Home Historical Novel Jala Deepam Part 1 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

102
0
Jala Deepam part 1 Ch4 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch4 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 4 பேசட்டுமா?

Jala Deepam Part 1 Ch4 | Jala Deepam | TamilNovel.in

படையெடுப்பும், படுநாசமும், மதமாற்றமும், மக்கள் அழிவும், சாத்திரக் கலைச் சிதைவும், சமூக நிலைகுலைவும், பராதீனமும், பார் இகழும் பரிபவமுமே நிறைந்த பாரதத் தின் துன்பம் நிறைந்த வரலாற்றில், இரண்டு பொன் விளக்குகளில் ஒன்றை ஏற்றியவரும் குப்த சாம்ராஜ்யத் தின் பொற்காலத்துக்குப் பின்பு சுமார் பதினொரு நூற்றாண்டுகள் கழித்து ஹிந்து சாம்ராஜ்யமொன்றைச் சிருஷ்டித்து ஹிந்துக்கள் மானம் மடிந்து மங்காமல் பொற் சுடர் விட்டெறியச் செய்தவருமான சத்ரபதி சிவாஜியின் கைக் கங்கணத்திலாடிய இரண்டு புலி நகங்களில் ஒன்று அன்று தன் கையில் சுடர்விட்டதைக் கண்ட தேவி பேசும் சக்தியை அறவே இழந்து கிடந்தாள். மற்ற மங்கையரும் அதை வைத்த விழி வாங்காமல் பார்த்து நின்றனர்.

அந்தப் புலி நகம் பத்தரை மாற்றுத் தங்கத் தகட்டில் பல வைரங்களுக்கிடையில் பதிக்கப் பெற்றிருந்தாலும், வைரங்களின் சுடர் வீச்சு கண்ணைப் பறித்தாலும் அந்த வைரங்களுக்கிடையே பழுப்பு ஏறிக் கிடந்த அந்தப் புலி நகம், பழுப்பிலும், பெரும் கம்பீரத்தைப் பெற்றிருந்ததை தேவியும் மற்றப் பெண்களும் கண்டனர். அந்தப் புலி நகத்துக்கு மட்டும் வாயிருந்தால் அது எத்தனையோ வீரக் கதைகளைச் சொல்ல முடியும் என்று அவர்கள் உள்ளூர நினைத்தாலும் அதை வாய்விட்டே சொல்ல முற்பட்ட சுவாமிகள். ”இதற்கு வாயிருந்தால் பல வீரக் கதைகளைச் சொல்லும் தேவி! ஆனால் வாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஒரு கதையைச் சொல்லத் தவற வில்லை” என்றார் குரலில் உணர்ச்சி பொங்க.
“என்ன கதை சுவாமி அது?” என்று வினவினாள் தேவியும் குரலில் உணர்ச்சி வழிய.

”சத்ரபதியின் வாழ்க்கைக் கதை. அவரும் இந்தப் புலி நகத்தைப்போல்தான் இருந்தார், மலைகளில் திரிந்து வெய்யிலில் உடல் பழுப்பேறி. அவரைவிட இந்த வைரங்களைப்போல் பளபளத்தார்கள் பெரும்பான்மையான ராஜபுத்ரர்கள் மொகலாய சாம்ராஜ்ய விளக்கில். தங்கச் சரிகை ஆடைகளுக்குக் குறைவில்லாமலும், பொன்னுக்கும் வைர வைடூரிய ஆபரணங்களுக்கும் பஞ்சமின்றியும் ஜொலித்தார்கள். அக்பர் முதல் அவுரங்கசீப் வரையில் மொகலாய சாம்ராஜ்ய மந்திரிகளாய், படைத் தலைவர்களாய் பணி செய்து ஊதியம் பெற்று உவகையுடன் வாழ்ந்தார்கள். அந்தப் பளபளப்பிள் இடையே எழுந்தார் ஜாகீரற்ற இந்த அனாதை. மலைகளில் திரிந்தார். மாவாலிகளுடன் அலைந்தார். மாதாவின் மணிமொழியும் பரமபக்தரான இராமதாஸின் ராமாயணக் கதையும் தவிர வேறெதுவும் கேட்காத இந்த வீரர் எழுந்தார். மெல்லத் தான் எழுந்தார். புலி மெல்லத்தான் எழுகிறது. ஆனால் எழுந்த பின்பு அது பாய்வது எத்தனை வேகம்! அத்தனை வேகத்தை மொகலாயச் சக்ரவர்த்தி அவுரங்கசீப் கண்டார் இந்த மலைப் புலியிடம். மலைப் புலியை மலை எலியென இகழ்ந்து அதைப் பிடிக்கப் பெரும் முகலாயப் புலிகள் வந்தன. ஒன்று புலி நகத்துக்கே இரையாயிற்று. புலி நகம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. மொகலாயப் பணியாட்கள் அந்தப் புலிநகத்தைச் சுற்றி நிற்க வேண்டிய வைரக் கற்களானார்கள். இந்த ஆபரணம் சொல்லும் கதை. இந்த ஆபரணத்தை அணிந்த ஹிந்து ராஷ்டிரபதியின் கதை. பாரத நாடு பெருமையுடன் சொல்லிக்கொள்ளக் கூடிய வெகு சில கதைகளில் ஒன்று…” என்று சொல்லிக் கொண்டு போன சுவாமி உணர்ச்சிப்பெருக்கால் தொண்டையடைத்து வாய் பேச முடியாமல் நின்றார்.

தேவியும் மற்றப் பெண்களும் பேசாமல் மௌனமே சாதித்தார்கள். அந்தப் புலிநக ஆபரணத்தைப் பார்க்கப் பார்க்க சிவாஜி மகாராஜாவே நேரில் வந்துவிட்டது போன்ற பிரமையும், உணர்ச்சியும், மனக் கிளர்ச்சியும் ஏற்படவே, அதன் கடந்த கால வரலாற்றில் அந்தப் பெண் களும் திளைத்துக் கிடந்தார்கள். பல வினாடிகளுக்குப் பிறகு துறவி சுரணை பெற்று, “தேவி! இந்த ஆபரணத்துடன் இப்பொழுது இந்த வாலிபன் பிணைக்கப்பட்டிருக் கிறான்…” என்றார் மெதுவாக.

தேவியும் பெண்களும் சுவாமியை ஏறெடுத்து நோக்கிக் கண்களாலேயே வினா எழுப்பவே துறவி மேலும் கூறினார் “இந்தக் கச்சை இந்த வாலிபன் கச்சை. இந்த வாள், இவனுடையது” என்று.

தேவியின் முகத்தில் சந்தேகம் எழுந்தது. “அதெப் படித்தெரியும்” என்று வினவினாள் சந்தேகம் குரலிலும் ஒலிக்க.

“வீரன் என்பது அவன் முகத்தில் ஒட்டியிருக்கிறது. கத்தியில்லாமல் வீரமில்லை. கச்சையில்லாமல் கத்தியுமில்லை” என்ற துறவி தொடர்ந்து சொன்னார்: “தேவி, இவன் கிழிந்த மேலங்கியில் சமீபத்தில் கச்சை கட்டியதால் ஏற்பட்டபட்டை மடிப்பைக் கடற்கரையிலே பார்த்தேன். ஆகவே இவன் எந்த மரக்கலத்தில் வந்தாலும் அதில் அடிமையாகவோ கைதியாகவோ வரவில்லையென்பதை ஊகித்துக்கொண்டேன். மரக்கலம் இங்கு அருகில் தாக்கப் பட்டபோது இவன் கடலில் விழுந்து எப்படியோ நீந்தி வெகு தூரம் வந்திருக்கிறான். கரை வருவதற்குச் சிறிது தூரத்துக்கு முன்புதான் இவன் பிரக்ஞை இழந்திருக்க வேண்டும்.” அத்தனையும் நேரில் பார்த்தவர்போல் துறவி கூறியதைக்கேட்ட தேவி அவர் ஊகத்துக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. துறவியின் பேச்சை ஆட்சேபிக்காமல், ”அப்படியானால் நீங்கள் மீண்டும் கடலோரம் சென்றது…?” என்று வினவவே செய்தாள்.

“இந்த வாளையும் கச்சையையும் தேடித்தான். இவன் தமிழனென்பதைக் கடற்கரையில் பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன். இவன் நம்மைத் தமிழில் கேள்வி கேட்காமல் மகாராஷ்டிரத்தில் கேட்டது என் சந்தேகத்தைக் கிளப்பியது. தவிர, இவன் பேசிய மகாராஷ்டிரம் இலக் கணத்துக்குச் சரியாயிருந்தாலும் உச்சரிப்புக் கொச்சையாயிருந்தது. அத்தகைய காராஷ்டிரம் செஞ்சிக் கோட்டையில் பேசப்படுவதில்லை. தஞ்சையில் தான் பேசப்படுகிறது. ஆகவே, தஞ்சையிலிருந்தவன் தரை வழி வராமல் மேல் திசை வந்து கடல் வழி ஏன் வந்தான் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா? ஆகவே அதைப்பற்றிய அத்தாட்சி என்ன கிடைக்கிறது என்று பார்க்கவே மீண்டும் கடற்கரை சென்றேன். இந்த அத்தாட்சி கிடைத்தது. அதுவும் இரண்டு ஜாமம் தேடிய பிறகு, வடக்குக் கோடியில் வளைந்த கரையிருக்கிறது. பார். அங்கு. ஒதுங்கிக் கிடந்தது அது” என்றார் துறவி.

“அத்தனை தூரத்திலா?”

“ஆம் தேவி.’

”அப்படியானால் நீங்கள் கஷ்டப்பட்டு அலைந்திருக்க வேண்டுமே?”
“கஷ்டப்படாமல் எந்தப் பலன் கிடைக்கும் தேவி? அதுவும் இத்தகைய ஒரு பலன் கிடைக்குமா?”

கிடைக்காது என்பதற்கு அறிகுறியாகத் தேவி தலையை அசைத்தாள். பிறகு ஏதோ சந்தேகம் மேலிடக் கேட்டாள்: ”அப்படியானால் இவன் ஒற்றனா?”

துறவி சற்றுச் சிந்தித்துவிட்டுச் சொன்னார் . “எனக்குத் தெரியாது தேவி! விலைமதிக்க முடியாத இந்த ஆபரணத்தை, இந்த வரலாற்றுச் சின்னத்தை, இவன் கையில் யாராவது கொடுத்திருக்க வேண்டுமானால் இவன் சாதாரண வீரனாயிருக்க முடியாது” என்று. அத்துடன் தொடர்ந்து, “இந்த ஆபரணத்தைச் சிவாஜி மகாராஜா தமது புதல்வர் சாம்பாஜிக்குக் கொடுத்தார். சாம்பாஜி மகாராஜா அதை ராஜாராம் மகாராஜாவுக்கு அளித்தார். மொகலாயப் படைகளால் துரத்தப்பட்ட ராஜாராம் செஞ்சிக்குப் பின்வாங்கினார். அவருடன் சென்ற இந்த. ஆபரணத்தைப் பிறகு யாரும் பார்க்கவில்லை இப்பொழுதுதான் நாம் பார்க்கிறோம். திரும்பி மகாராஷ்டிர ராஜ வம்சத்தின் கையில் பார்க்கவில்லை. தமிழ் வீரன் ஒருவனிடம் பார்க்கிறோம். மீதிக் கதையை இவன் தான் சொல்ல வேண்டும்” என்று கூறிய துறவி இதயசந்திரன் மீது தமது கூரிய கண்களைத் திருப்பினார்.

அந்த வாலிபன் ஆழ்ந்த நித்திரையில் லயித்திருப்ப தைக் கண்ட துறவி, ‘இவன் ஏன் இத்தனை நேரம் உறங்குகிறான்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு. ‘தேவி! நீ உன் கூடாரத்துக்குச் சென்று சிறிது பால் அனுப்பு. இவன் அருந்திய மயக்கத் துளிகளுக்கு மாற்று மருந்து கொடுக்கிறேன்” என்றார். அதைக் கேட்டு வெளியில் செல்ல முயன்ற தேவியை நோக்கி, ”தேவி, கச்சையை நீ எடுத்துச் சென்று மறைத்துவிடு. இவன் கேட்டால் வாள் மட்டுந்தானிருந்தது என்று சொல்லி விடுகிறேன். புலி நகத்தைப் பற்றி யாரும் மூச்சுவிட வேண்டாம்” என்று எச்சரித்தார்.

அந்த எச்சரிக்கைக்குத் தேவி மட்டுமின்றி, மற்றப் பெண்களும் செவி சாய்த்து அங்கீகரித்துத் தலையசைத்து வெளியே சென்றனர். அவர்கள் சென்றதும் துறவி வெளியே வந்து, ”டேய், யாரங்கே?” என்று குரல் கொடுக்க, கடைசிக் கூடாரத்திலிருந்து ஓடி வந்த காவலர் களில் வாலிபனான ஒருவனை நோக்கி, “உன் உடைகளில் ஒன்றைக் கொண்டு வா’ என்று உத்தரவிட்டார். அவன் கொணர்ந்த உடையைக் கொடியில் போட்டுத் தனது மருந்துப் பேழையிலிருந்து ஒரு குப்பியை எடுத்து வெளியில் வைத்துவிட்டு, தமது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெகு விரைவில் திரும்பினாலும், அதற்குள் கதிரவன் உதயமானதற்கு உண்டான அறிகுறிகள் எங்கும் தெரிந்தன. கதிரவனின் நேர் ஒளி வர நேரமாகுமென்றா லும் மேலைக் கடல் நீரும் கடற்கரையும் சூர்யோதய காலத்தில் புது மெருகைப் பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பாறைகள் கருமையுடன் பளபளத்தன. காட்டு மரங்கள் காற்றில் தலையசைத்தன. எங்கும் உயிர்த்துடிப்பு உண்டாயிற்று. இருப்பினும் சுவாமி கூடாரத்துக்குத் திரும்பிய பின்பும் இதயசந்திரன் இமைகள் மூடியபடியே கிடந்தன. அதைக் கவனித்த துறவி, “திராவகத் துளி களைச் சிறிது அதிகமாகவே கொடுத்துவிட்டேன் போலிருக்கிறது” என்று தமக்குள் சொல்லிக்கொண்டு அதில் திருப்தியும் காட்டினார். அந்தச் சமயத்தில் தேவி யின் தோழியொருத்தி கொணர்ந்த பாலில் மாற்றுத் திராவகத்தைச் சிறிது ஊற்றி மண்டியிட்டு உட்கார்ந்து அவன் மூடிய வாயிதழ்களைத் திறந்து பல்லையும் நீக்கி உள்ளே புகட்டினார்.

மாற்று மருந்து மெள்ள வேலை செய்யவே இரண்டு மூன்று வினாடிகளில் கண்விழித்த இதயசந்திரன் திடீரெனக் கம்பளியை நீக்கி எழுந்திருக்க முயன்றான். “அடடே! சற்று இரு. சற்றுப் பொறு”. என்று துறவி கூறியதும் தான் அவனுக்குத் தன் நிலை புரிந்தது. ஆகவே சட்டென்று கம்பளியை இழுத்து உடலை மூடிக்கொண்டு, ”சுவாமி! இந்த நிலை…” என்று தட்டுத் தடுமாறி இழுத்தான்.

“உன் காயங்களுக்குச் சிகிச்சை செய்ய அவசியமாயிற்று. சட்டையைக் கிழித்துக்கொண்டு முதுகில் சிலாம்புகள் பாய்ந்திருந்தன. தவிர, ஆடை முழுவதும் நனைந்திருந்தது’ என்று சுட்டிக்காட்டினார் துறவி பிறகு வீரன் கொண்டு வந்து கொடுத்திருந்த உடையை அவனிடம் போட்டு, ” இதை அணிந்து கொள்” என்று உத்தரவிட்டார்.

இதயசந்திரன் அன்று காலையில் தன் உடல்நிலை பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதையும் முதுகு காயங் களின் எரிச்சல் அடியோடு அகன்று விட்டதையும் வலக்கைக் கட்டு இருந்த இடத்தில் வலித்தாலும் கையை நன்றாக அசைக்க முடிவதையும் கண்டு துறவிக்கு மருத்துவம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் அவர் அளித்த ஆடைகளைக் கம்பளிக்குள் இழுத்து வெகு லாவகமாக அணிந்து கொண்டு மெல்ல எழுந்து நின்றான். அவன் எழுந்ததும், “காயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீராடுவதானால் நீராடலாம்” என்று துறவி அனுமதி கொடுத்ததும் வெளியே செல்ல முயன்ற இதயசந்திரன் கண்களுக்கு மூலையில் சாத்தப்பட்டிருந்த வாள் தெரியவே, அவன் துறவியை ஏறெடுத்து நோக்கி னான். அவன் கண்களில் ஏதோ சந்தேகச் சாயை படருவதைக் கண்ட துறவி ஏதுமறியாதவர் போல், “நீ கிடந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளிக் கிடந்தது. திரும்ப நான் சங்கு பொறுக்கச் சென்றபோது கிடந்தது” என்று விளக்கினார்.

“சங்கு பொறுக்கப் போனீர்களா?” என்று வினவினான் இதயசந்திரன்.

“ஆம். இல்லாவிட்டால் நள்ளிரவில் நான் கடற்கரைக்கு வந்தது உன்னைக் காக்க என்று நினைத்தாயா?” என்று வினவிய துறவியின் குரலில் இகழ்ச்சி ஒலித்தது.

இதயசந்திரன் அந்தக் கூடாரத்தைச் சுற்றுமுற்றும் கவனித்தான். கூடாரத்தின் மூலையில் வெண்சங்குகள் கும்பல் கும்பலாகக் கொட்டப்பட்டிருந்தன. இரவு அவர் குனிந்தும் நிமிர்ந்தும் பொறுக்கியது சங்குகளைத்தான் என்று தீர்மானித்துக் கொண்ட இதயசந்திரன் ” இங்கு சங்குகள் அதிகமோ?” என்று வினவினான்.

”இங்குதான் அதிகம் தமிழா! இந்தக் கொங்கண நாட்டுக் கடல் உலகத்தின் மிகச் சிறந்த சங்குகளுக்குப் பெயர் போனது. இங்குள்ள பிரபல குடிமக்களில் ஒரு சாராருக்கு சங்கபாலர் என்று பெயரும் உண்டு. இந்தக் கடற்கரையில் எப்பொழுதாவது ஒரு முறை வலம்புரிச் சங்கு கிடைக்கும். அதை அடைபவன் பெரும் கீர்த்தி யடைகிறான். தெய்வீக பலமும் அவனுக்கு ஏற்படுகிறது’ என்று துறவி விளக்கிச் சொன்னார்.

இதைக் கேட்டுத் தலையசைத்த இதயசந்திரன் வேறெதுவும் பேசாமல் கடற்கரை நோக்கி நடந்தான். கடற்கரையை அடைந்ததும் அதன் ஓரமாகத் தெற்கும் வடக்கும் சென்று அலைந்துவிட்டுக் கடைசியில் ஆடை களைந்து, கடலில் நீராடிவிட்டு, சுவாமி அளித்த காவித் துண்டால் தலை துவட்டி, பழையபடி வீரன் உடை யணிந்து கூடாரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் வருவதற்குள் சுவாமி பூஜையை முடித்துவிடவே, காலை உணவு பரிமாறப்பட்டது. சுவாமியுடன் உணவருந்திய இதயசந்திரன் சுவாமியை ஏதும் கேட்கவில்லை. அவன் கச்சையைத் தேடவே கடலோரம் சென்றிருக்கிறான் என்பதை உணர்ந்த சுவாமிக்கு, அன்று பகல் முடிய அவன் ஏதும் கேட்காதிருந்தது விசித்திரமாயிருந்ததன்றி, அவன் மன ஆழமும் அவருக்கு நன்றாகப் புரிந்தது.

அன்று பகலில் மீண்டும் இதயசந்திரன் நன்றாக உறங்கினான். மாலை நேரத்தில் கூடாரங்களை வீரர்கள் பெயர்த்துச் சுருட்டினார்கள். தயாராயிருந்த பல்லக்கு களிரண்டில் தேவியும் தோழிகளும் ஏறிக்கொள்ள, வீரர்கள் காவல் புரிந்து வர, சுவாமியைச் சேர்ந்த கூட்டம் தெற்கு நோக்கிக் கிளம்பியது. சுவாமியின் கட்டளைப்படி அளிக்கப்பட்டிருந்த புரவியொன்றில் ஏறிச் சென்ற இதய சந்திரன், ‘எங்கு போகிறோம் ஏன் போகிறோம்?’ என்பதைப் பற்றி ஏதும் கேட்காமல் மௌனமாகவே பயணம் செய்தான்.

அவன் பேசாமடந்தையாகிவிட்டது சுவாமிக்கு விசித்திரமாயிருந்தது. தேவிக்கும் விசித்திரமாயிருந்தது. அன்றிரவு நடுநிசி வரையில் பயணம் நடந்ததும் ஒரு காட்டின் நடுவில் சுவாமி பயணத்தை நிறுத்திக் கூடாரங்களை அமைக்க உத்தரவிட்டார். கூடாரங்கள் அமைக்கப்பட்டதும் அனைவரையும் உண்டு உறங்கச் செல்லும்படியும், விடியற்காலை பயணம் துவங்குமென்றும் உத்தரவிட்ட துறவி தமது கூடாரத்துக்குள் சென்றார்.

சுவாமியை இதயசந்திரன் தொடரவில்லை. இதயத் தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்துலவ, காட்டின் ஊடே உலாவினான். அடர்ந்த மரங்கள் ஆகாயமளாவி நின்றன. அப்படி நின்ற மரமொன்றின் அடியில் அவன் சாய்ந்து நின்று ஏதோ யோசித்துக் கொண்டே கண்களை மூடினான். கண்ணை நீண்ட நேரம் கழித்துத் திறந்த போது அவன் எதிரே தேவி நின்றிருந்தாள். தூரத்தில் மரத்தில் கட்டப்பட்ட விளக்கு வெளிச்சம் அவள் முகத்தில் நன்றாயடிக்கவே அவள் புன்னகை கோட்டியிருந்ததை அவனால் கவனிக்க முடிந்தது.

“உறக்கம் பிடிக்கவில்லையா தேவி?” என்று தட்டுத் தடுமாறிக் கேட்டான் இதயசந்திரன்.

பதிலுக்கு அவள் நகைத்தாள். “உங்களுக்குப் பேச வேறு வருமா?” என்று வினவவும் செய்தாள்.

“வரும்.”

“அப்படியானால் பகல் முழுதும் ஏதும் பேச வில்லையே நீங்கள்?”

”அது கிடக்கட்டும், இப்போது பேசட்டுமா?” “பேசுங்களேன்.”

அவன் பேசினான். பேச்சைக் கேட்டு அவள் வாயடைத்து நின்றாள். “அப்படியானால் நீங்கள்….” என்று திகிலுடன் குழறினாள். பேச்சு அத்தனைப் பயங்கரமாயிருந்தது அவள் செவிகளுக்கு.

Previous articleJala Deepam Part 1 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here