Home Sandilyan Yavana Rani Part 2 Ch6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

123
0
Yavana Rani Part 2 Ch6 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch6 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 6 இலி – ஆஸு

Yavana Rani Part 2 Ch6 | Yavana Rani | TamilNovel.in

இன்று கொல்லப்படுவேன், அல்லது வெற்றியடைவேன், கொல்லப்பட்டால் பூவழகியிடம் சொல்’ என்று உணர்ச்சி ததும்பக் கூறிவிட்டு, கானாவின் துறைமுகக் கோட்டைவாயிலை நோக்கி மிக அலட்சியமாக நடந்து சென்ற சோழர் படை உபதலைவனை நிழலடித்த மலைப்பாறைகளின் மறைவில் பதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஹிப்பலாஸின் இருதயம் பெரும் திகிலால் கனவேகத்தில் ஓடிக்கொண்டிருந்ததன்றி, அவன் புத்தியிலும் பலதரப்பட்ட எண்ணங்கள் எழுந்து ஊசலாடத் தொடங்கின. அலைகள் மோதிப் பாறைகளைக் கூழாங் கற்களாகவும் மணலாகவும் மாற்றிவிட்டதால் ஓரளவு படகுகள் கரையை அடைய வசதி ஏற்பட்டிருந்த அந்தக் கானா துறைமுகத்தின் கடற் பகுதியி லிருந்து கோட்டைப் பிராந்தியத்துக்குச் சென்ற வழி அதிக விசாலமாயிருந்தாலும், வீடுகள் நிறைந்த கோட்டைப் பகுதி மலையுச்சியிலிருந்தபடியாலும் கானா கோட்டைக்கு இயற்கையின் பாதுகாப்புப் பலமாயிருக்கிறதென்பதைக் கண்டுகொண்ட ஹிப்பலாஸ், ‘இந்தக் கோட்டையிலிருப்பவர் களுக்குத் தெரியாமல் இதை அணுகுவதும் பெரும் கஷ்டமா யிற்றே. அப்படியிருக்க படைத் தலைவர் இதைக் கைப்பற்றி இதிலுள்ள சாம்பிராணியையும் எடுத்துக் கொள்ளலாமென உறுதி கூறியிருக்கிறாரே, இது எப்படி முடியும்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ‘ஒருவேளை ஆண்டவன் கருணையால் திட்டம் நிறைவேறினால் நல்லது தான். நிறைவேறாவிட்டால் தமிழகம் தலைசிறந்த ஒரு படைத் தலைவரை இழக்கும். பூவழகி தன் இதயக் கடவுளை இழப்பாள். ஏன் யவன ராணியும் மனமுடைந்து போவாள். இத்தனைக்கும் காரணமான செய்தியைத் தமிழகத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை என் தலையிலா சுமத்த வேண்டும் இவர்?’ என்றும் எண்ணங்களை ஓடவிட்ட ஹிப்பலாஸ், கோட்டைப் பகுதியை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு நின்றான்.

கோட்டையினுள்ளே வீடுகள் பல நிறைந்திருந்ததை விளக்குகளின் பிரகாசத்திலிருந்தே தெரிந்து கொண்ட ஹிப்பலாஸ், குறுகலான கோட்டை வாசலையும் அந்த வாசலைப் பாதுகாத்து நின்ற இரண்டே காவலரையும் கண்டு, ‘காவல் ஏன் இத்தனை குறைவாயிருக்கிறது?’ என்று முதலில் நினைத்தானானாலும் சற்று யோசித்தபின் உண்மை உதய மாகவே, ‘ஆம் ஆம். இந்தக் குறுகிய வாயிலுக்கு இரண்டு காவலர்கள் போதும். கடற்கரையிலிருந்து கோட்டைக்குச் செல்லும் வழியும் குறுகல்தானே. அதுவும் கோட்டை வாயில் மலை உச்சியிலிருப்பதால் கடற்கரையிலிருந்து யார் வந்தாலும் தூரத்திலிருந்தே தெரியும். உடனே காவலர் எச்சரிக்கைக் குரல் கொடுத்தால் கோட்டைக்குள்ளிருக்கும் வீரர்கள் வெளியே வந்து வழியைப் பாதுகாக்கலாம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட ஹிப்பலாஸ், மீண்டும் கோட்டைக்குச் செல்லும் வழியில் கண்களைச் செலுத்தியதும் திடீரெனத் திக்பிரமை கொண்டான். “அடடே! படைத் தலைவர் ஏன் இப்படித் தள்ளாடுகிறார்? அட கடவுளே! தொலைந்தது! திட்டம் தொலைந்தது! படைத் தலைவர் தொலைந்தார். அனைவரும் தொலைந்தோம்!” என்று நாக்குக் குழறக் கூவினான். நடந்ததை அவன் பின்னாலிருந்து பார்த்த மற்ற ஐம்பது அடிமைகளும் மிதமிஞ்சிய பயத்தால் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டனர்.

ஹிப்பலாஸை விட்டுச் சென்றதும் கோட்டை வாயிலை நோக்கி அலட்சிய நடைபோட்டுச் சென்ற இளஞ்செழியன், கோட்டை விளக்குகளின் வெளிச்சத்துக்குள் நுழைந்த மறு வினாடியில் கையிலிருந்த கத்தியை மெள்ளக் கீழிருந்த மணலில் துடைத்ததையும், பிறகு அதை ஊன்றிக் கொண்டு தள்ளாடித் தள்ளாடிக் கோட்டை வாயிலை நோக்கிச் சென்றதையும் கண்ட ஹிப்பலாஸ், ஐந்து ஸ்டேடியா தூரம் நீந்த நேர்ந்ததால் படைத் தலைவர் கைகால்கள் சளைத்து விட்டன என்று தீர்மானித்தான். அப்படித் தள்ளாடிச் சென்ற படைத் தலைவனைத் தூரத்திலிருந்தே விளக்கு வெளிச்சத்தில் கவனித்த காவலர் திடீரெனக் கோட்டையை நோக்கிக் குரல் கொடுத்ததையும், அதைக் கேட்டதும் மற்றும் பத்துக் காவலர் கோட்டைக்குள்ளிருந்து வந்துவிட்டதையும் கண்ட ஹிப்பலாஸ், அடுத்து என்ன நேரிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கையிலேயே, கோட்டை வாயிலைத் தள்ளாடித் தள்ளாடி அடைந்த இளஞ்செழியன் கால்கள் அடியோடு துவண்டு விட்டதையும், அவன் உடலும் புயலில் அகப்பட்ட கொடிபோல் ஆடத் துவங்கிவிட்டதையும் பார்த்து ஆயாசப் பெருமூச்செறிந்தான். அடுத்த வினாடி அம்பினாலடிபட்ட பெரிய இராஜாளிபோல் இளஞ்செழியன் திடீரெனத் தரையில் சாய்ந்துவிட்டதையும், கானாவின் காவலர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டதையும் பார்த்த ஹிப்பலாஸும் மற்ற அடிமைகளும் படைத் தலைவன் கதி அதோகதியாகி விட்டதை உணர்ந்து கொண்டார்கள். விழுந்த படைத் தலைவனைச் சில வீரர்கள் தூக்கிக் கொண்டு கோட்டைக்குள் செல்வது கண்ணுக்குத் தெரிந்ததும் அடிமைகளிற் சிலர் திரும்பவும் நீரில் நீந்திச் சென்று கொள்ளை மரக்கலத்தை அடைந்துவிடத் தீர்மானித்தார்கள். அப்படித் தீர்மானித்து, கடல் நீரை நோக்கி நகர முற்பட்டவர்களை ஹிப்பலாஸின் ஆணைக்குரல் தடுத்தது.

“படைத் தலைவரிட்ட ஆணை உங்கள் காதில் விழ வில்லையா?” என்று கடுமையாகக் கேட்டான் ஹிப்பலாஸ்.

“தனிப்பட்ட ஆணை ஏதும் இல்லை. உங்கள் சொற்படி கேட்கத்தான் உத்தரவு” என்றான் அடிமைகளில் ஒருவன்.

“தாம் திரும்பி வரும்வரையில் இங்கேயே இருக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார் எனக்கு” என்றான் ஹிப்பலாஸ் கண்டிப்பான குரலில்.

“தாங்கள் இருப்பதைப்பற்றி எங்களுக்குச் சிறிதும் ஆட்சேபணையில்லை” என்றான் ஒரு அடிமை.

“தலைவர் திரும்பி வருவாரென்று தோன்றவில்லையே” என்றான் இūன்னொரு அடிமை.

“நான் படைத் தலைவருடன் ஆயுள் முழுவதும் சேவை செய்தவன்” என்று கூறிய ஹிப்பலாஸ், எத்தனையோ அபாய நிலைமைகளைத் தலைவர் சமாளித்திருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டான்.

“இனித் தாங்கள் சேவை செய்ய அவசியமில்லை” என்றான் முதலில் பேசிய அடிமை.

“ஏன்?”

“ஆயுள் முழுவதும்தானே சேவை செய்வீர்கள்?”

“ஆமாம்.” “இன்றுடன் அவர் ஆயுள் முடிந்தது.”
இதைக் கேட்டதும் மற்ற அடிமைகள் நகைத்தார்கள். “நகைப்பதற்கு இது சமயமல்ல” என்று கோபக் குரல் கொடுத்த ஹிப்பலாஸ் அவர்களை நோக்கித் திரும்பி, தன் கருவிழிகளை அவர்கள் மீது நாட்டினான்.

“ஆமாம்; அழுவதற்குத்தான் சமயம். படைத் தலைவர் போய்விட்டாரல்லவா?” என்று மறுபடியும் நகைத்த முதல் அடிமை ஹிப்பலாஸை நோக்கிச் சொன்னான். “நீங்களும் வாருங்கள் போகலாம். இனி இங்கு வேலை இல்லை.”

“தலைவரைச் சந்திக்காமல் நான் வரமாட்டேன்.” ஹிப்பலாஸ் பதில் திட்டமாக வெளிவந்தது.

“தலைவரைச் சந்திக்கும் இடம் இதுவல்ல” என்றான் அடிமை.

“வேறு எது?”

“ஒன்று விண்ணுலகம், இன்னொன்று இலி-ஆஸுவின் சாம்பிராணிக் காடு. இரண்டில் எதையும் அடைய நாங்கள் விரும்பவில்லை.”

ஹிப்பலாஸின் பயங்கரத் தோற்றத்தையோ அதை விடப் பயங்கரமாக உருண்ட அவன் விழிகளையோ சிறிதும் லட்சியம் செய்யாமல் அந்த அடிமை பேசியதை மற்ற மரக்கல மாலுமிகள், “ஆம் ஆம். நாங்கள் விரும்பவில்லை” என்று ஆமோதித்தார்கள். சிலர், “வாருங்கள் போகலாம்,” என்று பாறைகளிலிருந்து இறங்கவும் முற்பட்டார்கள். ஹிப்பலாஸ் சரேலென்று மேற்பாறையிலிருந்து கீழிருந்த பாறைமீது குதித்து, தன் வாளை உருவிக் கொண்டு அவர்களை மறித்து நின்றான். “உங்களில் எவனாவது ஒருவன் நீருக்குள் இறங்க முற்பட்டாலும் சரி அவன் பிணமாகத்தான் மிதக்க முடியும். என் படைத் தலைவர் என்ன செய்ய வேண்டுமென்பதைத் திட்டமாகக் கூறியிருக்கிறார். ஒன்று அவர் வரும் வரையில் நாம் காத்திருக்கவேண்டும். அல்லது அவரைத் தூக்கிச் சென்ற பிறகு கோட்டையில் ஏதாவது நிகழ்ந்து கானாவின் வீரர்கள் வெளியே தோன்றும் வரையில் இங்கிருக்க வேண்டும். உங்களுக்கு அவர் வந்தாலும் விடுதலை, வராவிட்டாலும் விடுதலை. வராவிட்டாலும் உங்களை இங்கிருந்தே காடுகள் பக்கமாகத் தப்பும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே தற்சமயம் இங்கிருந்து யாரும் நகருவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியதன்றி, “இந்த இடத்தில் நாம் பேசினாலோ அல்லது நீங்கள் என் வாளுடன் உங்கள் வாள்களை மோதினாலோ கானாவின் வீரர்கள் கண்டு கொள்வார்கள். பிறகு நாம் கண்டிப்பாய் அழிக்கப்படுவோம். அப்படி அழிக்கப்படாமல் கொள்ளை மரக்கலத்தை அடைந்தால் அங்குள்ள மரக்கலத் தலைவன் உங்களனைவரையும் கொல்லத் தயங்கமாட்டான். நீங்கள் இங்கு சத்தத்தைக் கிளப்பி, கானாவின் காவலரை எழுப்பியதற்கே அவன் உங்களை ஒழித்து விடுவான். தவிர படைத் தலைவரின் திட்டத்தை உடைத்ததற்கும் உங்களைப் பொறுப்பாளியாக்கு வான். அவன் சீற்றம் எத்தன்மையது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.”

ஹிப்பலாஸ் நின்ற தோரணையைக் கண்டோ கையில் உருவிப் பிடிக்கப்பட்ட அவன் வாளைக் கண்டோ அடிமைகள் பயப்படவில்லை என்றாலும், அவன் பேச்சில் விளங்கிய பயங்கர விளைவுகள் அவர்கள் உள்ளத்தை ஒரு கலக்குக் கலக்கவே செய்தன. ஆகவே அவர்கள் சில வினாடிகள் ஏதோ முணுமுணுத்தனர். பிறகு மௌனமாக மலைப் பாறைகளில் சென்று மீண்டும் பதுங்கிப் படுத்துக் கொண்டார்கள். ஹிப்ப லாஸும் அதற்கு மேல் ஏதும் பேசாமல் பழையபடி மலைப் பாறைக்குச் சென்று பதுங்கிக் கொண்டான். வினாடிகள் நிமிடமாயின. நிமிடங்கள் மெல்ல மெல்ல ஜாமத்தின் பகுதி களை ஓட்டிக் கொண்டிருந்தன. மலைப் பாறை மறைவி லிருந்து நூற்றிரண்டு கண்கள் கானாவின் துறைமுக வாயிலில் பதிந்து கிடந்தன. அந்தக் கண்களைத் தாங்கிய ஐம்பத்தொன்று தேகங்களிலிருந்த இதயங்கள் படபடத்துக் கொண்டிருந்தன. எந்த நிமிடத்திலும் எதுவும் நேரலாமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த ஐம்பத்தொரு பேர் மட்டுமல்ல கொள்ளை மரக்கலத்திலிருந்து கொள்ளையர் தலைவனும் அவன் சகாக்களும் கூட கானாவின் கோட்டைவாயிலையே நோக்கிக் கொண்டிருந்தனர். கரையை நோக்கி விரைவதற்காக மரக்கலத்திலிருந்து இறக்கப்பட்ட சிறு படகுகளும் நீரில் ஆடிக்கொண்டு நின்றன.

‘நாழிகைக் கணக்கில் அமைதியே கானா துறைமுகத்தின் பிராந்தியத்தில் நிலவிக் கிடந்தது. கோட்டைக் காவலர் இருமுறை மாற்றப்பட்டும்கூட எந்தவித நிகழ்ச்சியும் ஏற்பட வில்லை. மூன்றாம் ஜாமம் முடிவதற்கு அடையாளமாக அவசியமான விளக்குகளைத் தவிர மற்ற பந்தங்கள் கோட்டைப் பிராந்தியத்தில் அணைக்கப்பட்டதால் இருள் அந்தப் பிராந்தியத்தில் நன்றாகக் கவிந்து கொண்டது. கோட்டைக்குள்ளிருந்த விடுதிகளின் விளக்குகளும் மெள்ள மெள்ள அணைந்ததைக் கண்ட அடிமைகளும் கொள்ளைக் காரர்களும், ‘சரி, இரவுக் கேளிக்கைகளுக்குப் பின்பு வழக்கம் போல் ஊர் அடங்குகிறது’ என்று தீர்மானித்தனர். ‘இளஞ் செழியன் தப்பி ஏதாவது செய்வதானால் அதற்கான சமயம் நெருங்கிவிட்டது’ என்பதை ஹிப்பலாஸ்கூட உணர்ந்ததால், என்ன நேரிடுமோ என்ற திகிலுடன் கோட்டை வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் கோட்டைக் காவலர் கண்களில்படாமல் இளஞ்செழியன் கோட்டையிலிருந்து பதுங்கிப் பதுங்கி வெளிவந்ததையும் முதலிலிருந்த தள்ளாட்டம் அவனிடம் சற்றும் இல்லாததையும் கவனித்த ஹிப்பலாஸ் மட்டுமன்றி அடிமைகள் கூடச் சொல்லவொண்ணா வியப்பை எய்தினர். பதுங்கிப் பதுங்கி மலைப்பாறை ஓரமாகச் சென்ற இளஞ்செழியன் ஒரு பெரும் பாறைமேல் நின்றதையும், பிறகு குனிந்து நெருப்புக் கற்களைத் தட்டித் தீயுண்டாக்கி ஒரு பந்தத்தைக் கொளுத்தி இருமுறை கப்பலை நோக்கி ஆட்டியதையும் கண்ட ஹிப்பலாஸின் ஆச்சரியம் எல்லை கடந்தது. ஆச்சரியம் எல்லை கடந்தாலும் ஆச்சரியத்தில் திளைப்பதற்கு அது சமயமல்லவென்று தீர்மானித்த ஹிப்பலாஸ் சொந்த உணர்ச்சிகளை ஒதுக்கித் தள்ளி, சண்டைக்குத் தயாரானதன்றி மற்ற அடிமைகளையும் வாட்களை உருவிக்கொள்ள உத்தரவிட்டான். அதே விநாடியில் விடு விடு என்று நூலேணிகள் மூலம் கப்பலிலிருந்து படகு களில் குதித்த கொள்ளைக்காரர்கள் படகுகளை வெகுவேக மாகச் செலுத்திக்கொண்டு கரையை நோக்கி விரைந்தனர்.

காரிருளில் கனவேகமாக வந்து கரையை அடைந்த படகுகளிலிருந்த கொள்ளைக்காரர்கள் தரையில் குதித்து, பாறைகளிலிருந்த தளைகளில் படகுகளைப் பிணைத்ததும், வாட்களை, உருவிக்கொண்டு தொலைவிலிருந்த இளஞ் செழியன் பந்தத்தை ஆட்டிச் சுட்டிக் காட்டிய வழியில் சிறிதும் சத்தமின்றிக் கோட்டைப் பகுதியின் நாலா பக்கங்களிலும் படர்ந்து பாறைகளில் தாவியும் சமவெளியில் குனிந்து குனிந்து ஓடியும் கோட்டைவாயிலை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

பாறையிலிருந்த இளஞ்செழியன் திடீரெனப் பந்தத்தை அணைத்துவிட்டு ஹிப்பலாஸ் இருக்குமிடம் ஓடிவந்து, “ஹிப்பலாஸ்! பேசாமல் என் பின்னால் வா, மற்றவர்களையும் வரச் சொல்” என்று கூறி நேராகக் கோட்டை வழியில் செல்லாமல் பக்கப் பகுதிகளிலிருந்து கரடுமுரடான பாதை வழியாகக்கோட்டையை அடைய முயன்றான்.

கொள்ளைத் தலைவனைப் பின்பற்றிச் சென்ற கொள்ளைக்காரர்களும், இளஞ்செழியனைப் பின்பற்றிச் சென்ற அடிமைகளும் இரு பிரிவாகக் கோட்டை வாயிலை அடைந்ததும், ஹிப்பலாஸையும் அடிமைகளையும் ஏன், கொள்ளைக்காரர்களையும் திகைக்க வைக்கும்படியான மற்றொரு நிகழ்ச்சிநடந்தது. அணைந்த கோட்டை விளக்குகள் வெகுதுரிதமாக ஏற்றப்பட்டதால் திடீரென எரிந்தன. கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் கோட்டை வாயில் கதவுகள் திறக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீரர்கள் கைகளில் பந்தங்களுடனும் உருவிய வாட்களுடனும் வெளியே பாய்ந்து வந்தனர். “திட்டம் குலைந்துவிட்டது. படகுகளுக்குச் செல்லுங்கள்” என்று கூவிய கொள்ளைத் தலைவன் பேச்சைக் கேட்ட அவன் வீரர்கள் படகுகளை அடையத் திரும்பி ஓட முற்பட்டார்கள். ஆனால் படகுகள் பிணைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென பந்தங்கள் ஒளிர்விட்டன. இலி-ஆஸு வின் கவசமணிந்த வீரர்களில் பலர் நீர்க் கரையை யாரும் அணுக முடியாமல் தடுத்து நின்றதைக் கண்டதும், ‘மோசம் போய்விட்டோம்’ என்று தீர்மானித்த கொள்ளையர் போரிட்டுத் தப்ப முயன்றார்கள். கோட்டை வீரர்கள் ஏற்பாடு கனகச்சிதமாக இருந்ததால் சண்டை துவங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகக் கொள்ளைக்காரர்கள் பலர் மாண்டனர். மற்றவர் சிறைப்பட்டனர். ஹிப்பலாஸையும் இளஞ்செழியனையும் தவிர மற்றக் கொள்ளைக்காரர்களை யும் அடிமைகளையும் சிறைபிடித்துத் தள்ளிக்கொண்டு சென்ற கோட்டைக் காவலரின் தலைவன் போகும்போது இளஞ்செழியனை நோக்கி, “மன்னர் தங்களை மீண்டும் பார்க்க விரும்புகிறார். சீக்கிரம் செல்லுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றதைக் காதில் வாங்கிக் கொண்ட கொள்ளையர் தலைவனுக்கு அப்பொழுதுதான் ஏதோ பலமான சதி நடந்திருக்கிறது என்பது புலனாயிற்று. அதன் விளைவாகத் தன்னை எரித்து விடுவதுபோல் பார்த்த கொள்ளைத் தலைவனை நோக்கி, “அஞ்சவேண்டாம். நாம் மீண்டும் சந்திப்போம். மன்னர் இலி-ஆஸு கருணைக் கடல்” என்றும் கூறி நகைத்தான் இளஞ்செழியன்.

கோட்டைக் காவலர் தலைவன் பேசிய பேச்சு, அவன் இளஞ்செழியனிடம் நடந்துகொண்ட விந்தையான முறை இவற்றைக் கண்டு ஏதும் புரியாமல் நின்ற ஹிப்பலாஸைப் பார்த்துச் சிரித்த இளஞ்செழியன், “வா ஹிப்பலாஸ்! மன்னர் காத்திருக்கிறார்” என்றான்.
“எந்த மன்னர்?” ஏதும் புரியாமல் வினவினான் ஹிப்பலாஸ்.

“இங்கிருப்பவர் ஒரே மன்னர்தான்?” என்றான் இளஞ் செழியன்.

“ஆமாம். இலி-ஆஸுதான் இங்கு மன்னர்.”

“பின் ஏன் சந்தேகம்?”

“அவரையா சந்திக்கப் போகிறீர்கள்?”

“ஆமாம்.”

“உங்களுக்குப் பைத்தியம் ஏதாவது உண்டா?”

“இல்லை.”

“அப்படியானால் வாருங்கள். இப்பொழுதே ஓடி மலைக்காடுகள் வழியாகத் தப்பி விடுவோம்.”

“மலைக் காடுகள் வழியாகப் போவானேன். கோட்டைக்கு இதோ நேர் வழி இருக்கிறது.”

இதைக் கேட்ட ஹிப்பலாஸ் சொன்னான்: “பிரபு! இங்கு நடந்துள்ள விஷயங்கள் விசித்திரமாயிருக்கின்றன. எப்படியோ கொள்ளைக்காரர்களை மோசம் செய்து விட்டீர்கள். ஆனால் இலி-ஆஸு கொள்ளைத் தலைவனல்ல. மிகவும் தந்திரசாலி. பயங்கரமான மனிதனென்று கேள்வி.

அவன் வார்த்தையை நம்புவது பிசகென்றுகூட யவனநாட்டில் சொல்வார்கள். காவலர் போய்விட்டார்கள். வீணாகச் சிங்கத்தின் வாயில் தலையை நுழைக்கவேண்டாம்.”

இளஞ்செழியன் தன் கையை ஹிப்பலாஸின் தோளில் ஆதரவாக வைத்துக்கொண்டு, “ஹிப்பலாஸ்! அடிமை வர்த்தகர்களிடமிருந்து தப்பினோம். இப்பொழுது கொள்ளைக்காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறோம். முதன் முதலில் டைபீரியஸின் விஷத் துளிகளிலிருந்து தப்பினேன். பின் உன் உதவியால் சுறாக்களிடமிருந்து மீண்டேன். இத்தனையிலும் ஏதோ மனித சக்தியை மீறிய ஒரு சக்திதான் நமக்குத் துணை நின்றிருக்கின்றது. அந்தச் சக்தி இனி ஏன் கை விடுமென்று நினைக்கிறாய்? தவிர எந்தக் கொடியவனிடமும் ஒரு நல்லகுணமிருக்கும். இலி-ஆஸுவிடமும் ஒரு நல்ல குணமிருக்கிறதென்று நினைக்கிறேன். அப்படியில்லாவிட்டால் அவனை ஏமாற்றவும் வழி இருக்கிறது” என்றான்.

“என்ன வழி படைத் தலைவரே?” என்று கேட்டான் ஹிப்பலாஸ்.

“பணத்தின் வழி” என்று கூறினான் இளஞ்செழியன்.

“பணத்தின் வழியா!”

“ஆம். மேற்கு நாடுகளில் பணத்தாசை அதிகமாயிருக் கிறது. இல்லாவிட்டால் யவனர், எகிப்தியர், அராபியர் இவர்கள் தமிழகம் தேடி ஏன் வருகிறார்கள்? கடலின் கொந்தளிப்பையும் ஆகாயத்தின் சூறாவளியையும் எதிர்த்து கிழக்கு நோக்கி ஏன் ஓடுகிறார்கள்? பணப் பித்துதான் காரணம் ஹிப்பலாஸ். அந்தப் பணப்பித்து நமக்குப் பெரும் பாதுகாப்பு. ஒன்றுக்கும் பயப்படாதே, வா” என்று கூறிய இளஞ்செழியன் ஹிப்பலாஸை அழைத்துக் கொண்டு கோட்டைக்குள் நுழைந்தான். கோட்டை வாயிலைத் தாண்டியதுமே அவர்களை எதிர்கொண்ட காவலனொரு வன் அருகேயிருந்த பெரு மாளிகையொன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்றான். மாளிகையில் பந்தங்கள் பிரமாதமாக எரிந்து கொண்டிருந்தன. உள்ளிருந்து பாடலும் ஆடலும் கூச்சலும் சிரிப்பொலியும் வந்துகொண்டிருந்தன. மாளிகை யின் பல கட்டுக் காவல்களைத் தாண்டி இளஞ்செழியனையும் ஹிப்பலாஸையும் அழைத்துச் சென்ற காவலன் மாளிகையின் பெருமண்டபக் கதவுகளை அடைந்ததும் அவர்களை வெளிப்புறத்தில் இருக்கச் செய்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றான். அவன் திரும்பி வருவதை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த இளஞ்செழியன் வாழ்க்கையில், இன்னொரு திருப்பத்தை உண்டாக்கக் கூடிய சம்பவமொன்று திடீரென அந்தக் கதவுக்கருகில் நிகழ்ந்தது. இலி-ஆஸுவைப் பற்றிய நினைப்புக்களில் ஆழ்ந்திருந்த இளஞ்செழியன் கன்னத்தின்மீது திடீரென வந்து விழுந்தது ஒரு புஷ்பச் செண்டு. அது வந்த திக்கை நோக்கித் திரும்பிய இளஞ் செழியன் தூரத்திலிருந்த தூண் மறைவிலிருந்து ஒரு அழகிய பெண் தன்னை அருகில் வரும்படி சைகை செய்வதைக் கண்டான். ஆனால் இருந்த இடத்தைவிட்டு இளஞ்செழியன் நகராததைக் கண்ட அந்தப் பெண் ஒரு வினாடி யோசித்து விட்டுப் பிறகு கனவேகமாக மறைவிடத்தை விட்டு வெளியே வந்து இளஞ்செழியனை அணுகினாள். அவள் அழகிய கருவிழிகள் திருட்டுத்தனமாக ஒரு கணம் அப்புறமும், இப்புறமும் திரும்பின. மறுகணம் அவள் தன் அழகிய உதடுகளை இளஞ்செழியன் காதுக்கருகில் கொண்டு சென்று இப்புறமும் அப்புறமும் பார்த்தவாறு, “அதிகமாகப் பேச நேர மில்லை. மன்னர் உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்டால் அலீமா வேண்டுமென்று சொல்லுங்கள்” என்று கூறினாள். பிறகு விடு விடு எனத்தூண்களிருந்த பக்கம் சென்று மறைந்தாள்.

இந்த விந்தையை ஹிப்பலாஸும் கவனித்தான். ஏற்கெனவே அன்றிரவு நிகழ்ந்த சம்பவங்கள் அவன் மூளையைக் குழப்பியிருந்தன. திடீரென இலி-ஆஸுவின் மாளிகைக்கு வருவது, யாரோ ஒரு பெண் வந்து படைத் தலைவனிடம் பேசுவது, எல்லாம் சேர்ந்ததால் அவன் புத்தி பெரும் குழப்பத்திலிருந்தது. இந்தக் குழப்பத்தில் சில நிமிடங்களை ஹிப்பலாஸ் செலவிட்டதும் மண்டபக் கதவைத் திறந்து கொண்டு வெளிவந்த காவலன் இளஞ்செழியனை அழைத்துக்கொண்டு அந்தக் கேளிக்கை மண்டபத்துக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து சென்ற ஹிப்பலாஸின் குழம்பிய மூளைக்கு அந்தக் கேளிக்கை மண்டபம் பெரும் சாந்தியை அளித்தது. சாந்தியை அளிக்காததும் ஒன்றிருந்தது. அதுதான் மண்டபத்தின் நட்டநடுவில் பெரிய ஆசன மொன்றில் வீற்றிருந்த இலி-ஆஸுவின் பயங்கர உருவம். அந்த உருவத்தைப் பார்த்ததும் பிரமை பிடித்தவன்போல் நின்ற ஹிப்பாஸை நோக்கி ரத்த ரேகைகள் நிரம்ப ஓடியதால் செக்கச் செவேலென்று சிவந்து கிடந்த இலி-ஆஸுவின் பெரு விழிகள் ஒரு முறை உருண்டன. அடுத்த வினாடி நகரத்தையே எழுப்பவல்ல இடிநகையொன்று மண்டபத்தைக் கிடுகிடுக்கச் செய்தது. தன் எதிரே நின்ற இருவரையும் நோக்கிப் பெரும் பிசாசுபோல் நகைத்தான் இலி-ஆஸு.

Previous articleYavana Rani Part 2 Ch5 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here