Home Kalki Read Parthiban Kanavu Part 3 Ch 34

Read Parthiban Kanavu Part 3 Ch 34

73
0
Read Parthiban Kanavu Part 3 Ch 34 Free, Parthiban Kanavu is a historical novel. Download Parthiban Kanavu Free, Parthiban Kanavu pdf Parthiban Kanavu audiobook
Parthiban Kanavu Part 3 Ch 34 பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம், அத்தியாயம் 34: ஆகா! இதென்ன?

Read Parthiban Kanavu Part 3 Ch 34

பார்த்திபன் கனவு

மூன்றாம் பாகம், அத்தியாயம் 34: ஆகா! இதென்ன?

Read Parthiban Kanavu Part 3 Ch 34

விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீது தாவி ஏறிக் கொண்டார்கள்.

“பொன்னா! முண்டாசு கட்டி மீசை வைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் யார்? நீதானே!” என்று குதிரைகள் போய்க் கொண்டிருக்கும்போதே விக்கிரமன் கேட்டான்.

“ஆமாம், மகாராஜா!”

“சிறைக்குள்ளிருந்தபோது நீ என்னை மறந்து விட்டாயாக்கும் என்று நினைத்தேன்.”

“நான் ஒருவேளை மறந்தாலும், என்னை மறக்க விடாதவர் ஒருவர் இருக்கிறாரே!”

“யார் அது?”

“வேறு யார்? தங்களை யமன் வாயிலிருந்து மீட்ட தேவிதான்.”

இதைக் கேட்டதும் விக்கிரமனுடைய உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளிற்று. குந்தவியைப் பற்றி மேலும் விசாரிக்க வேண்டுமென்கிற ஆவல் உண்டாயிற்று. ஆனால் சிறிது தயக்கமாகவுமிருந்தது.

சற்றுப் பொறுத்து, “எங்கே போகிறோம் இப்போது?” என்றான் விக்கிரமன்.

“மாமல்லபுரத்துக்கு, மகாராஜா!”

“பொன்னா!”

“என்ன, மகாராஜா?”

“நாளைக் காலைக்குள் மாமல்லபுரம் போய்விட வேண்டும்.”

“ஆமாம், மகாராஜா! அதனால்தான் ஒரு கணம் கூடத் தாமதிப்பதற்கில்லை என்று நான் சொன்னேன்.”

“நாளை மத்தியானம் வரையில் அங்கே கப்பல் காத்துக் கொண்டிருக்கும்.”

“அதற்குள் நாம் போய்விடலாம், மகாராஜா!”

விக்கிரமன் சற்றுப் பொறுத்து மறுபடியும், “தேவி எங்கே இருக்கிறார், பொன்னா! அவரிடம் கடைசியாக ஒரு தடவை விடை பெற்றுக்கொண்டு கிளம்பியிருந்தால், எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும்!” என்றான்.

“அது முடியாது, மகாராஜா!”

“எது முடியாது?”

“தேவியிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புவது.”

“ஆமாம்; முடியாதுதான்! இனி உறையூருக்கு மறுபடியும் எப்படிப் போக முடியும்?”

“தேவி உறையூரில் இல்லை, மகாராஜா!”

“தேவி உறையூரில் இல்லையா? பின் எங்கே?”

“மாமல்லபுரத்தில்!”

“ஆ!” என்றான் விக்கிரமன். சில நாட்களாகச் சிறைப்பட்டிருந்த பிறகு விடுதலையடைந்த உற்சாகம், குளிர்ந்த இரவு நேரத்தில் குதிரைமீது செல்லும் கிளர்ச்சி, இவற்றுடன், ‘குந்தவி மாமல்லபுரத்தில் இருக்கிறாள்’ என்னும் செய்தியும் சேர்ந்து அவனுக்கு எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று.

“அப்படியானால் அவரிடம் விடைபெற முடியாது என்று சொன்னாயே, ஏன்? பொன்னா! ஒரு கண நேரமாவது அவரை நான் அவசியம் பார்க்க வேண்டும். பார்த்து நன்றி செலுத்த வேண்டும். அதோடு என் தாயாரைக் கண்டுபிடித்துப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்புவிக்க வேண்டும்.”

“அதுதான் முடியாது!” என்றான் பொன்னன்.

“ஏன் அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?”

“தேவியின் உறுதி எனக்கும் தெரிந்திருப்பதினாலே தான். தங்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் உத்தேசம் அவருக்குக் கிடையாது. தங்களோடு அவரும் புறப்படச் சித்தமாயிருக்கிறார்.”

“ஆகா! நிஜமாகவா? – இவ்வளவு முக்கியமான செய்தியை முன்னமே எனக்கு ஏன் சொல்லவில்லை?”

“இப்போதுகூட நான் சொல்லியிருக்கக்கூடாது. தாங்கள் கப்பல் ஏறிய பிறகு தங்களை அதிசயப்படுத்த வேண்டும் என்று தேவி உத்தேசித்திருந்தார் அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்.”

விக்கிரமன் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று, “அதோ பாருங்கள் மகாராஜா!” என்று பொன்னன் கூறியதும் விக்கிரமன் சிறிது திடுக்கிட்டுப் பார்த்தான். சாலையில் ஒரு பக்கத்து மரத்தடியில் பத்துப் பன்னிரண்டு பேர் கும்பலாக நின்றார்கள். அவர்களில் ஒருவன் தீவர்த்தி வைத்துக் கொண்டிருந்தான். தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்களுடைய உருவங்கள் கோரமான காட்சி அளித்தன. அவர்களுடைய கழுத்தில் கபால மாலைகள் தொங்கின. அவர்களுடைய கைகளில் கத்திகள் மின்னின. நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நின்ற இடத்தைக் குதிரைகள் தாண்டிய போது ஒரு கணம் விக்கிரமனுக்கு உடம்பு நடுங்கிற்று. அவர்களைக் கடந்து சிறிது தூரம் சென்றது, “அப்பா! என்ன கோரம்” என்றான் விக்கிரமன். “மகாராஜா! தங்களுக்காகத்தான் இங்கே இவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்களிடம் தங்களை ஒப்பிவித்துவிடும்படிதான் மாரப்ப பூபதி கடைசியாகத் தம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார். நான் இவர்களை முந்திக் கொண்டேன். தாங்கள் குதிரை மேல் இவ்விதம் தனியாகப் போவீர்கள் என்று இவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இன்னும் ரொம்ப நேரம் காத்திருப்பார்கள். பிறகு கபால பைரவரிடம் போய்த் தாங்கள் வரவில்லையென்று தெரிவிப்பார்கள். இன்று கபால பைரவருக்கு மாரப்பபூபதி மேல் பிரமாதமான கோபம் வரப்போகிறது!” என்றான் பொன்னன்.

“பொன்னா! சக்கரவர்த்தியின் சிரஸாக்கினை, கபாலிகர்கள் பலி இந்த இரண்டுவித ஆபத்துக் களிலிருந்துமல்லவா என்னை நீ தப்புவித்திருக்கிறாய்? முன்னே காட்டாற்றில் போனவனை எடுத்து உயிர் கொடுத்துக் காப்பாற்றினாய். சோழ வம்சத்தின் குலதெய்வம் உண்மையில் நீதான். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நாளைய தினம் உன்னைவிட்டுப் பிரிவேன். மறுபடியும் எப்போது காண்பேனோ, என்னவோ?”

“லட்சணந்தான்!” என்றான் பொன்னன்.

“என்ன சொல்கிறாய்?”

“என்னை விட்டாவது தாங்கள் பிரியவாவது?”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“இன்னொரு தடவை தங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு நான் இங்கே இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? இங்கே எனக்கு என்ன வேலை? வள்ளி ஏற்கெனவே குந்தவி தேவியுடன் மாமல்லபுரத்தில் இருக்கிறாள். நானும் அவளும் தங்களுடன் வரப்போகிறோம்.”

விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, “பொன்னா! நீ சொல்வது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியளிக்கிறது. நீயும் வள்ளியும் என்னுடன் வந்தால், சோழ நாடே வருகிற மாதிரிதான். ஆனால் , ஒரு விஷயந்தான் என் மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது. மகாராணியின் கதி என்ன? அவரை யார் தேடிக் கண்டுபிடிப்பார்கள்? அவருக்கு யார் உன்னைப் பற்றிச் சொல்வார்கள்? – நான் தாய்நாட்டுக்கு வந்ததின் முக்கிய நோக்கம் மகாராணியைப் பார்ப்பதற்கு, அவரைப் பார்க்காமலே திரும்பிப் போகிறேன். அவருக்கு என்னைப் பற்றிச் செய்தி சொல்லவாவது யாரேனும் இருக்க வேண்டாமா!” என்றான்.

பொன்னனுடைய மனத்திலும் அந்த விஷயம் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியாரிடம் தான் சொன்னபடி ஒன்றுமே செய்யவில்லை. அவர் என்ன ஆனாரோ, என்னவோ? மகாராணியை ஒருவேளை கண்டுபிடித்திருப்பாரோ?

பொன்னனுடைய மனத்தில் சமாதானம் இல்லாவிட்டாலும், வெளிப்படையாக, “மகாராணியைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். மகாராஜா! அவரைச் சிவனடியார் பாதுகாப்பார். சிவனடியாரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. மகாசக்தி வாய்ந்தவர்” என்றான்.

“ஆமாம்; அவர் நம்மை மாமல்லபுரத்துக்கருகிலுள்ள சிற்ப வீட்டில் சந்திப்பதாகச் சொன்னாரல்லவா?”

“அது இப்போது முடியாத காரியம்; சிவனடியாரைப் பார்க்கத் தங்கினோமானால், கப்பலைப் பிடிக்க முடியாது.”

“உண்மைதான். ஆனாலும் அன்னையையும் சிவனடியாரையும் பார்க்காமல் போவதுதான் மனத்திற்கு வேதனை அளிக்கிறது” என்றான் விக்கிரமன்.

அப்போது “ஆகா! இதென்ன?” என்று வியப்புடன் கூவினான் பொன்னன்.

இதற்குள் அவர்கள் காட்டாற்றைச் சமீபித்து அதன் இக்கரையிலுள்ள மகேந்திர மண்டபத்துக்கருகில் வந்து விட்டார்கள். அந்த மண்டபத்தின் வாசலில் தோன்றிய காட்சிதான் பொன்னனை அவ்விதம் வியந்து கூவச் செய்தது. அங்கே ஏழெட்டு ஆட்கள் ஆயுதபாணிகளாக நின்றார்கள். இரண்டு பேர் கையில் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மண்டபத்தின் வாசல் ஓரமாக ஒரு பல்லக்கு வைக்கப்பட்டிருந்தது.

“இன்று ராத்திரி என்னவெல்லாமோ ஆச்சரிய சம்பவங்கள் நடைபெறுகின்றன!” என்று பொன்னன் முணுமுணுத்தான்.

“இந்த வேளையில் இங்கே யார், பொன்னா?” என்றான் விக்கிரமன். “தெரியவில்லை, மகாராஜா!”

“இவர்கள் கபாலிகர்கள் இல்லை, நிச்சயம். வேறு யாராயிருக்கலாம்?”

“ஒரு வேளை குந்தவி தேவிதான் நமக்கு உதவிக்காக இன்னும் சில ஆட்களை அனுப்பியிருக்கிறாரோ, என்னவோ? ஆனால் பல்லக்கு என்னத்திற்கு?”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மகேந்திர மண்டபத்தின் வாசல் வந்துவிட்டது. குதிரைகளை இருவரும் நிறுத்தினார்கள். அங்கு நின்ற ஆட்களில் ஒருவனை எங்கேயோ பார்த்ததாகப் பொன்னனுக்கு நினைவு வந்தது. எங்கே பார்த்திருக்கிறோம்? – ஆகா! திருச்செங்காட்டாங்குடியில்! பரஞ்சோதி அடிகளின் ஆள் குமரப்பன் இவன்.

அந்த மனிதனும் பொன்னன் முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டான்.

“ஓ! பொன்னனா? என்று அவன் ஆச்சரியத்துடன் கூறி, “பொன்னா! சமாசாரம் தெரியுமா? உறையூர் மகாராணி அகப்பட்டு விட்டார்! இதோ இந்த மண்டபத்துக்குள்ளே இருக்கிறார். உன்னைப் பற்றிக்கூட விசாரித்தார்” என்றான்.

Source

Previous articleRead Parthiban Kanavu Part 3 Ch 33
Next articleRead Parthiban Kanavu Part 3 Ch 35

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here