Home Cheran Selvi Cheran Selvi Ch27 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch27 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

84
0
Cheran Selvi Ch27 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch27 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch27 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 27. பகடை உருண்டது! படை நகர்ந்தது!

Cheran Selvi Ch27 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

கூடாரத்துக்குள் இளவழுதியைக்காணாததால் எல்லை கடந்த கோபத்துக்கு இலக்கான அஜ்மல்கான் சிறிது நேரம் பேசவும் சக்தியிழந்து மலைத்து நின்றான்,
அங்கிருந்த இரு காலி மஞ்சங்களும், ஒரு மஞ்சத்தின் மீதிருந்த பெரிய காலி மதுக்குப்பியுங்கூட தன்னை நோக்கி நகைப்பதாகத் தோன்றியது மாலிக்காபூரின் தூதனுக்கு. காற்றில் லேசாக ஆடிய கூடாரத்தின் பக்கத்து முரட்டுத் துணி
ஒரு புறத்தில் வாயைப் பிளந்து “அவன் போனவழி இதுதான்” என்று காட்டியதால் ஏற்கனவே எழுந்த கோபம் உச்சக்கட்டத்தையும் தாண்டி விடவே “டேய் மடையர்களா” என்று பெரும் குரல் கொடுத்தான் ‘அஜ்மல்கான். அக்குரலின்
கடுமையைக் கேட்டு நடுக்கத்துடன் உள்ளே வந்த இரு காவலரையும் நோக்கி “உள்ளேயா இருக்கிறான் சேரன் தளபதி?” என்று சீறவும் செய்தான்.
முரட்டுக் காவலர் இருவரும் நடுக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் ஒரு வினாடி. “இங்குதானே இருந்தான் அவன்?” என்று பணிவுடன் கூறினான் ஒரு முரடன்.
அஜ்மல்கான் அவனைப் பரம உஷ்ணத்துடன் பார்த்தான். “காற்றில் பறந்துவிட்டானா?” என்றும் கேட்டான்.
“பறக்க முடியாது” என்று இன்னொரு முரடன் ஒப்புக் கொண்டான்.
அஜ்மல்கான் விழிகளில் கோபத்துடன் இகழ்ச்சியும் சிந்தலாயிற்று. “மனிதன் பறக்கமுடியாதென்பதை ஒப்புக் கொள்கிறாய்?” என்று வினவினான் இகழ்ச்சி நிரம்பிய குரலில்.
இதற்கு முதல் முரடன் பதில் சொன்னான் “அதில் சிறிதும் சந்தேகமில்லை “என்று.
“எதில்?” அஜ்மல்கான் கேள்வி தணலென எழுந்தது.
“மனிதன் பறக்க முடியாதென்பதில்” என்றான் இரண்டாவது முரடன்,
அந்த இரண்டு மாமிச பர்வதங்களையும் நோக்கிய அஜ்மல்கான் அவர்கள் மீது சீறுவதில் பொருளில்லை யென்பதைப் புரிந்து கொண்டதால், “கூடாரத்தின் அந்த இடத்தைப் பாருங்கள்” என்று சீலை கிழிந்திருந்த இடத்தைச் சுட்டிக்
காட்டினான் கையில் உருவியிருந்த கத்தியால்.
“கூடாரம் கிழிக்கப்பட்டிருக்கிறது” என்றான் ஒரு முரடன்.
“கத்தியால்” என்றான் இன்னொருவன்.
“இந்தக் கூடாரத்துக்குள் வேறு யாராவது வந்தார்களா?” என்று வினவினான் அஜ்மல்கான்.
“இல்லை “ என்று ஒரே மூச்சில் இரு காவலரும் பதில் சொன்னார்கள்.
“நான் கொடுத்த மதுவை அவன் வாயில் புகட்டினீர்களா?” என்று அஜ்மல்கான் கேட்டான்.
“முழுவதையும் புகட்டினோம்” என்றான் ஒரு முரடன்.
அஜ்மல்கான் அவர்கள் காது கேட்கும்படியாக தானே பேசிக் கொண்டான். “மதுவில் நான் கலந்த மருந்துக்கு மாற்று மருந்து கொடுத்தாலொழிய எந்த மனிதனும் ஒரு நாள் முழுவதும் சுரணையின்றிக் கிடப்பான். அப்படி யிருக்க
இளவழுதி தானாகப் போயிருக்க முடியாது. யாரோ உதவிக்கு வந்திருக்கிறார்கள். அவனே என்னைச் சந்தேகித்து உதவிக்கு அழைத்து வந்திருக்கிறானா? இருக்காது இருக்காது. ஒருக்காலும் இருக்காது. இளவழுதி மகாவீரன், சுயபலத்தில்,
சுய புத்தியில் பெரிதும் நம்பிக்கை உள்ளவன். ஆகவே யாரையும் அழைத்து வந்திருக்கமாட்டான்” என்று பேசிக் கொண்ட அஜ்மல்கான் கூடாரத்தின் தரையை நோக்கினான். அங்கு இரண்டு அடிச்சுவடுகளே தெரிந்தன, இளவழுதி
உருண்டு கிடந்த அடையாளம் தெரிந்தது.
ஆகவே இரண்டாமவன் யாரும் வரவில்லையென்று தீர்மானித்துக் கொண்ட அஜ்மல்கான் கூடாரத்தின் கிழிக்கப்பட்ட துணியளித்த வழியே வெளியே சென்றான். கூடாரத்திலிருந்த கையிலிருந்த விளக்கையும் கொண்டு சென்று
வெளிப்புறத்தையும் ஆராய்ந்தான். அங்கும் இரு அடிச்சுவடுகளே காணப்பட்டன. ஆனால் சிறிது தூரம் நடந்ததும் புரவிச் சுவடுகள் நான்கும் தெரிந்ததைக் கண்டு “இளவழுதி புரவியின் மேல் சென்றிருக்கிறான்” என்ற முடிவுக்கும்
வந்தான். “ஆனால் இளவழுதி தானாக எழுந்து சென்றிருக்க முடியாது. வேறு யாரோ ஒருவன் வந்து இளவழுதியைத் தூக்கிச் சென்றிருக்க வேண்டும். அவன் யாராயிருப்பான்?” என்று தன் முதல் ஊகத்தை மாற்றிக்கொண்டு கேள்வியும்
கேட்டுக்கொண்டான். மீண்டும் பழையபடி கூடாரத்துக்குள் வந்து அங்கேயே இடித்த புளிபோல் நின்றிருந்த காவலரைக் கண்டு “நமது புரவிகள் எல்லாம் இருக்கின்றனவா?” என்று வினவினான் அவர்களை நோக்கி,
“இருக்கின்றன” என்று பதில் வந்தது ஒரு காவலனிடமிருந்து.
“ஒன்றுகூட காணாமற் போகவில்லை?” என்று வினவினான் அஜ்மல்கான்.
இல்லை என்பதற்கு அடையாளமாக இரு முரடர்களும் தலையை வெகுவேகமாக ஆட்டினார்கள்.
“தொலையுங்கள் வெளியே” என்று எரிந்து விழுந்த அஜ்மல்கான் அவர்கள் சென்றதும் தனது கையிலிருந்த விளக்கைக் கூரையிலிருந்து தொங்கிய கம்பியில் மாட்டி னான். மறுபடியும் மீண்டும் அறையை சுற்றுமுற்றும் நோக்கி
விட்டு வெளியே செல்ல முயன்ற அஜ்மல்கானின் விழிகள் கூடார வாயிலில் திடீரெனப் பதிந்தன. அங்கிருந்த வாயில் படுதாவில் ஒரு சிறு பட்டுச் சீலை வைக்கப்பட்டிருந்தது. அதனருகே சென்ற மாலிக்காபூரின் தூதன் வியந்து அசந்து
நின்றான். அந்த சீலையில் எழுதப்பட்டிருந்தன நாலே வரிகள். “எங்கள் படைபலம் உனக்குத் தெரிந்து விட்டதால் நீ உன் எஜமானிருப்பிடம் ஏகலாம். அந்த இருப்பிடமும் உனக்குத் தெரியாததால் நானே அவருக்கு ஓலை அனுப்பி விட்டேன்.
சீக்கிரம் அமீர்குஸ் ரூவை மதுரையில் சந்திப்பது நல்லது. உனது அருமை “நண்பன்” என்றிருந்தது அந்தச் சீலையில்.
அதைப் படித்த அஜ்மல்கான் கால்கள் வெளியே செல்லும் சக்தியை இழந்தன. “இதில் அமீர்குஸ்ரூவுக்கு இருக்கும் சம்பந்தம் இங்கிருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? அப்படியும் அவர் மதுரையில் இல்லையே. வீரதவள
பட்டணத்திலல்லவா இருக்கிறார். இதில் ஏதோ சூது இருக்கிறது அதைக் கண்டுபிடிக்கவேண்டும்” என்று நினைத்தான் அஜ்மல்கான். “ஆம். ஆம். பெரும் சூது தான் இது” என்று வலியுறுத்தி மறுபடியும் சொல்லிக் கொண்டு மீண்டும்
மஞ்சத்துக்கு வந்து அமர்ந்து நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு வெளியே ஓடி புரவியொன்றைக் கொண்டு வரப் பணித்தான். புரவி வந்ததும் அதில் தாவி ஏறி வெகு அவசரமாகப் புரவியைத்
தூண்டி மேற்குத் திசையில் பறக்கவிட்டான்.
அதே நேரத்தில் அரண்மனையில் தனது அறைப்பஞ்சணையில் கிடந்த இளவழுதி மெள்ள தன் கண்களை அகல விரித்தான். கண்களில் பழைய கூர்மை இல்லை. ஏதோ பஞ்சடைந்த நிலையில் இருந்ததையும் அறையிலிருந்த விளக்கின்
வெளிச்சம் மிக மங்கலாகத் தெரிந்ததையும் உணர்ந்தான். இதற்கெல்லாம் காரணம் தானருந்திய மதுதானென்று தீர்மானித்து, கையின் கட்டுக்களை அவிழ்க்க முயன்றான். கைகளில் கட்டு ஏதுமில்லாது போகவே, கால்களை விரித்து
உதைத்துப் பார்த்தான். பிறகுதான் புரிந்து கொண்டான் தானிருப்பது பழைய கூடாரமில்லை யென்பதையும், படுத்திருப்பதும் தரை இல்லையென்பதையும், தவிர எதிரே உட்கார்ந்திருந்த அழகியும் அந்தக் கூடாரத்தில் இல்லையென்ற
காரணத்தால் சிறிது ஆசுவாசப் பெருமூச்சும் விட்டான்.
அவன் விழித்ததை எதிரே உட்கார்ந்திருந்த பெண்ணும் கண்டாள். அதன் விளைவாக எழுந்திருந்து அறை மூலைக்குச் சென்று ஒரு குவளையில் குளிர்ந்த நீரை எடுத்து வந்து அவன் கண்களைத் துடைத்தாள், வாயிலும் சிறிது
ஊற்றினாள். நெற்றியிலும் தனது கைவிரல்களால் நீரைத் தெளித்தாள் சிறிது. இந்த சைத்தியோபசாரங்களால் சுரணையடைந்த இளவழுதி மெள்ள எழுந்து பஞ்சணையில் உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் நோக்கி அது தனது
அறைதானென்பதையும் புரிந்து கொண்டான்.. எதிரேயிருந்தது சுந்தரி தானென்ப தும் சந்தேகமறத் தெரியவே “சுந்தரி” என்று மெள்ள அழைத்தான்.
“ஏன் படைத்தலைவரே?” என்று வினவினாள் சுந்தரி.
“நான் இங்கு எப்படி வந்தேன்?” என்று வினவினான் இளவழுதி.
“எனக்குத் தெரியாது” என்றாள் சுந்தரி.
“தெரியாவிட்டால் எதற்கு இந்த உபசாரமெல்லாம்?” என்று வினவினான் இளவழுதி சந்தேகத்துடன்.
“விடியற்காலையில் உங்களை எழுப்ப மன்னர் உத்தரவிட்டிருந்தார் வந்து பார்த்தேன். நீங்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள். கூப்பிட்டுப் பார்த்தேன். அசைத்தும் பார்த்தேன். நீங்கள் எழுந்திருக்கவில்லை. பிறகுதான்
மயக்கத்திலிருப்பதை உணர்ந்தேன். அதனால் சிறிது சைத்தியோபசாரம் செய்தேன்” என்ற சுந்தரி “படைத்தலைவரே! வர வர நீங்கள் அதிகமாகக் குடிக்கிறீர்கள்” என்று குற்றமும் சாட்டினாள்.
“குடித்ததாக யார் சொன்னது?” என்று சிறிது உஷ்ணத்துடன் கேட்டான் படைத்தலைவன்.
“யாரும் சொல்லத் தேவையில்லை. நீங்களிருந்த நிலையே புரிய வைத்தது. ஆனால் மன்னர் சொல்லித் தான் எனக்குத் தெரியும்” என்று விளக்கினாள் சுந்தரி.
“மன்னரா?”
“ஆமாம்”
“நான் குடித்தது அவருக்கு எப்படித் தெரியும்?”
“உங்களைப் படைத்தலைவராக நியமித்தவர் உங்களைக் கவனிக்காமலா இருப்பார்?”
“ஒற்றர்களை வைத்துக் கவனிக்கிறாரா?”
“தேவையில்லை. சகலத்தையும் உணரும் சக்தி சேரர்பெருமானுக்கு உண்டு. இல்லாவிட்டால் குடிபோதையுடன் நீங்கள் ராஜாவில் வந்ததும், புரவி இங்கு வாயிலில் வந்து நின்றதும் சரிந்து கீழே விழுந்துவிட்டதும் அவருக்கு எப்படித்
தெரியும்” என்று வினவிய சுந்தரி அறையை விட்டு வெளியே போக எத்தனித்தாள்.
“இரு சுந்தரி” என்று தடுத்தான் இளவழுதி.
வாயிற்படிவரை சென்றுவிட்ட சுந்தரி சட்டென்று நின்று திரும்பி நோக்கினாள் படைத்தலைவனை இளவழுதி கேட்டான் அவளை “ராஜாவென்று சொன்னாயே அரசகுமாரியின் புரவியைத்தானே கூறினாய்?” என்று.
“ஆம்”
“அதில் நான் வந்தேன்?”
“அப்படித்தான் சொன்னார் அரசர்”
“அதிசயப் புரவி அது”
“ஆமாம். சில நாட்களாகப் இங்கு புரவிகள் நிகழ்ச்சி கள் ஆகிய சகலமும் அதிசயமாகிக் கொண்டு வருகின்றன’, என்று கூறிச் சென்று விட்டாள் சுந்தரி.
அவள் சென்றதும் பரபரப்புடன் எழுந்திருந்தான் படைத்தலைவன். சாளரத்துக்கு வெளியே எட்டிப் பார்த்தான். விடியும் சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. அரண்மனைச் சதுக்கத்தில் வீரர்கள் அணி வகுத்து நட மாடிக்
கொண்டிருந்தார்கள், எங்கும் ஒரு பரபரப்பும் எச்சரிக்கையும் காணப்பட்டது. படைத் தலைவனுக்கு இவற்றுக்கெல்லாம் காரணம் புரியாததால் அவன் வேகமாக நீராடும் அறைக்குச் சென்று நீராடி தனது உத்தியோக உடைகளை
அணிந்து கொண்டான். கச்சையில் வாளைக் கட்டிக்கொண்டு புறப்பட நினைத்த சமயத்தில் சுந்தரி அவனுக்கு ஒரு தட்டில் சிற்றுண்டியும் குவளையில் பாலும் கொண்டு வந்தாள். அப்பொழுது அவன் மனமிருந்த நிலையில் உணவு
செல்லாது போகவே அரை குறையாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்திருந்தான் மஞ்சத்தை விட்டு.
“தங்களுக்காக மன்னர் ஆஸ்தான அறையில் காத்திருக்கிறார்” என்று தெரிவித்துச் சென்றாள் சுந்தரி.
“நீராடியதாலும் சிற்றுண்டி அருந்தியதாலும் பூரண சுய நிவையையும் சக்தியையும் அடைந்து விட்ட இளவழுதி அரசன் ஆஸ்தான அறையை நோக்கிச் சென்றான். அங்கு அரசன் பெரிய ஆசனத்தில் அமர்ந்து புலவருடன் பகடை
ஆடிக் கொண்டிருந்தார். புலவரும் மும்முரமாகக் காய் களை உருட்டிக் கொண்டிருந்தார்.

.
சிறிது நேரம் அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்ற படைத்தலைவன் “மன்னருக்கு அடியவன் நன்றி” என்று கூறினான்.
மன்னர் தலையைச் சிறிது நிமிர்த்தி “யார் படைத்தலைவரா! வாருங்கள்” என்றார்.
“மன்னவா! என்னை இளவழுதி என்று அழைத்தால் போதும்” என்றான் படைத்தலைவன்.
“சமயத்துக்கு தகுந்தபடி அழைக்க வேண்டும்” என்று அரசன் கூறவே, இளவழுதி “நன்று மன்னவா” என்றான் மீண்டும்.
அதை மன்னர் காதில் வாங்கிக் கொள்ளாமல் பகடையாடவே நிதானமிழந்த இளவழுதி “சேரர் பெருமான் சிறந்த நாடக ஆசிரியர் மட்டுமல்ல. நடிகரும்கூட” என்று கூறினான் சற்று கடுப்புடன்.
“அப்படியா!” என்று மட்டும் கேட்ட ரவிவர்மன் பகடையை உருட்டினான்.
“ஆம். இல்லாவிட்டால் என்னைப் புரவியில் தூக்கி வந்து வாயிலுக்குள் புரவியை விரட்டி விட்டு மறைந்து விட்டீர்கள். நான் இங்கு எப்படி வந்தேனென்று எல்லாரும் விழிக்கிறார்கள்” என்றான் படைத்தலைவன்.
“நன்றாக ஊகித்துவிட்டீர் படைத்தலைவரே! ஆனால் உம்மை நான் காத்தது சுயநலத்தைக் கருதி. படைத்தலைவனில்லாமல் படை நகர முடியாது” என்றான் சேரமன்னன்.
“என்ன சொல்கிறீர்கள் மன்னவா?” என்றான் இளவழுதி குழப்பத்துடன்.
மன்னன் பகடை உருட்டுவதைவிட்டு எழுந்து நின்றான். பிறகு கம்பீரத்துடன் சொன்னான்
“இளவழுதி! எதிரிகளுடன் நாம் மோதும் சந்தர்ப்பம் வந்துவிட்டது. படைகளுடன் புறப்படு” என்று.
“எங்கு?” படைத்தலைவன் கேள்வி திட்டமாகவும் குரல் உறுதியாகவும் இருந்தது.
“மதுரைக்கு” மன்னன் ஆணையிடும் பாவனையில் மதுரையிருந்த திசையைச் சுட்டிக் காட்டினான்.
“எப்பொழுது புறப்பட வேண்டும்?” என்று கேட்டான் படைத்தலைவன்.
மன்னன் பதில் சொல்லவில்லை. சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. வெளியே திடீரென தாரைகள் ஊதின. அந்த அறைக்குள் பூர்ண கவசத்துடன் பலபத்ரன் தோன்றி மன்னனுக்கும், புலவருக்கும், படைத் தலைவனுக்கும் தலை
தாழ்த்தினான். “படைத் தலைவரே! தங்கள் உத்திரவுக்குத்தான் படை காத்திருக்கிறது” என்று கூறினான்.
படைத்தலைவன் மன்னரையும் வணங்கினான், “உங்கள் ஆணை, வருகிறேன் மன்னவா! வெற்றியுடன் திரும்புவேன்” எனக் கூறிவிட்டு அறையிலிருந்து பலபத்ரனைத் தொடர்ந்து சென்றான்., அரண்மனைச் சதுக்கத்தில் படையின் சிறு
பகுதி திரண்டு நின்றது. ராஜா பூரண போர்க்கோலத்துடன் நின்றிருந்தது. படைத்தலைவன் வந்ததும் தாரைகள் மீண்டும் முழங்கின. படைத்தலைவன் ராஜாவின் மீது ஏறிக் கையை உயர்த்தினான் படை நகரலாமென்பதற்கு அறிகுறியாக.
படை ஏதோ பெரிய யந்திரம் போல் அசைந்தது, கோட்டை வாசல்கள் திறந்து கிடந்தன. திறந்த மடையிலிருந்து பிரகாசிக்கும் ஏரியின் நீரைப்போல் வேகத்துடன் வெளியே பிரவாகித்தது சேரப் பெருமான் பெரும்படை.

Previous articleCheran Selvi Ch26 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch28 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here