Home Sandilyan Yavana Rani Part 2 Ch9 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch9 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

118
0
Yavana Rani Part 2 Ch9 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 2 Ch9 | Yavana Rani | TamilNovel.in

Yavana Rani Part 2 Ch9 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 9 முதல் ஆணை

Yavana Rani Part 2 Ch9 | Yavana Rani | TamilNovel.in

தான் இடும் ஆணைகளைப் பின்பற்றி நடப்பதானால் அவன் ஆசையை நிறைவேற்றித் தமிழகம் செல்ல வழி செய்வதாக அலீமா கூறிய உறுதி மொழியின் விளைவாக அவள் கையிலடித்துச் சத்தியம் செய்த இளஞ்செழியன், அவளிட்ட முதல் ஆணையைக் கேட்டதுமே திடுக்கிட்டுப் போய் பெரிதும் சங்கடத்துக்குள்ளானதல்லாமல் அவளுடைய மற்ற ஆணைகளும் அப்படித்தானிருக்குமோ என்ற சந்தேகத்தால் பெரிதும் கலங்கினான். என்னை மணந்து கொள்வதாக இலி-ஆஸுவுக்கு உறுதி கூறுங்கள்’ என்று தான் ஆணையிட்டதுமே அந்தத் தமிழக வீரன் முகத்தில் ஏற்பட்ட திகிலுடன் குழப்பத்தையும் கண்ட அலீமா மிக இன்பமாகக் கேலி நகை புரிந்தாள். அவள் உதிரவிட்ட அந்தச் சிரிப்பு அவன் உள்ளத்தே திகிலுடன் கலந்து கொழுந்துவிட்ட கோபாக்னியையும் கிளறிவிடவே, “இதில் சிரிப்புக்கு இடமில்லை அலீமா! வெறுப்புக்குத்தான் இடமிருக்கிறது” என்று கூறினான் இளஞ்செழியன் சொற்களில் கடுகடுப்புத் துள்ளி விளையாட.

“இலி-ஆஸுவின் வளர்ப்பு மகளை மணப்பதில் அத்தனை வெறுப்பா உங்களுக்கு?” என்று கேட்ட அலீமா மீண்டும் நகைத்தாள்.

“உன் சிரிப்பு எனக்கு வேப்பங்காயாக இருக்கிறது” என்று பதிலுரைத்த இளஞ்செழியன் அவளை விட்டு இரண்டடி விலகி நடந்தான்.
அவள் மட்டும் நின்ற இடத்தைவிட்டு விலகாமலே தலையை மட்டும் திருப்பித் தன் அழகிய விழிகளால் அவனை நோக்கிவிட்டுக் கேட்டாள், “வேப்பங்காயா! அது என்ன?” என்று.

“அது ஒரு மரத்தின் காய், கசக்கும்.”

“என் சிரிப்பு கசக்கிறதா உங்களுக்கு?”

“சந்தேகமென்ன? உன் ஆணை, சிரிப்பு எல்லாமே அசந்தர்ப்பம். அசந்தர்ப்பமாயிருப்பது ருசிப்பது கஷ்டம்.”

“நான் ஈச்சம் பழம் போல் இனிப்பவள் என்று என் வளர்ப்புத் தந்தை சொல்வார். இந்தச் சாம்பிராணி நாட்டில் எத்தனையோ வீரர்கள் என்னை அப்படித்தான் நினைக் கிறார்கள்.”

“ஈச்சம் பழத்தைவிட இனிப்பானது இந்தப் பாலை வனத்தில் என்ன இருக்கும்?” என்று அலுத்துக் கொண்டான் இளஞ்செழியன்.

“ஓகோ! ஈச்சம் பழத்தைவிட அதிகம் இனிக்கும் பழங்கள் தமிழகத்தில் உண்டு போலிருக்கிறது!” என்று ஏதோ சந்தேகம் கேட்பவள் போல் கேட்டு இளஞ்செழியனை சில விநாடிகள் உற்று நோக்கினாள் அலீமா. பிறகு மஞ்சத்தை அணுகி அதன் முகப்பில் தாராளமாக உட்கார்ந்து கொண்டாள்.

எழிலெல்லாம் எழுந்து நோக்க மஞ்சத்தில் அமர்ந்த அந்த அரபு மங்கையைச் சில விநாடிகள் பார்த்துக் கொண்டு மௌனமாக நின்ற இளஞ்செழியன் கடைசியில் “ஆம் ஆம்! தமிழகத்தில் இனிக்கும் பழங்கள் பல உண்டு. ஏன்! தமிழகத்தைப் பற்றி நினைத்தாலும் பேசினாலுங்கூட இனிக்கும்” என்றான்.

அவன் தமிழகத்தைப் பற்றி நாட்டுப் பற்றுடன் பேசிய பேச்சுக்களைப் புறக்கணித்த அலீமர் பேச்சின் முதற் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, “தமிழகத்தில் பலப்பல இனிய பழங்களை நீங்கள் ருசி பார்த்திருப்பீர்கள்! அதனால்தான் இந்த ஈச்சம்பழத்தின் ஆணையை நிறைவேற்ற மறுக்கின்றீர்கள். காரணம் புரிகிறது” என்று கூறி விஷமமாகப் புன்முறுவல் செய்தாள்.

இளஞ்செழியனுக்கு அப்பொழுதிருந்த மனோ நிலைக்கும் நகைச்சுவைக்கும் தூரம் பெரிதுமிருந்ததால், அவன் முகத்தில் கவலைக் குறியே அதிகமாகப் படர்ந்து நின்றது. உள்ளத்திலோடிய எண்ணங்களை இலி-ஆஸுவின் வளர்ப்பு மகளுக்குத் தெளிவாக்கவும் அவள் ஆணையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிய வைக்கவும் மஞ்சத்தை அணுகி அவன் எதிரே நின்ற இளஞ்செழியன் நிதானமும் உறுதியும் நிறைந்த குரலில் சொன்னான்:

“அலீமா, என் கதையை முழுவதும் சொல்ல இப்பொழுது அவகாசமில்லை. அதற்குத் தேவையுமில்லை. இதைத் திட்டமாகத் தெரிந்து கொள். என் இதயத்தில் இப்பொழுது தமிழகத்தின் நலன் ஒன்றைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. எங்கள் நாட்டில் அநீதிகள் பல நிகழ்ந்து விட்டன. மாற்றார் ஆதிக்கம் அங்கு நிலைப்பதற்கும் மார்க்கமேற்பட்டிருக்கிறது. தமிழகத்துக்குத் தளைகளை மாட்டப் புகாரின் யவனர்கள் திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். அந்தத் திட்டங்கள் உருவாக்கிப் பயனும் அளிக்க உதவி செய்யும் புல்லுருவிகளும் நாட்டில் ஏற்பட் டிருக்கிறார்கள். இத்தனை நாள் மாபெரும் தமிழ் மன்னர்கள் தங்கள் ரத்தத்தை ஊற்றி வளர்த்த தமிழ்ச் சுதந்திரப் பயிர் சாகாதிருக்கக்களையெடுக்க வேண்டும். தமிழர்கள் கைகள் அந்தப் பணியில் திடப்பட வேண்டும். அவற்றைப் வலுப்படுத்த நான் தமிழகம் செல்ல வேண்டும். அந்தப் பணி முடியும் வரையில் காதலுக்கோ திருமணத்துக்கோ இடமில்லை.”

அவன் பேசுவதில் சற்றும் குறுக்கிடாமலே கேட்டுக் கொண்டிருந்த அலிமா கடைசியாக வினவினாள்: “அதற்குப் பிறகு…?”

இளஞ்செழியன் அவள் கண்களைப் பார்க்க முடியாமல் தரையில் தாழ்த்திக் கொண்டான். “அதற்குப் பிறகும் முடியாது அலீமா” என்றும் முணுமுணுத்தான் அவள் காதில் மெல்ல விழும்படியாக.

“அப்படியானால் உங்கள் இதயத்தைச் சிலர் ஏற்கெனவே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா?” என்று அலீமா வினவினாள்.

“சிலர் என்பது தமிழகத்தில் இல்லை அலீமா. அந்தப் புரம் வைத்து மறைவு கட்டி, பல பெண்களை உள்ளடைப்பது என்பதெல்லாம் தமிழர் பழக்கமல்ல. அரசர்களைத் தவிர மற்றவர்கள் ஒருத்திக்கு மேல் இரண்டாமவளை மணப்பதும் கிடையாது. அப்படி ஏதாவதிருந்தால் அது ஆபூர்வம்” என்றான் இளஞ்செழியன்.
“இங்கு அது சகஜம்” என்றாள் அலீமா.

“இலி-ஆஸுவின் கேளிக்கை மண்டபத்தைப் பார்த் ததுமே புரிந்து கொண்டேன்.”

“அந்தந்த நாட்டிலிருக்கும்போது அந்தந்த நாட்டுப் பழக்கத்தைத்தானே பின்பற்ற வேண்டும்?”

“பழக்கத்தை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்று எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு.”

“அந்தப் பழமொழி உண்மைதான். சந்தேகமில்லை.”

“ஒப்புக் கொள்கிறாயா?”

“ஒப்புக் கொள்கிறேன். ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“உங்கள் தொட்டில் பழக்கத்தை நாளைக் காலையில் நீங்கள் கடைப்பிடித்தால் நாளை மாலைக்குள் சுடு காட்டுக்குப் போய் விடலாம்.” இந்த வார்த்தைகளைச் சற்று அழுத்தியே சொன்ன அலீமா இளஞ்செழியனின் கைகளைப் பிடித்து மஞ்சத்தில் அவனை உட்கார வைத்து விட்டுத் தான் எழுந்து தரையில் நின்று கொண்டாள். பிறகு அவன்மீது ஒரு வினாடி தன் அழகிய விழிகளை ஓட்டினாள். கடைசியாகக் கூறினாள் விழிகளை அவன் மீதிருந்து அகற்றாமலே, “என் கண்களைப் பாருங்கள்” என்று.
இளஞ்செழியன் அவள் கண்களை நன்றாக ஏறெடுத்துப் பார்த்துவிட்டு, “பார்த்தேன் அலீமா” என்றான்.

“கண்கள் மனத்தின் வாயில்கள் என்று இந்த நாட்டில் சொல்வார்கள்” என்றாள் அலீமா.

“உண்மைதான் அலீமா.”

“வஞ்சகக் கண்களா இவை? நன்றாக உற்றுப் பார்த்துச் சொல்லுங்கள்.”

“இல்லை அலீமா இல்லை. நிர்மலமான கண்கள். அவற்றில் வஞ்சகம் சிறிதும் இல்லை.”

இதைக் கேட்டதால் சற்றுப் பெருமூச்செறிந்துவிட்டு “உங்கள் சொற்கள் என் இதயத்தில் அமுதம் போல் பாய் கின்றன. வீரரே! உங்களை நன்றாக நான் புரிந்து கொண்டு விட்டேன். உங்கள் இதயத்தை வேறொரு பெண் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ஆகையால்தான் குழம்பிக் குழம்பி ஏதேதோ பேசுகிறீர்கள். ஆனால் அச்சப்படாதீர்கள். நான் எப்படியும் உங்களைக் காப்பாற்றித் தமிழகம் செல்ல ஏற்பாடு செய்கிறேன். ஆனால் நீங்கள் என்னை மணந்தாலும் மணக்கா விட்டாலும் மணப்பதாக நாளை இலி-ஆஸுவிடம் உறுதி கூறிவிடுங்கள். இது விஷயத்தில் ஆணையிட்டதை மறக்காதீர்கள். உறுதி கூறினால் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியமில்லை…” என்று சொல்லிக் கொண்டேபோன அலீமாவை இடைமறித்த இளஞ்செழியன், “தவறு அலீமா! தவறு. வார்த்தையை மீறும் வழக்கம் எனக்கில்லை” என்றான்.
அலீமாவின் குரல் திடமாக ஒலித்தது. “பெரிய நன்மை களைச் செய்ய, சிறிது தவறு செய்வது சாத்திர சம்மதமென்று எனக்கும் யவன அரச குமாரிக்கும் தமிழ் மொழி பயிலுவித்த வணிகர் பல முறை சொல்லியிருக்கிறார். சில சமயங்களில் பொய் சொல்வதும் அநீதியாகாது என்றும் அவர் கூறியிருக் கிறார். உங்கள் நாட்டு சாத்திரமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் என்னை மணக்க மறுத்தால் உங்கள் கதி என்னவாகுமென்பது எனக்குத் தெரியும். இறந்த பின்பு நீங்கள் உங்கள் நாட்டுக்கு என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே நன்றாக யோசித்து நல்ல முடிவுக்கு வாருங்கள். நாளைக் காலையில் என்னைச் சந்தித்ததும் இலி-ஆஸு கேட்பான். இரவில் தமிழன் என்ன சொன்னான், எப்படி நடந்து கொண்டான் என்று. நான் மிக இன்பமாகப் பொழுதை ஓட்டியதாகச் சொல்வேன். நீங்களும் மறுக்காதீர்கள். உங்கள் இதயராணியை ஒருநாள் நீங்கள் சந்திக்க ஆசைப்பட்டால், கானாவின் இந்த ஏழை ராணியுடன் சிலநாட்கள் நீங்கள் சிரித்து விளையாடித்தான் ஆக வேண்டும். இலி-ஆஸுவின் கண்களிலும் கானா மக்களின் கண்களிலும் நாம் காதலராக நாடகம் ஆடுவதில் தவறில்லை . பலனுண்டு” என்றாள், அலீமா.

“என்ன பலன் அலீமா?”

“அரசரைப் போலவே நீங்கள் நடத்தப்படுவீர்கள். உங்கள் மீது எப்பொழுதும் வீரர்கள் ஒரு கண்ணை வைத்திருந்தாலும் உங்களுக்குப் பணிந்தே நடப்பார்கள். திருமணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இன்னும் ஒரு மாதம் வரை திருமணம் இருக்காது.”

“ஏன் அலீமா?”

“சாம்பிராணிப் பாலை எடுக்கும் காலம் வந்துவிட்டது. அது முடிந்த பிறகுதான் நல்ல காரியங்கள் எதுவும் இந்த நாட்டில் நடக்கும். ஒரு மாதம் இடைவெளியிருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் இங்கிருந்து விடுதலையடைய முடியும்.”

இளஞ்செழியன் ஆழ்ந்து யோசிக்கக் கண்களைச் சிறிது மூடினான். அவன் அகக்கண்ணில் அலீமாவின் தன்னலமற்ற தியாகம் பெரிதாக எழுந்து அவன் மனம் பூராவையும் சுற்றி வளைத்துக் கொண்டது. ஆனால் இத்தனை உதவியை அலீமா எனக்கு ஏன் செய்கிறாள்?’ என்று தன்னைத்தானே ஒரு முறை கேட்டுக் கொண்டான்.

அவன் உள்ளத்தெழுந்த கேள்வியைக் கண்டறிந்து விட்டவள் போல் அலீமா பதில் சொன்னாள், “இத்தனை உதவியை நான் செய்ய முன்வருவது உங்களுக்கு வியப்பா யிருக்கலாம். ஆனால் அதற்குக் காரணமிருக்கிறது. நான் அரபுநாட்டில் பிறந்தேனே தவிர வளர்ந்ததெல்லாம் யவன நாட்டில், யவனரின் அடிமைப் பெண்ணாக யாருமே என்னைக் கருதவில்லை. அன்பையெல்லாம் என்மீது அள்ளிக் கொட்டினார்கள். எந்த அரச குமாரிக்கு என்னைத் தோழியாக எண்ணிப் பழக்கினார்களோ அந்த அரச குமாரியைத் தமிழகத்தின் யவன ராணியென்றே நாங்களும் அழைத்தோம். யவனராணி என்னைத் தோழிபோல் பாவிக்க வில்லை. சொந்த சகோதரிபோல் பாவித்தாள். அவளை விட்டுப் பிரியவே எனக்கு மனம் வரவில்லை. வேறொரு தமிழ்ப் பெண்ணை எண்ணி என்னைத்தான் வேப்பங்காயாக நினைத்தீர்கள். ஆனால் யவன ராணியை மட்டும் நீர் கண்டு விட்டால்..” என்று சொல்லிச் சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

இளஞ்செழியன் புன்முறுவல் செய்தான். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை. இந்தப் புன்முறுவலைத் தவறாக அர்த்தம் செய்து கொண்ட அலீமா உணர்ச்சியுடன் பேசினாள். “தமிழக வீரர் இப்பொழுது இகழ்ச்சி நகை புரியலாம். ஆனால் யவன ராணியின் மீது கண்கள் ஒரு விநாடி நிலைத்தால் தெரியும். அந்த வசீகரக் கண்களின் காந்தத்தில் இழுபடாத வாள் வீரன் உலகத்தில் எவனுமிருக்க முடியாது. அவள் குழல் பத்தரை மாற்றுப் பசும்பொன்னைப் பழிக்கும். கண்கள் கடல் நீலத்தைக் கேலி செய்யும். வெண் கழுத்து சங்கின் வெண்மையைப் பழுப்பாகக் காட்டும். கன்னங்கள் வெட்கத்திலும் கோபத்திலும் எத்தனை சிவக்கும் தெரியுமா? ஒருவேளை இந்த நகரத்திலிருந்து தப்பி நாம் தமிழகம் சேர்ந்தால், ஆண்டவன் செயலால் ராணி அங்கிருந்தால் அவளை உங்களுக்குக் காட்டுகிறேன். அப்புறம் உங்கள் தமிழரசி உங்கள் இதயத்தைவிட்டுப் பறந்துவிடுவாள். அதுமட்டுமல்ல வீரரே! ஒருவேளை அவள் அரசை நிறுவி யிருந்தால் உங்களுக்கு நல்ல பதவியும் கிடைக்கும்” என்று அலீமா உறுதி கூறினாள்.

இளஞ்செழியன் முகத்தில் எத்தனை எத்தனையோ விவரிக்க இயலாத உணர்ச்சிகள் கலந்து தாண்டவமாடின. உள்ளத்தில் ஏதேதோ போராட்டங்கள் நிகழ்ந்து கொண் டிருந்தன. கிரேக்க சலவைக் கற்சிலைகளையும் பழிக்கும் யவன ராணியின் எழில் முகம் அவன் இதயத்தே எழுந்தது. அவள் நீலமணிக் கண்கள் அவனை நோக்கி நகைப்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டது. “உலகத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் என்னை நீங்கள் மறக்க முடியாது படைத் தலைவரே! விதி நம் இருவரையும் பிணைத்திருக்கிறது” என்று அவள் மெல்லிய இதழ்கள் அசைந்து பேசுவது போலவும் தோன்றியது படைத்தலைவனுக்கு. எண்ணம் எத்தனை வேக முடையது! அது எத்தனை தூரத்தை எத்தனை விநாடிகளில் கடக்க முடிகிறது! படைத்தலைவன் இதயக் கண்களிலே அதோ அந்தப் பூம்புகாரே தோன்றுகிறது. அதோ கடற்கரையில் கூத்திடும் பரதவரின் கூட்டம்! அதோ கேட்கிறதே சுங்கச் சாவடியில் விலை போட்டியிடும் வணிகரின் கூச்சல்! அதோ புரண்டுவருகிறது ஒரு பேரலை! அது காலில் தாக்கி விட்டதே! என்ன தட்டுப்படுகிறது காலில்! அப்பப்பா! இவள் யார்? கலங்கரை விளக்கமே, உன்னால் ஏன் இத்தனை விளக்கம்! எதற்காக உன் நெருப்புச் சுடரொளியை இந்த பொற்பாவை மீது வீசி என் மனத்தை அலைக்கழிக்கிறாய்! சரி! சரி! மூர்ச்சையாகக் கிடக்கிறாள் இவள்! சரி, தூக்குகிறேன். அப்பப்பா! இந்த அழகியைத் தூக்கிக் கொண்டு எப்படிப் போவேன்! கையிலென்ன அன்னப் பறவையா! ஹிப்பலாஸ்!. ஹிப்பலாஸ்!

இப்படி ஏதேதோ காட்சிகள், எண்ணங்கள் எழுந்து ஊசலாடியதால் கடைசியாக உச்சரித்த ஹிப்பாலாஸின் பெயரைச்சற்று இரைத்தே உச்சரித்தான் இளஞ்செழியன். “யாரது ஹிப்பலாஸ்?” என்று அலீமா கேட்ட கேள்வியே படைத்தலைவனை இந்த உலகத்துக்கு இழுத்தது. பூவழகிக்கு அடுத்தபடியாகத் தன் மனத்தை அத்தனை தூரம் ஆட் கொண்ட அந்த மாயச் சிலையின் சக்தி எத்தனையோ காதங்களுக்கு அப்பாலிருந்தாலும், தன்னை நிலை தடுமாறச் செய்வதை எண்ணி இளஞ்செழியன் மெள்ள சுய நிலையைப் பூரணமாக அடைந்து, “ஹிப்பலாஸா! அவன்தான் என் நண்பன்…. உம்… வெளியே படுத்திருக்கிறான்” என்று சமாளித்தான்.
பொழுது புலரும் சமயம் நெருங்கிவிட்டதை உணர்ந்த அலீமா அதற்குமேல் பேச்சை வளர்த்த விரும்பாமல், “தமிழக வீரரே! கடைசி முறையாகச் சொல்கிறேன். இலி-ஆஸுவின் பயங்கரப் பராமரிப்பில் தினசரி கைகால்கள் வெட்டப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு ஆட்கள் சாம்பிராணிக் காட்டுக்கு அனுப்பப்படும் இந்தக் கோரப் பிரதேசத்தில் இருக்க என்னால் முடியவில்லை. நான் வளர்ந்த சூழ்நிலை வேறு. என் மனப்போக்கும் வேறு. இன்னும் சில நாட்கள் நான் இங்கிருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். இங்கிருந்து தப்ப வழியைப் பல நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. கொள்ளைக்காரர்களைப் பிடித்துக் கொடுக்க நீங்கள் செய்த தந்திரம் இலி-ஆஸுவை நன்றி யுள்ளவனாகச் செய்திருக்கிறது. இதுதான் எனக்கும் சந்தர்ப்பம், உங்களுக்கும் சந்தர்ப்பம். ஆகவே நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நாளைக் காலை இலி-ஆஸு உங்களைக் கேட்பான். ‘என் மகளை மணக்கிறாயா?’ என்று, ‘சரி’ என்று சொல்லுங்கள். வேறு என்ன வேண்டுமென்றும் கேட்பான். நீங்கள் பிடித்துக் கொடுத்த கப்பலையும் பிடிக்கப்பட்ட சில அடிமைகளையும் கேளுங்கள்” என்று உத்தரவிடும் பாவனையில் திட்டமாகக் கூறினாள்.

“அடிமைகள் எதற்கு?” என்று கேட்டான் இளஞ் செழியன் ஆச்சரியத்துடன்.

“கப்பலை ஓட்ட உங்களுக்கு ஆட்கள் வேண்டாமா?”

“வேண்டும்.”

“ஆட்கள் திடீரென ஆகாயத்திலிருந்து குதிப்பார்களா?”
“நான் பிடித்துக் கொடுத்த ஆட்களையே நான் கேட்டால் இலி-ஆஸு” சந்தேகப்பட மாட்டானா?”

“நீங்கள் பிடித்துக் கொடுத்த ஆட்களைக் கேட்க வேண்டாம். உங்கள் ஆட்களைக் கேளுங்கள்.”

“எனக்கு ஆட்கள் ஏது?”

“ஏதோ ஐம்பது அறுபது வீரர்கள் உங்களுடன் கரைக்கு வந்ததாக இங்குள்ள படைத்தலைவன் இலி-ஆஸுவிடம் சொன்னானே?”

“அவர்கள் அடிமை வர்த்தகர்களல்லவா?”

“யாராயிருந்தாலும் பாதகமில்லை. துடுப்புகளைத் துழாவ, கப்பலைச் செலுத்த நமக்கு ஆட்கள் தேவை. மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“நீ என்ன பார்த்துக் கொள்ளமுடியும்?”

“கப்பலைத் தலைமை வகித்து நடத்துவேன்.”

“என்ன?” இளஞ்செழியன் குரலில் ஆச்சரியம் பெரிதாகத் தொனித்தது.

“என்ன அப்படி ஆச்சரியப்படுகிறீர்கள்! நீல நதியில் எத்தனைக் கப்பல்களைச் செலுத்தியிருக்கிறேன்? எனக்குத் தெரியாத துறைமுகம் எகிப்து நாட்டில் கிடையாது வீரரே! மூஸல், பெரினிஸ், அடுலீஸ், எல்லா துறைமுகங்களிலும் எனக்குத் தெரிந்தவர்களிருக்கிறார்கள். சுமார் நான்கு வருடங்கள் யவனர் கடற்படைத் தலைவனான டைபீரியஸ் என்பவன், என்னையும் யவன ராணியையும் இந்தத் துறைமுகங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறான். டைபீரியஸ் மகாவீரன். அவன்தான் ராணிக்குத் துணையாகச் செல்வதாயிருந்தது. கப்பல்களை நடத்துவதிலும் கப்பல் சண்டையிலும் அவனை வெல்ல யாராலும் முடியாது. எனக்கும் ராணிக்கும் அவனே கப்பலோட்டும் பயிற்சியளித் தான்” என்று விளக்கினாள் அலீமா.

எதிர்பாராத சக்திகள் பல தன் வாழ்வைச் சூழ்வதை அறிந்த இளஞ்செழியன் பலவாறு யோசித்தான். தன்னைச் சூழ்பவை யவன ராணியும் ஹிப்பலாஸும் நம்பும் விதியின் கயிறுகளாயிருந்தால் மதியாகிய வாளால் அவற்றைத் துண்டிக்கத் தீர்மானம் செய்தான். அத்துடன் கானாவை விட்டு நகருவதாயிருந்தால் அலீமாவின் உதவியைத் தவிர வேறு உதவி தனக்குக் கிடைப்பது கஷ்டமென்பதைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் அவள் சொற்படி நடப்பதென்றும் உறுதி செய்து கொண்டான். ஆகவே மறுநாள் இலி-ஆஸு அவனை அழைத்துத் திருமண சம்மதம் கேட்டவுடன் தங்கு தடையில்லாமல் ஒப்புக் கொண்டான். இலி-ஆஸுவின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. இளஞ்செழியனைக் கிட்ட அழைத்து இறுக அணைத்துக் கொண்டு, “இனி இந்தக் கானாவே உன்னைச் சேர்ந்ததென்று நினைத்துக் கொள். எதையும் நீ இங்கு அடையலாம். எங்கும் உலாவலாம். உன் வார்த்தை இங்கு கட்டளை” என்று கூறினான்.

ஒரே நாளில் இத்தனை அன்பு, திருமணம், பதவி எல்லாம் கிடைப்பது நம்பமுடியாததாயிருந்தது இளஞ்செழியனுக்கு. ‘திடீரென எவனோ முன்பின் தெரியாதவன் வருகிறான். தான் தப்புவதற்காக ஒரு கப்பலைப் பிடித்துக் கொடுக்கிறான். இதற்காக அவனுக்குப் பெண்ணையா கொடுத்து விடுவான் ஒரு மன்னன்? இலி-ஆஸு அப்படிப் பைத்தியம் பிடித்தவனாகவும் தெரியவில்லையே’ என்று நினைத்த இளஞ்செழியன் மனத்தில் சந்தேக மேகங்கள் எழுந்து ஊசலாடின. ஏதோ ஆழ்ந்த கருத்துடனேயே இலி-ஆஸு தனக்கு ராஜோபசாரம் நடத்துகிறானென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான் சோழர் படையின் உபதலைவன். அவன் சந்தேகங்களுக்குத் தகுந்த ஆதாரம் அடுத்த சில நாட்களிலேயே கிடைத்ததும் தனக்கு எத்தனை பெரிய படுகுழியை இலி-ஆஸு தோண்டியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் இளஞ்செழியன்.

Previous articleYavana Rani Part 2 Ch8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 2 Ch10 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here