Home Sandilyan Yavana Rani Part 1 Ch 7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

112
0
Yavana Rani Part 1 Ch7 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch7 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 7 பிரும்மானந்த ஆசிரமம்

Yavana Rani Part 1 Ch7 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

விதி வகுக்கும் வழியில் அசையாத நம்பிக்கையைப் பெற்றிருந்த யவன ராணி, ஹிப்பலாஸ் இருவரும் பெரிதாக நகைத்ததாலும், அந்த நகைப்பைத் தொடர்ந்து, யவன வீரர்கள் தனது மாளிகையைச் சூழ்ந்து கொண்டதன்றி, தன்னைச் சிறை செய்யப் படிகளிலும் துரிதமாக ஏறி வந்து கொண்டிருந்ததாலும், தானிட்ட எந்தக் கட்டளையையும் அதுவரை சிரமேற் கொண்டு நிறைவேற்றி வந்த ஹிப்பலாஸ் கூட யவன ராணிக்கு முன்பாகத் தன் உத்தரவுகளை நிறைவேற்ற திட்டமாக மறுத்து விட்டதாலும், தான் மிக நெருக்கடியான கட்டத்தில் சிக்கி விட்டதை உணர்ந்த இளஞ்செழியன், அந்த நிமிடத்தில் தன் வாளையும் கைகளையும் தவிர வேறு துணை தனக்கு இல்லை யென்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டானாகையால், நிலைமையை எப்படிச் சமாளிக்கலாம் என்று சில வினாடிகளே யோசித்தான். அந்த யோசனையின் விளைவாகப் படைத் தலைவன் முகத்தில் அதுவரை தாண்டவமாடிய கோபக்குறி திடீரென மறைந்து விட்டதையும், ஏதோ அரைத் தூக்கத்திலிருப்பவன் போல் காணப்பட்ட இளஞ்செழியனின் இதழ்களில் வறண்ட புன்சிரிப்பு ஒன்று தவழத் தொடங்கியதையும் கண்ட ஹிப்பலாஸ், இளஞ்செழியன் இதயம் ஏதோ பெரும் திட்டத்தைத் துரிதமாக வகுக்க முற்பட்டுவிட்டது என்பதையும் புரிந்து கொண்டான். இளஞ்செழியனின் சுபாவத்தைப் பல வருடங்களாக அறிந்திருந்த ஹிப்பலாஸ், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் நேரத்தை விட முகத்தில் ஒளி மங்கும் நேரத்திலும் கண்கள் அரைவாசி மூடும் சந்தர்ப்பங்களிலும் படைத் தலைவன் மிக அபாயமானவன் என்பதை உணர்ந்து கொண்ட காரணத்தால் எந்த விநாடியிலும் இளஞ்செழியன் அன்றைய இக்கட்டிலிருந்து தப்ப நடவடிக்கைகளில் இறங்கலா மென்பதைத் தீர்மானமாகத் தெரிந்து கொண்டு அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கவனிக்கத் தொடங்கினான்.

கண்ணிமைகளைத் தாழ்த்திய வண்ணம் கண்ணிமைக்கும் நேரமே நின்ற இளஞ்செழியன், தான் அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொண்டதால், இரண்டே எட்டில் அறைக் கதவை நோக்கிச் சென்று அதை நன்றாகத் தாளிட்டுவிட்டுத் திரும்பி, புன் சிரிப்புத் தவழ்ந்த முகத்துடன் யவன ராணியை நோக்கி, “ராணி! கோட்டைத் தலைவன் இத்தனை துரிதமாக நடவடிக்கையில் இறங்குவானென்று நான் எதிர்பார்க்க வில்லை. இருப்பினும் எந்தவித ஆபத்துமில்லாமல் உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு போவதற்குப் பிரயத்தனப்படுகிறேன். என் முயற்சி தோல்வி யுற்று உங்களுக்கு ஆபத்து ஏதாவது நேரிடும் பட்சத்தில் பொறுப்பாளி நானல்லவென்பதை உங்களுக்கு முன் கூட்டியே சொல்லி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு ஹிப்பலாஸுக்காகத் திரும்பி, “ஹிப்பலாஸ்! பேச்சுக்கு அதிக நேரமில்லை. அறைக் கதவு பலமாக இடிக்கப்படுகிறது. எந்த விநாடியிலும் கதவு உடைந்து சக்கை சக்கையாக உள்ளே விழலாம். ஆகவே உன் கருத்தைத் திட்டமாகத் தெரிவித்துவிடு. யவன வீரர்களுக்கு இருப்பிடமும் உணவும் அந்தஸ்துமளித்த தமிழகத்துக்கும், உன்னை இத்தனை நாள் உடன் பிறந்தவனைப்போல் நடத்திய எனக்கும் எதிரியாக மாறி, மன்னர் இறந்ததும் நள்ளிரவில் கள்ளர்களாக மாறி யாரும் புகமுடியாத பூம்புகாரைக் கொள்ளை கொள்ள இருக்கும் உன் நாட்டாரின் கைப்பாவையாகவும் இந்த ராணியின் அடிமையாகவும் பணியாற்றப் போகிறாயா, அல்லது உடலில் ஊறும் நல்லுணர்ச்சிகளின் காரணமாக நன்றியறிதலுடன் இந்த நாட்டுக்கும் எனக்கும் சேவை செய்ய உத்தேசமா? துரிதமாகச் சொல்” என்று வினவியதோடு நில்லாமல் இடையிலிருந்த தனது நீண்ட வாளையும் உறையிலிருந்து உருவிக் கையில் பிடித்துக் கொண்டு யவன ராணிக்கு முன்பாகத் தன் முதுகுப் புறத்தைக் காட்டி நின்று அவளை மறைத்த வண்ணம், “ஹிப்பலாஸ்! நீயோ அல்லது அதோ கதவை உடைத்துக் கொண்டிருக்கும் யவன வீரர்களோ இந்த ராணியை அணுகுவதானால் என்னைக் கொன்ற பிறகுதான் அணுக முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள். நமது இருவர் வாள்களும் அக்கம்பக்கத்தில் ஒன்றுக்கொன்று துணைகொண்டு யவனர்கள் மீது பாய வேண்டுமா அல்லது ஒன்றோடு ஒன்று விரோத பாவத்தில் உராய வேண்டுமா என்பதையும் சீக்கிரமாகத் தீர்மானித்துக் கொள்” என்று கூறிவிட்டு அதற்குமேல் ஏதும் பேசாமல் மிகப் பலமாக உடைக்கப்பட்டு வந்த வாயிற்படியை நோக்கலானான்.

ஹிப்பலாஸ் படைத் தலைவனையும், கோடரிகளைக் கொண்டு பிளக்கப்பட்டாலும் சின்னஞ்சிறு சிப்பல்களே சிதறி விழுந்து அசையாமலிருந்த வயிர மரக் கதவையும், தலைவனால் மறைக்கப்பட்டிருந்தாலும் பக்கவாட்டில் தெளிவாகத் தெரிந்த யவன ராணியின் முகத்தையும் மாறி மாறிச் சில விநாடிகள் பார்த்துவிட்டுப் பெரும் குழப்ப மடைந்தாலும், இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து பெருமூச்சு விட்டு, இளஞ்செழியனுடைய வாள் நீளமில்லா விட்டாலும் அதைவிடப் பலமடங்கு கனமாகவும் அகலமாகவும் இருந்த தன் வாளை உருவிக் கொண்டு, “படைத்தலைவரே! எது வந்தாலும் வரட்டும். என்னை இத்தனை நாள் காத்து, சோழர் படையில் ஒரு பதவிக்கும் கொண்டு வந்த உங்களைப் பல பேர் சேர்ந்து வெட்டும்படி விடமாட்டேன்” என்று கூறிவிட்டு, படைத்தலைவனைக் காக்கும் உத்தேசத்துடன் உடைக்கப் பட்டு வந்த கதவை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்.

ஹிப்பலாஸின் முகத்தில் தோன்றிய குழப்பத்தையும் குழப்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தெளிவையும் உறுதியையும் கண்ட இளஞ்செழியன், “ஹிப்பலாஸ்! கதவை அணு காதே! அவர்களே உடைத்துக்கொண்டு உள்ளே வரட்டும். கதவின் பக்கத்தில் உள்ள சிறு விளக்கைத் தவிர மற்ற விளக்குகளை அணைத்துவிடு!” என்று உத்தரவிட்டு அந்த உத்தரவின்படி விளக்குகள் அணைக்கப்பட்டதும் சிறு விளக்கு வீசிய மங்கலான வெளிச்சமும் கதவின் ஒரு புறமே விழும்படியாகவும் எதிர்ப் புறத்தில் நிழலடிக்கும் படியாகவும் இரும்புக் கவசத்தின் ஒரு பகுதியை அதன் பக்கத்து ஆணியில் மாட்டி மறைத்தான். இந்த ஏற்பாடுகளைச் செய்ததும் ராணியின் கையைத் தன் இடது கையால் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த நிழலின் மறைவில் ஒதுங்கிய இளஞ்செழியன் ஹிப்பலாஸையும் அந்தப் பகுதிக்கே வரும்படி அழைத்தான். படைத்தலைவன் ஏற்பாடுகளின் காரணத்தைப் புரிந்து கொண்ட ஹிப்பலாஸ், ‘எந்த அபாயத்தையும் சமாளிக்கப் படைத்தலைவனுக்கு எத்தனை கூரிய அறிவை ஆண்டவன் அளித்திருக்கிறான்! ஒரு வேளை படைத் தலைவன் கூறியபடி விதியை மதி வென்று விடுமோ?” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தான்.

‘கதவு எதிரிகளால் உடைக்கப்பட்டுத் தடாலென விழுந்தாலும் அறையின் ஒரு பகுதியில்தான் வெளிச்ச மிருக்கும். இருட்டடித்த இடத்தில் யாரிருக்கிறார்களென்பது தெரியாது. அறைக்கதவு அத்தனை பெரிதல்லவாகையால் ஒரே சமயத்தில் இரண்டு வீரர்களுக்கு மேல் நுழைய முடியாது. ஒரே காலத்தில் ஐந்தாறு பேர்களை வாளினால் தடுத்து நிறுத்தக்கூடிய படைத்தலைவனுக்கு இரண்டு யவனர்களைச் சமாளிப்பது ஒரு பொருட்டே அல்ல. போதாக்குறைக்கு நானும் இருக்கிறேன்’ என்று நிலைமையை அலசி ஹிப்பலாஸ் முடிவு கட்டுவதற்கும் கதவின் பகுதிகள் இரண்டு பெரும் பிளவுகளாகப் பிளந்து உள்ளே விழுவதற்கும் சரியாயிருந்தது.

கதவு பிளந்ததும் உள்ளே எதிரிகள் நுழைவார்களென்று நினைத்த ஹிப்பலாஸ் ஏமாந்தே போனான். உள்ளின் ஒரு பகுதியிலே வெளிச்சமிருப்பதையும் வலப்புறத்தில் இருள் மண்டிக் கிடப்பதையும் கண்ட யவனர்கள் சற்றுத் தாமதித்த தன்றி, வந்த வீரர்களில் ஒருவன், “அங்கே பந்தமிருந்தால் கொண்டுவா! இந்த அறைக்குள் நுழைவது அபாயம்!” என்று கூவவும் செய்தான். அவன் ஒரு முறை மட்டும் கூவவில்லை. இரண்டாம் முறையும் கூவினான். ஆனால் முதலில் கூவிய அதிகாரச் சொல்லிலல்ல. வயிற்றிலே திடீரென ஒரு வாள் புகுந்து விட்டதால் மாளிகையெங்கும் எதிரொலி ‘ஐயோ!’ என்ற பயங்கர அலறல் அது.

பந்தம் வந்தால் அறை முழுவதும் வெளிச்சமடித்து விடுமென்பதைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன் மறைவிலிருந்த வண்ணம் தன் நீண்ட வாளை வாயிற்படியில் நின்றிருந்த யவனன் மீது பாய்ச்சி விட்டதன்றி, மறுகணம் யவன ராணியை இழுத்துக் கொண்டு வாயிற்படியைத் தாண்டி அங்கிருந்த இரு வீரர்கள் மீதும் வாளை மின்னல் வேகத்தில் செலுத்தலானான். அறையில் இளஞ்செழியன் நிழல் மறைவில் ஒளிந்திருப்பான். பந்தம் வந்ததும் அவனைப் பிடித்து விடலாம் என்ற நினைப்பில் வெளிச்சத்தை எதிர்பார்த்திருந்த வீரர்கள், பந்தத்தைக் கேட்டவன் அலறிய மறுகணமே உருவிய வாட்களுடன் திரும்பினாலும், தாங்கள் தாமதித்த அந்த இமைப் பொழுதில் இளஞ்செழியன் அறையை விட்டு வெளியே வந்து விட்டதைக் கண்டு அசந்து விட்டார்களாதலால், படைத் தலைவன் வேகத்தைத் தடுக்க முடியாமல் அவன் வாள் காயத்துக்கு இலக்காகி இருபுறமும் சாய்ந்தார்கள்.

வாயிற்படியில் நின்ற வீரனை மாய்த்து வெளித் தாழ்வாரத்தில் நின்றிருந்த இரு வீரர்களையும் மரணக் காயப்படுத்திவிட்டு ராணியுடன் மாடிப்படிகளில் உச்சியை அடைந்த சோழர் படைகளின் உபதலைவன், படிகளில் ஏறி வந்து கொண்டிருந்த மற்றுமிரு வீரர்களைச் சமாளிக்கச் சன்னத்தம் செய்து கொண்டு தாழ்வாரத்தின் தூணிலிருந்த விளக்கின் திரியை, தன் வாளால் உள்ளுக்குத் தள்ளி அணைத்து, கைப்பிடிச் சுவரின் வழியாக வெளியே நோக்கினான். மாளிகையின் வெளிப்புறமெல்லாம் யவனர்கள் பலர் பந்தங்களைப் பிடித்துக் கொண்டிருந்ததாலும் புரவிகளில் அமர்ந்திருந்த யவனர்களின் இரும்புக் கவசங்கள் எங்கும் பளபளத்ததாலும் எதிரிகள் மாளிகையை நன்றாகச் சூழ்ந்து விட்டார்களென்பதை அறிந்து கொண்டான் இளஞ்செழியன். மூன்றாம் ஜாமம் கழிந்து நான்காம் ஜாமம் வந்து கொண்டிருந்ததால் ஊரும் அடங்கி விட்டதையும், ஊரில் ஒரு சிலர் விழித்திருந்தாலும் ஒதுக்குப் புறமாகத் தனித் தோப்பிலிருந்த தனது மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சிகளை யாரும் அறிய முடியாதென்பதையும் அப்படி ஊரார் அறிந்தாலும் காவிரிக்கு அப்பால் வாணகரைக் குன்றின் அடிவாரத்திலுள்ள தனது படைப் பிரிவு அறிய முடியா தென்பதையும், அலசிப் பார்த்த படைத் தலைவன் படியேறி வரும் எதிரிகளைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை யென்று தீர்மானித்தானாகையால், எதிரிகளுடன் போரிட ஆயத்தமாக நின்றான்.

ஏற்கெனவே மூன்று யவனர்களைச் சாய்த்து விட்ட இளஞ்செழியனை மேற்கொண்டு போரிடச் செய்வது சரியல்ல வென்று நினைத்த ஹிப்பலாஸ், “படைத் தலைவர் உத்தரவிட்டால் மாடிப்படி உச்சியில் நான் நிற்கிறேன்” என்றான்.

“தேவையில்லை ஹிப்பலாஸ்! நீ நிற்பதில் அபாயம் இருக்கிறது. யவனர் வாள்கள் நீளமில்லாதவை. ஆகவே வீரர்கள் நெருங்கிச் செய்யும் போருக்குத்தான் அவை பயன்படும். என் வாள் நீளமானது. இங்கிருந்து மூன்று படிகள் வரை வரக்கூடிய வீரர்களைச் சமாளிக்கவல்லது. நீ இங்கிருக்க வேண்டாம். கைப்பிடிச்சுவரை அடுத்துள்ள வேங்கை மரத்தின் வழியாக இறங்கி, கீழ்த் தாழ்வாரத்தின் மறைவில் குதிரைக் கொட்டிலுக்குச் சென்று நமது புரவிகளைத் தோட்ட வாயிலில் கொண்டு வந்து நிறுத்து” என்று கூறினான்.

“தாங்கள் தனித்து…” என்று தடுமாறினான் ஹிப்பலாஸ்.

“கவலைப்படாதே! ராணி என் கைவசமிருக்கும் வரையில் பயமில்லை . உம், போ! சீக்கிரம்!” என்று துரிதப் படுத்தினான் இளஞ்செழியன்.

ஹிப்பலாஸ் மெல்லக் கைப்பிடியில் ஏறி அப்புறமிருந்த வேங்கை மரத்தின் பெரும் கிளையில் தாவி அடுத்த வினாடி இருளில் மறைந்தான். அவன், மறைவதற்கும் வேறு இரு வீரர்கள் உருவிய வாட்களுடன் படிமீது ஏறி வருவதற்கும் சரியாயிருந்ததால் இளஞ்செழியன் தன் வாளால் அவர்கள் கத்திகளைத் தாக்கி ஒருமுறை சுழற்றவே ஒரு வாள் எங்கோ பறந்தது. வாளுக்குடைய யவனன் தடாலென்று படிகளில் விழுந்து உருண்டான். உருண்ட அவன் உடல் பக்கத்திலிருந்த வீரனின் காலை இடறவே உயிருள்ள உடலும், உயிரற்ற உடலும் படிகளில் ஒன்றுக்கொன்று இணைந்து விழுந்து புரண்டன. உயிரற்ற உடலிலிருந்து விடுபட்டு உயிருள்ளவன் எழுந்திருப்பதற்குள் ராணியுடன் படிகளில் மடமடவென இறங்கிய இளஞ்செழியன் வாள் அந்த வீரன் கழுத்தைத் தடவவே கத்தியை விட்டெறிந்த யவனன், மான்கூடத் தன்னைத் தோற்கடிக்க முடியாது என்பதை நிரூபிக்க வேகத்தைக் காட்டிப் படிகளில் இறங்கி ஓடினான்.

அவன் ஓடியதும், முக்கால் பாகம் ரத்தம் தோய்ந்த நீண்ட வாளை வெகு லாவகமாக வலது கையிலும் யவன ராணியை இடது கையிலும் பிடித்துக் கொண்டு மாடிப்படிகளில் வேகமாக இறங்கிய படைத்தலைவனை மற்ற யவனர்கள் அணுகப்பயந்து படிகளைவிட்டுச் சற்று விலகியே நின்றார்கள். எப்படியும் படிகளில் இறங்கிக் கூடத்துக்குப் படைத் தலைவன் வந்துதான் ஆக வேண்டுமென்பதை உணர்ந்திருந்த யவனர்கள் படிகளில் போய் ஆபத்தைத் தேடிக்கொள்ள இஷ்டப்படாமல், ‘கீழே வரட்டும், ஒரு வழியாகச் சூழ்ந்து கொள்வோம்’ என்ற தீர்மானத்துடன் படைத்தலைவனை எதிர்பார்த்து உருவிய வாட்களுடனும் ஓங்கிய வேல்களுடனும் நின்றார்கள்.

இந்த நிலைமையை முன்பே எதிர்பார்த்திருந்த இளஞ்செழியன் கடைசிப் படிக்கு வந்ததும் ராணியைத் தனக்கு வெகு அருகாமையில் இழுத்துக் கொண்டு படிகளின் இருட்டிலிருந்து பேசத் தொடங்கி, “உங்களில் யாராவது ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாலோ அல்லது வாளை நீட்டினாலோ உங்கள் ராணியின் உடலைத்தான் நீங்கள் டைபீரியஸிடம் கொண்டு போக முடியும். சவம் அரசாள முடியாது என்பது உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். இந்த ராணி உங்கள் தலைவியாக வேண்டுமானால் அது இன்றிரவு நடக்காது. நீங்களும் உங்கள் ராணியும், விடாப்பிடியாக நம்பும் விதி வலிதாயிருந்தால் அது பிற்காலத்தில் நடக்கலாம். இன்று அதன் ஜம்பம் சாயாது என்பதை உணர்ந்து கொள்ள உங்களுக்கும் அதிக நேரம் பிடிக்காது என்று நினைக்கிறேன். விலகி நில்லுங்கள்! இல்லையேல் இந்த வாளின்மீது ஆணை! ஏற்கெனவே நான்கு வீரர்களுக்கு ஏற்பட்ட கதி உங்கள் ராணிக்கும் ஏற்படும்!” என்று கூறிக் கொண்டே ராணியின் கழுத்துக்குக் குறுக்கே ரத்தம் தோய்ந்த வாளை வைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்து, வீரர்கள் இல்லாத பகுதியில் கண்களை ஓட்டி, வீரர்கள் மீது ஒரு கண்ணையும் தோட்டக் கதவின் மீது ஒரு கண்ணையும் வைத்துக்கொண்டு மெள்ள நகர்ந்தான்.

கழுத்துக்குக் குறுக்கே ரத்தக் கத்தியுடன் சென்ற ராணியைக் கண்ட யவனர்கள் திக்பிரமை பிடித்து நின்றார்கள். ஆனால் இத்தனை ஆபத்தில் சிக்கிய ராணி மட்டும் முகத்தில் தவழ்ந்த புன்முறுவலுடனும் ஏதோ காவலன் பாதுகாப்பில் செல்லும் அரசகுமாரிபோல் கம்பீரமாக நிமிர்ந்த தலையுடனும் இளஞ்செழியனுடன் நடந்து சென்றாள். இப்படி மிக எச்சரிக்கையுடன் ராணியை அழைத்துச் சென்ற இளஞ்செழியன் தோட்டப் பகுதிக்காகச் சென்று அங்கிருந்த கதவை மெள்ளத் திறந்து வாயிற்படியில் நின்ற வண்ணம் வெளியே நோக்கியவன், ஹிப்பலாஸ் இரு புரவிகளுடன் மரங்கள் அடர்த்தியாயிருந்த இடத்தில் நிழலில் நிற்பதைக் கண்டு சட்டென்று கதவைத் தாளிட்டு ராணியை இழுத்துக் கொண்டு மாளிகையின் உட்புறச் சுவர் வீசியிருந்த இருளில் மறைந்து மறைந்து ஹிப்பலாஸ் இருந்த இடத்துக்கு ஓடினான். அடுத்த சில வினாடிகளில் இரு புரவிகள் சற்றுத் தூரத்தே பந்தங்களைப் பிடித்து நின்ற யவனர் கூட்டங்களிடையே அம்புகள் போல் பாய்ந்து சென்றன.

எதிர்பாராதவிதமாகத் திடீரென யவன ராணியைப் புரவியின் முன்புறம் வைத்து அணைத்துக் கொண்டு இளஞ் செழியன் பாய்ந்து சென்றதாலும், அவனைத் தொடர்ந்து ஹிப்பலாஸின் குதிரையும் வாயு வேகத்தில் ஓடியதாலும் ஒரு கணம் பிரமித்த யவனர்கள் புரவிகளைத் திருப்பிக் கொண்டு தப்பிச் சென்றவர்களைத் துரத்தினார்கள். இளஞ்சேட் சென்னியின் ரதங்களில் அரபு நாட்டுப் புரவிகளை இஷ்டப்படி நடத்துவதில் தேர்ச்சி பெற்றிருந்த இளஞ்செழியனை யவன வீரர்களின் புரவிகள் பிடிக்க முடியவில்லை யென்றாலும், அந்தப் புரவியைக் கண் பார்வையிலிருந்து தப்பவிடாமலே வேகமாகத் தொடர்ந்தார்கள். இடையிலிருந்த பல தெருக்களையும் வெள்ளி முளைக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் முன்னமே மூடிவிட்ட வர்த்தக சாலைக் கடைகளையும் கடந்து அரண்மனையும் கோவில்களுமுள்ள பூம்புகாரின் மேற்குப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் நுழைந்த இளஞ்செழியன் திடீரெனப் புரவியைக் கோட்டையை அடுத்திருந்த காட்டிற்குள் திருப்பிவிட்டு, சிறிது தூரம் சென்றதும் குதிரையிலிருந்து கீழே குதித்தான்.

படைத்தலைவன் திடீரெனக் குதிரையைவிட்டு இறங்கியதன் காரணத்தை அறியாத ஹிப்பலாஸ், “ஏன் இறங்குகிறீர்கள் படைத்தலைவரே?” என்று வினவினான்.
“ஹிப்பலாஸ்! கோட்டைத் தலைவன் கூறியபடி பூம்புகார் யவனர் கைகளுக்கு மாறுவதானால் இந்தத் தேசத்துக்குள் பட்டினத்தைச் சுற்றி எல்லா இடங்களிலும் காவல் இருக்கும். ஆகவே பட்டினப்பாக்கத்தில் எங்கு சென்றாலும் உள்நாட்டார் வாயிலில்தான் நாம் நுழைய வேண்டியிருக்கும். அப்படி நுழைந்து ராணியும் அவர்கள் வசமாகி விட்டால் அப்புறம் நமது கதி மட்டுமல்ல, இந்தப் பூம்புகாரின் கதியும் அதோகதிதான். ஆகவே புரவிகளை அழைத்துக் கொண்டு காட்டு வழியே நீ கோட்டத்துக்கு வந்து சேர்” என்றான் இளஞ்செழியன்.

“எந்தக் கோட்டத்திற்கு?”

“மணிவண்ணன் கோட்டத்திற்கு.”

“பெருமாள் கோவிலுக்கா?”

“ஆம்.”

“அங்கு வந்து?”

“பக்கத்திலுள்ள பிரும்மானந்தர் மடத்துக்கு வா.”

“அங்கு என்ன வேலை?”

“யார் கண்ணிலும் படாமல் ராணியை மறைத்து வைப்பதற்கு அதுதான் தகுந்த இடம்” என்று கூறிவிட்டு ராணியைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு காட்டின் வழியே துரிதமாக நடந்து சென்றான் இளஞ்செழியன். குதிரையின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டே ஹிப்பலாஸ் வேறு வழியே போய்ச் சிறிது நேரத்தில் மரங்களின் நெருக்கத்தில் மறைந்துவிட்டான்.

அரண்மனையையும் அகழியையும் பாதுகாக்க நிறுவப்பட்ட அந்தக் காட்டுவழி கரடுமுரடாயிருந்தாலும் லட்சியம் இல்லாமல் இளஞ்செழியனுடன் நடந்து சென்றாள் ராணி. சுமார் நூறு அடிகள் நடந்து சென்றதும் தூரத்தேயிருந்த மதிலைச் சுட்டிக் காட்டி, “ராணி! அதோ அதுதான் மணிவண்ணன் கோயில். பக்கத்தில் சற்றுத் தள்ளித் தெரியும் கட்டடம்தான் பிரும்மானந்தர் ஆசிரமம். அங்கு உங்களுக்குச் சகல சௌகரியங்களும் கிடைக்கும். ராணிகளைக் நடத்தும் முறைகளைப் பிரும்மானந்தர் நன்றாக அறிவார்” என்று விவரித்தான் இளஞ்செழியன். ராணி பதிலேதும் சொல்லாமல் நடக்கவே இளஞ்செழியனும் சம்பாஷணையை மேற்கொண்டு தொடராமல் மௌனமாகவே நடந்து பிரும்மானந்தர் ஆசிரமத்துக்கு வந்தான்.

காவிரிப்பூம்பட்டினம் உறங்கிக் கிடந்த அந்த நேரத்தில் ஆசிரமத்தின் விளக்குகள் நன்றாக எரிந்து கொண்டிருந்த தாலும் வாயிற்கதவு திறந்ததாலும் சற்று ஆச்சரியத்துடனேயே ஆசிரமவாயிலைத் தாண்டிக் கூடத்திற்குள் நுழைந்த இளஞ்செழியன், கூடத்தின் ஒரு மூலையில் பிரும்மானந்தர் யாருடனோ, வெகு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, ‘இந்த நேரத்தில் அடிகள் யாருடன் பேசிக் கொண்டிருப்பார்?’ என்று யோசித்து, யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் குறுக்கே புகுவது தவறு என்ற காரணத்தால் மேலே போகாமல் கூடத்தின் முகப்பிலேயே நின்றான். கதவுக்கு முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்டிருந்த பிரும்மானந்தர் இருவர் காலடி ஓசையைக் கேட்டுத் திரும்பி இளஞ்செழியனைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவ மாட, “படைத் தலைவரா! வரவேண்டும்! வரவேண்டும்! ஏது இந்த நேரத்தில்?” என்று வினவினார்.

அவர் அப்படிக் கேட்டுக்கொண்டே எழுந்ததும் அவருடன் பேசிக் கொண்டிருந்த உருவமும் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது இளஞ்செழியனுக்கு. அந்த உருவத்தைக் கண்டதும் அதுவரை பெரும் தைரியத் துடன் வீரச் செயல்களைப் புரிந்து ரத்தம் தோய்ந்த வாளுடனும் ஜயலக்ஷ்மி தாண்டவமாடிய வதனத்துடனும் காட்சியளித்த இளஞ்செழியன் கைகால்கள் செயலிழந்து போனதன்றி, பேரதிர்ச்சியின் காரணமாக அவன் சித்தமும் அடியோடு ஸ்தம்பித்து நின்றது.

Previous articleYavana Rani Part 1 Ch 6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch 8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here