Home Sandilyan Yavana Rani Part 1 Ch 6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

72
0
Yavana Rani Part 1 Ch6 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch6 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 6 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 6 வனப்பு, சிரிப்பு, உச்சரிப்பு!

Yavana Rani Part 1 Ch6 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

பட்டுத் திரைச்சீலையால் உடலை மூடி மாலைக் கதிரவனின் பொற்கதிர்கள் போன்ற மயிரிழைகளைத் திரட்டிக் கொண்டையிட்டதால் ஏற்பட்ட யவன ராணியின் இணையற்ற வனப்பு, மலர் விழிகளில் சற்றே துளிர்த்த சிரிப்பு, செம்பருத்திச் சிவப்புக் கொண்ட இதழ்களிலிருந்து உதிர்ந்த தமிழ்மொழியின் மதுரமான உச்சரிப்பு-இவற்றால் சொர்க்கலோகத்தில் சஞ்சரித்த இளஞ்செழியன் தமிழகத்தின் மகத்தான கரங்கள் எத்தனை தூரம்வரை நீண்டு கிடக்கின்றன என்பதையும், தமிழமுதமும் கலைச் செல்வமும் எந்தெந்த இடங்களை நாடிப் பெரும் தென்றலை வீசி மகிழ்ச்சியளித் திருக்கின்றன என்பதையும் எண்ணிப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனான். அத்துடன் மனித வரலாற்று மேடையில் தமிழ்ப் பெருமக்கள் அரசு செலுத்தும் பொற்காலத்தில் தான் வாழ்வதைப் பற்றிப் பெருமிதமும் கொண்டானாதலால் அவன் வதனத்திலே அதுவரையில் இல்லாத பெரும் சோதியொன்று படர்ந்தது. கனவுலகத்தில் சஞ்சரித்த இதயம் கண்களின் பார்வையையும் அங்கு அழைத்துச் சென்றது.

கிறிஸ்துவுக்குப் பின்பு தோன்றிய இரண்டாவது நூற்றாண்டின் இடைக்காலம், நெடுஞ்செழியனை என்ன, அந்தக் காலத்தைப் பற்றி நினைக்கும் எந்தத் தமிழனையும் பெருமையுடன் அந்தப் பொற்காலத்துக்கு அழைத்துச் செல்லும் நற்காலம்தான். சிறு புத்தியில்லாமல் தமிழர்கள் பெரும் புத்தியுடன் உலகத்திற்கு ஒளி காட்டி வாழ்ந்த காலம் அது. அந்த ஒளியை நாடி, திரைகடலோடி மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் பல நாட்டு மக்கள், பல சாதி மக்கள் தமிழ கத்தை நாடி வந்த காலம். தமிழர்கள், கொள்ளையர்களிடம் கைகட்டிச் சேவகம் செய்ததை வலியுறுத்தும் சமீபகால வரலாறு அல்ல அது. மேல்நாடுகளிலிருந்தும் வெள்ளையர் வந்து, தமிழ் மக்களிடம் கைகட்டிச் சேவகம் செய்து, பொன்னும், பொருளும் ஊதியமாகப் பெற்று வாழ்ந்த பொற்காலம். அந்தத் தமிழகத்திலும் சோழமன்னர்களின் பூம்புகார் நகரத்திலே வெள்ளையர்களான கிரேக்க, ரோம, யவனர்கள் கோட்டைக் காவலராகவும் படைவீரர்களாகவும் ஊழியம் புரிந்து சோழ மன்னர்களின் அரசைப் பேரரசாகப் பெருக்கு வதிலும் நாட்டைக் காப்பதிலும் பெருமை கொண்ட காலம். தமிழகத்தின் கடலிலிருந்து வீசிய தென்மேற்குப் பருவக் காற்று ஹிப்பலாஸ் என்ற கிரேக்கக் கடலோடியைப் பத்திரமாக மிளகு விளையும் தமிழகத்தின் மேற்குப் பகுதிக்குக் கொண்டு வந்து சேர்த்ததால் அந்தப் பருவக்காற்றுக்கே ஹிப்பலாஸ் என்ற பெயரை மேல்நாட்டார் சூட்டி, தமிழகத்தைக் கொண்டாடிய காலம். தமிழர் செய்ததெல்லாம் சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட சிறப்பான காலம். பெரும் சாம்ராஜ்யமான ரோமாபுரிப் பேரரசே வருஷாவருஷம் நாலு லட்சத்து எண்பத்து ஆறாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்பது ஆங்கிலப் பொன்களுக்குச் சமமான ஐந்தரைக்கோடி செஸ்டர்களுக்குத் தமிழர்களிடமிருந்து சரக்கு வாங்கி, ‘இத்தனை பொற்காசுகள் தமிழகத்துக்குப் பிரதி வருஷமும் போனால் சாம்ராஜ்யம் ஓட்டாண்டியாகிவிடுமே’ என்று கலங்கியகாலம். அப்படிக் கலங்கிய போதிலும் தமிழகத்திலிருந்து கிரேக்க ரோம வணிகர்கள் வாங்கிய சரக்குகள் அந்த நாடுகளில் நூறு மடங்கு அதிக விலைக்கு விற்றதால் அந்த வாணிபத்தை யவன அரசர்கள் தடுக்க முடியாமலும் திண்டாடிய காலம். இப்படிப் பொருட்சிறப்பாலும் கலைச் சிறப்பாலும் தமிழகம் நிகரற்று விளங்கிய மகோன்னத காலம்.
அந்தக் காலத்தையும், அந்தக் காலத்தில் காவிரிப்பூம் பட்டினமிருந்த செழிப்பையும் எண்ணிக் கனவில் ஆழ்ந்து விட்ட இளஞ்செழியன், ‘இந்தக் காவிரிப் பூம்பட்டினமா யவனர் கைகளுக்கு மாறப்போகிறது?’ என்று திகைத்த தல்லாமல், மாற்றார் கைகளுக்குப் பூம்புகார் மாறினால் மக்கள் கதி என்னவாகும் என்பதை நினைத்துப் பெரும் திகிலும் கொண்டான். அப்படிப் புகாரை மாற்றார் கைக்கொள்வதால் விளையக்கூடிய அபாய நிலைமையும் அவன் கண் முன்னால் எழுந்து நிற்கவே, பொன்னைப் பற்றி அவன் கவலைப்படவில்லை, பொருளைப் பற்றிக் கவலைப்பட வில்லை. தான் பிறந்த இந்த மண்ணைப் பற்றியும் தன்னுடன் வாழ்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பற்றியுமே கவலைப்பட்டான்.

பூம்புகார் பொன்னை ஒரு பொருளாக மதிக்காதிருந்த காலம் அது.

“அகனகர் வியன் முற்றத்துச்
சுடர்நுதல் மடநோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை”

என்று பட்டினப்பாலை ஆசிரியரே வியந்து நிற்கின்றார். அகன்ற வீட்டின் முன் தாழ்வாரத்தில் உலர்த்தியிருக்கும் உணா என்ற நெல்லைத் தின்னவரும் கோழிகளை ஓட்ட, ஒளிச்சுடர் போன்ற அழகிய நெற்றிகளையுடைய பூம்புகார்ப் பாவையர் கனத்த தங்கத்தினாலான தங்கள் காதணிகளைக் கழற்றிக் கூழாங்கற்களைப்போல் எறிவார்கள் என்று உருத்திரங்கண்ணனாரே வியந்து பாடிய காலத்தில் பொன்னுக்கு மதிப்பு ஏது? கோழி ஓட்டும் கூழாங்கற்களல்லவா உலகத்தார் பெருமதிப்பு காட்டிய பொற் கட்டிகள்!

பொன்னைவிட, நெல்லையும் அதுவிளையும் மண்ணையும் காக்கவே தமிழ் மக்கள் வாழ்ந்த அந்தப் பொற்காலம் தமிழகத்துத் தரையைத் தொட்ட அந்த யவனராணியினால் தவிடு பொடியாகுமென்றால், அவளைத் தன் வசத்திலிருந்து விட்டுவிடுவதோ, யவனர்கள் அவளைத் தலைவியாக்கிக் கொண்டு புகாரை ஆள அனுமதிப்பதோ, நாட்டுக்குச் செய்யும் பரம துரோகமாகும் என்பதைப் புரிந்து கொண்ட இளஞ்செழியன், இடையே குறுக்கிட்ட அந்த இருண்ட காலத்தில் தான் என்ன செய்யமுடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்கலானான்.

‘இளஞ்சேட் சென்னி இறந்துவிட்டதாகக் கோட்டைத் தலைவன் சொன்னது பொய்யாயிருக்க முடியாது. இளவரசர் திருமாவளவன் மறைந்ததும் பொய்யாயிருக்க முடியாது. இருவரில் யார் அரசுரிமையில் இருந்தாலும் யவனனான கோட்டைத் தலைவன் என்னைச் சிறை செய்யத் துணிவு கொள்ள மாட்டான். தவிர அந்த யவன டைபீரியஸும் வந்திருக்கிறான். நிலைமை மிக நெருக்கடிதான்’ என்று தனக் குள்ளேயே சொல்லிக் கொண்ட இளஞ்செழியன், மேற் கொண்டு என்ன செய்யலாமென்று யோசித்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை யவனராணியை நோக்கித் தன் கண்களைத் திருப்பினான்.

ஹிப்பலாஸ் ஏற்றிவிட்ட தீபச் சுடரின் ஒளி அவள் பொன்னிறக் கொண்டையில் விழுந்ததால் பொற்பாவை யாகவே விளங்கிய அவள் எழில் வதனத்தில் விஷமத்துடன் விளையாடிய அந்த நீலமணிக் கண்கள் அப்பொழுதும் சிரித்துக் கொண்டிருந்தன. இதற்குப் பலம் கூட்ட இஷ்டப்பட்டனபோல் விரிந்த அவள் உதடுகள் முத்துப் பற்களின் ஓரங்களை மாத்திரம் லேசாகக் காட்டி நகைத்தன. அவள் அப்படிப் புன்முறுவல் கூட்டி விஷமச் சிரிப்புச் சிரித்ததாலும் தமிழிலேயே பேசத் தொடங்கி இளஞ்செழியனைத் திகைக்க வைத்துவிட்டதாலும் நிலைகுலைந்த அவன் சிந்தனைத் துளிகளை மீண்டும் சிதறடிக்கும் நோக்கத்துடன் மறுபடியும் கேட்டாள் யவன ராணி: “படைத் தலைவருக்கு யோசனை பலமாயிருக்கிறதே!”

அந்த வார்த்தைகள் நல்ல தமிழில் பேசப்பட்டாலும் உச்சரிப்புச் சற்றுக் கொச்சையாக இருந்ததன் காரணமாகக் கிள்ளை மொழி போல் வெளிவந்ததாலும் அவை கிளப்பிய அதிர்ச்சியால் ஒரு முறை உடல் சிலிர்த்த இளஞ்செழியன் மெள்ளத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, “படைத் தலைவனா! நான் படைத் தலைவனென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று சற்று மூர்க்கத்துடனேயே வினவினான்.

யவன ராணி ஜலதரங்கத்தின் ஸ்வர ஜாலங்களைப் போலக் கலகலவென இன்பமான நகைப்பு ஒலிகளை உதிர்த்தாள். “இப்பொழுதுதானே ஹிப்பலாஸ் தங்களைப் படைத்தலைவரென்று அழைத்தான். சற்று முன்பாகக் கோட்டைத் தலைவனும் தங்களை அப்படித்தானே அழைத்து விட்டுப் போனான்?” என்று கூறினாள்.

“கோட்டைத் தலைவன் அழைத்தானா! உங்களுக்கு எப்படித் தெரியும் அது?” – இளஞ்செழியன் கேட்டான் ஆச்சரியம் ததும்பிய குரலில்.
“ஏன் தெரியாது? எனக்குத்தான் உங்கள் மொழி தெரியுமே!” என்றாள் யவன ராணி.

“அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் அப்பொழுது…?”

“மயக்கமாயிருந்தேனே, எப்படி வார்த்தைகள் காதில் விழுந்தன என்று கேட்கிறீர்கள்?”

“ஆம்.”

“முழு மயக்கமில்லை . பாதி சுயநினைவு இருந்தது.”

“பின் ஏன் பேசவில்லை? உங்களை அடைத்த கவசத்தில் வாயும் கண் பகுதிகளும் திறந்திருந்தனவே.”

“உண்மைதான். நான் பேசியிருக்கலாம். ஆனால் பேச இஷ்டப்படவில்லை.”

“ஏன்?”

“நான் பேசியிருந்தால் நீங்கள் இப்பொழுது என்னுடன் பேசிக் கொண்டிருக்க முடியாது படைத்தலைவரே! யவன வீரர்கள் உங்களை இங்கேயே வெட்டிப் போட்டிருப்பார்கள்.”

இதைக் கேட்ட இளஞ்செழியன் பெரிதாக நகைத்து, “யவன ராணி! இளஞ்செழியனை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று கூறிவிட்டு, “வந்த யவன வீரர்கள் நாலைந்து பேர். நடந்ததைக் கவனித்தீர்களல்லவா?” என்று சற்று அலட்சியமாகவும் வினவினான்.
யவன ராணி உடனே பதில் சொல்லாமல் மயக்கமான பார்வையொன்றை அவன்மீது வீசியதோடு ஒரு முறை இதழ்களைக் கூட்டிப் பிரித்துச் சிரிக்கவும் சிரித்தாள். “உங்கள் வீரத்தைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை படைத்தலைவரே! நீங்கள் கோட்டைத் தலைவன் கழுத்தில் கத்தியை வைத்துப் பயமுறுத்தி விரட்டியதையும் முழுக்கப் பார்க்க முடியா விட்டாலும், அரை மயக்கத்தில் உங்கள் சொற்கள் மிகத் தெளிவாகக் கேட்டன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக நம்புங்கள். நான் அந்த வினாடியில் வாய் திறந்து இரண்டு வார்த்தைகள் பேசியிருந்தால் கோட்டைத் தலைவன் உயிரைப் பற்றி மற்ற யவனர்கள் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். நான்கு ஈட்டிகள் ஒரே காலத்தில் உங்கள் உடலில் பாய்ந்திருக்கும். அப்படி இந்த உடலைச் சின்னாபின்னப்படுத்த எனக்கு இஷ்டமில்லை” என்று சொல்லிக் கொண்டே அவனருகில் வந்த யவன ராணி, அவன் தோள்களில் தன் இரு கைகளையும் வைத்து அவன் கண்களுடன் தன் கண்களைச் சில வினாடிகள் உறவாட விட்டாள்.
அந்த நீலமணிக் கண்களின் மாயா ஜாலம் எத்தனை மகிமை வாய்ந்தது என்பதை அந்தச் சில வினாடிகளில் புரிந்து கொண்டான் இளஞ்செழியன். கடலைவிட ஆழமான அந்தக் கண்கள் ஏதோ பெரும் காந்தம் போல் சோழர் படைத் தலைவனைக் கவர்ந்து நின்றதால் அவன் அசையக் கூடச் சக்தியில்லாதவனானான். அந்தச் சில வினாடிகளில் அவன் சிந்தனையிலிருந்து பூம்புகாரில் பெரும் கோட்டை வாயில்கள் மறைந்தன. தமிழர் பெருமை மறைந்தது. மணிவண்ணன் கோட்டமும் மறைந்தது. புகாரின் இரு புறங்களிலும் ஒளிவிட்டுப் பெரும் நீர்ப்பரப்புடன் ஜொலித்த சூரிய குண்டம், சோம குண்டம் எனும் இரு ஏரிகள் கூட மறைந்தன. தெரிந்தவை இரண்டே இரண்டு! சூரிய குண்டத்தையும் சோம குண்டத்தையும் விட, அதிகமாக ஒளிவிட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டே கண்கள்! அழகிய இமைகளுக்குக் கீழே ஒளிவிட்ட அந்த நீலமணிக் கண்கள் !

அவற்றின் அழகைப் பருகிப் பருகி மயங்கிய இளஞ் செழியனை நோக்கி மதுர மொழிகள் மீண்டும் உதிர்ந்தன! “படைத் தலைவரே! இந்த உடலைச் சின்னாபின்னப்படுத்த என் உள்ளம் இடம் தரவில்லை, ஏனென்பதும் எனக்குத் தெரியவில்லை. என்னையும் மீறிய சக்தியால்தான் உம்மிடம் பிணைக்கப்பட்டிருக்கிறேன். நம்மைப் பிணைத்திருப்பது விதி, அதிலிருந்து நீங்களோ நானோ கழன்று கொள்ள முடியாது” என்று ஏதோ சொப்பனத்தில் பேசுவது போல் பேசினாள் யவன ராணி.

விதி என்ற அந்த ஒற்றைச் சொல் இளஞ்செழியனைச் சுற்றியிருந்த மாயையைப் பட்டென்று அறுக்கவே, “விதி! இத்தனை நேரம் ஹிப்பலாஸ் உளறிய அதே விதி!” என்று அவன் ஆத்திரத்துடன் பேசிக் கொண்டே அவள் கைகளைத் தன் தோள்களிலிருந்து அகற்றினான்.

“ஹிப்பலாஸ் உளறினானா?” – ஆச்சரியத்துடன் வினவினாள் யவன ராணி.

“ஆம். விதியின் வலிமையைப்பற்றிச் சொன்னான்!”

“இதில் சந்தேகமிருக்கிறதா உங்களுக்கு?”

“சந்தேகமில்லை, விதியை நான் நம்பவில்லை.”

“நம்பவில்லையா!”

“அடியோடு நம்பவில்லை.”

“ஏன்?”

“நம்புவதற்கு ஆதாரமில்லை.”

யவன ராணி இளஞ்செழியன் மீது ஆச்சரியம் நன்றாகச் சுடர்விட்ட தன் சுட்டு விழிகளை நாட்டினாள். “இன்றைய இரவில் கிடைத்த ஆதாரங்களைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?” என்று வினவினாள்.

“ஆதாரங்களா! என்ன கிடைத்து விட்டன?”

“முதலில் நான் கிடைத்தேன். எத்தனையோ பேர் கடலோரத்தில் நடமாடுகிறார்கள். இப்படியிருக்க உங்கள் காலில் மட்டும் நான் தட்டுப்படுவானேன்? நான் வந்ததும் வராததுமாக நான் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் டைபீரியஸ் இதே ஊருக்கு வருவானேன்? இருவரும் தான் வந்தோம். வந்ததும் உங்கள் மன்னன் இறப்பானேன்? மகன்தான் மறைவானேன்? தொகுத்துப் பாருங்கள் படைத் தலைவரே! மனித வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் விதியென்னும் கயிற்றில் கோக்கப்படுகின்றன. அதைக் கோப்பது நமக்கு அப்பாற்பட்ட சக்தி. அதன் பிடியிலிருந்து நாம் மீளமுடியாது. நீங்களும் நானும் விதியால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நமது வாழ்வு அவ்வப்பொழுது பிரிவுப்பட்டாலும் மீண்டும் மீண்டும் மோதியே தீரும்” என்று மாடித் தளத்துக்காகக் கண்களை உயர்த்தி ஏதோ தெய்வ பலத்தால் பேசுபவள் போல் பேசினாள் யவன ராணி.
விதியில் என்றுமே நம்பிக்கையில்லாத இளஞ்செழியன் இதயத்தில்கூட இந்த விவரங்கள் சிறிது சலனத்தை அளித் தாலும் அவன் தன் பிடிவாதத்தை விடாமல் பேச்சை மாற்றி, “அது கிடக்கட்டும், விதியைப் பற்றி அப்புறம் விவாதிப்போம். முதலில் இதைச் சொல்லுங்கள். எதற்காகத் தமிழகம் வந்தீர்கள்?” என்றான்.

“அது என் விதி!” என்றாள் யவன ராணி.

“விதியா! மீண்டும் விதி!” என்று அலுத்துக் கொண் டான் இளஞ்செழியன்.

“அலுத்துக் கொண்டு பயனில்லை படைத்தலைவரே! நான் பிறந்தபோது உங்கள் நாட்டு வட எல்லைக் கணக்குப்படி ஐந்து கிரகங்கள் உச்சத்திலிருந்தன என்று எங்கள் நாட்டுச் சோதிடர்கள் கூறினார்கள்.”

“அதனால் என்ன?”

“ஐந்து கிரகங்கள் உச்சத்திலிருப்பவர் அரச பீடத்தில் அமருவார்கள்.”

“அமருவதுதானே?”

“எங்கள் நாட்டில் நான் அரச பீடத்தில் அமர முடியாது. நான் குடும்பத்தில் கடைசிப் பெண். எனக்கு அண்ணன்மார் மூவர் இருக்கிறார்கள்.”

“அப்படியானால் எந்த நாட்டுக்கு ராணியாக உத்தேசம்?”
“இந்த நாட்டுக்கு.”

இளஞ்செழியனின் கண்கள் கோபத்தையும் இகழ்ச்சி யையும் கலந்து உதிர்த்ததன்றி உதடுகளும் கடுஞ்சொற்களைக் கக்கத் தொடங்கி, “உங்களுக்குப் பைத்தியம் ஏதுமில்லையே?” என்று வினவினான்.

“பைத்தியம் ஏதுமில்லை படைத் தலைவரே! இந்த நாட்டு யவனர்களை ஆள ஒரு தலைவன் அல்லது ஒரு தலைவி வேண்டியிருந்தது. அதற்காக ஐந்து கிரகங்கள் உச்சமாயுள்ள காலத்தில் பிறந்த என்னைக் கிரேக்க குருமார்கள் தேர்ந் தெடுத்தார்கள். அதன்படி இங்குள்ள யவனர்களின் ராணியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த நாட்டு மொழி எனக்குப் பயிலுவிக்கப்பட்டது. உங்கள் மொழியைச் சரளமாகப் பேசுவேன். இங்குள்ள பழக்க வழக்கங்களை நான் நன்றாய் அறிவேன். சரியான வயது வந்து விட்டதால் என் பெற்றோர் என்னை இங்கு அனுப்பக் கப்பல் தயாரித்துத் தகுந்த துணையுடன் அனுப்பினார்கள்!”

“துணைக் கப்பல்கள் வந்ததாகத் தெரியவில்லையே?”

“டைபீரியஸ் இருக்கும் போது துணைக் கப்பல்கள் எதற்கு? அவனே பெரிய துணைதானே?”

“அப்படியானால் உங்கள் கப்பல் உடையக் காரணம்?”

“காவிரிப் பூம்பட்டினத்துக்கு மூன்று காதமிருக்கையில் கொள்ளைக் கப்பல்கள் எங்களை வளைத்துக் கொண்டன. பந்தங்கள் பூட்டிய எரி அம்புகள் ஆயிரக்கணக்கில் எங்கள் மரக்கலத்தின் மீது வீசப்பட்டன. மரக்கலம் தீப்பிடித்துப் பக்கவாட்டிலிருந்த வயிர மரங்கள் வெடித்தன. வீரர்கள் பலர் விஷ அம்புகளுக்கு இரையானார்கள். அத்தனையிலும் சுக்கானைப் பிடித்துக் கப்பலை வெகு வேகமாக ஓட்டி டைபீரியஸ் என்னைத் தப்பச் செய்தான். வெடித்த ஒரு மரத்துண்டில் என்னைப் பிணைத்து மிதக்க விட்டான். கடைசியாக ஒருமுறை அவனைப் பார்த்தேன்…” என்று யவன ராணி உணர்ச்சிப் பெருக்கால் வார்த்தைகளை நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்: “ஆம்! கடைசி முறையாகப் பார்த்த போது கப்பல் பெரும் ஜ்வாலயுடன் எரிந்து கொண்டிருந்தது. அதன் நடுவே நெருப்பினால் சூழப்பட்ட போர்த் தேவதையைப் போல் டைபீரியஸ் நின்று கொண்டிருந்தான். கப்பல் வெடித்து நீரில் ஜ்வாலையுடன் இறங்கிய போது டைபீரியஸும் அத்துடன் இறங்கினான். நான் கண்களை மூடிக்கொண்டேன்! கடலின் அலைகள் என்னை இழுத்துச் சென்றன. அந்த டைபீரியஸ் உயிருடன் கரை சேருவானென்று எனக்கு எப்படித் தெரியும்? தெரியாது படைத் தலைவரே! தெரியாது. ஆனால் ஒன்று தெரியும்-குருமார்கள் சொன்னது பொய்யாகாது என்று தெரியும். எங்கள் யவன குருமார்கள் சொன்னது எப்படிப் பொய்யாகும்?”

“என்ன சொன்னார்கள் குருமார்கள்?” என்றான் இளஞ்செழியன்.

“இந்த மண்ணை மிதித்த தினத்திலேயே இங்குள்ள யவனர்களுக்கு நான் ராணியாவேன் என்று சொன்னார்கள்” என்றாள் யவன ராணி.

“அடுத்தபடி.”
“என் ஆணையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்று சொன்னார்கள்.”

இதைக் கேட்ட இளஞ்செழியன் பெரியதாக நகைத்து விட்டு யவன ராணியை நோக்கி, “குருமார்கள் சொன்னது தவறு. நான் தப்புவேன் ராணி. இதோ இருக்கிறது என் வாள்” என்று சொல்லிக் கொண்டே மஞ்சத்தில் கிடந்த வாளை எடுத்து இடையில் கட்டிக் கொண்டு, “ராணி! புறப்படுங்கள்” என்று அவள் கையைப் பிடித்தான்.

“எங்கு புறப்பட வேண்டும்?” என்று வினவினாள் ராணி.

“எந்த யவனனும் உங்களைக் கண்டு பிடிக்க முடியாத இடத்துக்குக் கொண்டு போகிறேன்” என்று அவளை இழுத்தான்.

அடுத்த கணம் ஹிப்பலாஸ் பெரிதாக நகைத்தான். ராணியும் அவனுடன் சேர்ந்து நகைத்தாள். அந்த இருவர் சிரிப்புக்கும் காரணம் தெரியாமல் மலைத்த இளஞ்செழியனின் இதயம் கோபத்தால் அதிகமாகத் துடித்தது. அந்தத் துடிப்புக்குத் தாளம் போடுவன போல் மாளிகைக்கு வெளியே இருந்த சாலையில் குதிரைகளின் காலடிகள் பலமாகக் கேட்டன. “என்ன இது ஹிப்பலாஸ்?” என்று சீற்றத்துடன் வினவிய இளஞ்செழியனை நோக்கிய ஹிப்பலாஸ், “விதி படைத் தலைவரே! கோட்டைத் தலைவன் படை வீரர்களுடன் இந்த மாளிகையைச் சூழ்ந்து கொள்ள வருகிறான். அவன் காலையில் வருவதாகச் சொல்லிப் போனானே என்று நினைக்கிறீர்களா? அது ஏமாற்று வித்தை. ராணி இந்த இடத்திலிருப்பது தெரிந்த பின் அவன் ஒரு விநாடி சும்மாயிருக்க முடியாது. யவனர்களை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இனி இந்த விடுதியிலிருந்து நீங்களோ நானோ தப்ப முடியாது” என்று விளக்கினான்.

அந்த விளக்கத்தைத் தொடர்ந்து அவன் முகத்தில் சிரிப்பு மறைந்து பெரும் கிலி படர்ந்தது. அவன் கூறியபடி நிகழ்ச்சிகள் மின்னல் வேகத்தில் நடந்தேறின. யவனர்களின் பெரும் கூட்டம் சில வினாடிகளில் இளஞ்செழியனின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டது. மற்றும் சில வினாடிகளில் பின்புறத் தோட்டச் சுவர்களின் வழியாகக் குதித்த பல யவன வீரர்கள் மாளிகைக்குள் நுழைந்து விட்டார்கள். அடுத்த வினாடி அறை வரையில் எட்டிய ஆயுதங்களின் உரசலாலும் காலடிச் சத்தங்களாலும் யவன வீரர்களில் சிலர் மாடிப் படிகளில் தங்களைச் சிறை செய்யத் துரிதமாக வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான் இளஞ்செழியன்.

யவன ராணியின் வனப்பு, மலர்விழிச் சிரிப்பு, அமுத மொழி உச்சரிப்பு-இவற்றில் தான் கொண்ட மயக்கத்தில் இத்தனை நேரம் தாமதப்பட்டது எந்த அபாயத்தில் தன்னைச் சிக்க வைத்து விட்டது என்பதை நினைத்த இளஞ்செழியனின் மனம் தன்னைத் தானே வெறுத்தது. அந்த வெறுப்புக்குச் சுருதி கூட்ட இஷ்டப்பட்டவர்கள் போல் மாடிப்படிகளில் ஆயுதம் தாங்கிய யவன வீரர்கள் மிகத் துரிதமாக ஏறி வந்தார்கள்.

Previous articleYavana Rani Part 1 Ch 5 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch 7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here