங்களை விளக்க லானான். “இந்தப் போரில் கரிகாலன் வீரத்துக்கும் பங்கு உண்டு. ஆனால் அதைவிடப் பெரிய பங்கு இந்தப் போர்த் திட்டத்தை வகுத்தவனுக்கு உண்டு. போர் நுட்பங்களை அணு அணுவாக அறிந்த சிறந்த படைத் தலைவன் ஒருவனின் மதியே இந்த வெற்றியைச் சம்பாதித்து அளித்திருக்கிறது. இந்த வெற்றியை அளித்தவன் முதலில் நாகையின் கடற்கரையில் சிறிய படைத் தளத்தை அமைத்தான் எனது கண்களில் மண்ணைத் தூவ. வெண்ணிக்கும் நாகைக்குமிடையே படையிருந்ததால் நான் புகாரிலிருந்து இருங்கோவேளின் உதவிக்கு விரையமாட்டேனென்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அதில் நமக்கு ஆபத்து இருக்கிறது. நான் நாகைக்குச் சென்றால் கடல் மார்க்கத்தில் அவன் மரக்கலங்களை அனுப்பிப் புகாரைத் தாக்கலாம்…” என்று சொல்லிக் கொண்டு போன டைபீரியஸை இடைமறித்த ராணி, “புகாரை எப்படிப் பிடிக்க முடியும்? இங்குள்ள கோட்டைக் காவலர் வாளாவிருப்பார்களா? அல்லது இந்த மாளிகை மீதிருக்கும் இரு பெரும் யந்திரத்தூண்கள் இயங்காதிருக்குமா?” என்று கேட்டாள்.

“இவற்றின் பாதுகாப்பு சாதாரண எதிரியைச் சமாளிக்க முடியும். ஆனால் இளஞ்செழியனைப் போன்ற திறமை சாலியைச் சமாளிக்க முடியாது. அதற்கு யந்திரத் தூண்கள் போதாது, சிந்தனைத் தூண்கள் தேவை” என்ற டைபீரியஸ் விஷமமாகப் புன்முறுவல் செய்தான்.

“என்ன! சோழர் படை உபதலைவரா! அவர் இன்னும் உயிருடனிருக்கிறாரா?” என்றாள் ராணி.

“ராணி! பசப்பு வார்த்தைகள், ஏமாற்று வித்தைகள் நமக்குள் இன்றுடன் நிற்கட்டும்” என்று சுடு சொற்களை உதிர்த்த டைபீரியஸ், அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து, “நன்றாகக் கேளுங்கள் ராணி! முதலில் எனக்குப் புரியவில்லை, இப்பொழுது புரிந்து கொண்டேன். முகக் கவசமணிந்து புகாரில் உலவிய யவனர் மரக்கலத் தலைவன் நாகையில் பாசறை அமைத்தவன், பிறகு பாசறையைத் திடீரெனக் கலைத்துப் படைகளை மருதநிலத்துக் குடிகளுடன் கலக்கவிட்டு எதிரி உடலிலேயே வெண்ணியிலும் அதற்கப்பாலும் படரவிட்டவன், போரை இரவில் இருளில் துவக்கியவன், சமயத்தில் வெண்ணியில் கால் நடைத் தீவனங்களில் தீயெழுப்பி இருங்கோவேள் படையைத் திடீரெனத் தாக்கியவன் இத்தனையும் ஒருவன் – நீங்கள் யாரிடம் இதயத்தைப் பறிகொடுத்து நிற்கிறீர்களோ அந்த இளஞ்செழியன். இப்பொழுது கிடைக்கிறது ராணி நான் விடை காணாத பல புதிர்களுக்கு விடை” என்று சொல்லிக் கொண்டு போன டைபீரியஸ் ராணியின் கையிலிருந்த புதுவகைப் புஷ்பத்தைப் பார்த்து, “அது என்ன பூராணி?” என்று கேட்டான்.

ராணியின் நீலமணிக் கண்கள் மீண்டும் கனவுலகத்தில் சஞ்சரித்தன. வெண்ணிப் போரை மனக் கண்ணால் கண்டாள் அவள். அப்படிக் கனாக் கண்டுகொண்டே மஞ்சத்தை நோக்கிச் சென்று அதில் அமர்ந்து நாகலிங்க மலரை நாசியில் நன்றாக முகர்ந்து மூச்சை இழுத்தாள்.

அந்த மலரை இமை கொட்டாமல் பார்த்த டைபீரியஸ், “ராணி! அந்த மலரை இப்படிக் கொடுங்கள்” என்று கேட்டான்.

ராணி மலரை நீட்டினாள். அதைக் கையில் வாங்கிய டைபீரியஸ் அதன் அமைப்பைப் பார்த்து, “இந்த மலரைப் புகாரில் நான் கண்டதில்லையே?” என்றான்.

“இது புகாரில் கிடையாது.”

“இதன் பெயர்?”

“நாகலிங்கப் பூ”

“நாகையில் கிடைக்குமா?”

டைபீரியஸ் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ராணியிடமிருந்து அந்த மலரை வாங்கி அதை நீண்ட நேரம் ஆராய்ந்தான். பிறகு முறுவல் கொண்டான். “இந்த மலர் பல விஷயங்களை விளக்குகிறது ராணி” என்றான்.’

“என்ன விஷயங்கள் அவை?” என்று ராணி வினவினாள்.

“இந்த நாகத்தின் உடலிலேயே பட்டு முட்கள் இருக்கின்றன” என்று டைபீரியஸ் பதில் சொன்னான்.

“ஆமாம்” என்றாள் ராணி.

“உடம்பில் முட்களை வைத்துக்கொள்வது ஆபத்து. பட்டு முள்ளாயிருந்தாலும் எடுத்துவிட வேண்டும்” என்றான் டைபீரியஸ்.

“அத்தனை ஆபத்தா பட்டு முள்?” என்று ராணி வினவினாள்.

“ஆமாம். வேண்டுமானால் நீங்களே பாருங்கள்” என்ற டைபீரியஸ் கைகளை இருமுறை தட்டினான். ராணியின் அறைக் கதவு திடீரெனத் திறக்கப்பட்டது. வாயிற்படிக்கு அப்புறத்தில் அலீமா இரு யவன வீரர்களுக்கிடையில் சிறைப் பட்டு நின்றாள்.

“என்ன இது?” என்று சீறிக்கொண்டு எழுந்தாள் ராணி.

“பட்டு முள்” என்று பெரிதாக நகைத்தான் டைபீரியஸ், நகைத்தது மட்டுமல்ல, புஷ்பத்திற்குள்ளிருந்த பட்டு முள்ளொன்றைக் கிள்ளியும் எறிந்தான்.

Previous articleYavana Rani Part 2 Ch53 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch55 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here