Home Sandilyan Yavana Rani Part 2 Ch8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

116
0
Yavana Rani Part 2 Ch8 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch8 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 8 விதியின் அலைகள்

Yavana Rani Part 2 Ch8 | Yavana Rani | TamilNovel.in

பொழுது புலரச் சில நாழிகைகளே இருந்தபடியால் எங்கும் இருள் அதிகமாகக் கவிந்து விட்ட அந்த நாலாம் ஜாம இடைப் பகுதியில் இலி-ஆஸுவின் பெரும் மாளிகைச் சிற்றறைக்குள் என்ன நடக்கிறதென்பதை அறிய முயன்று, கதவுக்கருகில் காதை வைத்துக் கேட்டும் ஏதும் புரியாததால் உள்ளே ஏதோ பெரும் விபரீதம் நிகழ்கிறதென்று நினைத்துத் திணறிய ஹிப்பலாஸ், சற்று நேரத்திற்கெல்லாம் உட்புறத்தில் சிறிது பலமாகவே படைத்தலைவனின் குரல் கேட்டதாலும், உள்ளே சென்ற உருவத்தின் குரலும் சில வினாடிகளில் ஒலிக்கத் தொடங்கி அது பெண் குரலென்பதைத் தெளிவு படுத்தியதாலும், ஓரளவு கவலை நீங்கி மீண்டும் தன் மஞ்சத் திற்குச் சென்று நிம்மதியுடன் படுத்து உறங்க முயன்றான். ஆனால் உள்ளுக்குள்ளேயிருந்த இளஞ்செழியனுக்கு மட்டும் நிம்மதியோ உறக்கமோ எதுவும் சாத்தியமல்லாமல் போகவே அவன் மஞ்சத்திலிருந்து கீழிறங்கி அப்படியும் இப்படியும் தீவிர யோசனையுடன் நடக்கத் தொடங்கினான்.

இலி-ஆஸுவின் பணிப் பெண்கள் இருவரும் தன் காலை வருடி பலவந்தப் பணிவிடை புரிந்தபோது அந்தப் பணிவிடையிலிருந்து தப்பப் பொய்த்துயில் கொண்ட சோழர் படைத்தலைவன், அவர்கள் தன்னை நித்திரையைச் சோதித்து அறையைவிட்டு அகன்றதும் கண்களை விழித்துக் கொண்டு மஞ்சத்தில் படுத்த வண்ணமே பலப்பல யோசனைகளில் மனத்தை அலையவிட்டுக் கொண்டிருந்தானாகையால், மீண்டும் ஒரு முக்காடிட்ட உருவம் அறைக்குள் நுழைந்ததையும், அது கதவின் தாளைப் போட்டு விட்டதையும் கண்டதும் எந்த நிலைமையையும் சமாளிக்கச் சர்வசன்னத்தமாகவேயிருந்தான். ஆயினும் உள்ளே நுழைந்த உருவம் தனது முக்காட்டை நீக்கி மேலுடையைக் களைந்து அறையின் மூலையில் கொண்டு போய் வைத்ததும் சொல்லவொண்ணா சங்கடத்தையே அடைந்தான் இளஞ்செழியன். எந்த வீரனையும் எந்த அபாயத்தையும் துணிவுடன் சமாளிக்கவல்ல திறன் வாய்ந்த படைத்தலைவன் உள்ளே வந்த உருவம் களைந்த மேலாடையை அறை மூலையில் வைத்துவிட்டுத் தன் மஞ்சத்தை நோக்கி வரத் தொடங்கியதும் பெரும் பீதி அடைந்து மஞ்சத்திலிருந்து சரேலென்று எழுந்து உட்கார்ந்து கொண்டான்.

அவன் அப்படித் தூக்கிவாரிப் போட்டு மஞ்சத்தில் உட்கார்ந்ததைக் கவனித்ததால் சற்றுப் புன்முறுவலை கொண்ட அலீமா, மயிலின் சாயலையும் தோற்கடிக்கும் அழகு நடை நடந்து அவனது மஞ்சத்தருகில் வந்து அவனுக்கு எதிரில் நாலடி தள்ளியே நின்று, “ஏன் அப்படிப் பயப்படுகிறீர்கள்?” என்று சுத்தமான தமிழில் கேட்டாள். அவள் பேசிய நல்ல தமிழைக் கேட்டதும் ஒரு வினாடி திகைத்த இளஞ்செழியன், மன்னனின் கேளிக்கை மண்டபத்துக்கு வெளியே அவள் தன் காதில், ‘இலி-ஆஸு என்ன வேண்டுமென்று கேட்டால், என்னைப் பரிசாகக் கேளுங்கள். என் பெயர் அலீமா’ என்று சொன்னதும் நல்ல தமிழில் தானென்பதை நினைத்துப் பார்த்து ‘அதை எப்படி நான் கவனிக்காமல் விட்டேன்? ஆம் ஆம். அப்பொழுதிருந்த மனோநிலை எதுவுமே விளங்காத குழப்பமான விபரீதமான நிலை யல்லவா?’ என்று தன்னைத்தானே கேள்வியும் கேட்டுச் சமாதானமும் சொல்லிக் கொண்டான்.

தான் கேட்ட கேள்விக்குப் பதில் கூடச் சொல்லாமல் படைத் தலைவன் தீவிர யோசனையில் ஆழ்ந்தவிட்டதைக் கண்ட அலீமா, “என்ன அப்படி யோசிக்கிறீர்கள்?” என்று மீண்டும் வினவினாள், இதழ்களைச் சற்று அகலமாகவே விரித்துப் புன்முறுவல் கோட்டி.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவள் மீது கண்களை ஓட்டிய இளஞ்செழியன் அவளுடைய எழிலின் சிறப்பைக் கண்டு பெரிதும் வியந்தான். அடர்த்தியாக மிகவும் கருமையாக, தரையில்கூட இடிக்கக்கூடிய முறையில் வெகு நீளமாக வளர்ந்திருந்த கூந்தலை இரு பிரிவாகப் பின்புறம் வகிர்ந்து பின்னி இரண்டு சுருட்டைகளாக அலீமா எடுத்துக் கட்டியிருந்தாளாகையால், அந்தச் சுருட்டைகளிரண்டும் அவள் தோள்கள் மீது தவழ்ந்து முன்புறத்தில் வந்து கழுத்துக்குச் சற்றுக் கீழே படுத்துக் கிடந்தன. அவள் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த இரு பெரும் பொன் வளையங்கள் பொன்னையும் பழிக்கும் அவள் கன்னங்களின் பக்கங்களில் அவள் தலையை அசைத்தபோதெல்லாம் ஆடி ஆடிக் கன்னக் கதுப்புக்களை வருடத் தொடங்கின. தீர்க்கமான அவள் நாசி, எழில் சொட்டும் அகன்ற பெரு விழிகள், விசாலமான நெற்றி, நன்றாக உயர்ந்திருந்தாலும் செழுமையின் விளைவாக அதிகமாக உயரம் தெரியாத உடலமைப்பு- எல்லாமே அவளை ஏதோ தேவலோக ரம்பைபோல் அடித்திருந்தன. இடையில் அவள் அராபியர்களைப் போல் இரண்டு சராய்களையே அணிந் திருந்தாளாதலால் உடலை ஒட்டிக் கிடந்த இயற்கை அழகுகள் கண்ணுக்கும் ஓரளவு புலப்படவே செய்தன. அரபு நாட்டு வழக்கப்படி அவள் மேல் கச்சையை மட்டுமே அணிந்திருந்தாளாதலால், அவள் அழகை அதிகமாக ஏறெடுத்துப் பார்க்கவும் வெட்கிய இளஞ்செழியன் தலையைக் குனிந்து கொண்டான். அவன் சங்கடத்தை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், “நான் கேட்கிறேன், நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களே, பரிசைப் பெற்றுக் கொள்வதில் அவ்வளவு கஷ்டமா உங்களுக்கு?” என்று சொல்லிக் கொண்டே மஞ்சத்தை நெருங்கினாள் அலீமா.

அவள் மஞ்சத்தை நோக்கி நடந்து வந்தபோது அவள் காலிலிருந்து சலங்கைகள் சப்தித்ததால் சற்று அதிர்ச்சி யடைந்து தலையைத் தூக்கிய இளஞ்செழியன் “பரிசா! எது பரிசு! என்ன பரிசு!” என்று திணறிக் கேட்டான்.

“இதோ பரிசு” என்று சற்று இரைந்தே அலீமா சொன்ன தால் அந்தச் சொற்கள் இளஞ்செழியனுக்கு மட்டுமல்ல, வெளியே ஒட்டுக் கேட்டு நின்ற, ஹிப்பலாஸின் காதிலும் தெளிவாக விழுந்தன. அவள் இரைந்து சொன்ன சொற்களால் அவள் அழகு விளைவித்த மயக்கத்திலிருந்தும் சங்கடத்தி லிருந்தும் சற்றே விடுபட்ட படைத்தலைவன், மஞ்சத்திலிருந்து கீழிறங்கி அறையில் அப்படியும் இப்படியும் உலாவிவிட்டுச் சற்று எட்ட நின்றே கேட்டான், “எங்கேயிருக்கிறது பரிசு?” என்று.

“உங்கள் கண் முன்பே இருக்கிறதே பரிசு!” என்று தன்னையே மீண்டும் இரு கைகளாலும் காட்டி, “நான் உங்கள் அடிமை” என்று கூறும் பாணியில் தலையையும் தாழ்த்தி வணங்கினாள் அலீமா.

“நீயா பரிசு?” என்று வியப்புடன் வினவினான் இளஞ் செழியன்.
“ஆமாம்” என்ற அலீமா மெள்ள நகைத்துவிட்டு அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள்.

இளஞ்செழியன் சங்கடம் வெளியிலிருந்த ஹிப்ப லாஸின் திணறலைவிட ஆயிரம் மடங்கு அதிகப்பட்டதால் “இரு இரு. அங்கேயே இரு” என்று அச்சத்துடன் கூவினான்.

“அருகில் வரக்கூடாதா?” என்று கேட்டாள் அலீமா.

“வரக் கூடாது?” திட்டமாக வந்தது இளஞ்செழியன் பதில்.

அலீமாவின் ஆச்சரியமும் எல்லை மீறியதால் தன் அழகிய விழிகளை அவள் அகல விரித்தாள். “ஏன் வரக் கூடாது?” என்ற அவள் கேள்வியிலும் ஆச்சரியம் தொனித்தது.

“நீ பெண்” என்றான் இளஞ்செழியன்.

“அது இப்பொழுதுதான் புரிகிறதா?” என்று வேடிக்கையாகப் பேசினாள் அலீமா.

“முன்பே புரிந்துவிட்டது.”

“அப்படியானால் ஏன் பயப்படுகிறீர்கள்?”

“அதனால்தான் பயப்படுகிறேன்.”

“பெண்களைக் கண்டால் உங்களுக்குப் பயமா?”

“சில சந்தர்ப்பங்களில் பயம்தான்.”

“இது?”

“அப்படியொரு சந்தர்ப்பம்.”

“சற்று விளக்கிச் சொல்லுங்கள்.”

கடைசியாக அவள் கேட்டதும் கெஞ்சுவது போலிருந்த தாலும், குரலிலும் நன்றாகக் குழைந்து இனிமை மண்டிக் கிடந்ததாலும் சற்றுச் சங்கடமே பட்ட இளஞ்செழியன் மெள்ளச் சமாளித்துக் கொண்டு அவளை ஏறெடுத்து நோக்கிவிட்டு, “அலீமா!” என்றழைத்தான்.

அவள் மெள்ள, “ஊ.ம்” கொட்டினாள்.

“என்னை யாரென்று உனக்குத் தெரியாது. நீ யாரென்றும் எனக்குத் தெரியாது. இருவரும் ஒரே அறையில் இருக்கிறோம். புரிகிறதா உனக்கு?” என்று கூறி மேலே ஏதும் சொல்லாமல் நிறுத்தினான்.

“புரிகிறது. ஆனால் நம்மிருவரையும் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்” என்றாள் அலீமா.

“ஏன்?”

“என்னை உங்களுக்குப் பரிசாக அளித்திருப்பவன் இலி-ஆஸு மன்னன். வேறு யாராவது இதைப்பற்றிப் பேசினால் மன்னன் அவர்கள் நாக்கைத் துண்டித்துச் சாம்பிராணிக் காட்டுக்கு அனுப்பிவிடுவான்.”

“இங்கு எல்லோர் வாழ்வையும் நிர்ணயிப்பது மன்னன் தானா?”

“ஆம். தவிர, மன்னன் உங்கள் விஷயத்தில் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறான்.”

“என்ன காரணம்?”

“இதுவரை யாருக்குமே கிடைக்காத அலீமாவையே உங்களுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறான். நாளைக் காலையில் இந்தச் செய்தி கானா பூராவும் பரவும். மக்கள் வியப்புக் கடலில் ஆழ்ந்து விடுவார்கள்.”

“அத்தனை அபூர்வமா நீ?”

“ஆம். இலி-ஆஸுவின் மகள் என்றே எல்லோரும் கானாவில் என்னை அழைக்கிறார்கள். என்னருகே வரக்கூடத் துணிந்தவர் இதுவரை யாருமில்லை. என்னைப் பரிசாகக் கேட்கும்படி நானே உங்களைக் கேட்டேனல்லவா? ஆனால் அரபு நாட்டின் தெய்வசக்தி இலி-ஆஸுவின் சிந்தையில் புகுந்து, அவனாகவே என்னைப் பரிசாக அளிக்கும்படி தூண்டிவிட்டிருக்கிறது. இது உங்கள் அதிர்ஷ்டம்” என்றாள் அலீமா.

இளஞ்செழியன் யோசனையில் ஆழ்ந்தான். ‘யாரும் எண்ணவும் முடியாத பரிசை உனக்குத் தருகிறேன்’ என்று இலி-ஆஸு தன்னிடம் காதோடு காதாகச் சொன்னதன் பொருள் அப்பொழுதுதான் சிறுகச் சிறுக அவனுக்குப் புலப் படலாயிற்று. கொள்ளைக் கப்பலைப் பிடித்துக் கொடுப்பதன் மூலம் இலி-ஆஸுவின் தயவைச் சம்பாதிக்கலாம், தான் செய்த உதவிக்கும் பரிசாகத் தாய்நாடு திரும்ப அனுமதி கேட்கலாம் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியிருந்த இளஞ்செழியன், பரிசு ஒன்று பெண் உருவத்தில் வந்து சேர்ந்ததும், ‘ஏதேது, இலி-ஆஸு நம்மை அரபு நாட்டை விட்டு அகல விடமாட்டான் போலிருக்கிறதே’ என்று எண்ணி மனம் சோர்ந்தான். அந்தச் சோர்வின் விளைவாகப் பெருமூச் செறிந்துவிட்டு, “என் அதிர்ஷ்ட மா இது!” என்றான் அலீமாவை நோக்கி.

அலீமாவின் அழகிய வதனத்தில் துயரச் சாயை படர்ந்தது. “ஏன், என்னைக் கண்டால் உங்களுக்குப் பிடிக்க வில்லையா?” என்று கேட்டாள் அவள்.

“பிடிக்கவில்லையென்று யார் சொன்னது?” எரிச்சலுடன் வினவினான் இளஞ்செழியன்.

“பின் ஏன் என்னை வெறுக்கிறீர்கள்?” என்றாள் அலீமா.

“யார் வெறுத்தது?”

“அப்படியானால் விருப்பமா?”

“எதற்கு விருப்பம்?”

“இப்படி வாருங்கள் சொல்கிறேன்” என்று அவன் நின்ற இடத்தை இரண்டு எட்டில் அடைந்து, அவன் கையைப் பிடித்து இழுத்து மஞ்சத்தில் உட்கார வைத்து விட்டு, அவன் தோள்கள் இரண்டையும் தன் கைகளால் பிடித்துக் கொண்டு முகத்தில் தன் கூர் விழிகளை நாட்டி மெல்லச் சொன்னாள் அலீமா, “முட்டாள்தனமாக நடந்து கொள்ள வேண்டாம். இது இலி-ஆஸுவின் அரசாங்கம்!” என்று.

“இருந்தால் என்ன?” என்று கேட்டான் இளஞ்செழியன்.

“அவன் விருப்பத்துக்கு மாறாக நடப்பவர்களைச் சித்திரவதை செய்வது இலி-ஆஸுவின் வழக்கம்.”

“அது தெரிந்ததுதானே?”

‘தெரியாததும் ஒன்றிருக்கிறது.”

“என்ன அது?”

“யோசித்துப் பாருங்கள். நீங்கள் தமிழர். உங்களை முன்பின் இலி-ஆஸுவுக்குத் தெரியாது. இந்தக் கானாவில் எனக்கும் இலி-ஆஸுவுக்கும் இன்னும் இரண்டு மூன்று பேருக்கும்தான் உங்கள் மொழி தெரியும். அந்த ஒரு சிலரில் மகளைப் போலவே என்னைப் பாவிக்கும் இலி-ஆஸு இந்த இரவில் உங்களிடம் என்னை ஏன் ஒப்புவிக்கிறான்?”

அலீமாவின் இந்தக் கேள்வியால் பெரும் அதிர்ச்சி யடைந்த இளஞ்செழியன், “ஏன், விளங்கவில்லையே?” என்று குழப்பம் மிகுந்த குரலில் வினவினான்.

அலீமாவின் விழிகளில் சற்று அச்சமும் எழுந்தது. அவள் குரலில் சந்தேகம் பெரிதும் ஒலித்தது. ஏதோ ஆழ்ந்து யோசிப்பவள் போலவே பேசினாள் அலீமா. “இலி-ஆஸு வைப் போல் ஒரு பயங்கர மனிதன் உலகத்தில் கிடையாது. நரியைவிடத் தந்திரம் வாய்ந்தவன். இரவில் ஒரு கப்பல் வருகிறது. அதை ஒரு தமிழர் பிடித்துக் கொடுக்கிறார். அதற்காக அவருக்கு ராஜோபசாரம் நடக்கிறது. தன் மகளைப் போல வளர்த்து அராபியர்கள் அனைவரிடமிருந்தும் பாதுகாத்துவரும் ஒரு பெண்ணை அந்த வாலிபரிடம் அனுப்பி வைக்கிறான் என்றால் விசித்திரமில்லையா?” என்று கேட்டாள் அலீமா.

“விசித்திரம்தான்!” என்று இளஞ்செழியனின் குரலுடன் சற்றுச் சந்தேகம் ஒலித்தது.

“திடீர் உதவி, திடீர் அன்பு, திடீர் பரிசு எல்லாம் கதைகளில் நிகழலாம். வாழ்க்கையில் நிகழ முடியாது. தமிழக வீரரே! அதுவும் இலி-ஆஸுவிடம் நிகழ முடியவே முடியாது. ஆனால் நிகழ்ந்திருக்கிறது.”

“ஆம். நிகழ்ந்திருக்கிறது.”

“ஆகவே அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். ஆழமான திட்டம் இருக்க வேண்டும். அரக்கரே அஞ்சும் கொடுமைகளை விளைவிக்கவல்ல இலி-ஆஸுவின் அறிவு ஆழமானது. மனிதர்களை எடை போடுவதில் அவனுக்கிணை இந்தப் பிராந்தியத்தில் எவருமேயில்லையென்பது பிரசித்தம். யவனர்கள்கூட இலி-ஆஸுவின் அறிவைப் பெரிதும் வியக் கிறார்கள். நிமிட நேரத்தில் மனிதர்களையும், சம்பவங்களையும் எடை போட்டு, முடிவுகளையும் செய்யவல்ல இலி-ஆஸு என்னை ஏன் இத்தனை துரிதமாக உங்களுக்குப் பரிசாக அளித்திருக்கிறானென்றால் அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும்” என்று கூறிய அலீமா தலையைக் கவிழ்ந்துக் கொண்டாள்.

“என்ன காரணம் அது அலீமா?” என்று வினவினான் இளஞ்செழியன் சந்தேகம் பூரணமாகக் குரலில் தொனிக்க.

“உங்களைக் கானாவிலேயே இருத்திக்கொள்ள இலி-ஆஸு முடிவு செய்திருக்க வேண்டும்” என்று பெரு வெடியை எடுத்து வீசிய அலீமா, தலையைத் தூக்கிப் படைத் தலைவனை ஏறெடுத்து நோக்கினாள்.

அந்தப் பதிலால் இளஞ்செழியன் இடிந்து போவா னென்றோ, அதிர்ச்சியடைந்து கூவுவானென்றோ அலீமா எதிர்பார்த்ததால் ஏமாந்தே போனாள். ஆகவே அவள் இளஞ்செழியன் முகத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படாததைக் கண்டு வியப்பெய்தியதல்லாமல் தான் சொன்ன செய்தியின் பொருளைப் புரிந்து கொண்டானோ இல்லையோ என்ற எண்ணத்தால் மீண்டும் கேட்டாள், “நான் சொன்னதன் பொருள் உங்களுக்கு விளங்க வில்லையா?” என்று .

“நன்றாக விளங்கியிருக்கிறது.”

“என்ன விளங்கியிருக்கிறது?”

“உன்னை எனக்கு மணம் செய்து கொடுத்துக் கானாவிலேயே இருத்திக் கொள்ள திட்டமிடுகிறான் மன்னன்.”
“ஆம்! அதுதான் திட்டம். யவனர்களிடமிருந்து சிறை மீட்டு வந்து மகளைப் போல் நடத்தும் என்னைத் திறமை சாலியான வீரனுக்குத்தான் கொடுப்பேன் என்று இலி-ஆஸு பல முறை சொல்லியிருக்கிறான். உங்களை அத்தனை சிறந்த வீரனாக மதிக்கிறான் இலி-ஆஸு.”

“மிக்க மகிழ்ச்சி” என்று சற்று இகழ்ச்சியுடன் சொன்ன இளஞ்செழியன், “ஆமாம். நீ யவனர்களிடம் அடிமையாக இருந்தாயா?” என்று வினவினான்.

“ஆம். இருந்தேன். கொள்ளைக்காரர்களால் பிடிக்கப் பட்டு அடுலீஸ் நகரத்தின் அடிமைச் சந்தையில் விற்கப் பட்டேன். யவன நாட்டு அரச குடும்பத்தார் ஒருவரால் வாங்கப்பட்டேன். அவர்களால் அரசி போலவே நடத்தப் பட்டேன். அவர்கள் எனக்கு உங்கள் நாட்டு வர்த்தகர்களைக் கொண்டு உங்கள் மொழியையும் பழக்கிக் கொடுத்தார்கள்.” என்று சொல்லிக் கொண்டே போன அலீமாவை இடை மறித்த இளஞ்செழியன் திடீரென மஞ்சத்திலிருந்து கீழே குதித்து, “ஏன், ஏன் பழக்கிக் கொடுத்தார்கள்?” என்று கேட்டு, அவள் அழகிய தோள்கள் இரண்டும் கன்னிச் சிவக்க தன் இரு கைகளாலும் பிடித்தான்.

“உங்கள் நாட்டுக்கு என்னை அனுப்ப எண்ணி னார்கள்” என்று அலீமா, இளஞ்செழியன் முரட்டுத்தனத் துக்குக் காரணம் தெரியாமல் விழித்தாள்.

“எதற்காக அனுப்ப எண்ணினார்கள்?” என்று மீண்டும் கேட்டான், விதியின் விசித்திரத்தை எண்ணி ஆச்சரியக் கடலில் ஆழ்ந்த இளஞ்செழியன்.
“அவர்கள் அரசகுமாரி தமிழகம் செல்வதாயிருந்தது. அவளுக்குத் தோழியாக என்னை அனுப்பத் திட்ட மிட்டார்கள்.”

“அத்தனை நம்பிக்கையா அவர்களுக்கு உன்னிடம்?”

“ஆம், யவன அரச குடும்பத்தார் மிகவும் நல்லவர்கள். அவர்கள் மகளுக்கும் எனக்கும் எந்தவித வித்தியாசமும் வைக்கவேயில்லை . இந்தச் சனியன் இலி-ஆஸு அடுலீஸில் ஒரு நாள் யவனர் கூட்டத்தில் என்னைக் கண்டு கவர்ந்து இங்கு கொண்டு வராதிருந்தால் இத்தனை நாள் உங்கள் நாட்டில் இருப்பேன்-சாதாரண அலீமாவாக அல்ல…”

“பின் எப்படி?”

“அந்த நாட்டு ராணியின் தோழியாக!” இதைச் சற்றுப் பெருமையுடனேயே சொன்னாள் அலீமா.

மனிதன் கண்ணுக்கோ கருத்துக்கோ புலப்படாத ஆண்டவனின் சக்திக் கயிறுகள் எப்படியெப்படியெல்லாம் மனிதப் பொம்மைகளை இயக்குகின்றன. எந்தெந்த இடங் களில் கொண்டு மோதுகின்றன என்பதை நினைத்த இளஞ் செழியன் அந்த அறையின் கூரைக்காகக் கண்களை உயர்த்தினான். அவன் அகக்கண்களும் உயர்ந்தன. ‘என் வாழ்வில் யவன ராணி மட்டும்தான் மோதினாள் என்று நினைத்தேன். அவள் தோழியும் மோதுகிறாளே. ஒருத்தி கடற்கரையில் அலை ஓரத்தில் காலில் இடறினாள், உணர் விழந்த நிலையில். இன்னொருத்தி அதே கடலோரம் நூற்றுக் கணக்கான கரங்களுக்கப்பால் மோதுகிறாள், உணர்ச்சிகள் துடிக்கும் நிலையில், அங்கும் கடலலைதான், இங்கும் அதோ வெளியே கடலலைதான். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகத்தான் மோதுகின்றன. பூம்புகாரின் கரி மணலில் சலசலவென்று மோதும் அதே இன்ப அலைகள், கானாவின் கற்களில் எத்தனை கோபமாகப் படேல் படேலென்று மோதுகின்றன! ஒரேவித அலைகள் ! விதவிதமான எழுச்சிகள், மோதல்கள்! இவை கடல் அலைகளா! இல்லை இல்லை, ஆண்டவன் என்னை எடுத்துப் பல இடங்களிலும் வீச உந்திய விதியின் அலைகள் ! விதியா! சேச்சே! எனக்குத்தான் அதில் நம்பிக்கையே இல்லையே! ஹிப்பலாஸும் ராணியும் நம்பிய அந்த விதி உண்மையாக இருக்குமா!’ என்று பலப்பல விதமாக நினைத்து உணர்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.

அவன் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுவதை அலீமா அவன் முக பாவத்திலிருந்தே உணர்ந்தாள். அவனுக்கு ஆறுதலளிக்க அவன் கன்னங்களைச் சற்றே வருடவும் செய்தான். “என் சொல்படி அடுத்த சில நாட்கள் நடவுங்கள். உங்களுடைய ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்றான் அலீமா.

இளஞ்செழியனின் கூரிய விழிகள் அலீமாவின் முகத்தில் பதிந்தன. “என் ஆசை ஒன்றுதான் அலீமா” என்றான் அவன்.

“அந்த ஆசையைச் சொல்லுங்கள்” என்றாள் அலீமா.

“தாய்நாடு திரும்ப வேண்டும்” என்றாள் இளஞ் செழியன்.

“அந்த ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்றாள் அலீமா.
“எப்படி?”

பொறுத்துப் பாருங்கள். என்னிடம் நம்பிக்கை மட்டும் வையுங்கள். சொல்வதைக் கேளுங்கள். நான் இட்ட ஆணையை மீறாதீர்கள். இதோ கையிலடித்து உறுதிமொழி கறுங்கள்.”

இளஞ்செழியன் அவள் தாமரைக் கையிலடித்து அவள் கேட்டபடி உறுதி மொழி கூறினான். அந்த வினாடியிலிருந்து அவள் ஆணைகள் பிறக்கத் தொடங்கின. ஆனால் அவள் இட்ட முதல் ஆணையே இளஞ்செழியனைக் கதி கலங்கச் செய்தது. அடுத்து வந்த ஆணைகள் அவனைப் பெரும் விபரீத வலைகளில் சிக்க வைக்கத் தொடங்கின.

Previous articleYavana Rani Part 2 Ch7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch9 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here