Home Sandilyan Yavana Rani Part 1 Ch 8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

72
0
Yavana Rani Part 1 Ch8 Yavana Rani Sandilyan, Read Yavana Rani Online Free, Yavana Rani PDF, Download Yavana Rani novel, Yavana Rani book, read Yavana Rani free
Yavana Rani Part 1 Ch8 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

Yavana Rani Part 1 Ch 8 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

யவன ராணி – சாண்டில்யன்

முதல் பாகம்

அத்தியாயம் : 8 பூவழகி

Yavana Rani Part 1 Ch8 | Yavana Rani Sandilyan|TamilNovel.in

கையைப் பிடித்து ராணியை இழுத்துக் கொண்டு கன வேகமாக ஆசிரமத்தின் முன் கூடத்தில் நுழைந்த இளஞ் செழியன், பிரும்மானந்தருடன் பேசிக்கொண்டிருந்த உருவத்தைக் கண்டதும் உணர்வையெல்லாம் அடியோடு இழந்து சித்தமும் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்து விட்டானாகையால் பிரும்மானந்தரின் அன்பான அழைப்பைச் சிறிதளவும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அத்துடன் அடிகள் முன்பாக ராணியின் கையைப் பற்றி நிற்பது உசிதமல்ல என்ற நினைப்புக்கூட லவலேசமும் இல்லாததால் அவள் கையைத் தன் பிடியிலிருந்து சிறிதளவும் தளர்த்தாமலே கூடத்தின் மூலையில் தன் கண்ணுக்கெதிரே எழுந்த அந்த உருவத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு பிரமை பிடித்தவன் போல் நின்றான். சோழர் படைத்தலைவன் உள்ளே வரும் வரையில் மஞ்சத்தில் அமர்ந்து பிரும்மானந்தருடன் உரையாடிக் கொண்டிருந்த உருவமும் உள்ளே நுழைந்தவர்களின் காலடிச் சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் எழுந்து விட்டதாகையால், வந்தவர்களைக் கண்டதும் ஒரு வினாடி. தன்னைச் சமாளித்துக் கொண்டு வெறுப்பும் இகழ்ச்சியும் கலந்த பார்வையொன்றை இளஞ்செழியன் மீது திருப்பியது.

அந்த உருவத்தை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்ற இளஞ்செழியன் சித்தம், மெள்ள மெள்ள அசையா நிலையிலிருந்து அசையும் நிலைக்குச் சில நிமிடங்களில் வந்துவிட்டதென்றாலும், அந்த அசையும் நிலையிலும் அது அவன் உடலில் எண்ணற்ற துன்ப அலைகளைப் பாய்ச்சத் தொடங்கியது. அதனால் பெரும் வேதனைக் குள்ளான சோழர் படைத்தலைவன், சோதனைக் காலம் என்று மனித வாழ்க்கையில் ஏதாவதொன்று இருந்தால் அந்தக் காலம் தன்னை நன்றாகக் கவ்விக் கொண்டதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டான். ஆனால் சோதனை பின்னக் கூடிய சிக்கல்கள் தன்னை அடியோடு வளைக்கக் கூடிய மாய வலையாக மாறுமென்றோ, தன் வாழ்க்கையில் பெரும் புயலை விளைவிக்கும் அளவுக்கு அவை ஒரே இரவில் தன்னை ஆட்டிவைக்கும் ஆற்றலைப் பெறுமென்றோ எண்ணாததால், அதுவரை விதியை நினைத்துச் சிலிர்த்த அவன் உள்ளம், அந்த விதி உண்மையாகக்கூட இருக்கலாம் என்று நம்பவும் முற்பட்டது.

எந்த வேளிர்குலப் பேரழகியால் வெறுக்கப்பட்டதால் மனச்சலனத்துடன் பூம்புகாரின் கடற்கரையில் நடந்து சென்றானோ, தான் ஒரு பெண்ணை எடுத்துச் செல்லும் விஷயம் எந்த ஒரு எழிலரசிக்குத் தெரியக்கூடாது என்ற காரணத்தால் ராணியைத் தூக்கிக் கொண்டு கோட்டையின் திட்டி வாசல் வழியாகத் திருடனைப் போல் ஊருக்குள் நுழைந்தானோ, அதே வேளிர்குல மங்கை பிரும்மானந்தர் மடத்தில் தன் கண்ணெதிரே எழுந்ததன்றி, தன்னை வெறுப் புடனும் இகழ்ச்சியுடனும் பார்த்ததையும் கண்ட படைத் தலைவன் ‘விதி வலிதுதான். சந்தேகமில்லை’ என்று முணுமுணுத்துக் கொண்டான். அவன் முகத்திலும் நடவடிக்கையிலும் ஏற்பட்ட பெரும் குழப்பத்தையும் அவன் உதடுகள் ஏதோ முணுமுணுப்பதையும் கண்ட யவன ராணி, சற்று முன் யவனப் படை வீரர்களைக் கண்டு சிறிதும் கலங்காத படைத்தலைவனைக் கலங்க வைத்த அந்தப் பாவையை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘இந்த அழகியிடமிருக்கும் படைக்கலங்களுக்கு முன்பு எந்த வீரன்தான் குழப்பமடையாதிருக்க முடியும்?’ என்று தனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டுக் கொண்டாள்.

‘ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, வேற்கண், வெம்புருவம் போர்வில்’ என்று பெண்களின் அங்கங்களிலும் அணிகலங் களிலும் போர்க்கலங்களைப் பிற்காலத்தில்தான் கம்பன் கண்டான். அந்தக் கற்பனைக்கெல்லாம் முன்கூட்டியே இலக்கணம் வகுக்க முளைத்த காவியப்பாவைபோல் அன்று அந்தக் கூடத்தின் விளக்கொளியில் நின்றாள் வேளிர் குலப் பாவையான பூவழகி. தமிழ் நாட்டு மரபுப்படி மஞ்சளைத் தேய்த்துத் தேய்த்துத் தினம் நீராடியதால் செண்பக மலரின் இதழ்களின் மஞ்சள் நிறத்தையும் வழவழப்பையும் பெற்று, பொன் அவிழ்ந்து கொட்டுவது போன்ற மேனியைப் படைத்த பூவழகியின் ஓவிய உடலை மென்மையான பட்டுச் சேலையொன்று ஆசையுடன் தழுவி நின்றது. அப்படித் தழுவி நின்ற சேலை உடல் வழவழப்பின் காரணமாக நழுவி விடாமலிருக்க, விலை உயர்ந்த முத்துக்கள் பதிக்கப் பெற்ற முகப்புடன் கூடிய ஒட்டியாணமொன்றை நுண்ணிய இடையை அடுத்து, பூவழகி பொருத்தியிருந்தாள். அந்த இடையாபரணத்துக்குக் கீழே சின்னஞ்சிறு பட்டைகளாகப் பாதம்வரை இறங்கிய பட்டாடைப் பகுதிகள் அவள் குவித்து நின்ற கால்களுக்கிடையில் உள்ளடங்கி, கால் தொகுப்புகளின் பரிமாணத்தைப் பற்றி மட்டுமன்றி அவள் மகோன்னத அழகைப்பற்றி இதர ஊகங்களுக்கும் வரம்பற்ற இடத்தைக் கொடுத்தன.

இடை ஆடையை இறுக்கி நிறுத்தத்தான் அந்த வேளிர் குலப் பாவைக்கு ஆபரணம் தேவையாயிருந்ததேயொழிய இடைக்கு மேலே தாவிச் சென்ற ஆடைப் பகுதியைத் தடுத்து நிறுத்த இயற்கையே செழுமையான வசதியைச் செய்து கொடுத்திருந்தது. அப்படியிருந்தும் பூவழகி, பிறந்த பூமியும் வளர்ந்த குடியும் கற்றுக் கொடுத்த பண்பின் காரணமாக மேலாடையை நன்றாக இழுத்துக் கழுத்தைச் சுற்றி வளைத்து இடையில் செருகியிருந்தாள். நன்றாகச் செருகப்பட்டிருந்த போதிலும் இடைக்கு மேலே பருத்து எழுந்த அழகின் விளைவாகக் கழுத்துப் புறத்தில் சேலை ஓரளவு இடைவெளி கொடுத்தேயிருந்ததால், சங்குக் கழுத்தும் அதில் பூவழகி அணிந்திருந்த இரத்னாபரணமும் நன்றாகத் தெரிந்தன. தவிர, அந்த ஆபரணம் கீழே இறங்கி ஒளித்த கடைப்பகுதியில் இருந்த வனப்பின் திண்மையைப் புலப்படுத்தும் முறையில் சற்று மேலே தெரிந்த பிறை வடிவமான விளிம்புகள் கண்களை மட்டுமன்றிக் கருத்தையும் அள்ளிச் சென்றன. அந்த வனப்பு மலர்ந்த நாளாய் பூவழகி கண்களிலும் மலர்ந்துவிட்ட வெட்கப் பார்வை அவள் இளஞ்செழியன் மீது நாட்டிய வெறுப்புப் பார்வையிலும் ஓரளவு கலந்தே இருந்தது. சந்திர வதனத்தில் வளைந்து கிடந்த கறுப்பு விற்புருவங்களுக்குக் கீழே மீன் உருவத்தில் ஓடிய இமைகளின் அமைப்புக்குள்ளே இந்திர ஜாலம் செய்து கொண்டிருந்தது இரு கருவிழிகளா அல்லது காமன் கணைகளா? விடை சொல்ல முடியாத பெரும் புதிர்!

அந்தக் காமன் கணைகளிரண்டையும் தடுத்து நிறுத்திய அழகிய நாசியின் ஒரு புறத்தில் அந்தத் தமிழ்ப் பெண் கதிரவனைப் போன்ற வேலைப்பாடு உள்ள பொட்டு அணிந்திருந்தாள். அந்தப் பொட்டில் சுற்றிக் கிடந்த வைரங் களும் நடு மத்தியில் பதிக்கப்பட்டிருந்த மரகதக் கல்லும் பச்சையும், வெள்ளையும் கலந்த புது நிறத்தை வழவழப்பான அவள் கன்னத்தில் பாய்ச்சி அங்கு நகையில்லாத குறைவைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தன. எத்தனை வர்ண ஜாலங் களையும் என்னால் விழுங்க முடியும் என்று அறை கூவுவது போல் நன்றாகக் கறுத்து அடர்த்தியாய் நுதலுக்கு மேலே தலையில் எழுந்த அவள் கருங்குழலின் மயிரிழைகள் இரண்டு கொண்டையிட்ட பின்னல் கூட்டத்திலிருந்து விலகி கன்னத்தின் பக்கமாக வந்து, மூக்கணியின் செயற்கைக் கற்கள் என்ன அப்படிப் பிரமாத வர்ண ஜாலத்தை எதிர்த்து விடுகின்றன என்று எட்டிப் பார்த்தன. எழும்பி மோதும் அலைகளாலும் ஆழ இறங்கிச் செல்லும் சுழல்களாலும் இணையற்ற வனப்பைப் பெறும் நீலக் கடலைப் போலவே வளைந்தும் எழுந்தும் தாழ்ந்தும் உள்ளடங்கியும் கிடந்த உடலமைப்பினால் சொல்லவொண்ணா எழில்ஜாலங்களைப் பெற்றிருந்த பூவழகி, அழகில் மட்டுமன்று, ஒரு கையை இடையில் கொடுத்து மற்றொரு கையை மஞ்சத்தின் முகப்பில் பிடித்துக் கொண்டு நின்ற தோரணையிலும் பெரும் கம்பீரத்தைப் பெற்று மாபெரும் சாம்ராஜ்யத்தின் ராணியைப் போல் விளங்கியதைக் கண்ட யவன ராணி, படைத்தலைவன் தடுமாற்றத்துக்குக் காரணத்தை நொடிப் பொழுதில் அறிந்து கொண்டாள்.

படைத் தலைவன் குழப்பத்துக்கும் பிரமிப்புக்கும் விளக்கம் அத்தனை வேகத்தில் வந்தது யவன ராணிக்கு மட்டுமல்ல, பிரும்மானந்த அடிகளுக்கும் அந்த ஞானோதயம் அரை வினாடியில் வரத்தான் செய்தது. ஆனால் எதற்காக இந்த நேரத்தில் இளஞ்செழியன் இந்த யவனப் பெண்ணை இழுத்துக் கொண்டு வந்தான் என்ற மர்மத்தை மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடியாததால் அவனை ஏதோ கேள்வி கேட்கத் தொடங்கியவர் யவன ராணியை உற்றுப் பார்த்ததும் சில நிமிடங்கள் வரை பிரமித்து நின்று விட்டார். பிரும்மானந்தர் துறவிக் கோலம் பூண்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதென்றாலும் பூர்வாசிரமத்தின் காரணமாக அழகை ரசிக்கக் கூடிய தன்மையை அவர் அடியோடு இழக்கவில்லை. ஒழுக்கத்தில் அவர்மீது எந்தத் தவற்றையும் சொல்ல முடியாதென்றாலும் பூர்வாசிரமத்திலிருந்த அவருடைய விஷமப்பார்வையும் பேச்சும் மட்டும் அவரை விட மறுக்கவே அவற்றிடமிருந்து அவர் துறவறம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பிரும்மானந்தர் சரியான உயரமென்றாலும் குறுக்களவு அந்த உயரத்தைச் சுருக்கிக் காட்டியபடியால் பார்வைக்குக் குள்ளமாகவே தெரிந்தார் அடிகள். இடையில் அவர் கட்டியிருந்த வேஷ்டி நாலு முழ நீளம் பூராவாக இருந்தாலும் தொந்தியைச் சுற்றி வளைக்கும் திறன் அதற்கில்லாததை உணர்ந்த அடிகள் அதைச் சற்று இடுப்புக்கு மேலேயே கட்டியிருந்தார். உலகத்தின் ஆசைகளில் பலவற்றைத் துறந்துவிட்ட அடிகள் உண்டி சுருங்குதல் பெண்டிர்க்குத்தான் அழகு என்று தீர்மானித்திருந்ததால் அந்த விஷயத்தில் வஞ்சனை செய்யாதிருந்ததன் விளைவாக அவர் உடலின் தசைகள் நன்றாகச் செழுமையுற்றுக் கிடந்தன. அடிகளார் கைகளைப் பார்க்கும் போர் வீரர்கள் புராண காலத்துப் படைக்கலங்களில் ஒன்றான உலக்கை அவருக்கு அனாவசியமென்பதை சந்தேகமில்லாமல் ஒப்புக்கொள்வார்கள். துப்புரவாக முடி நீக்கப்பட்ட அவர் பெரும் தலையிலிருந்து சரேலென்று கீழே இறங்கிப் பரந்து நின்ற முகத்தில் படுத்திருந்த கண்கள் சிறுத்திருந்தனவென்றாலும் அவை பளிச் பளிச்சென்ற ஒளிவிட்டிருந்ததன்றி விஷமத்தைச் சொட்டிக் கொண்டும் இருந்தன. திடகாத்திரமான அந்தச் சரீரத்தின் மேற்பகுதியில் சிறு துண்டு ஒன்றையே அவர் போட்டிருந்ததால் மார்பிலும் கரங்களிலும் தெரிந்த வெட்டுக் காயங்கள் அவர் அஹிம்சா தர்மத்தில் அதிக நம்பிக்கையுள்ள வராக இருக்க முடியாது என்பதை வலியுறுத்தின. நகை துறவிகளுக்குக் கூடாதென்ற நியதியிருந்தாலும் ஜபதபங்களை முன்னிட்டு நவரத்தினங்கள் பதிக்கப் பெற்ற பெரு மகர கண்டிகையைக் கழுத்திலும் இரு பெரும் குழைகளைக் காதுகளிலும் அடிகள் அணிந்திருந்தார்.

இப்பேர்ப்பட்ட பிரும்மானந்தர் எதற்காகத் துறவறம் மேற்கொண்டார் என்பது பூம்புகார் மக்களுக்குப் பெரும் புதிராகவே இருந்து வந்தது. அவர் மனத்தில் சதா சர்வகாலமும் துறவிகளைவிட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் படைவீரர்களும் படைத் தலைவர்களுமே வந்து போய்க் கொண்டிருந்ததாலும், குறுநில மன்னர்களின் குலப்பெண் டிரும் அடிக்கடி அவரை யோசனை கேட்க வந்து சென்றதாலும் அடிகளுக்குப் பரத்தைவிட இகத்தில் சிரத்தை அதிக மென்பதைப் பூம்புகார் மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆகவே அடிகள் அன்று யவனராணியின் இணயற்ற அழகைப் பார்த்து ரசித்து நின்றபோது அதைப்பற்றி பூவழகியோ இளஞ்செழியனோ ஒரு பொருட்டாக நினைக்காவிட்டாலும் ராணிமட்டும் ஆச்சரியத்துடன் தன் நீலமணிக் கண்களை பிரும்மானந்தர் மீது திருப்பினாள்.

அவள் விழிகளில் விரிந்த ஆச்சரிய ரேகையைக் கண்ட பிரும்மானந்தர் அதுபற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமல் விழிகளின் நீலத்திலிருந்த ஆழத்தையும் அவள் பொன்னிறக் கொண்டையையும், செதுக்கப்பட்ட சலவைக்கல் சிலை போல் அவள் நின்றிருந்த மாதிரியையும் கவனித்துப் பெரிதும் வியந்ததன்றி அவள் சாதாரணப் பெண்ணாயிருக்க முடியாது என்ற முடிவுக்கும் வந்தார். அந்த முடிவுக்கு வந்த பின்பு சிறிது பக்கவாட்டிலும் திரும்பிச் சற்றுத் தூரத்தே நின்ற வேளிர் குலப் பேரழகியையும் பார்த்து, இந்த இருவர் அழகில் யார் அழகு உயர்ந்தது’ என்று எடை போடவும் தொடங்கினார்.
கண்களை அன்றிக் கருத்தையும் அள்ளும் பேரழகு வாய்ந்த அந்த இரண்டு பெண்களும் இரண்டு விதமான அழகைப் பெற்றவர்கள் என்பதை ரசிகரான பிரும்மானந்தர் நொடிப் பொழுதில் உணர்ந்து கொண்டார். ஒருத்தி செவ்வரி படராத வெள்ளை வெளேரென்ற அல்லி மலர். இன் னொருத்தி தாமரையும் செண்பகமும் கலந்தது போல் மஞ்சள் லேசாகத் தழுவிச் செவ்வரியும் ஓடி நின்ற செந்தாழை மலர். ஒருத்தியின் குழல், இளங்கதிரவன் கதிர்களைப் போல் பொன்னிற ஒளி பெற்றிருந்தாலும் கண்கள் நீலமாகவும் ஆழமாகவும் இருந்ததால் ஒளியிலிருந்து நீலத்தின் இருளுக்கு இழுத்துச் செல்லும் மயக்கம் தரும் அழகு வாய்ந்தது என்றாலும் கருவிழிகள் ஒளிச்சுடர் பெற்று எப்பொழுதும் இருளைக் கிழித்து இயத்துக்கு வழிகாட்டும் அறநெறியில் நிற்கும் குணத்தை வலியுறுத்தின. அவ்விரு பெண்களும் நின்ற நிலையில் பெரும் மாறுதல்கள் இருப்பதை அடிகளின் ஆராய்ச்சிக் கண்கள் கவனித்தன. ராணியின் கம்பீரத் தோற்றத்திலும், நின்ற முறையிலும் அவயவங்கள் பல காமக் கணைகளை வீசும் சிறப்பைப் பெற்றிருந்ததை அடிகள் கவனித்ததல்லாமல் பூவழகியின் கம்பீரத் தோற்றத்தில் அடக்கமும் பண்பும் நிறைந்திருந்ததையும், ராணியின் வனப்புக்கு அவள் எழில் இம்மிகூடக் குறையாதிருந்ததாலும் அதில் ஒரு தெய்விகத் தன்மை கலந்தோடுவதையும் பார்த்தார். இத்தகைய இரு பெண்களின் மனோபாவத்தைப் புரிந்து கொள்வதற்கும் அடிகளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. இரண்டு பெண்களும் இளஞ்செழியன் மீது வீசிய பார்வையி லிருந்து, இருவரும் படைத் தலைவனிடம் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறார்களென்பதையும் ஆனால் அந்த இரு பெண்களுக்கும் அது இன்னும் தெளிவாக விளங்கவில்லை யாதலால், ஒருத்தி வெறுப்புடனும் இன்னொருத்தி அசட்டை யுடனும் படைத் தலைவனைப் பார்க்கிறார்களென்பதையும் அடிகள் திட்டமாகத் தெரிந்து கொண்டார். அத்துடன் இருவர் குணங்களையும் அவர் எடை போட்டு விட்டதால் மாயாதேவிக்கும் மகாலட்சுமிக்கும் இடையில் படைத் தலைவன் சிக்கிக் கொண்டு விட்டானென்பதைப் புரிந்து கொண்டார். ஆகவே கடைசியில் அவர் யவனராணியை மட்டும் நோக்கி, ‘இந்தப் பெண்ணை இவன் எங்கு கண்டு பிடித்தான்?’ என்று தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டதன்றி வெளிப்படையாகவும் விசாரிக்கத் தொடங்கி, “படைத் தலைவரே! இந்தப் பெண் யார்? ஊருக்குப் புதிது போல் தோன்றுகிறதே!” என்று கேட்டார்.

இளஞ்செழியன் மெல்ல சுயநினைவுக்கு வந்து பதில் சொல்லுமுன்பாக ராணியே பேசத் தொடங்கி, “உண்மை தான் சுவாமி! நான் ஊருக்குப் புதியவள்தான்” என்று பதில் சொன்னாள்.

அவள் அப்படித் தூய தமிழில் பேச முற்பட்டதும் பிரும்மானந்தர் அசந்து விட்டாரானாலும் தம்மை நிதானப் படுத்திக் கொண்டு, “உனக்குத் தமிழ்மொழி…?” என்று ஏதோ வினவ முற்பட்டார்.

“நன்றாகத் தெரியும்” என்றாள் ராணி.

“அப்படியானால் நீ ஊருக்குப் புதிதல்ல.”

“புதிதுதான்.”

“இங்கு வந்து எத்தனை நாளாயிற்று?”
“நாள் கணக்கு இன்னும் ஆகவில்லை. அடிகளே! நாழிக் கணக்குத்தான் ஆகியிருக்கிறது. உங்கள் நாட்டுக் கணக்குப்படி மூன்று ஜாமங்கள் முடிந்திருக்கின்றன. இப்பொழுது வெள்ளி என்று கூறிய ராணி மெள்ள கூடத்தின் சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே வானத்தில் சுடர் விட்ட விடிவெள்ளியைத் தன் கையால் சுட்டிக் காட்டினாள்.

பிரும்மானந்தருக்குச் சுய நினைவில் இருக்கிறோமோ அல்லது கனவுலகில் திரிகிறோமோ என்று சந்தேகம் ஏற்படவே இளஞ்செழியனையும் பூவழகியையும் ஒருமுறை பார்த்தார். பிரும்மானந்தரைப் போலவே பூவழகியும், விடிவெள்ளியைக் காட்டிய அந்தப் பேரழகியின் அறிவையும் கண்டு, ‘யார் இவள்? பெண்ணா ! தேவதையா!’ என்பதை நிர்ணயிக்க மாட்டாமல் தன் கருவிழிகளில் பிரமிப்புத்தட்ட நின்றிருந்தாள்.

யவன ராணியின் பூர்வோத்திரத்தை நன்றாக அறிந்திருந்த இளஞ்செழியன் மட்டும், “சுவாமி, இவள் தமிழைக் கண்டோ வான சாத்திரத்தில் இவளுக்குள்ள அறிவைக் கண்டோ வியப்பதற்கு ஏதுமில்லை . இவள் பல விஷயங்களைக் கற்றவள்…” என்று கூறத் தொடங்கவே அவனை இடைமறித்த அடிகள், “படைத் தலைவரே! இத்தனை விவரங்களைத் தமிழ்நாட்டு முறையில் இவள் எப்படிக் கற்க முடியும்? வந்து நான்கு ஜாமங்கள் கூடப் பூர்த்தியாக ஆகவில்லையென்கிறாளே!” என்று கேட்டார்.

“சுவாமி! இவளைப்பற்றிய கதை பெருங்கதை. இவள் சாதாரணப் பெண்ணல்ல.”

“அது தெரிகிறது எனக்கு.”

“யவன அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவள்.”

“அதுவும் புரிகிறது.”

“எப்படிப் புரிகிறது?”

“அதோ யவனராஜ குடும்ப முத்திரை அந்த ஆபரணத்தில் இருக்கிறதே!” என்று ராணி இடது கையில் கட்டியிருந்த அன்னப்பறவை ஆபரணத்தைக் காட்டினார் அடிகள்.

இளஞ்செழியன் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. “இந்த விஷயம் இன்றுவரை எனக்குத் தெரியாது சுவாமி” என்றான்.

“தாங்கள் வெறும் படைத் தலைவர். தங்களுக்கு ராஜ குடும்ப மர்மங்கள் எப்படித் தெரியும்?”

“அடிகளுக்கு மட்டும் ஏன் தெரிய வேண்டும்?”

“ஆராய்ச்சி துறவியின் வேலை.”

“எந்த ஆராய்ச்சி?”

“தத்துவ ஆராய்ச்சிதான். ஆனால் ஆராய்ச்சியில் இறங்கும் புத்தி ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் செல்லாது படைத் தலைவரே.”
இதைக் கேட்ட இளஞ்செழியன் ஏதோ பதில் சொல்ல வாயெடுக்கு முன்பு ராணி களுக்கென்று சிரித்தாள். அவள் சிரிப்பதற்குக் காரணத்தை அறியாத அடிகள் அவளை நோக்கி, “ஏன் சிரிக்கிறாய் ராணி?” என்று வினவினார்.

“தங்கள் ஆராய்ச்சி ஒரு துறையில் மட்டும் செல்வ தில்லை என்று கூறினீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்.”

“அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?”

“ஒன்றுமில்லை. துறவியாருக்குப் பெண்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும் நோட்டம் அதிகமிருக்கிறதல்லவா?”

“யார் சொன்னது?”

“ஒருவர் சொல்வானேன்? என்னையும் அதோ அந்தப் பெண்ணையும் தாங்கள் மாறி மாறி எத்தனை முறை பார்த்து ஆராய்ச்சி செய்தீர்கள்? எங்கள் நாட்டில் மட்டும் தாங்கள் இப்படிச் செய்திருந்தால்….” என்று பேச்சை முடிக்காமல் விட்டாள் ராணி.

“செய்திருந்தால்,” பிரும்மானந்தர் சங்கடத்துடன் கேட்டார்.

“தங்கள் துறவறம் இத்தனை நேரம் காற்றிலே பறந் திருக்கும். பெண்கள் தங்களைச் சுற்றிக் கவ்விக் கொண் டிருப்பார்கள்” என்றாள் ராணி.

அதுவரை இளஞ்செழியன் மீதுள்ள வெறுப்பாலும், அவன் அன்றிரவு ஒரு பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன்னெதிரே வந்ததாலுள்ள கோபத் தாலும் பீடிக்கப்பட்டு உள்ளக் கொதிப்படைந்திருந்த பூவழகியின் செம்பவள உதடுகள் கூட ராணியின் பேச்சைக் கேட்டதும் லேசாக மந்தகாசம் செய்தன.

பேச்சில் தன்னைவிட வல்லவர் யாருமில்லையென்று அன்றுவரை இறுமாந்திருந்த அடிகள் ராணியின் பேச்சினாலும் பரிகாசத்தாலும் பெருங் சங்கடத்துக்குள்ளாகி, “சே! சே! பாவம்! பாவம்! துறவியிடம் பேசும் பேச்சா இது!” என்று காதுகளை மூடிக் கொண்டார்.

ராணி சாளரத்திலிருந்து அவரை நன்றாக அணுகி, “காதுகளை மூடிப் பயனில்லை சுவாமி! கண்களை மூடப் பழகிக் கொள்ளுங்கள். அதைவிட இதயத்தை ஓரளவு மூடுவதும் நல்லது” என்று சொல்லி மயக்கம் தரும் புன்முறுவ லொன்றை அவர்மீது வீசினாள்.

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாததாலும் மனமும் பெரும் குழப்பமடைந்து விட்டதாலும் ‘இவளிடமிருந்து என்னைக் காப்பாற்று’ என்று கேட்பது போல் பிரும்மானந்தர் தமது பரிதாப விழிகளைப் படைத் தலைவன் மீது திருப்பினார்.

ராணி பிரும்மானந்தரை ஊடுருவிப் பார்த்து விட்டாளென்ற காரணத்தால் அவள் கூரிய அறிவை வியந்து கொண்டிருந்த படைத் தலைவனும் அந்த வியப்பைச் சற்றுத் தள்ளி வைத்து விட்டு, “ராணி! அடிகள் குணங்களை ஆராய நேரமில்லை இப்பொழுது. அதற்கு அவசியமில்லை. வந்த வேலையைக் கவனிப்போம்” என்று அவளை அடக்கிவிட்டு பிரும்மானந்தரை நோக்கி, “சுவாமி! எனக்கு நிற்கக்கூட நேரமில்லை. இந்த இரவில் சோழ மண்டலத்தை திடுக்கிட வைக்கும் நிகழ்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே பூம்புகாரைவிட்டு விடியுமுன்பாக நான் வெளியேறி என் படைகளிருக்குமிடம் செல்ல வேண்டும். நான் திரும்பச் சொல்லியனுப்பும் வரை இந்த ராணிக்குத் தாங்கள் புகலிடம் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.

“இந்தத் துறவியின் மடத்தில் ஒரு நாள் கூட நான் இருக்கமாட்டேன்” என்று மறுத்தாள் ராணி.

அதுவரை வேளிர் குல மகளிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாத இளஞ்செழியன், “பூவழகி! நீ தைரியம் சொல் இவளுக்கு. பிரும்மானந்தர் மிக நேர்மையானவர், இந்த மடத்தில் பெண்களுக்குப் பயம் ஏதுமில்லை என்பதை விளக்கிச் சொல்” என்று கேட்டான்.

குறுநில மன்னர் குலத்தில் பிறந்தாலும் பெண், பெண் தானென்பதைப் பூவழகி அந்தச் சந்தர்ப்பத்தில் காட்டத் தொடங்கி, “அவளுக்குத் தங்கள் பாதுகாப்புத்தான் தேவை போலிருக்கிறது படைத்தலைவரே! தங்கள் கைப்பிடியிலிருந்து விலக அவள் முயலவில்லை. அந்தப் பாதுகாப்பை அளிக்க ஏன் மறுக்கிறீர்கள்? கூடவே அழைத்துச் செல்லுங்களேன்” என்று கூறி இகழ்ச்சி ததும்பிய விழிகளை இளஞ்செழியன் மீது திருப்பினாள்.

“தவறாக அர்த்தம் செய்து கொள்கிறாய் பூவழகி! சந்தர்ப்பங்கள் இவளை என்னிடம் சேர்ப்பித்தன” என்ற இளஞ்செழியனை மடக்கிய ராணி, “விதி என்று சொல் லுங்கள்” என்று திருத்தினாள்.

பூவழகியின் கண்களும் ராணியின் கண்களும் உராயும் நான்கு ஈட்டிகளைப் போல சில வினாடிகள் சந்தித்தன. கடைசியில் உணர்ச்சி சிறிதுமில்லாத குரலில் கேட்டாள் பூவழகி, “என்ன? விதியா!” என்று.

“ஆம்! விதிதான். விதியால் நாங்கள் இருவரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.”

இருவரும் பிணைக்கப்பட்டுவிட்டீர்களா!” இகழ்ச்சி விளையாடியது பூவழகியின் வார்த்தைகளில் மட்டுமன்றி முகத்திலும்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் ஏதோ சொல்லப் புகுந்த இளஞ்செழியனைப் பூவழகியின் வெறுப்புத் தட்டிய விழிகள் கத்திகளைப்போல் தடுத்து நிறுத்திவிட்டதால் ராணியே பேச்சைத் தொடர்ந்து, “ஆம்! விதி எங்களைப் பிணைத்து விட்டது. அதனால் தான் இவர் கைகளில் சிக்கினேன். மூர்ச்சையாகக் கிடந்த என்னைத் தூக்கிக் கொண்டு இவர் தம் மாளிகைக்குச் சென்றார்” என்றாள் ராணி.

“தூக்கிக்கொண்டு அவர் மாளிகைக்குச் சென்றாரா?” என்று கேட்டாள் பூவழகி.

“ஆம். அங்கு …”

“வேண்டாம், ராணி, வேண்டாம்” என்று இளஞ்செழியன் கத்தினான்.

“சொல் மேலே!” ஆத்திரத்துடன் எழுந்தது பூவழகியின்
குரல்.

“என்னைத் தன் மஞ்சத்தில் கிடத்தினார்…”

“ஊஹும்…”

“பிறகு எத்தனையோ சைத்தியோபசாரங்கள் செய்தார்…”

ராணி வேண்டுமென்றே அரைகுறையாக விஷயங் களைச் சொல்லித் தன்மீது பூவழகிக்கு வெறுப்பைக் கிளப்பு வதைக் கண்ட இளஞ்செழியன், “பூவழகி! இவள் சொல்வதை நம்பாதே. அத்தனையும்…” என்று ஏதோ சொல்ல முற்பட்டுத் திணறினான்.

“ஏன் திணறுகிறீர்கள்? சொல்லுங்கள். அத்தனையும் பொய்யா?” என்று வினவினாள் பூவழகி.

“சொல்லுங்கள் படைத்தலைவரே! நான் சொன்ன தெல்லாம் பொய்யா?” என்று கேட்டாள் ராணி.

“பொய்யில்லை. ஆனால் எல்லாம்…” என்று துவங்கி இளஞ்செழியன் மீது மிகவும் கேவலமான பார்வையொன்றை வீசிய பூவழகி, “போதும் படைத்தலைவரே, போதும்! மேற்கொண்டு எதையும் அறிய நான் விரும்பவில்லை. உங்கள் சொந்த விஷயத்தில் நான் தலையிட வேண்டிய அவசியமு மில்லை” என்று கூறிவிட்டு, “சுவாமி! இவர் சென்றதும் சொல்லியனுப்புங்கள்” என்று அடிகளுக்கும் தெரிவித்துவிட்டு வெகு வேகமாகக் கூடத்தின் கோடிக் கதவைத் திறந்து கொண்டு மடத்தின் உட்புறத்துக்குச் சென்றுவிட்டாள்.

அவளைத் தடுக்க இரண்டடிகள் எடுத்து வைத்த இளஞ்செழியனைக் கையைப் பிடித்து நிறுத்திய பிரும்மா னந்தர், “பொறுங்கள் படைத்தலைவரே! பூவழகி அவள் தோழிகள் இருக்குமிடம் சென்று விட்டாள். அந்த இடத்தில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை” என்றார்.

“சுவாமிகளைத் தவிர -” என்றாள் ராணி.

“ஆம் பெண்ணே, அடிகளைத் தவிர யாரும் அங்குபோக முடியாது. தமிழகத்துப் பெண்கள் நிலை அப்படி. யவனப் பெண்மணிகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல அடியவனுக்குத் திறன் இல்லை ” என்றார்.

“ஏன்?”

“அவர்களுக்குச் சுதந்திரம் அதிகம். யாருடனும் செல்ல லாம்” என்று கூறி அவளையும் பார்த்து, இளஞ்செழியனையும் பார்த்தார்.

பிரும்மானந்தரின் சொற்களையும் சந்தேகப் பார்வை யையும் கவனித்த இளஞ்செழியன், “சுவாமி! தாங்களுமா என்மீது சந்தேகப்படுகிறீர்கள்?” என்று கலவரம் தொனித்த குரலில் கேட்டான்.
“சே! சே! இதற்கேன் அஞ்சுகிறீர்? இந்த வயதில் இதெல்லாம் சகஜம்தான்” என்று சுவாமி சாதுர்யமாகப் பதில் சொன்னார். அந்தப் பதிலைக் கேட்ட இளஞ்செழியன் வெகுண்டான்; ராணி நகைத்தாள். உள்ளே சென்றாலும் அரைவாசி ஒருக்களிக்கப்பட்ட கதவின் மூலமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு நின்ற பூவழகி, பெரும் கொதிப்படைந்தாள். அந்தக் கொதிப்பின் காரணமாக இளஞ்செழியனைச் சுட்டெரித்து விடுபவள் போல் கூடத்துக்குள் பாய்ந்த அவள் கரிய விழிகளின் பார்வை அடுத்த வினாடி பெரும் அச்சத்துக்கு இடம் கொடுத்தது. இளஞ்செழியனைத் தாண்டிக் கூடத்தின் கோடியிலிருந்த கதவின் மறைவில் ஒரு மனிதன் நிற்பதையும், அவன் கூடத்திலிருந்த மூவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தததையும் பூவழகியின் பூவிழிகள் கண்டன.

Previous articleYavana Rani Part 1 Ch 7 | Yavana Rani Sandilyan | TamilNovel.in
Next articleYavana Rani Part 1 Ch 9 | Yavana Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here