Home Sandilyan Yavana Rani Part 2 Ch7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

93
0
Yavana Rani Part 2 Ch7 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch7 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 7 இதோ பரிசு!

Yavana Rani Part 2 Ch7 | Yavana Rani | TamilNovel.in

கானா துறைமுகத்துப் பெருமாளிகையின் மணி மண்டபத்துக்குள் நுழைந்தபோதே அங்கு கண்ணுக்கெதிரே விரிந்த கேளிக்கை விலாச காட்சிகளைப் பார்த்துப் பெருமளவில் பிரமிப்பும் ஓரளவு சாந்தியையும் அடைந்த யவனனான ஹிப்பலாஸின் மனம், மண்டபத்தின் நடுவே அரியணையில் அமர்ந்திருந்த ராட்சஸ உருவத்தைக் கண்டதும் சிறிது நடுக்கம் கொண்டதென்றால், அந்த ராக்ஷஸ உருவத்தின் பேய்ச் சிரிப்பு அந்த நடுக்கத்தை உச்ச நிலைக்குக் கொண்டு போயிற்று. இளஞ்செழியனைப் போலவே மன உறுதி வாய்ந்தவனும் எதற்கும் அஞ்சாதவனுமான ஹிப்பலாஸ் சாம்பிராணி நாட்டு மன்னனான இலி-ஆஸுவின் பயங்கர சிட்சைகளைப் பற்றி அறியாதவனாக இருந்திருந்தால் அன்று இலி-ஆஸு நகைத்ததைப்போல் பதின்மடங்கு அதிகமாக நகைத்திருந்தாலும் சற்றும் அஞ்சியிருக்க மாட்டான். தூக்கில் தொங்கலாடுவதானாலும், வாளால் வெட்டப்பட்டுத் தலையை இழப்பதானாலும், அச்சமென்பது லவலேசமும் இல்லாமல் உயிரிழக்கச் சித்தமாகும் திடமனம் வாய்ந்த ஹிப்பலாஸ், இலி-ஆஸுவின் பிரக்யாதிகளைப் பற்றி ஏற்கெனவே நன்றாக அறிந்திருந்தானாதலால், மகாவீரனான அவன் மனமும் தனக்காக மட்டுமன்றித் தன் தலைவனான இளஞ்செழியனுக்காகவும் பரிதாபப்பட்டதல்லாமல் நடுங்கவும் செய்தது. சாம்பிராணி நாட்டு மன்னன், தன் எல்லையில் துராக்கிருதமாகக் காலை வைப்பவர்களின் உயிரை வாங்குவதில்லையென்றும், அவயவங்களில் ஏதாவது ஒன்றைமட்டும் வாங்கி சாம்பிராணித் தோட்டங்களில் வேலைக்கு அனுப்பி விடுவானென்பதும் பிரசித்தமாயிருந்தது. அவனுடைய தோட்டங்களில், ஒரு காலை மட்டும் இழந்த நொண்டிகள் பலர் அடிமைத் தொழில் செய்து வந்தார்கள். மற்றும் பல அடிமைகள் இடது கையை மட்டும் இழந்தவர்கள். சாம்பிராணிப் பாலை இறக்க ஒரு கையும் ஒரு காலும் இருந்தால் போதுமென்ற கருத்துடனிருந்த இலி-ஆஸு, அங்கு அனுப்பப்படும் அடிமைகளில் யாராவது ஒருவன் அதிகமாகப் பேசினானென்றோ அல்லது சதித்தொழிலில் இறங்கினானென்றோ கேள்விப்பட்டால் அவன் நாக்கையும் துண்டித்து வந்தான். இப்படி நொண்டிகளும், முடங்களும், நாக்கிழந்ததால் ஊமையாகி விட்டவர்களும் கூட்டம் கூட்டமாக அடிமைத் தொழில் புரிந்து வந்த சாம்பிராணிக் காட்டைப்பற்றி நினைப்பதற்கே அக்கம் பக்க நாடுகளிலிருந்தவர்கள் அச்சப்பட்டு வந்தார் களென்றால் அந்த நாட்டு மன்னனைப்பற்றி நினைத்தால் எந்த மனோ நிலையோடு இருப்பார்கள்! நினைத்த மாத்திரத்திலேயே கதிகலங்கக்கூடிய பிரசித்தி வாய்ந்த அந்த மன்னனின் முன்னே நிற்பவர்களின் மனோநிலைதான் எப்படியிருக்கும். இதையெல்லாம் அறிந்தவனும் இளஞ் செழியனுடன் நின்றவனுமான ஹிப்பலாஸ், இலி-ஆஸுவின் இடி நகையைக் கேட்டு இதய கிலி கொண்டதில் தவறு என்ன இருக்கமுடியும்?

அசுரச் சிரிப்புச் சிரித்த இலி-ஆஸுவின் பிரும்மாண்ட மான உருவத்தை இதய கிலியுடன் ஏறெடுத்து நோக்கிய ஹிப்பலாஸ் எதையும் வினாடி நேரத்தில் ஆராய்ந்து விடக் கூடியவனும் தான் நினைத்த காரியத்தைச் சாதிக்கவல்லவனு மான பயங்கரமான ஒரு மனிதனிடம் தானும் படைத் தலைவனும் சிக்கிவிட்டதை உணர்ந்தான். ஆறரை அடிக்கு மேலாக உயர்ந்திருந்ததாலும் மூன்றடி சுற்றளவுக்குக் குறையாமலிருந்ததாலும் பெருந்தோற்றத்தைப் படைத்திருந்த இலி-ஆஸுவின் கையிலும் காலிலும் பெரும் சதைகள் மண்டி நன்றாக உரப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த ஹிப்பலாஸ் அந்தக் கைகால்களின் தாக்குதலுக்கு இலக்காகிறவனின் எலும்புகள் முறிய வினாடி நேரம் பிடிக்காதென்ற முடிவுக்கு வந்தான். அதிகமான புலால் உணவினாலும் பெருமளவில் மதுவை அருந்தி வந்ததாலும் இலி-ஆஸுவின் கன்னச் சதைகள் அவன் தட்டை மூக்கின் பக்கப்பகுதிகளிலும் குண்டு குண்டாகப் புடைத்து அவன் ரத்தவிழிகளுக்கும் அளவுக்கதிகமாக அடர்ந் திருந்த புருவங்களுக்கும் பயங்கரத் தோற்றத்தை அளித்ததையும் ஹிப்பலாஸ் கண்டு, “இனிமேல் விதியின் கரம்தான் நமக்கு உதவவேண்டும்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

ஹிப்பலாஸ், இப்படித் தனது கண்களால் இலிஆஸுவை எடை போட்டுக் கொண்டிருந்த சில வினாடிகளில் சோழர் படையின் உபதலைவனான இளஞ்செழியன் அந்தக் கேளிக்கை மண்டபத்தின் சிறப்பையும் அங்கு சுற்றிலும் தெரிந்த காட்சியையும் கண்டு பிரமித்துக்கொண்டிருந்தான். ‘இலி-ஆஸுவின் இந்தக் கேளிக்கை மண்டபத்தைப் பாராததினால்தான் வான்மீகி முனிவர் ராவணனுடைய அந்தப்புரத்தைப் பற்றி அத்தனை விமரிசையாக வர்ணித்திருக்கிறார் போலிருக்கிறது’ என்று நினைத்த இளஞ் செழியன் கேளிக்கை மண்டபத்தின் பெரும் தூண்களுக்குத் தங்கக் கவசங்கள் போடப்பட்டிருந்ததைப் பற்றியும் கூரையில் பிரமாதமான வண்ணச் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்ததையும் பார்த்து, ‘இதில் யவனர் வேலைப்பாடும் கலந்திருக்கிறது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கொள்ளைக்காரர்கள் தலைவிதி மட்டுமன்றி, தன் தலைவிதியும் நிர்ணயிக்கப்படவிருக்கும் அந்தச் சமயத்திலும் கேளிக்கை மண்டபத்தின் உல்லாசச் சூழ்நிலை தன் மனத்தே ஓர் இன்பத் தென்றலை வீசியதை எண்ணிப் பார்த்த இளஞ்செழியன் மனித இதயத்தின் சபலத்தை நினைத்து வியந்தான். பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டதால் விதவிதமான எழில்களையுடைய பருவப் பெண்களால் நிரம்பிக் கிடந்த அந்தக் கேளிக்கை மண்டபம் பெரும் சொர்க்க லோகமாகவே காட்சியளித்தது. காலில் நீண்ட உறைகளையும் மார்பில் கச்சைகளையும் மட்டுமே அணிந்த அராபியப் பெண்கள் நால்வர் காலில் சலங்கை கட்டி நின்றிருந்ததால் அவர்கள் அப்பொழுதுதான் நாட்டியத்தை நிறுத்தியிருக்கிறார்கள் என்று தீர்மானித்தான் இளஞ்செழியன். யவன நாட்டுப் பெண்கள் சிலரும் மற்றும் கொள்ளைக்காரர்களால் அவ்வப் பொழுது பிடிக்கப்பட்ட பெர்பரீய நாட்டு அழகிகள் சிலரும் நடனத்துக்குத் துணைபுரிய நரம்பு வாத்தியங்களையும் தாள வாத்தியங்களையும் வைத்துக் கொண்டிருந்ததையும் படைத் தலைவன் பார்த்ததன்றி, அந்த வாத்தியங்களில் தமிழகத்து மகர யாழும் சகோட யாழும் கூட இருப்பதைக் கண்டு சொந்த நாட்டுக் கலை அத்தனை தூரம் பரவியிருப்பதை நினைத்துப் பெருமிதம் அடைந்ததல்லாமல், ‘தமிழகத்தின் கலை இங்கு பரவியிருக்கிறதேயொழியப் பண்பாடு பரவவில்லையே’ என்று துக்கமும் அடைந்தான். இந்தப் பெண்களைத் தவிர நாலைந்து பெண்கள் இலி-ஆஸுவுக்கு அவ்வப்பொழுது மதுவை ஊட்ட, பொன் மதுக் குப்பிகளையும் மதுக் கிண்ணங்களையும் தாங்கியிருப்பதையும் கவனித்த இளஞ்செழியன், ‘இலி-ஆஸு அதிகமாகக் குடித்து நிதானமிழந்திருந்தால் என்ன செய்வது?’ என்று சிந்தித்தான். அந்த சிந்தனைக்கு இலி-ஆஸுவின் பிசாசுச் சிரிப்பும் ஆதாரமாகவே நின்றது.

ஆனால் அத்தனை குடியிலும் இலி-ஆஸு சிறிதும் நிதானத்தை இழக்கவில்லையென்பதை அவனுடைய அடுத்த வார்த்தைகள் நிரூபித்தன. இரண்டு முறை பெரும் சிரிப்புச் சிரித்துவிட்டு, தனது விழிகளையும் எதிரே நின்ற இருவர் மீதும் இரண்டு வினாடிகள் ஓட்டிய இலி-ஆஸு கடைசியில் இளஞ் செழியன் மீது தன் கண்களை நிலைநாட்டி, “உன்னைப் பார்த்தால் தமிழனாகத்தான் தெரிகிறது” என்று தெரிவித்து, அது சரிதானா என்பதை அறியக் கேள்வி கேட்கும் முறையில் தன் புருவங்களையும் சற்றே உயர்த்தினான்.

இளஞ்செழியன் சிறிதும் அச்சமின்றித் தன் கண்களை உயர்த்தி இலி-ஆஸுவின் கண்களோடு அவற்றை ஒரு வினாடி இணைத்துவிட்டுச் சொன்னான், “ஆம், நான் தமிழன்தான்” என்று.

அந்தப் பதிலில் புதைந்து கிடந்த பெருமிதத்தை இலி-ஆஸு கவனிக்கத் தவறாததால் அவன் பெரும் உதடுகளிடை புன்சிரிப்பு ஒன்று படர்ந்தது. அதைத் தொடர்ந்து, “பல தமிழர்களைப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் உன்னைப் போல்தான்” என்றான் இலி-ஆஸு.

இளஞ்செழியனும் இலி-ஆஸுவை நன்றாக ஏறெடுத்து நோக்கி, “என்னைப் போலவா? மன்னர் சொல்வது விளங்க வில்லையே?” என்றான்.

“இங்கு வர்த்தகத்துக்குத் தமிழர்கள் வருகிறார்கள்…” என்றான் இலி-ஆஸு.

“ஆம், வருகிறார்கள்.”

“வர்த்தகத்தில் நிபுணர்கள்.” .
“மன்னரின் பாராட்டு தமிழகத்துக்குப் பெருமை தருகிறது.”

“அதுமட்டுமல்ல, யவன நாட்டுப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.”

“வர்த்தகமும் கொள்ளையும் ஒன்றென்பது மன்னர் கருத்துப் போலிருக்கிறது?”

இதைக் கேட்ட இலி – ஆஸு நகைத்து விட்டுத் தன்னருகே நின்ற இரண்டு அராபிய அழகிகளைப் பார்த்துச் சொன்னான், “பார்த்தீர்களா! தமிழர்கள் வியாபாரத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் கெட்டிக்காரர்கள். தவிர அவர்கள் நாட்டைப் பற்றிப் பேசினால் அவர்களுக்கு ஏற்படும் பெருமை சொல்ல முடியாது. இதோ இவனைப் பாருங்கள். தமிழகம் என்று சொல்லும் போது முகத்தில் எத்தனை பெருமைக்குறி” என்று .

“மன்னவா!” என்று இளஞ்செழியன் மெள்ள அழைத்தான்.

“என்ன தமிழா!”

“தங்கள் பெயர் இலி-ஆஸு என்று சொல்கிறார்கள்.”

“ஆம்.”

“தாங்கள் தெய்வத்தைப் போலவே தாய் நாட்டையும் நேசிக்கிறீர்களல்லவா?”
“சந்தேகமென்ன? இந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைத் தொட்டாலும் கையை வெட்டிவிடுவேன். ஒரு அவதூறு பேசினாலும் நாக்கை நறுக்கி விடுவேன்.”

“தமிழகத்தில் இதையெல்லாம் செய்ய மாட்டோம். ஆனால் மன்னரைப் போலவே நாங்களும் நாட்டுப்பற்று உடையவர்கள். கொள்ளை, கொலை, சூது எதுவும் தமிழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை . அதனால்தான்..”

“இங்கு கொள்ளையடிக்க வந்த அந்த நாய்களைப் பிடித்துக் கொடுத்தாய்” என்று சிலாகித்து மீண்டும் இடி நகை நகைத்த இலி-ஆஸு மேலும் இளஞ்செழியனை நோக்கி, “இலி-ஆஸு எப்படி ஒருவர் செய்த கெடுதலை மறப்ப தில்லையோ, அப்படியே ஒருவன் செய்த உதவியையும் மறப்பதில்லை. நீயும் அதோ உன்னுடன் வந்திருக்கும் யவனனும் இன்றிரவு இளைப்பாறுங்கள். இந்தப் பெண்களில் உங்களுக்கு வேண்டியவர்களைப் பணிவிடைக்கு அழைத்துச் செல்லுங்கள். நாளை பேசுவோம். இன்றிலிருந்து நீங்கள் இலி-ஆஸுவின் விருந்தினர். உலகத்திலுள்ள சிறந்த மது வகையறாக்கள் அனைத்தும் இருக்கின்றன. எவ்வளவு வேண்டுமானாலும் அருந்துங்கள்” என்று கூறிவிட்டுப் பக்கத்திலுள்ள பெண்களில் இருவரை அழைத்து, “இவர் களைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டான்.

“பெண்கள் தேவையில்லை மன்னவா…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த இளஞ்செழியனை சைகையினாலேயே தடுத்த இலி-ஆஸு, “பெண்களும் மதுவும் தேவையில்லை யென்றால் மனிதன் பிறக்கவே தேவையில்லை. உம், போ” என்று கையை ஆட்டியவன், இளஞ்செழியன் நகரத் தொடங்கியதும் மீண்டும் அவனை, “தமிழா! யாரும் எண்ணவும் முடியாத சிறந்த பரிசு ஒன்றை உனக்குத் தருகிறேன் போ” என்று காதோடு காதாக ஓதினான்.

காதுக்குள் சூறாவளியடிப்பது போல் இலி-ஆஸுவின் பெரு உதடுகள் புஸ் புஸ் என்று காற்றையும் விட்டுச் சொன்ன அந்தப் பரிசைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமலே நடன அழகி களைத் தொடர்ந்து சென்ற இளஞ்செழியன், மாளிகையின் கோடியிலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அதே பெண்கள் ஹிப்பலாஸுக்கு அந்த அறையின் வெளியிலிருந்த மஞ்சத்தைச் சுட்டிக் காட்டி, “இங்கு உட்கார்” என்று அராபிய மொழியில் சொன்னார்கள். ‘தமிழகத்திலிருந்து மேலை நாடுகளுக்கு வந்த வர்த்தகர்களிடமிருந்து தமிழைக் கற்றுக் கொச்சையாகப் பேசினாலும் கருத்துக்களைப் புரிய வைத்தான் இலி-ஆஸு. ஆனால் இந்தப் பெண்களுக்குத் தமிழ் அடியோடு தெரியாது போலிருக்கிறதே’ என்று எண்ணிய இளஞ்செழியன் அவர்கள் சைகையிலிருந்து அவர்கள் அபிப்பிராயத்தைப் புரிந்து கொண்டானாகையால், “வேண்டாம். அவர் என்னுடன் அறையிலேயே தங்கட்டும்”

என்று கையை ஹிப்பலாஸையும் அறையையும் மாறி மாறிச் சாடை காட்டி அறிவித்தான்.

இதைக் கண்ட அந்த அராபிய அழகிகள் இருவரும் கலகலவென நகைத்தார்கள். பிறகு இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். கடைசியாக, “முடியாது” என்பதற்கு அறிகுறியாகத் தலைகளை இருவரும் சேர்த்து ஆட்டினார்கள். அடுத்தபடி இளஞ்செழியனுக்கும் அந்த மங்கையருக்கும் சைகையிலேயே சம்பாஷணை தொடர்ந்தது.
“ஏன்?” என்று சாடை காட்டிக் கேட்டான் இளஞ் செழியன்.

“அவன் அடிமை” என்று சாடை காட்டினார்கள் அவர்கள்.”

“அவன் அடிமையில்லை” என்று இளஞ்செழியன் உணர்த்த முயன்றான்.

“நாங்கள் நம்பவில்லை” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார்கள் அந்த மங்கையர்.

இந்த சாடை வேடிக்கையை வெறுப்புடன் கவனித்த ஹிப்பலாஸ், “பிரபு! நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன். நீங்கள் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். எதற்கு இவர்களோடு தொல்லை?” என்று கூறவே இளஞ்செழியன் அறைக்குள் நுழைந்தான். ஒரு சிற்றரசனுக்கு வேண்டிய சகல சௌகரியங்களும் அந்த அறையில் இருந்தன. அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த யவன நாட்டுப் பொன் விளக்குகள் இரண்டை அந்த அராபிய அழகிகள் இருவரும் ஏற்றினார்கள். பிரும்மாண்டமான அறை மத்தியிலிருந்த மஞ்சத்தில் பட்டு மெத்தையொன்று விரிந்து கிடந்தது. அதைத் தட்டி திண்டுகளையும் தலையணைகளையும் வைத்தாள் அழகிகளில் ஒருத்தி. இன்னொருத்தி அறைமூலையில் பந்தமொன்றைக் கொளுத்திச் சாம்பிராணியை அதன்மீது தூவினாள். பந்தத்தில் புகையெழுந்து தூபம் கமழத் தொடங்கி யதும் மங்கையர் இருவரும் புது உடைகள் இரண்டை பக்கத்து அறையிலிருந்து கொண்டு வந்து இளங்செழியனுக்கு ஒன்றையும் ஹிப்பலாஸுக்கு ஒன்றையும் கொடுத்தார்கள். ஹிப்பலாஸ் வெளித் தாழ்வாரத்தின் தூண்கலிருந்த மூலைக்குச் சென்று தன் ஈர உடைகளைக்களைந்து வேறு உடை உடுத்திக் கொண்டிருந்தான். உடை கொடுத்ததும் ஹிப்பலாஸைச் சிறிதும் கவனிக்காத அந்த மங்கையர் இருவரும் இளஞ்செழியனுக்கு உடையணிவிக்கத் தொடங்கினார்கள். “வேண்டாம், வெளியே செல்லுங்கள்” என்று அவர்களை என்ன இறைஞ்சியும் அந்த மங்கையர் கேட்காமல் அவன் மேலங்கியை அவிழ்க்கத் தொடங்கியதும் இளஞ்செழியன் வெகுண்டு, “சே! சனியன்களா!” என்று சீறி இருவர் கழுத்தையும் பிடித்து உந்தி வாசற்படிக்கு வெளியில் தள்ளிக் கதவைச் சாத்திக் கொண்டு, ஈர உடைகளைக்களைந்து புத்துடை உடுத்துக் கதவை மீண்டும் திறந்தான். அப்பொழுதும் வெளியே நின்ற மங்கையர் அவனைப் பார்த்து நகைத் தனர். பிறகு அவனைப் பஞ்சணையில் படுத்துக் கொள்ளச் சொல்லிக் கால்களை வருடினர். வேறு வழியில்லாமல் அந்தப் பணிவிடைகளுக்கு ஆளான இளஞ்செழியன் கண்களை மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்தான். அவன் கண்களை மூடியதும் சற்று நேரம் அவன் முகத்தை ஊன்றிக் கவனித்த அந்த மங்கையர், அவன் தூங்கிவிட்டானென்று முடிவு செய்து கதவை மெள்ளச் சாத்திவிட்டு அறையைவிட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் ஹிப்பலாஸ் உள்ளே ஓசைப்படாமல் வந்து, “பிரபு!” என்று மெள்ள அழைத்தான். அவன் அழைத்ததால் துணிவுடன் கண்ணை விழித்த இளஞ்செழியன், “என்ன ஹிப்பலாஸ்!” என்று வினவினான்.

ஹிப்பலாஸ் வழக்கம் போல் தன் நகைச்சுவையைக் காட்டத் தொடங்கி, “இங்கு தங்களுக்கு ஆண் துணை கிடைக் காது போலிருக்கிறதே?” என்றான்.

“நீ யார்? பெண்ணா ?” என்று வினவினான் இளஞ் செழியன்.

“இல்லை, அதனால்தான் என்னை அறைக்கு வெளியே தள்ளிவிட்டார்கள்” என்று சொல்லிப் புன்முறுவல் கோட்டி னான் ஹிப்பலாஸ்.

“சரி சரி; உறங்கு ஹிப்பலாஸ். விடிய இன்னும் அரை ஜாமம் கூட இல்லை. சற்றாவது தூங்குவோம்” என்றான் இளஞ்செழியன்.

“உறங்கவா?” ஹிப்பலாஸின் கேள்வியில் ஆச்சரியம் மண்டிக் கிடந்தது.

“ஆமாம்” திட்டமாகப் பதில் கூறினான் இளஞ் செழியன்.

“உறக்கம் பிடிக்குமா இப்போது?”

“ஏன் பிடிக்காது?”

“இருப்பது இலி-ஆஸுவின் மாளிகை.”

“அதனாலென்ன?”

“நாளைக்கு நமது கதி என்னவென்று சொல்ல முடியாது.”

“ஏன் முடியாது?”

“இலி-ஆஸு மிகவும் துஷ்டன்.”

“ஆனால் எனது நண்பன்.”

“உங்கள் நண்பனா?”

“ஆமாம்.”

“எத்தனை நாளாக?”

“ஒரு ஜாம காலமாக?”

“எப்படி நண்பனானான்?”

“நான் செய்த உதவியால்.”

“கொள்ளைக் கப்பலைப் பிடித்துக் கொடுத்ததாலா?”

“ஆமாம்.”

“நீங்கள் எங்கு பிடித்துக் கொடுத்தீர்கள்? நீங்கள்தான் துறைமுகக் கோட்டை வாயிலுக்கெதிரில் தள்ளாடி மயக்கமாய் விழுந்தீர்களே. உங்களைக் காவலர் தூக்கிக் கொண்டு போனதை நானே பார்த்தேனே?”

ஹிப்பலாஸின் இந்த வார்த்தைகளைக் கேட்ட இளஞ்செழியன் மெல்ல நகைத்துவிட்டு நடந்ததை விவரிக்கத் தொடங்கினான். “ஹிப்பலாஸ்! இந்தக் கொள்ளைக்காரர் களிடமிருந்து சுலபத்தில் நாம் தப்ப முடியுமென்று நான் நினைத்திருந்தால் என்னைவிடப் பெரிய முட்டாள் உலகத்தில் இருக்க முடியாது. பணத்தாசையால் உயிரை வெறுத்து எரித்திரியக் கடல் பிராந்தியத்தில் கொள்ளையடிப்பவர்களை, அந்தப் பணத்தாசையைக் காட்டியே தீர்த்துக் கட்ட வேண்டுமென்று முடிவு செய்தேன். அந்த ஆசையைக் காட்டியே அவர்களைக் கானாவுக்கு அழைத்து வந்தேன். சாம்பிராணி நாட்டு மன்னன் குணத்தைப் பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். தனது நாட்டுச் சாம்பிராணியிடம் அவனுக்கு உயிர். அதைத் தொட யார் முயன்றாலும் அவர்களை ஒழித்துவிடத் தயங்கமாட்டான் என்பது பிரசித்தம். ஆகவே அவன் ஆட்களிடம் இந்தக் கொள்ளையரைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் தப்பவே முடிவு செய்தேன். ஆனால் கோட்டைக்குள் நுழைவது எப்படி? போரிட்டா? முடியவே முடியாது. தூரத்தில் யராவது வருவதைக் கண்டால் ஈட்டி எறிந்து கோட்டைக் காவலர் கொன்றுவிடக் கூடும். ஆகவே மயக்கமடைந்தவன் போல் பாசாங்கு செய்தேன். தள்ளாடினேன். விழுந்தேன். மயக்கம் பல காரியங்களுக்கு நல்ல மருந்து ஹிப்பலாஸ்…” என்று சொல்லிச் சற்று நிதானித்தான் படைத்தலைவன்.

“பிறகு?” படைத்தலைவன் தந்திரத்தைக் கேட்டதால் ஆச்சரியம் பூரணமாகத் தொனித்த குரலில் வினவினான் ஹிப்பலாஸ்.

இளஞ்செழியன் மேலும் தொடர்ந்தான்: “பிறகு காவலர் விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டேன். எனக்குச் சிகிச்சை செய்தார்கள். நான் மெள்ளக் கண்விழித்து, ‘அவசரம்! சாம்பிராணிக்குவியலுக்கு ஆபத்து. கோட்டைத் தலைவனை உடனே பார்க்க வேண்டும்’ என்று அரையும் குறையுமாக உளறுவதைப் போல் பாசாங்கு செய்தேன்.

காவலர் ஓடினார்கள். தலைவன் வருவானென்று எதிர் பார்த்தேன். ஆனால் தலைவனுக்குப் பதில் இலி-ஆஸுவே வந்தான். இலி-ஆஸுவை நான் அங்கு எதிர்பார்க்கவில்லை. ஒரு மாத காலமாக இலி-ஆஸு இங்குதானிருக்கிறானென்று பின்பு தான் அறிந்தேன். அவன்தான் இலி-ஆஸு என்பதும் முதலில் எனக்குத் தெரியாது. அராபியர் இருவர் என்னை எழுப்பி, பலவந்தமாக என்னைத் தலை வணங்கச் செய்த பின்பு, ‘மன்னரிடம் விஷயத்தைச் சொல்’ என்று அதட்டிய பிறகு வந்தவன் யாரென்பதை உணர்ந்தேன். சுருக்கமாகச் சொல்லி முடித்தேன். கோபத்தால் இலி-ஆஸு இடிபோல் இரைந்தான். இரைய வேண்டிய அவசியமில்லையென்பதைத் தாழ்மையுடன் உணர்த்தி, கொள்ளைக்காரரைப் பிடித்துக் கொடுப்பது என் கடமையென்றும் ஒரு மன்னனிடம் சேவகம் செய்யும் ஊழியனான நான் இன்னொரு மன்னனுக்குத் துரோகம் செய்ய இஷ்டப்படாததாலேயே கப்பலிலிருந்து தப்பி வந்ததாகக் கூறினேன்.”

“அதை நம்பினானா மன்னன்?” என்று கேட்டான் ஹிப்பலாஸ்.

“நம்பச் செய்தேன் ஹிப்பலாஸ். நான் சொன்னதைக் கேட்டதுமே கப்பலைக் கைப்பற்றக் படகுகளைத் தயார் செய்ய உத்தரவிட்டான் இலி-ஆஸு. அதைவிடச் சுலபவழி இருப்பதாயும், கொள்ளையரை நானே பந்தம் காட்டித் தரைக்கு வரவழைத்துவிட முடியுமென்பதையும் தெரிவித்தேன். இலி-ஆஸு கூரிய அறிவை உடையவன். நாலு வார்த்தைகள் நான் பேசுவதற்குள்ளாகவே திட்டத்தைப் புரிந்து கொண்டு என்னைப் பின்பற்றும்படி தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான். விளைவு உனக்கே தெரியும். கொள்ளை யர்கள், அவர்கள் பொக்கிஷம் இரண்டும் இலி-ஆஸுவிடம் சிக்கியிருக்கிறது” என்றான் இளஞ்செழியன்.

“அவை மட்டுமல்ல படைத்தலைவரே! நாமும் சிக்கி யிருக்கிறோம்” என்று குறிப்பிட்டான் ஹிப்பலாஸ்.

“உண்மைதான். இருப்பினும் இலி-ஆஸு நன்றியுடையவனாகத் தெரிகிறது. காலையில் பார்ப்போம். படுத்துக்கொள். கதவைச் சாத்திக்கொண்டு போ” என்றான் இளஞ்செழியன்.

ஹிப்பலாஸ் அறைக் கதவை மூடிக்கொண்டு வெளியே சென்று படுத்தான். அன்றிரவு நேர்ந்த பல நிகழ்ச்சிகளால் கண்ணை மூடினாலும் தூக்கம் வராததால் ஏதோ யோசனைகளில் ஆழ்ந்து கிடந்தான். அந்த யோசனைகளை மெள்ள தாழ்வாரத்தின் கோடியில் ஏற்பட்ட ஓர் அரவம் கலைத்தது. தலையிலிருந்து கால் முதல் முக்காடிட்ட ஓர் உருவம் ஓசைப் படாமல் நடந்து வந்து இளஞ்செழியன் படுத்திருந்த அறைக் கதவைத் திறந்தது. படுத்தபடியே அந்த உருவத்தின் வருகையைக் கவனித்த ஹிப்பலாஸ் மெள்ள எழுந்து அது யாரென்பதை ஆராய முயன்றான். ஆனால் அடுத்த வினாடி அந்த உருவம் அறைக்குள் நுழைந்து கதவையும் தாழிட்டுக் கொண்டது. சரசரவென்று எழுந்து ஹிப்பலாஸ் கதவண்டை சென்று அதைத் திறக்க முயன்றான். முடியவில்லை. உள்ளே ஏதாவது அரவம் கேட்கிறதா என்று காதைக் கதவிடம் வைத்து உற்றுக் கேட்டான். பேரரவம் ஏதுமில்லையென்றாலும் இருவர் பேசும் அரவம் கேட்கத்தான் செய்தது. அத்துடன் புதிதாக உள்ளே நுழைந்த உருவம், ‘இதோ பரிசு பரிசு’ என்று சொன்ன சொற்களும் ஹிப்பலாஸின் காதில் விழுந்தன. உள்ளே விபரீதம் ஏதோ நிகழ்கிறது என்பதை உணர்ந்த ஹிப்பலாஸ் அந்த விபரீதம் எதுவாயிருக்கக்கூடும் என்பதை அறிய முடியாமலும், தலைவனுக்கு எப்படி உதவலாம் என்பதை நிர்ணயிக்க முடியாமலும் பெரிதும் திணறினான்.

Previous articleYavana Rani Part 2 Ch6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here